Thursday, August 13, 2015

01.42 – பொது - (அம்மானை)

01.42 பொது - (அம்மானை)



2008-11-26
பொது
"அம்மானை"
----------------------
( இப்பாடல்களின் அமைப்பு: உறழ்கலிப்பா:
அடி 1,2 - ஒருத்தி சொல்வது.
அடி 3.,4 - இன்னொருத்தி வினவுவது / சொல்வது.
அடி 5: முதல் பெண்ணோ மூன்றாவது பெண்ணோ விடை சொல்வது.
அடி 5 'punch line' போன்றது.
4-ஆம், 5-ஆம் அடிகளில் ஒரு சொல்லோ சொற்றொடரோ சிலேடை அமையப்பெற்றிருக்கும்.)



1)
உலகெல்லாம் காக்கின்ற உத்தமர்தாம் பாம்பணிந்து
பலவில்போய் ஓடொன்றிற் பலியேற்பார் அம்மானை;
பலவில்போய் ஓடொன்றிற் பலியேற்பார் ஆமாகில்
இலையொன்றும் இடவென்றால் என்செய்வார் அம்மானை?
.. இடபத்தர் பலருள்ளர் எம்மிறைவர் அம்மானை!



பலவில்போய் - பல இல் போய் - பல வீடுகளுக்குச் சென்று;
டு ஒன்றில் பலி ற்பார் - பிரமன் மண்டையோட்டில் பிச்சை ஏற்பவர்;
பலி ற்பார் ஆமாகில் - பிச்சை ஏற்பவர் என்றால்;
இலை ன்றும் இட ன்றால் என் செய்வார் - இடுவதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டால் என்ன செய்வார்;
இடபத்தர் பலருள்ளர் - இடபத்தர்; பலர் உள்ளர்; / இட(ப்) பத்தர் பலர் உள்ளர்;
இடபம் - எருது;
உள்ளர் - உள்ளத்தில் உறைபவர்; / இருக்கின்றனர்;
அடி-4; பிச்சைக்கு செல்லும்பொழுது, வீட்டில் அவருக்கு இடுவதற்கு எதுவும் இல்லை என்றால் என்ன செய்வார்?
அடி-5: இடுவதற்குப் பல அன்பர்கள் இருக்கிறார்கள். "இடப வாகனர்; பலர் உள்ளங்களில் குடிகொள்பவர்" என்றும் பொருள்பட நின்றது;



2)
நிலவைத்தம் முடிவைத்த நிமலர்தாம் ஓடேந்திப்
பலவில்கள் போய்நின்று பலியேற்பார் அம்மானை;
பலவில்கள் போய்நின்று பலியேற்பார் ஆமாகில்
செலவில்லார் எனப்புரத்தார் சிரியாரோ அம்மானை?
.. செலவின்றிப் புரமெரிக்கச் சிரிப்பாரே அம்மானை!



பலவில்கள் - பல இல்கள்; / பல வில்கள்;
பலி ஏற்றல் - பிச்சை ஏற்றல்;
புரம் - ஊர்; / திரிபுரங்கள்;
செலவு - பணம் செலவழித்தல்; / பயணம் (journey); / படையெடுப்பு (expedition of an army);
பலவில்கள் போய்நின்று பலியேற்பார் ஆமாகில் செலவில்லார் எனப்புரத்தார் சிரியாரோ - இரு பொருள்கள் -
1. பல இல்லங்கள்முன் போய் நின்று பிச்சையெடுப்பதால், "பணச்செலவு இல்லாதவர் (கஞ்சர்)" என்று ஊர்மக்கள் கேலி செய்யமாட்டார்களோ.
2. பல வில்களை இழந்து பிச்சையெடுப்பதால், "படையெடுக்க மாட்டார்" என்று முப்புரத்தவர்கள் மகிழமாட்டார்களோ)
செலவு இன்றிப் புரம் எரிக்கச் சிரிப்பாரே - (ஏறியதும் தேரின் அச்சு முரிந்துவிழ), இருந்த இடத்திலிருந்தே முப்புரங்களையும் எரிப்பதற்குச் சிரித்தார்.



3)
மாறின்றி இருக்கின்றார், ஏறன்றி ஏறாதார்,
ஊறின்றி உலகத்தைக் காக்கின்றார் அம்மானை;
ஊறின்றி உலகத்தைக் காப்பவர்தாம் ஆமாகில்
ஈறின்றி நகுதலை ஏந்தலுமேன் அம்மானை?
.. ஈறின்றி நகுதலை ஏந்தலவர் அம்மானை;



மாறு - ஒப்பு;
ஏறு - எருது;
ஊறு - துன்பம்; நாசம்;
ஈறு - பல்லைச் சுற்றியிருக்கும் தசை; / அந்தம்; முடிவு;
நகுதலை - நகு தலை / நகுதல் ஐ;
நகுதல் - சிரித்தல்; மகிழ்தல்;
தலை - மண்டையோடு; / தலைவன்;
– தலைவன்;
ஏந்தல் - தாங்குதல்; / பெருமையில் சிறந்தோன்;
ஈறின்றி நகுதலை ஏந்தல் - ஈறுகள் இல்லாத சிரிக்கின்ற மண்டையோட்டைக் கையில் தாங்குதல்; / அந்தம் இல்லாது மகிழ்கின்ற தலைவர், பெருமை மிக்கவர்;



4)
அரிக்கின்ற வினையெல்லாம் அழிக்கவழி கரிகாட்டில்
எரியேந்தி ஆடியின்தாள் இணைபற்றல் அம்மானை;
எரியேந்தி ஆடியின்தாள் இணைபற்ற லாமாகில்
பரிவோடு பார்வதியும் அணையாளோ அம்மானை?
.. பரிவோடு பார்வதியும் அணைப்பாளே அம்மானை.



அரிக்கின்ற வினை - வருத்துகின்ற வினைகள்; (அரித்தல் - இம்சித்தல்; சிறிது சிறிதாக அழித்தல்);
வழி - உபாயம்;
கரிகாடு - சுடுகாடு;
எரியேந்தி ஆடி - தீயை ஏந்தி ஆடுபவன்;
தாள் இணை - இரு திருவடிகள்;
பற்றுதல் - பிடித்தல் (grasp, seize, catch, hold); / தீ முதலியன மூளுதல்;
பரிவு - அனுதாபம்; / அன்பு;
அணைத்தல் - (தீ முதலியவற்றை) அவித்தல் (extinguish fire, etc.); / தழுவுதல்;
அடி-3 & 4: எரியேந்தி ஆடியின்தாள் இணைபற்ற லாமாகில் பரிவோடு பார்வதியும் அணையாளோ - தீயாந்தி ஆடும் ஈசன் திருவடிகள் பற்றிவிட்டால், அனுதாபத்தோடு பார்வதி அத்தீயை அணைக்கமாட்டாளா?
அடி-5: பரிவோடு பார்வதியும் அணைப்பாளே - அன்போடு பார்வதி அவனைத் தழுவாவாள்;



5)
எவ்வினையும் தீர்த்திடுவார் என்பணியும் ஏற்றாரே
செவ்வியினை உலகோர்கள் செப்புவரே அம்மானை;
செவ்வியினை உலகோர்கள் செப்புவரே ஆமாகில்
எவ்விடமும் ஏற்றுண்பார் என்னாரோ அம்மானை?
.. எவ்விடமும் ஏற்றுண்பார் எம்மீசன் அம்மானை.



என்பணியும் ஏற்றார் - என்பு அணியும் ஏற்றார்; / என் பணியும் ஏற்றார்;
என்பு - எலும்பு;
அணி - ஆபரணம்;
பணி - தொண்டு;
ஏற்றார் - எருது வாகனம் உடையவர்; / ஏற்றுக்கொண்டவர்;
செவ்வி - தன்மை;
ஏற்றல் - இரத்தல் (to beg); / எதிர்கொள்ளுதல் (to receive, welcome); accept;
எவ்விடம் - +இடம்; / +விடம்;
எவ்விடமும் ஏற்றுண்பார் - 1. எல்லா இடங்களிலும் இரந்து உண்பவர் / 2. எத்தகைய விஷத்தையும் ஏற்றுக்கொண்டு அருந்துவார்;



6)
பிடியோடு களிறுலவும் பெருங்கானில் இருந்தாலும்
அடியார்கண் மாதேவர்க் களிப்பாரே அம்மானை;
அடியார்கண் மாதேவர்க் களிப்பாரே ஆமாகில்
முடியார்வெண் பிறையரென மொழியாரோ அம்மானை?
.. முடியார்வெண் பிறையரென மொழிவாரே அம்மானை!



பிடி - பெண் யானை;
களிறு - ஆண் யானை;
கான் - காடு;
அடியார்கண் மாதேவர்க் களிப்பாரே - அடியார் கண் மாதேவர்க்கு அளிப்பாரே; (கண்ணப்பர் வரலாறு);
/ 'அடியார்கள் மாதேவர்க்கு அளிப்பாரே' என்றும் புணர்ச்சி விதிப்படிப் பிரிக்கலாம்;
முடிதல் - இயலுதல் (to be capable); / அழிதல் (to perish); சாதல்;
முடி ஆர் வெண்பிறை - தலை மீது பொருந்திய வெள்ளிய பிறைச்சந்திரன்;
முடியார் வெண்பிறையர் - 1. (அடியார்கள் அளிக்கப் பெற்றுக்கொள்வதால்) வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்தவர் இயலாதவர்; / 2. வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்தவர் அழிவில்லாதவர்;



7)
பொல்லா வினைதீர்க்கும் புண்ணியர்தாள் போற்றுகிற
நல்லார் அடியாரே நம்புவரே அம்மானை;
நல்லார் அடியாரே என்றாலும் நாள்தோறும்
கல்லால் அடிஅடைந்தார் கவலாரோ அம்மானை?
.. கல்லால் அடிஅடைந்தார் கழல்காக்கும் அம்மானை!



புண்ணியர் _ புண்ணியமூர்த்தி - புண்ணிய வடிவன் - சிவன்;
அடியார் - பக்தர்; / அடிக்கமாட்டார்;
நம்புதல் - விரும்புதல் (to long for; to desire); / நம்பிக்கை வைத்தல் (to trust);
கல்லால் - ஒருவகை ஆலமரம்.
அடி - கீழ்; தாக்கு (beating; blow);
அடைதல் - 1. சேர்தல் (To reach, arrive at); பெறுதல் (To get, obtain, enjoy); சரண்புகுதல் (To take refuge in);
கவலுதல் - மனம்வருந்துதல் (To be distressed, anxious, troubled);


"தாள் போற்றுகிற நல்லார் அடியாரே நம்புவரே" - 1) திருவடியை வணங்குகிற நல்லவர்கள் தொண்டர்களே! (சிவனை) விரும்புகிறவர்களே! 2) திருவடியை வணங்குகிற நல்லவர்கள் அடிக்கமாட்டார்களே! (சிவன் அதை) நம்புவார்!


"நல்லார் அடியாரே என்றாலும் நாள்தோறும் கல்லால் அடிஅடைந்தார் கவலாரோ" - நல்லவர்கள் அடியார் என்றாலும் தினமும் (சாக்கிய நாயனாரால்) கல்லடி பெற்றவர் கவலைப்படமாட்டரா?


"கல்லால் அடிஅடைந்தார் கழல்காக்கும் அம்மானை" - கல்லாலின்கீழ் இருப்பவரது திருவடி காக்கும்!



8)
நையாக்கல் மனத்தரக்கன் "நான்"என்ற எண்ணத்தால்
கையால்வெற் பிடந்தழுத கதையறிவாய் அம்மானை;
கையால்வெற் பிடந்தாலும் கண்ணுதலான் உமையொன்றும்
செய்யானே எனஇங்கே செப்பாரோ அம்மானை?
.. உமையொன்றும் செய்யானே உன்னுங்கால் அம்மானை!



நைதல் - அன்பால் மனம் கனிதல்;
நான் என்ற எண்ணம் - அஹம்பாவம்; ஆணவம்;
கையால் வெற்பு இடந்து அழுத கதை - தன் கைகளால் கயிலைமலையைப் பெயர்க்கமுயன்று அழுத வரலாறு;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
உமை - 1) உம்மை; 2) உமாதேவி;
ஒன்றும் - 1) எதுவும்; 2) ஒன்றாகப் பொருந்தும்; (ஒன்றுதல் - to become one; ஒன்றாதல்);
செய்யான் - செய்யமாட்டான்; செம்மேனியன்; (செய் - சிவப்பு);
உமை ஒன்றும் செய்யான் - 1) உங்களை ஒன்றும் செய்யமாட்டான்; 2) உமாதேவி ஒன்றாகப் பொருந்துகிற செம்மேனியன்;
உன்னுங்கால் - உன்னும் பொழுது - சிந்தித்துப்பார்த்தால்;


9)
முகத்தினில்கண் மூன்றுடையான் இருட்டினிலே நடமாடி
அகத்தினுள்ளே அறியாமல் அவன்வருவான் அம்மானை;
அகத்தினுள்ளே அறியாமல் அவன்புகுந்து கொள்ளைகொண்டால்
மிகப்பெரும்தீ யவனென்று விள்ளாரோ அம்மானை?
.. மிகப்பெரும்தீ யவனென்று விண்டுரைப்பார் அம்மானை!



நடமாடி - நடனம் ஆடுபவன்; / சஞ்சரித்து;
அகம் - வீடு; மனம்;
கொள்ளைகொள்ளுதல் - சூறையாடுதல்; வசீகரித்தல்;
விள்ளுதல் - சொல்லுதல்; வாய் முதலியன திறத்தல் (To open, as the mouth);
விண்டு - விஷ்ணு;
விண்டு உரைத்தல் - வெளிப்படக்கூறுதல் (To speak freely; to speak without any restraint;);
தீயவன் - கெட்டவன்; / தீ அவன்;
மிகப்பெரும்தீ அவனென்று விண்டுரைப்பார் - மிகப் பெரிய சோதி அவன் என்று விஷ்ணு சொல்வார்; / மிகப் பெரிய சோதி அவன் என்று வெளிப்படச் சொல்வார்கள்;



10)
மாயாத மகிமையுடை மாதேவன் நள்ளிருளில்
தீயாடி எலும்பணியும் சிவபெருமான் அம்மானை;
தீயாடி சிவனாரைச் சிந்தைசெயார் சிறுமதியர்
பேயாரோர் பித்தரென்றே பேசாரோ அம்மானை
.. சிறுமதியர் பேயாரோர் பித்தரென்போம் அம்மானை!



மாயாத மகிமை - அழியாத பெருமை; இறத்தல் இல்லாத பெருமை; (மாய்தல் - அழிதல்; இறத்தல்);
சிந்தை செயார் - சிந்தை செய்யார் - எண்ணாதவர்கள்;
சிறு மதியர் - 1) அறிவு குறைந்தவர்; 2) பிறைச்சந்திரனை அணிந்தவர்;
பேயார் - 1) பேயர் - பேய் போன்றவர்; 2) பேய்களோடு இருப்பவர்; 3) காரைக்கால் அம்மையார்;
ஓர் - 1) ஒரு; 2) எண்ணு; (ஓர்தல் - எண்ணுதல்);
பித்தன் - 1) பைத்தியக்காரன்; 2) மூடன் (Fool, idiot); 3) பேரன்பு உடையவன் - சிவபெருமான்;

சிவனாரைச் சிந்தைசெயார் சிறுமதியர் பேயார் ஓர் பித்தர் என்றே பேசாரோ - 1) சிவனாரை நினையாதவர்கள், அப்பெருமானாரை இழித்துப் பேசமாட்டார்களோ? 2) சிவனாரை நினையாதவர்களை, "அறிவிற் குறைந்தவர்கள்; பேய் போன்றவர்கள்; மூடர்கள்;” என்று பேசமாட்டார்களோ?

சிறுமதியர் பேயார் ஓர் பித்தர் என்போம் - "பிறைச்சந்திரனை அணிந்தவர்; காரைக்கால் அம்மையார் எண்ணி வழிபடும் சிவபெருமானார்" என்று சொல்வோம்;



11)
மனமுருகிப் பாடுகிற மாபத்தர்க் கருள்செய்வான்
புனல்சடையில் உளனல்லன் புகல்உண்மை அம்மானை;
புனல்சடையில் உளனல்லன் புகல்உண்மை யையேஎன்றால்
கனவிடையான் கண்டேனே என்னாரோ அம்மானை?
.. கனவிடையான் உளனல்லன் உண்மையையே அம்மானை!



மா பத்தர் - பெரும் பக்தர்கள்;
நல்லன் - நல்லவன்; நன்மை செய்பவன்;
புனல் சடையில் உளல்லன் - புனல் சடையில் உளன் நல்லன் / புனல்சடையில் உளன் அல்லன்;
புகல் - அனைவர்க்கும் புகல் (அடைக்கலம்) அளிப்பவன்;
புகல்தல் - சொல்லுதல்;
உண்மை - சத்தியம்; மெய்ப்பொருள்;
- தலைவன்; கடவுள்;
கனவிடையான் - கனவு+இடை+யான் / கன+விடையான்;


"புனல் சடையில் உளன் அல்லன்; புகல் உண்மையையே என்றால் கனவிடை யான் கண்டேனே என்னாரோ" - "அவன், சடையில் கங்கை உள்ளவன் அல்லன்; உண்மையைச் சொல்" என்றால், "கனவில் நான் கண்டேன்" என்று சொல்லமாட்டார்களோ?


"கன விடையான்; உளன்; நல்லன்; உண்மை ஐயே" - பெரிய எருதின்மேல் வரும் இறைவன்; உள்ளவன் / (அன்பர்) உள்ளத்தில் உறைபவன்; நல்லவன்; உண்மைக் கடவுளே;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு: - as described in a post in santhavasantham google group by Professor Ananthanarayanan of Canada:
அம்மானைப் பாடல்கள் பற்றி ஒரு சிறு குறிப்பு:



தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரக் காலத்தில் தொடங்கி அண்மைக்காலம் வரையாகப் பலவகையான அம்மானைப் பாடல்கள் காணப்படுகின்றன. இங்கு நாம் காண்பவை அவற்றில் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவை. இப்பாடல்கள், வஞ்சப்புகழ்ச்சி (நையாண்டி), சிலேடை அணிகள் அமையப் பெற்று, நகைச்சுவையோடு விளங்கும். இறுதியடியில் சிலேடை நயம் தோன்ற விடையளித்து ஒரு திருப்பத்துடன் முடிக்கும் முறை இவற்றிலுள்ள தனிச் சிறப்பென்னலாம். இவை அம்மானைப் பாடல்களின் அழகிய பரிணாம வளர்ச்சியை பறை சாற்றும்.



இப்பாடல்களின் பின்னணியான அம்மானை விளையாட்டில், பாட்டுடைத் தலைவனின் குணநலன்களைக் கூறும் ஒரு பெண்ணும், அவை பற்றிய கேள்வியொன்றை எழுப்பும் இன்னொரு பெண்ணும், அதற்கு விடையளிக்க மூன்றாவதாக ஒருபெண்ணும் பங்கெடுப்பதாகக் கற்பனை செய்யலாம். அல்லது, இரு மகளிர் மட்டுமே இருப்பதாகவும் கருதலாம். இவ்வகை அம்மானைப் பாடலை வெண்டளை பயிலும் அல்லது பயிலாத தரவு கொச்சகக் கலிப்பா அல்லது 'உறழ்கலிப் பா' (வினா-விடை கொண்ட கலிப்பா) என்னும் வகையைச் சார்ந்தது எனக் கொள்ளலாம்.”

-----

No comments:

Post a Comment