Friday, August 21, 2015

01.77 – ஏடகம் - (திருவேடகம்)

01.77 – ஏடகம் - (திருவேடகம்)



2010-08-02
திருவேடகம்
---------------------
(சந்த விருத்தம் - “தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்).
(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")
குறிப்பு: பின்வரும் பாடல்களுள் சில ஈசனை முன்னிலையிலும், சில படர்க்கையிலும் பாடுவன.



1)
ஆவா என்றடியேன் அடை தீவினை ஆழிபுக்குச்
சாவா துய்ந்திடவே தயை கொண்டுகை தந்தருளாய்
பூவார் செஞ்சடையாய் பொடி ஆடிய மேனியனே
சேவார் வெல்கொடியாய் திரு ஏடக மேயவனே.



ஆவா - ஆ ஆ - இரக்கக்குறிப்பு;
ஆழி - கடல்;
கைதருதல் - வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல் (To render help, save, rescue, as from poverty, danger, etc.);
பூ ர் செஞ்சடையாய் - மலர்களைச் செஞ்சடையில் அணிந்தவனே;
பொடி - திருநீறு;
சே ஆர் வெல் கொடியாய் - காளைச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனே;


ஆ ஆ என்று நான் என்னை அடையும் தீவினைக் கடலுள் ஆழ்ந்து இறந்து ஒழியாமல் உய்யும்படி கருணையோடு கைகொடுத்தருள்வாயாக; மலர்கள் பொருந்திய செஞ்சடை உடையவனே; திருநீறு பூசிய உடம்பினனே; காளைச்சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனே; திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.



2)
ஓவா ஆசைகளால் உனை ஓத மறந்திருந்தேன்
நாவால் அஞ்செழுத்தை நவில் ஞானம் அருள்புரியாய்
மூவா முக்கணனே முடி மேல்மதி சூடியவா
தேவா சிற்பரனே திரு ஏடக மேயவனே.


ஓவா - ஓவாத – முடிவில்லாத; (ஓவுதல் - முடிதல் - To cease, terminate);
சூடியவா - சூடியவனே; (ஆண்டவன் - ஆண்டவா. என்பதுபோல சூடியவன் - சூடியவா); (இது போன்ற பிரயோக உதாரணங்கள்: சுந்தரர் தேவாரம் - 7.48.2 - “....பாண்டிக் கொடுமுடி நட்டவா.."; இராமலிங்க அடிகள் பாடல்:
நல்லவா அளித்த நல்லவா எனையும் நயந்தவா நாயினேன் நவின்ற
சொல்லவா எனக்குத் துணையவா ஞான சுகத்தவா சோதிஅம் பலவா
அல்லவா அனைத்தும் ஆனவா என்னை ஆண்டவா தாண்டவா எல்லாம்
வல்லவா என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே.”)
சிற்பரன் - சித்பரன் - அறிவிற்கு எட்டாத கடவுள்;

ஒழியாத ஆசைகளால் உன்னைப் போற்ற மறந்திருந்தேன்; நாக்கினால் திருவைந்தெழுத்தைச் சொல்லும் ஞானத்தை அருள்புரிவாயாக. மூப்பு இல்லாத முக்கண்ணனே. தலைமேல் சந்திரனைச் சூடியவனே. தேவனே. அறிவிற்கு எட்டாதவனே. திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.

3)
வந்தார் வல்வினைகள் வலி யேதர வாடுகிறேன்
எந்தாய் காத்தருளாய் எரு தேறிய எம்பெருமான்
அந்தார் என்றரவை அணி நீல மிடற்றினனே
செந்தீ மேனியனே திரு ஏடக மேயவனே.



ஆர்த்தல் - கட்டுதல் (To bind, tie, gird);
வந்து ஆர் வல்வினைகள் - இப்பிறப்பில் வந்து பிணிக்கிற கொடிய வினைகள்;
எந்தாய் - எந்தையே - எம் தந்தையே;
எருது ஏறிய எம்பெருமான் - இடப வாகனனே;
அந்தார் - அம் தார் - அழகிய மாலை;
நீல மிடற்றினன் - நீலகண்டன்;


இப்பிறப்பில் வந்து பிணிக்கிற கொடிய வினைகள் எப்போதும் துன்பத்தையே தர, அதனால் நான் வருந்துகிறேன். எந்தையே, என்னைக் காத்தருள்வாயாக; ஏற்றின்மேல் ஏறும் எம்பெருமானே; அழகிய மாலை எனப் பாம்பை அணியும் நீலகண்டனே; செந்தழல் போன்ற திருமேனி உடையவனே; திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே.



4)
தீரா ஆசைகளால் தினம் அல்லல் அடைந்தலைதல்
நேரா வண்ணமொரு நிலை தன்னை அருள்புரிவான்
"ஓரா னேறுடையாய் ஒளிர் திங்கள் அணிந்தவனே
தீரா" என்பவர்க்கே திரு ஏடக மேயவனே.



ஓர் - ஒரு; ஒப்பற்ற;
ஆன் ஏறு - இடபம்;
தீரன் - அறிஞன்; மனத்திடமுள்ளவன் (Brave, valiant person); (धीर - Brave; Steady; Strong-minded; Strong; Wise;)


"ஒப்பற்ற இடப வாகனம் உடையவனே; ஒளிர்கிற சந்திரனைச் சூடியவனே; அறிஞனே" என்று போற்றும் அன்பர்கள், தீராத ஆசைகளால் நாள்தோறும் அல்லல் அடைந்து அலையும் நிலை ஏற்படாதபடி அவர்களுக்கு ஓர் உயர்ந்த நிலையைத் தந்தருள்வான் திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



5)
தீரா வல்வினைகள் சிதை வுற்றினி ஓர்பிறவி
வாரா வண்ணமுய்ய வழி காட்டி அருள்புரிவான்
நீரார் கண்ணினராய் நிதம் ஏத்திடும் அன்பருக்குச்
சீரார் கின்றபதி திரு ஏடக மேயவனே.



சிதைவு உறுதல் - அழிதல்;
நீர் ஆர் கண்ணினராய் நிதம் ஏத்திடும் அன்பருக்கு” என்ற மூன்றாம் அடியை முதலிற் கொண்டு பொருள் காண்க.


தம் கண்களில் நீர் கசியத் தினந்தோறும் போற்றும் பக்தர்களுக்குத் தீராத வலிய வினைகளும் அழிந்து இனி ஒரு பிறவி இல்லாதபடி உய்யும் வழியைக் காட்டி அருள்புரிவான், நன்மை மிகும் தலமான திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



6)
தொய்யா வாறுடனே துணை யாகி அருள்புரிவான்
"பொய்யா நான்மறைகள் புகல் மெய்ப்பொருள் ஆனவனே
ஐயா ஆரமுதே அரு நஞ்சினை உண்டவனே
செய்யா" என்பவர்க்கே திரு ஏடக மேயவனே.



தொய்தல் - சோர்தல்; இளைத்தல்;
புகலுதல் - சொல்லுதல்;
புகல் - பற்றுக்கோடு (Support); சரண் (Refuge);
பொய்யா நான்மறைகள் புகல் மெய்ப்பொருள் ஆனவனே - "வேதங்களும், பற்றுக்கோடும், உண்மைப்பொருளும் ஆனவனே" என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளலாம்.
ஆர் அமுது - அரிய அமுதம்;
செய்யன் - சிவந்தவன்;


"என்றும் பொய்யாத நால்வேதங்கள் கூறும் மெய்ப்பொருளே; தலைவனே; அரிய அமுதம் போல்பவனே; கொடிய விடத்தை உண்டவனே; செம்மேனியனே" என்று போற்றும் அன்பர்கள் தொய்வு அடையாதபடி அவர்களுக்குத் துணையாகி அருள்புரிவான் திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



7)
முன்னே செய்வினையால் முடி வின்றி வரும்துயர்போய்
இன்னா சேர்பிறவி இலை என்ற பதம்தருவான்
"பொன்னார் மேனியனே புர மூன்றெரி செய்தவனே
தென்னா" என்பவர்க்கே திரு ஏடக மேயவனே.



இன்னா - துன்பம்;
பதம் - நிலை;
தென்னன் - அழகியவன்; தென்னாடுடையவன்;


"பொன் போன்ற திருமேனி உடையவனே; முப்புரங்களை எரித்தவனே; அழகியவனே" என்று போற்றும் அன்பர்களுக்குப், பழவினைகளால் இப்பிறப்பில் தொடர்ந்து வரும் துயரங்கள் எல்லாம் தீர்ந்து இனித் துன்பம் பொருந்திய பிறவிகள் இல்லாத உயர்ந்த நிலையைத் தந்தருள்வான் திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



8)
சிரமோர் பத்துடையான் திறல் ஓர்விரல் இட்டழித்தாய்
சுரமார் யாழினொடு துதி கேட்டொரு வாளளித்தாய்
பரமா உன்னடியே பணி வேனிடர் தீர்த்தருளாய்
திரையார் கங்கையனே திரு ஏடக மேயவனே.



சிரம் ஓர் பத்து டையான் - பத்துத் தலைகள் உடைய இராவணன்;
திறல் - வலிமை;
சுரம் ஆர் யழினொடு துதி கேட்டு - ஏழிசை பொருந்திய யாழ் வாசித்துத் துதி பாடக் கேட்டு;
திரை - அலை;


தன் பலத்தைப் பெரிதென்று எண்ணிக் கயிலாய மலையைப் பெயர்க்க முயன்ற பத்துத் தலைகளுடைய இராவணனின் வலிமையை மலைமேல் திருவிரல் வைத்து அழித்தவனே; அவன் அழுது, யாழில் ஏழிசை கூட்டித் துதி பாடித் தொழவும், அவனுக்குச் சந்திரஹாம் என்ற வாளை அருள்செய்தவனே; பரமனே; அலைகள் பொருந்திய கங்கையைச் சடையுள் வைத்தவனே; திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. உன் திருவடிகளையே பணியும் என் இடர்களைத் தீர்த்தருள்வாயாக.



9)
குன்றே ஓர்குடையாக் கொளும் மாலயன் நேடெரியாய்
நின்றாய் நின்னடியே நினை பாண்டவ னுக்கருள
அன்றோர் பன்றியின்பின் அடர் கானிடை வேட்டுவனாய்ச்
சென்றாய் எற்கருளாய் திரு ஏடக மேயவனே.



குன்றே ஓர் குடையாக் கொளும் மால் - மலையையே ஒரு குடையாகப் பிடித்த திருமால்;
மால் அயன் - திருமாலும் பிரமனும்;
நேடுதல் - தேடுதல்;
நின்றாய், சென்றாய் - நின்றவனே, சென்றவனே, என்ற விளிகள்;
எற்கு - எனக்கு;
இலக்கணக் குறிப்பு : "என்++கு = எனக்கு" என்பது அகரச்சாரியை இன்றி "எற்கு" என்று வந்தது;


(கிருஷ்ணாவதாரத்தில்) ஒரு மலையையே குடையாகப் பிடித்த திருமாலும், பிரமனும் தேடிய சோதியாக உயர்ந்து நின்றவனே; பாசுபதம் வேண்டி உன்னை நோக்கித் தவம் செய்த அருச்சுனனுக்கு அருள்புரிய அடர்ந்த காட்டிடையே ஒரு வேடனாகி ஒரு பன்றிப்பின் சென்றவனே; திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; எனக்கு அருள்புரிவாயாக.



10)
நட்டார் போல்நடித்தே நமை ஆழ்குழி வீழ்த்திடுவார்
கெட்டார் தாமுரைக்கும் கிறி வார்த்தையை விட்டொழிவீர்
தட்டா தெவ்வரமும் தரு வான்மனம் ஒன்றியருள்
சிட்டா என்பவர்க்கே திரு ஏடக மேயவனே.



நட்டார் - நட்புடையவர்; (நட்டல் - நட்புக்கொள்ளுதல்);
கிறி - பொய்; தந்திரம்; வஞ்சகம்;
தட்டாது - மறாது; குறைவின்றி; (தட்டுதல் - மறுத்தல்; குறைபடுதல்);
சிட்டன் - சிஷ்டன் - சிஷ்டாசாரமுடையவன் - சீலத்தை விரும்புவோன், சிவபிரான்;


நட்புக்கொண்டவரைப்போல் நடித்து நம்மை ஆழ்குழியில் தள்ளிடும் கெட்டவர்கள் சொல்லும் பொய் வார்த்தைகளை மதிக்க வேண்டா; "சீலனே அருள்வாய்" என்று மனம் ஒன்றித் தொழும் அடியவர்களுக்கு மறுப்பின்றிக் குறைவின்றி எல்லா வரங்களும் தருவான் திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



11)
இறைவா எம்பெருமான் இருள் கொண்ட மிடற்றினனே
அறவா அன்புருவா அருள் என்றிடும் அன்பருக்குக்
குறையா நன்னிதியின் குவை தந்து புரந்திடுவான்
சிறையார் வண்டறையும் திரு ஏடக மேயவனே.



அறவன் - அறத்தின் உரு ஆனவன்;
குவை - குவியல்; தொகுதி;
புரத்தல் - காத்தல்; அனுக்கிரகித்தல்; மிகுதியாகக் கொடுத்தல் (To give bountifully, bestow);
சிறை ர் வண்டு அறையும் - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற (பொழில் சூழ்ந்த);


"இறைவனே; எம்பெருமானே; நீலகண்டனே; அறவடிவினனே; அன்பின் உருவினனே; அருள்வாயாக" என்று வணங்கும் பக்தர்களுக்குக் குறையாத பெருஞ்செல்வக் குவியலைக் கொடுத்துக் காத்தருள்வான், சிறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் (சோலை சூழ்ந்த) திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்.



(பெரிய புராணம் - குங்கிலியக்கலய நாயனார் புராணம் - 19
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்த
செல்வத்தைக் கண்டு நின்று திருமனை யாரை நோக்கி
வில்லொத்த நுதலாய் இந்த விளைவெலாம் என்கொல் என்ன
அல்லொத்த கண்டன் எம்மான் அருள்தர வந்த தென்றார்.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
  • சந்த விருத்தம் - “தானா தானதனா தன தானன தானதனா” என்ற சந்தம்.
  • இச்சந்தத்தைத் “தானா தானதனா தனதானன தானதனா” என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.
  • அடியின் முதற்சீர் நெடிலில் முடியும்;
  • "தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.
  • (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து")



ஏடகம் - திருவேடகம் - கோயில் தகவல்கள்:
தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=484
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=48 )

-------- ---------------

No comments:

Post a Comment