Friday, August 21, 2015

01.71 – இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

01.71 – இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)



2010-05-23
இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)
----------------------------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே)



1)
பொய்ம்மான் தனையேவிப் புன்மை புரிந்தானை
வெம்மா கணையேவி வீட்ட இராமன்தான்
அம்மா வினைதீர அன்று வழிபட்ட
எம்மான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



புன்மை - இழிவு; குற்றம்;
பொய்ம்மான் தனை ஏவிப் புன்மை புரிந்தானை - மாரீசனை மாயமான் உருவில் அனுப்பிச் சீதையைக் கவர்ந்த இராவணனை;
வீட்டுதல் - கொல்லுதல்;
வெம் மா கணை ஏவி வீட்ட இராமன் - கொடிய பெரும் கணையைச் செலுத்தி அழித்த இராமன்;
அம் மா வினை தீர - அப்பெரும் பாவம் தீர்வதற்காக;
எம்மான் - எம் சுவாமி;
அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;
இராமேச்சுரம் - ராமேஸ்வரம்;


(சம்பந்தர் தேவாரம் - 3.10.2 -
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. )



2)
நெய்தான் மிகஆடும் நிமலன் அடிபோற்றிப்
பொய்தான் அடையார்முன் புரிவல் வினைதீரச்
செய்தான் கணையொன்றால் திரியும் புரமூன்றும்
எய்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



நெய்யால் மிகவும் அபிஷேகம் செய்யப்பெறும் நிர்மலனான சிவன் திருவடியைத் தொழுதுபோற்றுகின்றவர்களும், பொய் அடையாதவர்களுமான பக்தர்களின் முன் செய்த வல்வினை எல்லாம் தீர்த்தருள்பவன்; விண்ணில் திரிந்த மூன்று புரங்களையும் ஓர் அம்பால் எய்தவன்; அப்பெருமான் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம் ஆகும்.



3)
பாசம் பிடிகாலன் பாய்ந்து வரும்போது
வாச மலர்த்தாளை மாணி உயிர்வாழ
வீசு பெருமானார் விண்ணார் மதிசூடும்
ஈசன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்;
மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தைப் பிடித்துக் காலன் விரைந்து வந்தபொழுது அடியவர் உயிர்வாழ்வதற்காகத் தன் வாசமலர் போன்ற திருவடியை வீசி எமனை அழித்த பெருமான்; வானத்து மதியை முடிமேல் அணியும் ஈசன் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம்.



4)
பாய்ந்த விடம்கண்டு பயந்த இமையோர்க்கா
மாந்து மணிகண்டன் மதனின் உடல்வேவக்
காய்ந்த கனற்கண்ணன் கையில் தலையொன்றை
ஏந்தி அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



இமையோர்க்கா - இமையோர்க்காக - தேவர்களுக்காக;
மாந்துதல் - உண்ணுதல்;
மணிகண்டன் - கண்டத்தில் நீலமணியை உடையவன்;
மதன் - மன்மதன்;
காய்ந்த – கோபித்த; எரித்த;
கனற்கண்ணன் - கண்ணில் தீயை உடையவன்;
ஏந்தி - ஏந்துபவன்;



5)
ஆற்றும் பணியெல்லாம் அரனார்க் கெனவாழும்
தேற்ற மனத்தார்முன் செய்த வினைதீர்க்கும்
ஆற்றன் அணிதிங்கள் அரவு புனைகின்ற
ஏற்றன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தேற்றம் - தெளிவு;
ஆற்றும் பணி ல்லாம் அரனார்க்கு என வாழும் தேற்ற மனத்தார் - செய்யும் செயல் எல்லாம் சிவபெருமான் தொண்டாக வாழ்கின்ற தெளிந்த மனத்து அடியவர்கள்;
(திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.19 - “...எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க...”);
ஆற்றன் - கங்கையைத் தாங்கியவன்; ஆறாக (வழியாக) இருப்பவன்;
அணி திங்கள் அரவு புனைகின்ற ஏற்றன் - அழகிய சந்திரனையும் பாம்பையும் சூடுகின்றவன், இடப வாகனன்;



6)
"வளியாய்ப் புனல்தீயாய் மண்ணாய் வெளியானாய்;
ஒளிசேர் மதிசூடீ; ஒருவா; அருள்"என்றே
அளியோ டடிபோற்றும் அன்பர் தமக்கெல்லாம்
எளியான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



வளி - காற்று;
வெளி - ஆகாயம்;
ஆனாய் - ஆனவனே;
ஒளிசேர் மதிசூடீ - ஒளி பொருந்திய பிறையைச் சூடியவனே;
ஒருவா - ஒப்பற்றவனே; (ஒருவன் - ஒப்பற்றவன்);
அளி - அன்பு;
எளியான் - எளியவன் - எளிதில் அடையப்படுபவன்;



7)
உடலில் ஒருகூறா உமையை மகிழ்ஈசன்;
சுடலைப் பொடிபூசி; சூலப் படையேந்தி;
கடலின் விடமுண்ட கண்டன்; மழவெள்ளை
இடபன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



உடலில் ஒரு கூறா - திருமேனியில் ஒரு பாகமாக; (கூறா - கூறாக);
உமையை மகிழ் ஈசன் - உமையை விரும்பும் ஈசன்; (சுந்தரர் தேவாரம் - 7.67.3 - “ஆழியனாய் … உமையை மகிழ்ந்தானை வலிவலந்தனில் வந்து கண்டேனே.”); (மகிழ்தல் - விரும்புதல்);
சுடலைப் பொடிபூசி - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;
சூலப் படையேந்தி - சூலபாணி;
மழ வெள்ளை இடபன் - இளம் வெள்ளை ஏற்றை ஊர்தியாக உடையவன்; (மழ – இளமை); (இடபம் - ஏறு; இடபன் - ஏற்றை உடையவன்; சூலம் - சூலன், வேடம் - வேடன், இவற்றைப் போல இடபம் - இடபன்);



8)
பொருப்பாட் டரக்கன்தான் புலம்ப விரலூன்றி
விருப்போ டிசைகேட்டு மிகவும் அருள்செய்தான்
நெருப்போர் கரத்தேந்து நிருத்தன் அழிவின்றி
இருப்பான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



பொருப்பு ஆட்டு அரக்கன் - கயிலை மலையை ஆட்டிய இராவணன்;
நெருப்பு ஓர் கரத்து ஏந்து நிருத்தன் - தீயை ஒரு கையில் ஏந்தும் கூத்தன்;



9)
தடுத்தான் நதிதன்னைத்; தன்மேல் மலரம்பு
தொடுத்தான் தனைக்கண்ணால் சுட்டான்; அரவின்மேல்
படுத்தான் அறியாத பாதம் தனைஆட
எடுத்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தடுத்தான், சுட்டான், படுத்தான், எடுத்தான் - தடுத்தவன், சுட்டவன், படுத்தவன், எடுத்தவன் (உயர்த்தியவன்);
அரவின்மேல் படுத்தான் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமால்;
எடுத்தல் - உயர்த்துதல்;
அரவின்மேல் படுத்தான் அறியாத பாதம்தனை ஆட எடுத்தான் - (அப்பர் தேவாரம் - 4.81.10 - "... நாரணன் நான்முகனுந் தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதம் ...")



10)
நிந்தித் துழல்மூடர் நெறியை அறியாமல்
நொந்து குழிவீழ்வார் நுவலும் வழிவிட்டு
வந்திக் கிறஅன்பர் மனத்தில் மகிழ்கின்ற
எந்தை அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



நிந்தித்து ழல் மூடர் - பழித்துப்பேசி உழல்கின்ற மூடர்கள்;
நெறியை அறியாமல் நொந்து குழி வீழ்வார் - உய்யும் நெறியை உணராமல் துன்புற்று வினைக்குழியில் விழுகின்றவர்கள்;
நுவலும் வழி விட்டு வந்திக்கிற அன்பர் மனத்தில் மகிழ்கின்ற எந்தை - அத்தகையோர் சொல்லும் பொய்ந்நெறிகளை நீங்கித் தன் திருவடியை வணங்குகின்ற பக்தர்கள் நெஞ்சில் விரும்பி உறையும் எம் தந்தையான சிவபெருமான்; (நுவல்தல் - சொல்லுதல்); (வழி - மார்க்கம்); (விடுதல் - நீங்குதல்);



11)
மறைகள் துதியீசன் மலர்த்தாள் தினந்தோறும்
முறையால் தொழுவோரின் முன்னை வினையோடு
குறைகள் அவைதீர்ப்பான் குளிர்வெண் மதிசூடும்
இறைவன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தீர்ப்பான் - தீர்ப்பவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



------------------- 

No comments:

Post a Comment