Thursday, November 9, 2023

07.17 - கொள்ளிக்காடு - செஞ்சொ லார்தமிழ்

07.17 - கொள்ளிக்காடு (திருக்கொள்ளிக்காடு)

2015-12-29

கொள்ளிக்காடு

---------------------------------

(எழுசீர்ச் சந்த விருத்தம் - தான தானன தான தானன தான தானன தானனா);

(சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்");

(சுந்தரர் தேவாரம் - 7.36.1 - "காருலாவிய நஞ்சை யுண்டிருள்");


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

செஞ்சொ லார்தமிழ் மாலை யாலுன செம்பொ னார்கழல் ஏத்தினேன்

அஞ்சி னோடொரு நான்கு கோள்களும் ஆசி லாநல(ம்) நல்குமே

பஞ்சின் மெல்லடி மாது பங்கமர் பண்ப னேஎரி போல்திகழ்

குஞ்சி மேல்நதி கூவி ளம்புனை கொள்ளிக் காடுறை கூத்தனே.


செஞ்சொல் ஆர் தமிழ் மாலையால் உன செம்பொன் ஆர் கழல் ஏத்தினேன் - சிறந்த சொற்கள் பொருந்திய தமிழ்ப் பாமாலைகளால் (தேவாரம், திருவாசகம் முதலியன) உன்னுடைய செம்பொன் போன்ற திருவடிகளைத் துதித்தேன்; (இலக்கணக் குறிப்பு - உன - உன்+- உன்னுடைய; "" ஆறாம் வேற்றுமை உருபு);

அஞ்சினோடு ஒரு நான்கு கோள்களும் ஆசு இலா நலம் நல்குமே - நவக்கிரகங்களும் குற்றமற்ற நன்மையே செய்யும்; (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.1 - "வேயுறு தோளி பங்கன் ... ஆசறு நல்ல நல்ல ...");

பஞ்சின் மெல்லடி மாது பங்கு அமர் பண்பனே - பஞ்சினும் மென்மையான பாதங்களை உடைய உமையை ஒரு பங்காக விரும்பிய பண்பு உடையவனே; (* பஞ்சின் மெல்லடியம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்);

எரி போல் திகழ் குஞ்சி மேல் நதி கூவிளம் புனை - தீப்போன்ற செஞ்சடை மீது கங்கையையும் வில்வத்தையும் அணிந்த; (குஞ்சி - தலை; ஆண்களின் தலைமயிர்); (கூவிளம் - வில்வம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.25.4 - "தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்"); (சுந்தரர் தேவாரம் - 7.94.1 - "அழல்நீர் ஒழுகி யனைய சடையும்");

கொள்ளிக்காடு உறை கூத்தனே - திருக்கொள்ளிக்காடு என்ற தலத்தில் உறைகின்ற கூத்தப்பெருமானே; (கூத்தன் - திருநடம் செய்பவன்);


2)

நீல மாமணி கண்ட னேஉனை நித்த லுந்தொழு தேத்தினேன்

சூல னேமலை போன்ற வல்வினை தூள தாகிட நல்கிடாய்

ஏல வார்குழ லாளை ஓர்புடை ஏற்ற ஏறமர் ஏந்தலே

கோல வெண்பிறை சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நீல மாமணி கண்டனே, உனை நித்தலும் தொழுது ஏத்தினேன் - அழகிய நீலமணியைக் கண்டத்தில் உடையவனே, உன்னை நாள்தோறும் போற்றி வணங்கினேன்;

சூலனே, மலை போன்ற வல்வினை தூளது ஆகிட நல்கிடாய் - சூலபாணியே, என்னுடைய மலைபோன்ற வலிய வினைகள் தூளாகும்படி அருள்புரியாய்;

ஏல வார் குழலாளை ஓர் புடை ஏற்ற, ஏறு அமர் ஏந்தலே - நீண்ட வாசக்கூந்தல் உடைய உமையைத் திருமேனியில் ஒரு பக்கம் ஏற்றவனே, இடபத்தை வாகனமாக விரும்பியவனே;

கோல வெண்பிறை சூடினாய் - அழகிய வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனே;

அணி கொள்ளிக்காடு உறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


3)

வம்பு நாண்மலர் தூவி நின்னடி வாழ்த்தி னேன்இடர் மாய்த்திடாய்

அம்பை ஏவிய மன்ம தன்றனை ஆகம் அற்றவன் ஆக்கினாய்

செம்பொ னேர்சடை மீது வெண்மதி சீற ராவொடு சேர்த்தினாய்

கொம்ப னாளொரு கூற னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வம்பு நாண்மலர் தூவி நின் அடி வாழ்த்தினேன் இடர் மாய்த்திடாய் - வாசம் மிக்க புதுமலர்களைத் தூவி உன் திருவடியை வாழ்த்திய என் இடர்களைத் தீர்த்து அருள்வாயாக; (வம்பு - வாசனை); (நாண்மலர் - நாள் மலர் - அன்று பூத்த பூ);

அம்பை ஏவிய மன்மதன்தனை ஆகம் அற்றவன் ஆக்கினாய் - மலர்க்கணை ஏவிய காமனை உருவம் அற்றவன் ஆகுமாறு செய்தவனே; (அப்படி நெற்றிக்கண்ணால் நோக்கியவனே);

செம்பொன் நேர் சடை மீது வெண்மதி சீறு அராவொடு சேர்த்தினாய் - செம்பொன் போல் திகழும் சடைமேல் வெண்-திங்களைச் சீறுகின்ற பாம்போடு சேர்த்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.78.5 - "திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்");

கொம்பு அனாள் ஒரு கூறனே - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;

அணி கொள்ளிக் காடுறை கூத்தனே - அழகிய திருக்கொள்ளிக்காட்டில் உறைகின்ற கூத்தப்பெருமானே;


4)

பொடிய ணிந்தடி போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

கொடிய கூற்றுதை கால னேஉமை கூற னேஒரு கையினில்

வடியி லங்கிய சூல னேமழு வாள னேவலம் ஆர்தரு

கொடியின் மேல்விடை காட்டி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பொடி அணிந்து அடி போற்றினேன் வினை போக்கி இன்பம் அளித்திடாய் - திருநீற்றைப் பூசி நான் உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கொடிய கூற்று உதை காலனே - கொடிய நமனை உதைத்தவனே;

உமை கூறனே - உமையை ஒரு கூறாக உடையவனே;

ஒரு கையினில் வடி இலங்கிய சூலனே மழுவாளனே - ஒரு கையில் கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவனே; மழுவாள் உடையவனே; (வடி - கூர்மை);

வலம் ஆர்தரு கொடியின் மேல் விடை காட்டினாய் - வெற்றி மிகுந்த கொடியின் மீது இடபச்சின்னம் உடையவனே; (வலம் - வெற்றி); (ஆர்தல் - மிகுதல்); (தருதல் - ஒரு துணைவினை);


5)

விமல னேஅடி வாழ்த்தி னேன்வினை வீட்டி இன்பம ளித்திடாய்

கமல மென்றொரு கண்ணை இட்டரி கைதொ ழப்படை நல்கினாய்

உமைய வட்கொரு கூறு கந்தளி உம்ப னேஉல குய்ந்திடக்

குமைவி டந்தரி கண்ட னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


விமலனே, அடி வாழ்த்தினேன் வினை வீட்டி இன்பம் அளித்திடாய் - தூயவனே, உன் திருவடியை வணங்கினேன்; என் வினைகளைத் தீர்த்து இன்பம் அருள்வாயாக;

கமலம் என்று ஒரு கண்ணை இட்டு அரி கைதொழப் படை நல்கினாய் - (ஆயிரம் தாமரைப்பூக்களில் ஒரு பூக் குறையவும்) தன் மலர்க்கண்ணை இடந்து இட்டுத் திருமால் அர்ச்சிக்கவும், மகிழ்ந்து அவனுக்குச் சக்கராயுதத்தைத் தந்தவனே; (திருவீழிமிழலைத் தலவரலாறு காண்க); (படை - ஆயுதம்);

உமையவட்கு ஒரு கூறு உகந்து அளி உம்பனே - உமைக்கு ஒரு பங்கு விரும்பி அளித்த தேவனே; (உம்பன் - தேவன்);

உலகு உய்ந்திடக் குமை விடம் தரி கண்டனே - உலகுகள் உய்வதற்காகக் கண்டத்தில் கொல்லும் விடத்தைத் தரித்தவனே;


6)

பொங்கும் அன்பொடு போற்றி னேன்வினை போக்கி இன்பம ளித்திடாய்

வெங்க ணேறமர் வேந்த னேபுரம் வேவ மேருவி லேந்தினாய்

அங்கி வாழ்த்திய அண்ண லேநதி ஆர்ந்த வேணிய தன்மிசைக்

கொங்கி லங்கிய கொன்றை யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வெங்கண் ஏறு அமர் வேந்தனே - (கொடிய) சினம் மிக்க இடபத்தை ஊர்தியாக விரும்பிய அரசனே;

(சம்பந்தர் தேவாரம் - 2.23.5 - "வெங்கண் விடையாய் எம் வெண்நாவலுளாய்"; வெம்கண் - கண்ணில் விளங்கும் சினக்குறிப்பை உணர்த்துவது);

புரம் வேவ மேரு வில் ஏந்தினாய் - முப்புரங்களும் வெந்து அழிய மேருமலையை வில்லாக ஏந்தியவனே;

அங்கி வாழ்த்திய அண்ணலே - அக்கினி தேவன் வழிபட்ட ஈசன்; (அங்கி - அக்னி); (* அக்கினிதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதைத் தலவரலாற்றிற் காண்க);

நதி ஆர்ந்த வேணி அதன்மிசைக் கொங்கு இலங்கிய கொன்றையாய் - நதி பொருந்திய (கங்கையை உண்ட) சடையின்மேல் வாசம் மிக்க கொன்றையை அணிந்தவனே; (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்; தங்குதல்); (மிசை - மீது); (கொங்கு - வாசனை; தேன்);


7)

வல்ல வாறுனை வாழ்த்தி னேன்எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய்

நல்ல நீறணி மார்பில் ஓர்விட நாக மும்புனை நாதனே

வெல்லு மாபடை பார்த்த னுக்கருள் வேட னேகரி காடனே

கொல்லை ஏறமர் கொற்ற வாஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


வல்லவாறு உனை வாழ்த்தினேன் எனை வாட்டு வல்வினை மாய்த்திடாய் - இயன்ற அளவில் உன்னைப் போற்றினேன்; என்னை வாட்டுகின்ற வலிய வினைகளைத் தீர்த்து அருள்வாயாக; (வல்லவாறு - இயன்றவாறு); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.70.7 - "கொண்டீச்சுரவனை வல்லவாறு தொழ வினை மாயுமே");

நல்ல நீறு அணி மார்பில் ஓர் விடநாகமும் புனை நாதனே - சிறந்த திருநீறு பூசிய மார்பில் மாலையாக ஒரு விஷப்பாம்பையும் அணிந்தவனே;

வெல்லு மா படை பார்த்தனுக்கு அருள் வேடனே - வெல்லும் சிறந்த படையான பாசுபதாஸ்திரத்தை அருச்சுனனுக்கு அருளிய வேடனே;

கரிகாடனே - சுடுகாட்டில் இருப்பவனே; (சுடலையில் திருநடம் செய்பவன்);

கொல்லை ஏறு அமர் கொற்றவா - முல்லை நிலத்திற்கு உரிய விடையை ஊர்தியாக விரும்பிய அரசனே; (கொல்லை - முல்லைநிலம்); (கொற்றவன் - அரசன்);


8)

பாவி னாலடி வாழ்த்தி னேன்வினை பாற வேஅருள் நல்கிடாய்

மாவி லங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்தழ ஊன்றினாய்

தேவி பங்கமர் செல்வ னேஒரு சேவ தேறிய சேவகா

கூவி ளந்திகழ் குஞ்சி யாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பாவினால் அடி வாழ்த்தினேன் வினை பாறவே அருள் நல்கிடாய் - செந்தமிழ்ப் பாமாலைகளால் உன் திருவடியைப் போற்றினேன்; என் வினைகள் அழிய அருள்புரிவாயாக; (பாறுதல் - அழிதல்);

மா விலங்கலை வீச வந்தவன் வாய்கள் பத்து அழ ஊன்றினாய் - பெரிய மலையான கயிலையைப் பெயர்த்து எறிய வந்த இராவணனின் பத்து வாய்களும் அழும்படி (ஒரு விரலை மலைமேல்) ஊன்றியவனே; (விலங்கல் - மலை); (வீசுதல் - எறிதல்);

தேவி பங்கு அமர் செல்வனே - உமையை ஒரு பங்காக விரும்பியவனே;

ஒரு சேவது ஏறிய சேவகா - ஓர் இடபத்தின்மேல் ஏறிய வீரனே; (சே - இடபம்); (சேவகன் - வீரன்);

கூவிளம் திகழ் குஞ்சியாய் - உச்சிமேல் வில்வம் அணிந்தவனே; (கூவிளம் - வில்வம்); (குஞ்சி - தலை);


9)

மாண டிப்புகழ் பாடி னேன்நல(ம்) மல்க வேஅருள் நல்கிடாய்

ஆண வத்தொடு நேடு மாலயன் அஞ்சி ஏத்திட மாவொளித்

தூண தாகிய மூர்த்தி யேதிரி சூல னேபரி சுத்தனே

கோண லார்மதி சூடி னாய்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


மாணடி - மாண் அடி - மாட்சிமை மிக்க திருவடி; (மாண் - மாட்சிமை);

மல்குதல் - மிகுதல்; நிறைதல்;

நேடு மால் அயன் - தேடிய திருமாலும் பிரமனும்; (நேடுதல் - தேடுதல்);

மா ஒளித்தூண் அது ஆகிய மூர்த்தியே - எல்லையில்லாத சோதி ஆகிய பெருமானே;

கோணல் ஆர் மதி சூடினாய் - வளைந்த பிறைச்சந்திரனைச் சூடியவனே; (கோணல் - வளைவு; கூன்);


10)

நன்று தானறி யாத தெண்ணர்சொல் நம்பி டேல்நலம் வேண்டினீர்

நின்று மாமலர் தூவி வாழ்த்திடு(ம்) நேய ருக்கிடர் நீக்குவான்

மன்றில் மாநடம் ஆடு மன்னவன் வன்னி கூவிள(ம்) மாசுணம்

கொன்றை சூடிய சென்னி யான்அணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


நன்றுதான் அறியாத தெண்ணர் சொல் நம்பிடேல், நலம் வேண்டினீர் - நன்மை பெற விரும்பும் நீங்கள், நல்லது எது என்று அறியாத அறிவிலிகள் சொல்லை நம்பவேண்டா; (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (தெண்ணர் - அறிவிலிகள்); (இலக்கணக் குறிப்பு: "நலம் வேண்டினீர் நம்பிடேல்" - என்றது ஒருமை பன்மை மயக்கம்);

நலம் வேண்டினீர் நின்று மாமலர் தூவி வாழ்த்திடும் நேயருக்கு இடர் நீக்குவான் - நன்மை பெற விரும்பும் நீங்கள், ஈசன் திருமுன் நின்று சிறந்த பூக்களைத் தூவி வாழ்த்துங்கள்; அப்படி வழிபடும் அன்பர்களுக்கு இடர்களை நீக்கி ஈசன் அருள்வான்; ("நலம் வேண்டினீர்" என்ற சொற்றொடரை இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம் - இடைநிலைத்தீவகம்);

மன்றில் மா நடம் ஆடு மன்னவன் - தில்லை மன்றில் திருநடம் ஆடுகின்ற நடராஜன்;

வன்னி கூவிளம் மாசுணம் கொன்றை சூடிய சென்னியான் - வன்னி, வில்வம், பாம்பு, கொன்றை இவற்றையெல்லாம் முடிமேல் சூடியவன்; (கூவிளம் - வில்வம்); (மாசுணம் - பாம்பு);


11)

பரவி உன்னடி போற்றி னேன்வினை பாற்றி டாய்உமை பங்கனே

சிரம துண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து ழன்றிடு செல்வனே

அரவை மார்பினில் ஆர மாஅணி ஐய னேவட வாலமர்

குரவ னேமறை நாவ னேஅணி கொள்ளிக் காடுறை கூத்தனே.


பரவி உன் அடி போற்றினேன் வினை பாற்றிடாய் - உன் திருவடியைப் பாடிப் பணிந்தேன்; என் வினையை அழித்தருள்வாயாக; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பாடுதல்); (பாற்றுதல் - அழித்தல்);

உமை பங்கனே - உமையொரு பாகம் உடையவனே;

சிரம் அது உண்கலம் ஆக ஊர்ப்பலி தேர்ந்து உழன்றிடு செல்வனே - (பிரமனது) மண்டையோட்டில் ஊரார் இடும் பிச்சையை ஏற்று உழலும் செல்வனே;

அரவை மார்பினில் ஆரமா அணி ஐயனே - பாம்பை மார்பில் மாலையாக அணியும் தலைவனே; (ஆரமா - ஆரமாக - கடைக்குறை விகாரம்);

வடவால் அமர் குரவனே - கல்லால மரத்தின்கீழ் இருந்த குருவே; (வடவால் - கல்லால மரம்);(குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");

மறை நாவனே - வேதம் ஓதியவனே;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

எழுசீர்ச் சந்த விருத்தம் - "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தம்;

முதற்சீர் "தனன" என்றும் சில பாடல்களில் வரலாம்;

சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானி னேர்விழி மாத ராய்வழு திக்கு மாபெருந் தேவிகேள்"


2) கொள்ளிக்காடு - இத்தலம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இடையே உள்ளது.

பஞ்சின் மெல்லடியம்மை சமேத அக்னீஸ்வரர் கோயில்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment