07.22 – நெல்வாயில் (சிவபுரி)
2016-01-21
நெல்வாயில் (இக்காலத்தில் - சிவபுரி)
(இத்தலம் சிதம்பரம் அருகே உள்ளது)
------------------
(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியைப்")
1)
தழலார் மேனிச் சங்கரனே .. தாதாய் காவாய் என்றடியைத்
தொழுமார்க் கண்டர்க் கருள்புரிந்து .. சூல மேந்தி வருநமனைக்
கழலால் உதைத்த கண்ணுதலான் .. கள்ளுண் டளிகள் இசைபாடும்
நிழலார் சோலை நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
* திருநெல்வாயில் ஈசன் திருநாமம் - உச்சிநாதர்;
"தழல் ஆர் மேனிச் சங்கரனே; தாதாய்; காவாய்" என்று அடியைத் தொழு மார்க்கண்டர்க்கு அருள்புரிந்து - "தீப் போன்ற செம்மேனி உடைய சங்கரனே; தந்தையே; காத்தருளாய்" என்று திருவடியை வணங்கிய மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்து; (ஆர்தல் - ஒத்தல்);
சூலம் ஏந்தி வரு நமனைக் கழலால் உதைத்த கண்ணுதலான் - கையில் சூலத்தை ஏந்தி அவரை அணுகிய காலனைத் திருவடியால் உதைத்த நெற்றிக்கண்ணன்;
கள் உண்டு அளிகள் இசை பாடும் நிழல் ஆர் சோலை நெல்வாயில் - பூக்களில் மது உண்டு வண்டுகள் இசை செய்யும், நிழல் மிக்க பொழில்கள் சூழ்ந்த திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும்; (அளி - வண்டு);
நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்; (ஆர்தல் - பொருந்துதல்; அணிதல்); (உச்சி - தலை; நடுப்பகல்); (சம்பந்தர் தேவாரம் - 2.26.5 - "நெல்வாயில் மேவிய ஒருத்தனார் எமதுச்சியாரே");
2)
எல்லா ருக்கும் ஒருதலைவன் .. இமையோர்க் கிரங்கி மேருமலை
வில்லால் எயில்கள் மூன்றுமுடன் .. வேவ எரியார் கணையேவ
வல்லான் மார்பில் வாளரவ .. மாலை தாங்கு மாதேவன்
நெல்லார் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
எல்லாருக்கும் ஒரு தலைவன் - எல்லார்க்கும் தலைவன், ஒப்பற்றவன்; (ஒரு - ஒன்று; ஒப்பற்ற);
இமையோர்க்கு இரங்கி மேருமலை வில்லால் எயில்கள் மூன்றும் உடன் வேவ எரி ஆர் கணை ஏவ வல்லான் - தேவர்களுக்கு இரங்கி, மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களும் ஒருங்கே வெந்து அழிய தீப் பொருந்திய கணையை எய்தவன்; (எயில் - கோட்டை);
மார்பில் வாள்-அரவ மாலை தாங்கு மாதேவன் - மார்பில் கொடிய பாம்பை மாலையாக அணிந்த மகாதேவன்; (வாள் - கொடிய); (அரவம் - பாம்பு);
நெல் ஆர் வயல் சூழ் நெல்வாயில் - நெற்பயிர் விளையும் வயல் சூழ்ந்த திருநெல்வாயிலில் எழுந்தருளிய;
நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்;
3)
ஆற்று கின்ற செயலெல்லாம் .. அரன்தொண் டாகச் செய்கின்ற
ஏற்றம் உடையார் உள்ளத்தில் .. இனிதே உறையும் எம்மீசன்
ஏற்றன் ஏனக் கொம்பணிந்த .. இறைவன் நூலார் மார்பில்வெண்
நீற்றன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
ஆற்றுகின்ற செயல் எல்லாம் அரன் தொண்டாகச் செய்கின்ற - செய்வதெல்லாம் சிவன் பணியாகச் செய்கின்ற; (திருவெம்பாவை - 8.7.19 - "எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க");
ஏற்றம் உடையார் உள்ளத்தில் இனிதே உறையும் எம் ஈசன் - மேன்மை உடையவர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் ஈசன்; (ஏற்றம் - மேன்மை);
ஏற்றன் - இடப வாகனன்;
ஏனக் கொம்பு அணிந்த இறைவன் - பன்றியின் கொம்பை அணிந்த இறைவன்; (சுந்தரர் தேவாரம் - 7.18.4 - "ஏனக்கொம்பும் இள ஆமையும் பூண்டங்கோர் ஏறும் ஏறிக்");
நூல் ஆர் மார்பில் வெண் நீற்றன் - முப்புரிநூல் திகழும் மார்பில் வெண்-திருநீறு அணிந்தவன்;
வயல் சூழ் நெல்வாயில் - வயல் சூழ்ந்த திருநெல்வாயிலில் எழுந்தருளிய;
நீர் ஆர் உச்சிப் பெருமானே - தலையில் கங்கையை உடைய பெருமான், உச்சிநாதன்;
4)
அமரர் இறைஞ்ச அவர்க்கிரங்கி .. அருநஞ் சுண்ட அருளாளன்
சமரை விரும்பு சலந்தரனைச் .. சாய்த்த ஆழி தனைவிரும்பிக்
கமலம் போலக் கண்ணிட்டுக் .. கழல்ப ணிந்த அரிக்கீந்த
நிமலன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
அமரர் இறைஞ்ச அவர்க்கு இரங்கி அரு-நஞ்சு உண்ட அருளாளன் - தேவர் வேண்ட, அவர்களுக்கு இரங்கிக் கொடிய விடத்தை உண்ட அருளாளன்;
சமரை விரும்பு சலந்தரனைச் சாய்த்த ஆழிதனை விரும்பிக் - போரை விரும்பிய சலந்தராசுரனைக் கொன்ற சக்கரத்தை அடைய விரும்பி; (சமர் - போர்);
கமலம் போலக் கண் இட்டுக் கழல் பணிந்த அரிக்கு ஈந்த நிமலன் - தாமரைப்பூவைப் போலத் தன் கண்ணைத் தோண்டி இட்டுத் திருவடியை வணங்கிய திருமாலுக்கு அதனை அருளிய தூயன்;
5)
தாயின் நல்லன் அடியார்க்குத் .. தாளை வணங்க நினையார்க்குச்
சேயன் நுதலில் திகழ்கண்ணில் .. தீயன் வெள்ளை எருதேறும்
தூயன் தோற்றம் அந்தமிலான் .. துடிபோல் இடையாள் மலைமங்கை
நேயன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
தாயின் நல்லன் அடியார்க்கு - அன்பர்களுக்குத் தாயினும் மிக நல்லவன்;
தாளை வணங்க நினையார்க்குச் சேயன் - திருவடியை வணங்காதவர்களுக்குத் தொலைவில் இருப்பவன்;
நுதலில் திகழ் கண்ணில் தீயன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;
வெள்ளை எருது ஏறும் தூயன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய தூயவன்;
தோற்றம் அந்தம் இலான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
துடி போல் இடையாள் மலைமங்கை நேயன் - உடுக்கைப் போன்ற சிற்றிடை உடைய உமைக்கு அன்பன்; (துடி - உடுக்கு); (நேயம் - அன்பு);
வயல் சூழ் நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - வயல் சூழ்ந்த திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன்;
6)
சூலம் மழுவாள் இவையேந்திச் .. சுடுநீ றணிந்த கோலத்தன்
ஏலம் ஆர்ந்த குழலாளை .. இடப்பால் உகந்த எம்மீசன்
ஓலம் என்ற வானவர்கள் .. உய்ய அருள்செய் கண்டத்தில்
நீலன் வயல்சூழ் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
சூலம் மழுவாள் இவை ஏந்திச் சுடுநீறு அணிந்த கோலத்தன் - சூலத்தையும் மழுவையும் கையில் ஏந்தி, வெந்த திருநீற்றைப் பூசிய திருமேனியன்;
ஏலம் ஆர்ந்த குழலாளை - மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தல் உடைய உமை; (சம்பந்தர் தேவாரம் - 3.32.4 - "ஏலமார் தருகுழல் ஏழையோடு" - மயிர்ச்சாந்து தடவிய மணமிகு கூந்தலையுடைய உமாதேவியோடு);
இடப்பால் உகந்த எம் ஈசன் - இடப்பக்கம் பாகமாக விரும்பிய எம் ஈசன்;
ஓலம் என்ற வானவர்கள் உய்ய அருள்செய் கண்டத்தில் நீலன் - ஓலம் என்று சரண்புகுந்த தேவர்கள் உய்யுமாறு அருளிய நீலகண்டன்; (ஓலம் - அபயம்வேண்டுங் குறிப்பு மொழி);
7)
பசியென் றோட்டைக் கையேந்திப் .. பலமுன் றில்போய்ப் பலிதேர்வான்
இசையும் தமிழும் கலந்துவரும் .. இனிய பாடல் பலபாடிக்
கசியும் மனத்தால் தொழுவாரைக் .. காக்கும் பெருமான் கணம்சூழ
நிசியில் ஆடி நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
பசி என்று ஓட்டைக் கை ஏந்திப் பல முன்றில் போய்ப் பலிதேர்வான் - பசி என்று பிரமனின் மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பல வீட்டுவாயில்களை அடைந்து பிச்சை இரப்பவன்; (முன்றில் - வீட்டின் முன்னிடம்); (போதல் - அடைதல்);
இசையும் தமிழும் கலந்து வரும் இனிய பாடல் பல பாடிக் - இசையும் தமிழும் இணைந்த தேவாரப் பாடல்கள் பலவும் பாடி;
கசியும் மனத்தால் தொழுவாரைக் காக்கும் பெருமான் - உருகும் மனத்தோடு வணங்கும் அடியவர்களைக் காக்கின்ற பெருமான்;
கணம் சூழ நிசியில் ஆடி - பூதகணங்கள் சூழ இருளில் ஆடுபவன்;
நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;
8)
போரில் லாத இராவணனைப் .. பொருப்பின் கீழே அடர்த்தபிரான்
தேரில் ஏறி மேருவெனும் .. சிலையை ஏந்திப் புரமெய்தான்
பேரில் லாதான் நாம்சொல்லப் .. பேர்கள் ஓரா யிரமுடையான்
நேரில் லாதான் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
போர் இல்லாத இராவணனைப் பொருப்பின் கீழே அடர்த்த பிரான் - எதிர்த்துப் போர் செய்வார் எவரும் இல்லாத இராவணனைக் கயிலைமலையின் கீழே நசுக்கிய தலைவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன்);
தேரில் ஏறி மேரு எனும் சிலையை ஏந்திப் புரம் எய்தான் - தேரில் ஏறி மேருமலை என்ற வில்லை ஏந்தி முப்புரங்களை ஒரு கணையால் அழித்தவன்; (சிலை - வில்);
பேர் இல்லாதான் நாம் சொல்லப் பேர்கள் ஓர் ஆயிரம் உடையான் - ஒரு நாமமும் இல்லாதவன்; நாம் போற்றித் துதிக்க ஆயிரம் பெயர்கள் உடையவன்; (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.1 - "ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ");
நேர் இல்லாதான் - ஒப்பற்றவன்; உவமிக்க ஒண்ணாதவன்; (நேர் - ஒப்பு; உவமை);
நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;
9)
கோல மலர்மேல் உறைவானும் .. குன்றைக் குடையாப் பிடித்தானும்
மால தாகி மிகநேடி .. வாடி ஏத்து வளர்சோதி
கால காலன் அடியார்க்குக் .. கரவில் லாது வரமருளும்
நீல கண்டன் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
கோல மலர்மேல் உறைவானும் - அழகிய தாமரையில் இருக்கும் பிரமனும்;
குன்றைக் குடையாப் பிடித்தானும் - (கிருஷ்ணாவதாரத்தில்) மலையைக் குடைபோலப் பிடித்த திருமாலும்;
மாலது ஆகி மிக நேடி வாடி ஏத்து வளர்சோதி - மனமயக்கத்தால் மிகவும் தேடி, அடிமுடியைக் காணாது வாடிப், போற்றிய எல்லையற்ற சோதி ஆனவன்; (மால் - மயக்கம்); (நேடுதல் - தேடுதல்);
கால காலன் - காலனுக்குக் காலன்;
அடியார்க்குக் கரவு இல்லாது வரம் அருளும் நீலகண்டன் - பக்தர்களுக்கு வஞ்சமின்றி வரங்களை வாரி வழங்குகின்ற நீலகண்டன்; (கரவு - ஒளித்தல்; வஞ்சனை);
நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;
10)
தகவில் லாத புன்மொழியைத் .. தத்து வம்போல் எடுத்துரைப்பார்
பகலும் இரவும் வழியறியாப் .. பளகர் சொல்லை மதியேன்மின்
புகழும் அடியார் வினைதீர்த்துப் .. போகம் வீடு புரக்குமரன்
நிகரில் லாதான் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
தகவு இல்லாத புன்மொழியைத் தத்துவம் போல் எடுத்து உரைப்பார் பகலும் இரவும் - பொருந்தாத புன்சொற்களையே சிறந்த தத்துவம் போல இராப்பகலாக எப்போதும் பேசுவார்கள்; (தகவு - தகுதி; அறிவு);
பகலும் இரவும் வழி அறியாப் பளகர் சொல்லை மதியேன்மின் - இரவிலும் பகலிலும் செல்லும் மார்க்கத்தை அறியாத மூடர்கள் சொல்லும் சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா; (பளகர் - மூடர் - குற்றமுடையவர்; பாவிகள்); ("பகலும் இரவும்" - என்ற சொற்றொடர் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள நின்றது); (பகலும் இரவும் வழி அறியா - சில ஜீவராசிகள் இரவில் இயங்குவன; அவை இருளில் நன்கு காணவல்லன; ஆனால் இந்த மூடர்கள் முழுக்குருடர்கள் - பகலிலும் காணமாட்டார்கள், இரவிலும் காணமாட்டார்கள்); (சம்பந்தர் தேவாரம் - 3.32.10 - "பண்டியைப் பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர்");
புகழும் அடியார் வினை தீர்த்துப் போகம் வீடு புரக்கும் அரன் - திருப்புகழைப் பாடி வணங்கும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்த்து அவர்களுக்கு இம்மை மறுமை இன்பங்களைத் தரும் ஹரன்; (புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்);
நிகர் இல்லாதான் - ஒப்பற்றவன்;
நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;
11)
கருப்புச் சிலையைக் கையேந்து .. காமன் தன்னைப் பொடிசெய்தான்
பொருப்பு மன்னன் பொற்கொடியைப் .. புடையில் உகந்த புரிசடையான்
விருப்பு மிக்குப் பணிதொண்டர் .. வேண்டு வரங்கள் அளிக்கின்ற
நெருப்பு வண்ணன் நெல்வாயில் .. நீரார் உச்சிப் பெருமானே.
* கனகாம்பிகை - திருவேட்களத்து இறைவி திருநாமம்;
கருப்புச் சிலையைக் கை ஏந்து காமன் தன்னைப் பொடி செய்தான் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனது உடலைச் சாம்பல் ஆக்கியவன்; (கருப்புச் சிலை - கரும்பால் ஆன வில்); (ஆகம் - உடல்);
பொருப்பு மன்னன் பொற்கொடியைப் புடையில் உகந்த புரி-சடையான் - மலையான் மகளும் பொற்கொடி போன்றவளும் ஆன உமையை ஒரு பக்கத்தில் விரும்பியவன், முறுக்கேறிய சடையை உடையவன்; (பொருப்பு - மலை); (புடை - பக்கம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல் -To be twisted; to curl);
விருப்பு மிக்குப் பணி தொண்டர் வேண்டு வரங்கள் அளிக்கின்ற நெருப்பு வண்ணன் - அன்பு மிகுந்து வழிபடும் அடியவர்கள் விரும்பும் வரங்களையெல்லாம் அளிக்கின்றவன்; தீப்போன்ற செம்மேனி உடையவன்; (விருப்பு - விருப்பம் - அன்பு);
நெல்வாயில் நீர் ஆர் உச்சிப் பெருமானே - திருநெல்வாயில் என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் கங்காதரன், உச்சிநாதன்;
வி. சுப்பிரமணியன்
-------------- --------------
No comments:
Post a Comment