Friday, August 28, 2015

02.08 – நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು)

02.08நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು)



2010-12-11
நஞ்சனகூடு (Nanjangud - (Kannada ನಂಜನಗೂಡು) - மைசூர்க்கு அருகுள்ள தலம்)
நஞ்சங் கூடு கண்டனே
----------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா விளம்' - அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - வானைக் காவில் வெண்மதி)

1)
அம்பை எய்த காமனை
.. அன்று சாம்பல் ஆக்கினாய்
தும்பை மலர்சேர் சென்னிமேல்
.. தூவெண் மதியும் சூடினாய்
கொம்பன் னாளோர் கூறெனக்
.. கொண்டாய் நின்தாள் சரணென
நம்பி னாருக் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



பதம் பிரித்து:
"அம்பை எய்த காமனை .. அன்று சாம்பல் ஆக்கினாய்;
தும்பைமலர் சேர் சென்னிமேல் .. தூ வெண் மதியும் சூடினாய்;
கொம்பு அன்னாள் ஓர் கூறு எனக் .. கொண்டாய்; நின் தாள் சரண்" என
நம்பினாருக்கு அருள் செயும் .. நஞ்சங்கூடு கண்டனே.


ஆக்கினாய், சூடினாய்,, - ஆக்கினவனே, சூடியவனே,, என்ற விளிகள்;
கொம்பு அன்னாள் ஓர் கூறு என - பூங்கொம்பை ஒத்த உமாதேவியை ஒரு பாகமாக;
(அப்பர் தேவாரம் - 4.66.1 - 'கொம்பனாள் பாகர் போலும் ...');
நம்புதல் - விரும்புதல்;
அருள்செயும் - அருள்செய்வான்;
நஞ்சங் கூடு கண்டனே - 1) நஞ்சு சேரும் நீலகண்டனே; 2) நஞ்சங்கூடு - 'நஞ்சனகூடு' (nanjangud - Kannada ನಂಜನಗೂಡು) என்ற தலத்தின் பெயரின் திரிபும் ஆம்;


இலக்கணக் குறிப்புகள் :
1) கண்டன் - நீலகண்டன் என்பது ஒருபுடையாக வந்தது; (ஒருபுடை - ஏகதேசம் - Partial); சில தேவாரப் பாடல்களில் சம்பந்தன் என்பது பந்தன் என்று வரக் காணலாம்; ஏகம்பன் என்பது கம்பன் என்று வரக் காணலாம். அவை போல இது.
2) அருள்செயும் - அருள்செய்வான்; - செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும். (.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.
(திருமுறை 9.24.8
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று
துதித்து மறையோர் வணங்குந் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள்
உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும்
பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே.
- .......... பவளம் போன்ற சிவந்த திருமேனியை யுடைய மேலோன் ஆகிய சிவபெருமான் கூத்து நிகழ்த்துகிறான்.)


"மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவனே! தும்பைப்பூவோடு தூய வெண்திங்களையும் அணிபவனே! பூங்கொம்பு போன்ற பார்வதியை ஒரு பங்காகக் கொண்டவனே! உன் திருவடியே புகல்!" என்று அன்போடு விரும்பிப் போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



2)
கீளும் அணிவாய் வெண்மதிக்
.. கீற்றும் அணிவாய் ஒண்மழு
வாளும் தரிப்பாய் கரத்தினில்
.. மானும் தரிப்பாய் உலகெலாம்
ஆளும் அரனே தாமரை
.. அனநின் அடியே சரணென
நாளும் தொழுவார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



கீள் - கோவணத்தொடு சேர்த்துக் கட்டப்படும் அரைநாண் துணி ;
அணிவாய், தரிப்பாய் - அணிபவனே, தரிப்பவனே என்ற விளிகள்;
ஒண் மழு - ஒளிவீசும் மழு;
தரித்தல் - தாங்குதல்;
அன - அன்ன (இடைக்குறை விகாரம்)- போன்ற;


"கீளும் கோவணமும் அணிபவனே! வெண்பிறைச்சந்திரனையும் சூடுபவனே! ஒளிவீசும் மழுவாளையும் மானையும் கையில் ஏந்துபவனே! எல்லா உலகங்களையும் ஆளும் ஹரனே!தாமரை போன்ற உன் திருவடியே புகல்!" என்று தினந்தோறும் போற்றி வழிபடும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



3)
வற்றா நதிபாய் சென்னிமேல்
.. வாச மலரும் நாகமும்
முற்றா மதியும் புனைபவ
.. முனிவர்க் காகக் காலனைச்
செற்றாய் முக்கண் முதல்வனே
.. சிவனே என்று நாள்தொறும்
நற்றாள் தொழுவார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



செற்றாய் - அழித்தவனே;


"வற்றாத கங்கை பாயும் திருமுடிமேல் மணம் வீசும் பூவையும் பாம்பையும் இளம்பிறைச்சந்திரனையும் சூடுபவனே! மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்து அழித்தவனே! மூன்று கண்கள் உடைய முதல்வனே! சிவபெருமானே!" என்று தினந்தோறும் நற்பாதங்களை வழிபடும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



4)
புவியில் பிறக்கச் செய்வினை
.. போக்க விரும்பு மனத்தராய்ச்
செவிகள் இரண்டால் திருப்புகழ்த்
.. தேனை மடுத்துக் காதலோ(டு)
அவிழும் வாச மலர்களை
.. அடியில் இட்டஞ் செழுத்தினை
நவிலும் அன்பர்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



திருப்புகழ்த் தேன் - இறைவனின் திருப்புகழ் என்னும் தேன்;
செவி மடுத்தல் - கேட்டல்;
காதல் - பக்தி; அன்பு;
அவிழ்தல் - மலர்தல்;
நவில்தல் - சொல்லுதல்;


பூமியில் பிறப்பை அளிக்கும் வினைகளைப் போக்க விரும்பி, இரு காதுகளால் ஈசன் திருப்புகழ் என்ற தேனை மாந்தி, அன்று மலரும் நறுமணம் மிக்க பூக்களை அன்போடு திருவடியில் இட்டு, 'நமசிவாய' என்ற திருவைந்தெழுத்தைச் சொல்லும் பக்தர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



5)
போதார் முடிமேல் அரவொடு
.. புனலும் மதியும் புனைகிற
வேதா முன்னம் சுந்தரர்
.. வேண்டப் பரவை யிடம்செலும்
தூதா தோடும் அணிகிற
.. காதா நீதான் என்துணை
நாதா என்பார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



போது ஆர் முடி - பூக்கள் பொருந்திய தலை;
பரவை இடம் செலும் தூதா - பரவைநாச்சியாரின் வீட்டிற்குச் செல்லும் தூதனே;


"மலர்கள் சூடிய திருமுடி மேல் பாம்பையும் கங்கையையும் பிறைச்சந்திரனையும் அணிகிற வேதனே! முன்பு சுந்தரரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் மனைவியார் பரவைநாச்சியார் வீட்டிற்குத் தூது சென்றவனே! ஒரு காதில் குழையும் ஒரு காதில் தோடும் அணிபவனே! நாதனே! நீயே என் துணை!" என்று போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



6)
பதியே பாவை பங்கனே
.. பவநோய் மருந்தே உலப்பிலா
நிதியே நெற்றிக் கண்ணனே
.. நிகரில் லாத புகழினாய்
உதிஞா யிறன்ன வண்ணனே
.. ஒளிரும் பிறைசேர் சென்னிமேல்
நதியாய் என்பார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



பவநோய் - பிறவிப்பிணி;
உலப்பு இலா நிதி - அழியாத செல்வம்;
உதிஞாயிறு அன்ன வண்ணனே - உதிக்கும் சூரியனைப் போன்ற நிறத்தினனே;


"தலைவனே! பார்வதியை ஒரு பங்காக உடையவனே! பிறவிப்பிணிக்கு மருந்தே! அழியாத செல்வமே! நெற்றிக் கண்ணனே! ஒப்பற்ற புகழை உடையவனே! உதிக்கும் சூரியனைப் போலச் செந்நிறத்தவனே! பிரகாசிக்கும் பிறைச்சந்திரனோடு தலைமேல் கங்கையையும் தாங்குபவனே!" என்று போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



7)
பிச்ச னேமுன் மதுரையில்
.. பிரம்பி னாற்புண் பட்டவா
நச்ச ராவும் திங்களும்
.. நதியும் வாசக் கொன்றையும்
உச்சி மீது வைத்தவா
.. உன்பொன் னடியே சரணென
நச்சி னாருக் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



பிச்சன் - பித்தன்;
நச்சு அரா - விஷப் பாம்பு;
நச்சினார் - விரும்பியவர்கள்;


"பித்தனே! முன்னம் பிட்டுக்கு மண்சுமந்து மதுரையில் பிரம்படி பட்டவனே! விஷப்பாம்பையும் சந்திரனையும் கங்கையையும் வாசம் கமழும் கொன்றைப்பூவையும் தலைமேல் அணிந்தவனே! உன் பொன்னடியே புகல்!" என்று விரும்பிப் போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



8)
இயக்கும் தேரி றங்கவும்
.. ஏறும் சினத்தி ராவணன்
மயக்கத் தால்வெற் பசைக்கவும்
.. மலர்போல் விரலிட் டடர்த்தவா
உயர்த்தும் காளைக் கொடியினாய்
.. உன்றன் கழலே சரணென
நயக்கும் அடியார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



பதம் பிரித்து:
"இயக்கும் தேர் இறங்கவும், .. ஏறும் சினத்து இராவணன்
மயக்கத்தால் வெற்பு அசைக்கவும், .. மலர்போல் விரல் இட்டு அடர்த்தவா;
உயர்த்தும் காளைக் கொடியினாய்; .. உன்றன் கழலே சரண்" என
நயக்கும் அடியார்க்கு அருள்செயும் .. நஞ்சங் கூடு கண்டனே.


வெற்பு - மலை - இங்கே கயிலைமலை;
அடர்த்தல் - நசுக்குதல்;
நயத்தல் - விரும்புதல்;


"தான் ஓட்டிய, வானில் ஓடும் தேர் கயிலைமேல் செல்லாமல் தரையில் இறங்கவும், மிகக் கோபம் கொண்ட இராவணன், அறியாமையால் ஆணவத்தால் கயிலைமலையை ஏறிய முயலும்போது, மலர் போல் விரலை அம்மலைமேல் ஊன்றி அவனை நசுக்கியவனே! காளைக்கொடியை உடையவனே! உன் கழல் அணிந்த திருவடியே புகல்!" என்று விரும்பிப் போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



9)
தேடி னார்கள் இருவரும்
.. சேர ஒண்ணாச் சோதியாய்
வீடி னாரின் எலும்பினை
.. விரும்பி அணியும் பண்பினாய்
ஆடி மகிழும் ஐயநின்
.. அலரும் அடியே சரணென
நாடி னாருக் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



தேடினார்கள் இருவர் - பிரமன், திருமால்;
வீடினார் - இறந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.11 - "வீடினார்மலி வெங்கடத்துநின்று")
அலரும் அடி - மலரும் திருவடி; (அலர்தல் - மலர்தல்; விளங்குதல்)
(அப்பர் தேவாரம் - 4.82.6 - "நிலையும் பெருமையு .... அலருங் கழலடி நாடொறு நந்தமை யாள்வனவே");


"அடியும் முடியும் தேடியவர்களான திருமாலும் பிரமனும் அடைய இயலாத சோதியே! இறந்தவரின் எலும்பை ஆபரணமாக அணிபவனே! திருநடம் செய்பவனே! உன் மலர்கிற திருவடியே புகல்!" என்று விரும்பிப் போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



10)
அவமே புரிவார் அறிவிலார்
.. அரனை வணங்கா திழிவரே
பவமே தீர்க்கும் நல்வழி
.. பாயும் விடையான் திருப்பெயர்
சிவனே உமையாள் பங்கனே
.. தேவ தேவா பழையவா
நவனே என்பார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



அவம் - பயனின்மை; கேடு;
பழையவன் - எல்லாரினும் பழையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.86.9 - "மழையானுந் திகழ்கின்ற ..... உயர்வானத் துயர்வானைப் பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற ..... ");
நவன் - புதியவன்; (நவம் - புதுமை);


மூடர்கள் பயனற்றவையே/தீயனவே செய்வர். அவர்கள் அரனை வணங்காமல் இழிவார்கள். பாய்ந்து செல்லும் காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமான் திருப்பெயரே பிறவியை அறுக்கும் நல்ல வழி. "சிவனே! அர்த்தநாரீஸ்வரனே! தேவர்க்கெல்லாம் தேவனே! தொன்மையானவனே! புதியவனே!" என்று போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



11)
நின்பால் நேயம் கொண்டவர்
.. நெஞ்சில் உறையும் நின்மலா
அம்பால் கண்ணை இடக்கிற
.. அன்பில் லேன்நான் ஆயினும்
என்பால் இரங்கி இடர்களை
.. இன்பா இடபக் கொடியினாய்
நம்பா என்பார்க் கருள்செயும்
.. நஞ்சங் கூடு கண்டனே.



இடத்தல் - தோண்டுதல்;
அம்பால் கண்ணை இடக்கிற அன்பு - கண்ணப்பரின் பக்தி;
இடர் களை இன்பா - என் இடர்களைக் களைவாய் இன்பனே;
நம்பன் - விரும்பப்படுபவன்;


"உன்னிடம் அன்பு கொண்டவர்களின் நெஞ்சில் தங்கும் நிர்மலனே! கண்ணப்பர் போல் அம்பினால் கண்ணைத் தோண்டும் அன்பு இல்லாதவன் நான் ஆனாலும் என்னிடம் இரக்கம்கொண்டு என் இடரைத் தீர்த்தருள்வாய் இன்பனே! காளைச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே! நம்பனே" என்று போற்றும் அடியவர்களுக்கு அருள்செய்வான் நஞ்சனகூடு என்ற தலத்தில் எழுந்தருளும் நஞ்சுண்ட கண்டன்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
நஞ்சனகூடு (Nanjangud - ನಂಜನಗೂಡು) - நஞ்சுண்டேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=135

----------- --------------

No comments:

Post a Comment