07.24 – கருவூர் - (கரூர்)
2016-02-21
கருவூர் - (கரூர்)
------------------
(அறுசீர் விருத்தம் - "தனன தானன தானா தனதன தனதன தானா" என்ற சந்தம்;
யாப்புக்குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க);
(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்");
1)
துணிம திக்கிள நாகம் துணையெனச் சடைமிசை வைத்தார்
மணியி லங்கிய கண்டர் மாமலை மாதொரு பங்கர்
அணியி லங்கிய கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
பணியும் அன்பர்கள் தங்கள் பழவினை தீர்த்தருள் வாரே.
துணிமதிக்கு இள நாகம் துணை எனச் சடைமிசை வைத்தார் - பிறைச்சந்திரனுக்கு இளம்பாம்பைத் துணை என்று சடையில் வைத்தவர்; (துணிமதி - பிறைச்சந்திரன்; நிலாத்துண்டம்); (துணி - துண்டம்);
மணி இலங்கிய கண்டர் - நீலமணி திகழும் கண்டம் உடையவர்; (இலங்குதல்- திகழ்தல்);
மா மலைமாது ஒரு பங்கர் - அழகிய உமை ஒரு பங்கர்; (மா - அழகு);
அணி இலங்கிய கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - அழகிய கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் எழுந்தருளிய எம் சுவாமி; (அணி - அழகு); (கருவூர் - ஊர்ப்பெயர் - கரூர்); (ஆனிலை - அவ்வூரில் (கரூரில்) உள்ள கோயிற் பெயர்); (மேய - விரும்பி உறைகின்ற); (அடிகள் - கடவுள்);
பணியும் அன்பர்கள் தங்கள் பழவினை தீர்த்து அருள்வாரே - வழிபடும் பக்தர்களது பழைய வினையைத் தீர்த்து அருள்புரிவார் (/ அருள்பவர்);
2)
மழுவை ஏந்தெறி பத்தர் மண்ணுல காள்புகழ்ச் சோழன்
தொழுது போற்றிய ஈசர் தூயவெண் ணீறணி மார்பர்
அழகி லங்கிய கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
கழலை வாழ்த்தடி யார்கள் கருதிய வரமருள் வாரே.
மழுவை ஏந்து எறிபத்தர், மண்ணுலகு ஆள் புகழ்ச்சோழன் தொழுது போற்றிய ஈசர் - மழுவாயுதத்தை ஏந்திய எறிபத்த நாயனாராலும், அரசாட்சி செய்த புகழ்ச்சோழ நாயனாராலும் வழிபடப்பெற்ற ஈசனார்; (* எறிபத்த நாயனார், புகழ்ச்சோழ நாயனார் வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க);
தூய வெண்ணீறு அணி மார்பர் - தூய்மையான வெண் திருநீற்றை மார்பில் பூசியவர்;
அழகு இலங்கிய கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - அழகிய கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
கழலை வாழ்த்து அடியார்கள் கருதிய வரம் அருள்வாரே - தம்முடைய திருவடிகளை வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருள்புரிவார்;
3)
ஓலம் என்றடை உம்பர் உய்ந்திட நஞ்சினை உண்டு
நீலம் நின்றமி டற்றர் நித்தியர் நான்மறை விரித்த
ஆல நீழலர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
ஏலு மாறடி தொழுவார் இருவினை தீர்த்தருள் வாரே.
ஓலம் என்று அடை உம்பர் உய்ந்திட நஞ்சினை உண்டு நீலம் நின்ற மிடற்றர் - ஓலம் என்று கதறி வந்து அடி அடைந்த தேவர்கள் உய்யும்படி விடத்தை உண்டு கருமை தங்கிய கண்டம் உடையவர்;
நித்தியர் - அழிவற்றவர்;
நான்மறை விரித்த ஆல நீழலர் - நால்வேதப் பொருள்களைக் கல்லால மரத்தின்கீழ் உபதேசித்தவர்; (விரித்தல் - விளக்கி உரைத்தல்);
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
ஏலுமாறு அடி தொழுவார் இருவினை தீர்த்து அருள்வாரே - தங்களால் இயன்றபடி திருவடியை வணங்கும் அன்பர்களுடைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்; (அப்பர் தேவாரம் - 5.43.9 - காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின் றேத்துமின்)
4)
எம்பி ரானருள் புரியாய் என்றடி போற்றிய டைந்த
உம்பர் தம்துயர் நீக்கி உழிதரு முப்புரம் படவோர்
அம்பை எய்தவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
நம்பு பத்தருக் கென்றும் நலமிகு வாழ்வருள் வாரே.
"எம்பிரான் அருள் புரியாய்" என்று அடி போற்றி அடைந்த உம்பர் தம் துயர் நீக்கி - "எம் தலைவனே, அருளாய்" என்று திருவடியை வணங்கிய தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி;
உழிதரு முப்புரம் பட ஓர் அம்பை எய்தவர் - எங்கும் திரிந்த முப்புரங்களும் அழிய ஓர் கணையைத் தொடுத்தவர்;
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
நம்பு பத்தருக்கு என்றும் நலம் மிகு வாழ்வு அருள்வாரே - விரும்பித் தொழும் பக்தர்களுக்கு என்றும் நன்மை மிகும் வாழ்வினை அருள்புரிவார்; (நம்புதல் - விரும்புதல்);
5)
கரணம் மூன்றவை கொண்டு கண்ணுத லைத்தொழு மாணி
மரணம் இன்றிநி லைக்க வன்னமன் மார்பிலு தைத்தார்
அரணம் அட்டவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
சரணம் என்றடை அன்பர் தம்வினை தீர்த்தருள் வாரே.
கரணம் மூன்றுஅவை கொண்டு கண்ணுதலைத் தொழு மாணி - மனம், வாக்கு, காயம் என்ற திரிகரணங்களாலும் நெற்றிக்கண் உடைய ஈசனாரைத் தொழுத மார்க்கண்டேயர்; (கரணம் மூன்றவை - அவை - பகுதிப்பொருள்விகுதி);
மரணம் இன்றி நிலைக்க வன்-நமன் மார்பில் உதைத்தார் - மார்க்கண்டேயர் இறவாமல் என்றும் வாழுமாறு கொடிய காலனின் மார்பில் உதைத்தவர்;
அரணம் அட்டவர் - முப்புரங்களை அழித்தவர்;
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
சரணம் என்று அடை அன்பர் தம் வினை தீர்த்து அருள்வாரே - "சரணம்" என்று அடைந்த பக்தர்களுடைய வினைகளைத் தீர்த்து அருள்புரிவார்;
6)
கரிய வெற்புநி கர்த்த கரியது பிளிறவு ரித்த
உரிவை போர்வைய தாக உகந்தவர் ஒருவிடைப் பாகர்
அரிவை பங்கினர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
பரிவர் அன்புடை யார்தம் பழவினை தீர்த்தருள் வாரே.
கரிய வெற்பு நிகர்த்த கரியது பிளிற உரித்த உரிவை போர்வையது ஆக உகந்தவர் - கருமையான மலை போன்ற யானை பிளிறுமாறு உரித்த அதன் தோலைப் போர்வையாக விரும்பி அணிந்தவர்; (வெற்பு - மலை); (உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 6.87.3 - "கம்பமதக் கரிபிளிற உரிசெய்தோன் காண்");
ஒரு விடைப்பாகர் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவர்;
அரிவை பங்கினர் - அர்த்தநாரீஸ்வரர்; (அரிவை - பெண்);
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் பரிவர் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள் இரங்குபவர் / இரங்குவார்;
அன்பு உடையார்தம் பழவினை தீர்த்து அருள்வாரே - பக்தர்களுடைய பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்;
7)
குரவம் கூவிளம் கொன்றை குஞ்சியின் மேலணி ஈசர்
இரவில் மாநடம் ஆடும் இறையவர் நாணென அரையில்
அரவம் ஆர்த்தவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
பரவும் அன்பருக் கிரங்கிப் பழவினை தீர்த்தருள் வாரே.
குரவம் கூவிளம் கொன்றை குஞ்சியின் மேல் அணி ஈசர் - குரவமலரும், வில்வமும், கொன்றைமலரும் திருமுடிமேல் அணியும் ஈசனார்;
இரவில் மா நடம் ஆடும் இறையவர் - நள்ளிருளில் பெருநடம் செய்யும் கடவுள்;
நாண் என அரையில் அரவம் ஆர்த்தவர் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவர்; (ஆர்த்தல் - கட்டுதல்);
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
பரவும் அன்பருக்கு இரங்கிப் பழவினை தீர்த்து அருள்வாரே - துதித்துப் போற்றும் பக்தர்களுக்கு இரங்கி அவர்களுடைய பழைய வினைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிவார்;
8)
கடுத்து வந்தரு வரையைக் கைகளின் வலியது கருதி
எடுத்த மூடவ ரக்கன் எழில்முடி பத்தொரு விரலால்
அடர்த்த அங்கணர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
தொடுத்த சொன்மலர் கொண்டு தொழுமடி யார்க்கருள் வாரே.
கடுத்து வந்து அரு வரையைக் கைகளின் வலியது கருதி எடுத்த மூட அரக்கன் எழில் முடி பத்து ஒரு விரலால் அடர்த்த அங்கணர் - கோபித்து விரைந்து வந்து, தன் புஜபலத்தை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த மூடனான இராவணனுடைய அழகிய முடிகள் பத்தையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கிய அருட்கண்ணர்; (கடுத்தல் - கோபித்தல்; விரைந்து ஓடுதல்); (அரு வரை - அரிய மலை - கயிலைமலை); (அடர்த்தல் - நசுக்குதல்); (அங்கணன் - அருட்கண் உடையவன் - சிவபெருமான்);
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
தொடுத்த சொல்மலர் கொண்டு தொழும் அடியார்க்கு அருள்வாரே - சொல்மலர்களால் தொடுக்கப்பட்ட பாமாலைகளால் வழிபடும் அடியவர்களுக்கு அருள்புரிவார்;
9)
வாதி னாலடி முடியை மாலயன் நேடிவ ணங்கு
சோதி யாயெழும் அண்ணல் தோன்றிய பொருள்களுக் கெல்லாம்
ஆதி ஆனவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
போதி னால்தொழு பத்தர் புரிவரம் தந்தருள் வாரே.
வாதினால் அடிமுடியை மால் அயன் நேடி வணங்கு சோதியாய் எழும் அண்ணல் - தம்முள் வாதிட்ட விஷ்ணுவும் பிரமனும் அடியும் முடியும் தேடி வணங்கும்படி சோதியாகி எழுந்த அண்ணல்; (வாது - தருக்கம்; சண்டை);
தோன்றிய பொருள்களுக்கு எல்லாம் ஆதி ஆனவர் - எல்லாவற்றுக்கும் முற்பட்டவர்; எல்லாவற்றுக்கும் மூலமாக உள்ளவர்;
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
போதினால் தொழு பத்தர் புரி வரம் தந்து அருள்வாரே - பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்கள் விரும்பும் வரங்களைத் தந்து அருள்புரிவார்; (போது - மலர்); (புரிதல் - விரும்புதல்);
10)
மந்தை பல்கிட வேண்டி வஞ்சகர் வலைபல விரிப்பார்
சிந்தை யீர்இது நினைமின் தெண்புனற் சடையினர் ஆதி
அந்தம் அற்றவர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
கந்த மாமலர் தூவிக் கைதொழு வார்க்கருள் வாரே.
மந்தை பல்கிட வேண்டி வஞ்சகர் வலை பல விரிப்பார் - மந்தையைப் பெருக்குவதற்காக வஞ்சகர்கள் பல வலைகளை விரிப்பார்கள்; (பல்குதல் - பெருகுதல்);
சிந்தையீர் இது நினைமின் - அறிவுடையவர்களே; இதனை நினையுங்கள்; (சிந்தை - அறிவு);
தெண்புனற் சடையினர் ஆதி - தெளிந்த நீரான கங்கையைச் சடையில் உடையவர்; அனைத்திற்கும் ஆதி ஆனவர்; ("ஆதி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);
ஆதி அந்தம் அற்றவர் - முதலும் முடிவும் இல்லாதவர்;
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
கந்த மா மலர் தூவிக் கைதொழுவார்க்கு அருள்வாரே - அப்பெருமானார் வாசமலர்களைத் தூவிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிவார்;
11)
துண்ட மாமதி சூடி தோள்மிசை நீற்றினைப் பூசி
உண்ட நஞ்சுமி டற்றில் ஒருமணி போல்திகழ் கின்ற
அண்ட நாயகர் கருவூர் ஆனிலை மேயவெம் அடிகள்
தொண்ட ருக்கருந் துணையாய்த் தொல்வினை தீர்த்தருள் வாரே.
துண்ட மா மதி சூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவர்; (சூடி - சூடியவர்);
தோள்மிசை நீற்றினைப் பூசி - புஜங்களில் திருநீற்றைப் பூசியவர்; (பூசி - பூசியவர்);
உண்ட நஞ்சு மிடற்றில் ஒரு மணி போல் திகழ்கின்ற அண்ட நாயகர் - உண்ட விடம் கண்டத்தில் ஒப்பற்ற நீலமணி போல் விளங்குகின்றவரும், அண்டங்களுக்கு எல்லாம் தலைவரும் ஆன சிவபெருமானார்;
கருவூர் ஆனிலை மேய எம் அடிகள் - கருவூரில் (கரூரில்) ஆனிலை என்ற கோயிலில் உறைகின்ற எம் கடவுள்;
தொண்டருக்கு அரும் துணை ஆய்த் தொல்வினை தீர்த்து அருள்வாரே - அடியவர்களுக்கு அரிய துணை ஆகி, அவர்களுடைய பழவினைகளைத் தீர்த்து அருள்புரிவார்;
பிற்குறிப்புகள் :
1) யாப்புக்குறிப்பு :
அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -
"தனன தானன தானா தானன தானன தானா" என்ற சந்தம்;
அடிதோறும் முதற்சீரின் அமைப்பு - தனன என்பது தான என்றும் வரலாம். குறில், குறில் + ஒற்றில் முடியும்;
அடிதோறும் இரண்டாம் சீர் - நேரசையில் தொடங்கும்;
தானன என்ற இடத்தில் தனதன வரலாம்; தானா என்ற இடத்தில் தனனா வரலாம்.
விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்;
2) சம்பந்தர் தேவாரம் - 2.90.4 -
துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி
உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்னம் ஆருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
வி. சுப்பிரமணியன்
----------------- ----------------
No comments:
Post a Comment