Wednesday, August 12, 2015

01.37 – பொது - (வஞ்சி விருத்தம்)

01.37 – பொது - (வஞ்சி விருத்தம்)



2008-09-18
பொது
"பேசற்கு அரியனைப் பணி நெஞ்சே"
------------------------------------------------
(வஞ்சி விருத்தம் - "மா விளம் மாங்காய்" என்ற வாய்பாடு)



1)
பேசற் கரியனைப், பெருமானை,
வாசம் கமழ்கிற மலர்தூவி,
நேசத் தொடுதமிழ் நிதம்பாடிப்,
பாசத் தொடர்விடப் பணிநெஞ்சே.



பேசற்கு அரியன் - சொல்வதற்கு ஒண்ணாதவன்;
நேசம் - அன்பு;
தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன;
நிதம் - தினந்தோறும்;
பாசத்தொடர் - பாசமாகிய சங்கிலி; (பாசம் - பற்றுகள்);



2)
காசைச் சதமெனக் கருதாதே,
மாசைக் களைகிற வழிநாடி,
ஈசன் மலர்க்கழல் இணைபாடிப்,
பூசை தனைச்செயப் புகுவாயே.



சதம் - நித்தியமானது;
மாசு - அழுக்கு; குற்றம்;



3)
சிரித்து முப்புரம் சிதைத்தானை,
எரிக்கும் நஞ்சினை எடுத்துண்ட
கரிய கண்டனைக், கரியின்தோல்
தரித்த நாதனைத் தரிநெஞ்சே.



சிதைத்தல் - அழித்தல்;
கரி - யானை;
தரித்தல் - 1) அணிதல்; 2) மறவாது உள்ளத்துக்கொள்ளுதல் (to remember, bear in mind);



4)
பெண்ணோர் பங்குடைப் பெருமானைத்,
தண்ணீர் தங்கிடும் சடையானைப்,
பண்ணார் பைந்தமிழ் பலபாடி
எண்ணீர்; வல்வினை இலையாமே.



தண்ணீர் - இங்கே கங்கை;
பண் ஆர் பைந்தமிழ் - இசையோடு கூடிய தேவாரம் முதலிய பாடல்கள்;
எண்ணீர் - எண்ணுங்கள்; தியானியுங்கள்;
இலை ஆமே - இல்லை என்று ஆகும்;



5)
"எண்ணார் புரம்எரி எழநக்காய்;
மண்ணீர் அழல்வெளி வளியானாய்
அண்ணா" எனத்தினம் அடிபோற்றும்
மண்ணோர்க்(கு) அவன்அருள் மழைதானே.



எண்ணார் புரம் - பகைவர்களது முப்புரம்;
எரி எழ நக்காய் - தீ எழும்படி நகைத்தவனே;
மண் நீர் அழல் வெளி வளி ஆனாய் - நிலம் நீர் நெருப்பு ஆகாயம் காற்று என ஐம்பூதங்கள் ஆனவனே; (ஐம்பூதங்களின் பெயர் வரிசை யாப்பிற்காக முறை மாறி வந்தது);
அண்ணா - தலைவனே; (அண்ணல் என்பதன் விளியான 'அண்ணால்' என்பது 'அண்ணா' என மருவியது. தந்தையே என்றும் கொள்ளலாம்.
சம்பந்தர் தேவாரம் - 3.55.5 -
"கண்ணா ருந்நுதலாய் .....திருவான்மியூர் உறையும்
அண்ணா உன்னையல்லால் அடையாதென(து) ஆதரவே" ).

6)
"கொன்றைச் சடையினில் குளிர்கங்கை
நின்று நனைத்திடும் நிருத்தா,நீ
என்றன் விழுத்துணை" எனப்போற்றக்
குன்றும் வினை;இடர் குறுகாவே;



கொன்றைச் சடையினில் குளிர்கங்கை நின்று நனைத்திடும் நிருத்தா! - கொன்றை மலர் அணிந்த சடையில் குளிர்ந்த கங்கை நதி எப்பொழுதும் தங்கி நனைக்கிற நடராஜனே! (நிருத்தன் - நாட்டியம் ஆடுபவன்;);
நீ என்றன் விழுத்துணை எனப் போற்ற - நீயே எனக்கு உற்ற துணை என்று வழிபட;
குன்றும் வினை - (நம்) வினைகள் குன்றிப்போகும்; (குன்றுதல் - அழிதல்;)
இடர் குறுகாவே - (நம்மை) இடர்கள் அடையமாட்டா; (குறுகுதல் - அணுகுதல்;)



7)
பிறையை அணிபவன்; பிறப்பில்லான்;
மறைகள் மொழிபவன்; மணிகண்டன்;
இறைவன்; அவன்அடி இணைபாடி
இறைஞ்சத் துணையென இருப்பானே.



மணிகண்டன் - கழுத்தில் விடமணி உடையவன்;



8)
கருதா அரக்கனைக் கயிலைக்கீழ்ப்
பெருநாள் அழச்செயும் பெருமானைத்
திருநீ றணிகிற சிவனாரை
இருவே ளையும்தொழ இடர்போமே.



கருதுதல் - எண்ணுதல்; மதித்தல்;
பெருநாள் - நீண்ட நாள்கள்;.
இரு வேளையும் - காலையும் மாலையும்; இரவும் பகலும்;


குறிப்பு: இராவணம் - அழுகை. கயிலையின் கீழே பெரிதும் ஓலமிட்டுப் பன்னாள் அழுததால் தசக்கிரீவனுக்கு இராவணன் என்ற காரணப்பெயர்.



9)
கண்ணன் அயன்இவர் கழல்காணா
வண்ணம் வளர்அழல் வடிவானான்
எண்ணும் அடியவர்க் கெளிதாகும்
அண்ணல் அடிதொழல் அழகாமே.



கண்ணன் அயன் - திருமால் பிரமன்;
கழல் காணா வண்ணம் - அடிமுடி காணாதவாறு. (இதில் 'முடி காணாதது' தொக்கு நின்றது).
அழல் - தீ;
அழகு - சற்குணம்; சுகம்; சிறப்பு;



10)
குறியைக் குறியெனக் கொள்ளாமல்,
அறிவில் பொருள்உரை அவத்தோர்கள்
நெறியை உணர்கிலர்; நினைநெஞ்சே
மறிசேர் கரத்தனை மறவாதே.



குறி - அடையாளம் (icon/symbol);
அறிவு இல் பொருள் - அறிவற்ற விளக்கம்;
அவத்தோர்கள் - பயனற்றவர்கள்; இழிந்தவர்கள்;
நெறி - வழி;
நினை நெஞ்சே மறி சேர் கரத்தனை மறவாதே - மான் கன்றைக் கையில் ஏந்தும் சிவபெருமானை, நெஞ்சே, நீ மறத்தல் இன்றி நினைவாயாக;



11)
அருமா மறைதுதி அனற்கண்ணன்,
ஒருமான் திகழ்கரம் உடையீசன்,
பெருமான் கழலிணை பெரிதெண்ண,
வருமா வினைவிடும்; மகிழ்வுண்டே..



அரு மா மறை துதி அனல் கண்ணன் - அரிய பெரிய வேதங்கள் துதிக்கின்ற, தீயை உமிழும் கண்ணை உடையவன்;
(சம்பந்தர் தேவாரம் - 1.104.1 - "ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் ..." - படம் எடுத்து ஆடும் பாம்பினை இடையில் கட்டியவனும், அரிய பெரிய வேதங்களை அருளிச் செய்தவனும்,...);
ஒரு மான் திகழ் கரம் உடை ஈசன் - மான் கன்று விளங்குகின்ற கையை உடைய ஈசன்;
பெருமான் கழலிணை பெரிது எண்ண – அப்பெருமானுடைய, கழல் அணிந்த இணையடியை மிகவும் எண்ணி வணங்க;
வரு மா வினை விடும் - (தொடர்ந்து) வருகிற பெரிய வினைகளும் நீங்கும்;
மகிழ்வு உண்டே - இன்பம் உண்டு;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன் 

No comments:

Post a Comment