Thursday, August 13, 2015

01.44 – அண்ணாமலை - (திருவண்ணாமலை)

01.44அண்ணாமலை - (திருவண்ணாமலை)



2008-12-12
திருவண்ணாமலை
"அருணாசலனே”
-------------------------------------------
(10 பாடல்கள்)
(எழுசீர்ச் சந்த விருத்தம் - "தனதன தானன தானன தானன தானன தானன தானதனா" - என்ற சந்தம்).
மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்ரம்: "அயிகிரி நந்தினி நந்தித மேதினி விஃச்வவி நோதினி நந்தனுதே"
(சுந்தரர் தேவாரம் - 7.10.3 - "கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி லாலும் மிடம்மழு வாளுடைய")



1)
இமையவ ரோடசு ரர்களும் இன்னமு தாக்கிட மத்திடு வேலையிலே
குமைவிட மேலெழ விண்ணுல கோர்உமை கோனிடம் ஓடியி றைஞ்சிடவே
அமரமு தாயதை உண்டமி டற்றினன் அற்புதன் அன்புரு வானவனே
மமதைய ராகிய மாலய னாரிடை ஓங்கிய தீயரு ணாசலனே.



பதம் பிரித்து:
இமையவரோ(டு) அசுரர்களும் இன் அமு(து) ஆக்கிட மத்திடு வேலையிலே
குமை விட[ம்] மேல் எழ விண்ணுலகோர் உமைகோனிடம் ஓடி இறைஞ்சிடவே,
அமர் அமுதாய் அதை உண்ட மிடற்றினன்; அற்புதன்; அன்(பு) உரு ஆனவனே;
மமதையர் ஆகிய மால் அயனார் இடை ஓங்கிய தீ அருணாசலனே.


மத்திடுதல் - கடைதல்;
வேலை - கடல்;
குமைவிடம் - குமை + விடம் - கொல்லுகிற விடம்; (குமைத்தல் - அழித்தல்; வருத்துதல்);
அமர் அமுது - விரும்புகிற அமிர்தம்; (அமர்தல் -விரும்புதல்);
மிடறு - கழுத்து; (மிடற்றினன் - கண்டன்);
மமதையர் ஆகிய மால் அயனார் இடை ஓங்கிய தீ அருணாசலனே - செருக்குற்ற விஷ்ணு பிரமன் இவர்கள் நடுவே உயர்ந்த சோதி அருணாசலன்;



2)
புனலலை புன்சடை முக்கணன் அங்கொரு புண்விழி காட்டவும் ஓர்கணையால்
வனமுறை வேட்டுவர் அன்பொடு தம்விழி தன்னையி டந்திட வான்தருவான்
அனவர தம்புகழ் அன்பர கத்தினில் இன்புற ன்றுமி ருப்பவனே
முனமரி நான்முக னுந்தொழு மாறெரி யாய்வரு வானரு ணாசலனே.



பதம் பிரித்து:
புனல் அலை புன் சடை முக்கணன் அங்(கு) ஒரு புண்விழி காட்டவும், ஓர் கணையால்
வனம் உறை வேட்டுவர் அன்பொடு தம் விழிதன்னை இடந்(து) இட, வான் தருவான்;
அனவரதம் புகழ் அன்பர் அகத்தினில் இன்புற என்றும் இருப்பவனே;
முனம் அரி நான்முகனும் தொழுமா(று) எரியாய் வருவான் அருணாசலனே.


அலைத்தல் - அலைமோதுதல்;
புனல் அலை புன்சடை - கங்கை அலைமோதுகிற, செஞ்சடை; (புன்மை - புகர் நிறம் - Tawny colour - an orange-brown or yellowish-brown color);
வேட்டுவர் - வேடர் - கண்ணப்பர்;
இடந்து இட - தோண்டி இடவும்;
வான் - வானுலகம்;
அனவரதம் - எப்பொழுதும்;
அகம் - மனது;
முனம் - முன்னம் - முன்பு;
எரி - நெருப்பு;



3)
விடைமிசை ஏறிய வெண்மதி சூடிய கண்ணுத லோன்கணை எய்கிறவேள்
உடலது நீறென ஓர்நொடி யில்விழ நோக்கிய வன்சுரர் உன்னபயம்
உடையவ னேஎன ஓர்மக னைப்பொறி யின்வடி வாயரு ளும்பெருமான்
மடலல ரோனொடு மாலறி யாவணம் ஓங்கெரி ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
விடைமிசை ஏறிய, வெண்மதி சூடிய, கண்ணுதலோன்; கணை எய்கிற வேள்
உடல் அது நீ(று) என ஓர் நொடியில் விழ நோக்கியவன்; சுரர் "உன் அபயம்,
உடையவனே" என ஓர் மகனைப் பொறியின் வடிவாய் அருளும் பெருமான்;
மடல்அலரோனொடு மால் அறியா வணம் ஓங்(கு) எரி ஆம் அருணாசலனே.


விடைமிசை - இடபத்தின்மேல்;
கண் நுதலோன் - நெற்றிக் கண்ணன்;
வேள் - மன்மதன்;
உன் அபயம் - (நாங்கள்) உன் அடைக்கலம் - பயம் இன்மை உளதாமாறு காத்தற்குரிய பொருள்.
(அப்பர் தேவாரம் - 6.44.1 - "மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே ... திகழொளியே சிவனேயுன் னபயம் நானே");
உடையவன் - சுவாமி;
பொறி - அனல் துகள்; ஒளி;
ஓர் மகனைப் பொறியின் வடிவாய் அருளும் பெருமான் - முருகனைத் தன் நெற்றிக்கண்ணிலிருந்து பொறி ரூபத்தில் அளித்த சிவபெருமான்;
மடல் அலர் - இதழ்களை உடைய மலர் - தாமரை;
ஓங்கு எரி - உயரும் சோதி;



4)
பரியென நான்மறை பண்ணிய தேரென வானவர் ஏந்திட வில்லெனவோர்
பெரியவ டுக்கலும் ஆகிவ ரத்திரி முப்புரம் எய்கிற நாளதனில்
கரியமி டற்றினன் ஏறவும் அச்சுமு ரிந்தது கண்டுந கைத்தடுவான்
அரிஅய னன்னமும் ஏனமும் ஆய்முய லுஞ்சுடர் ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
பரி என நான்மறை, பண்ணிய தேர் என வானவர், ஏந்திட வில் என ஓர்
பெரிய அடுக்கலும் ஆகிவரத், திரி முப்புரம் எய்கிற நாள் அதனில்
கரிய மிடற்றினன் ஏறவும் அச்சு முரிந்தது கண்டு நகைத்(து) அடுவான்;
அரி அயன் அன்னமும் ஏனமுமாய் முயலும் சுடர் ஆம் அருணாசலனே.


பரி - குதிரை;
நான்மறை - நான்கு வேதங்கள்;
வானவர் - தேவர்கள்;
அடுக்கல் - மலை;
திரி முப்புரம் - திரிந்த முப்புரங்கள்: (சம்பந்தர் தேவாரம் - 2.40.7 - "சிலையது வெஞ்சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த ...")
நக்கு - சிரித்து;
அடுவான் - அழிப்பான்; எரிப்பான்; (அடுதல் - அழித்தல்):
ஏனம் - பன்றி; (சம்பந்தர் தேவாரம் - 1.56.9 "ஏன மன்னமு மானவ ருக்கெரி ஆன ...");
அரி அயன் அன்னமும் ஏனமும் - எதிர்நிரல்நிரையாக வந்தது;


5)
தினமல ரோடடி போற்றிமி கத்துதி செய்கிற செம்மன மாணியிடம்
கனலெழு கண்ணொடு வந்தடு காலன தாருயி ரேபிரி வெய்திடவே
சினவிடை யானுதை செய்தடி யாருயிர் என்றுநி லைக்கவ ருள்புரிவான்
முனமரி நான்முகன் என்றிவர் எய்தவொ ணாவெரி ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
தின[ம்] மலரோ(டு) அடி போற்றி மிகத் துதி செய்கிற செம் மன மாணியிடம்,
கனல் எழு கண்ணொடு வந்டு காலன(து) ஆருயிரே பிரிவு எய்திடவே
சினவிடையான் உதை செய்(து), அடியார் உயிர் என்று[ம்] நிலைக்க அருள்புரிவான்;
முனம் அரி நான்முகன் என்றிவர் எய்த ஒணா எரி ஆம் அருணாசலனே.


தினமலர் - தினம் மலர் - தினமும் மலர் / நாண்மலர் (அன்று பூத்த பூ);;
மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே, மார்க்கண்டேயர்;
அடுதல் - கொல்லுதல்;
அடுத்தல் - சமீபமாதல்; நெருங்குதல்;
வந்டு காலன் - 1) வந்த அடு காலன் (தொகுத்தல் விகாரம்) - வந்த கொல்லும் காலன்; / வந்து அடு காலன் - வந்தடைந்த காலன்;
சின விடை - சினக்கின்ற இடபம்;
முனம் - முன்னம்;
என்றிவர் - என்ற இவர்கள்;
எய்த ஒணா எரி - அடைய இயலாத சோதி;



6)
ஒருகனி உண்டவன் இன்னொரு மாங்கனி யும்கொணர் என்றிட உத்தமியும்
உருகிய ரன்பதம் ஏத்தவு வந்திரு மாங்கனி ஈந்தவன் ஒண்புகழாள்
அருமலை மேல்தலை யால்வர அன்புடன் அம்மையெ னப்பகர் ஐயனவன்
அருமறை யான்கரி வண்ணனி வர்க்கிடை ஆரழல் ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
ஒரு கனி உண்டவன் இன்னொரு மாங்கனியும் கொணர் என்றிட, உத்தமியும்
உருகி அரன் பதம் ஏத்த, உவந்(து) இரு மாங்கனி ஈந்தவன்; ஒண் புகழாள்
அரு மலை மேல் தலையால் வர, அன்புடன் அம்மை எனப் பகர் ஐயன் அவன்;
அருமறையான் கரிவண்ணன் இவர்க்(கு)இடை ஆர் அழல் ஆம் அருணாசலனே.


கொணர் - கொண்டுவா;
உத்தமி - சிரேட்டமானவள் (excellent woman); கற்புடையவள் (chaste woman); - இங்கே, காரைக்கால் அம்மையார்;
ஏத்துதல் - துதித்தல்;
ஒண்மை - விளக்கம் (brilliancy, splendor, brightness); நன்மை (good, goodness, excellence;) மிகுதி (luxuriance, fullness, abundance);
ஒண் புகழாள் - மிகுந்த புகழ் உடையவள்; பிரகாசிக்கின்ற புகழை உடையவள்;
பகர்தல் - சொல்லுதல்;
அருமறையான் கரிவண்ணன் - பிரமன் திருமால்;



7)
உறவென உள்ளவன் உள்கிடும் அன்பரின் உள்ளுறை கின்றவன் இவ்வுலகில்
பிறவிகொ டுக்கிற தீவினை யின்பிடி அற்றிட நற்படை ஆகியவன்
அறவடி வானவன் ஆயிர நாமமும் ஏற்றவன் ஆணலி பெண்ணுமவன்
மறையவ னோடரி வாதிடு நாளெழு மாவழல் ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
உற(வு) என உள்ளவன்; உள்கிடும் அன்பரின் உள் உறைகின்றவன்; இவ்வுலகில்
பிறவி கொடுக்கிற தீவினையின் பிடி அற்றிட நல் படை ஆகியவன்;
அற வடி(வு) ஆனவன்; ஆயிர நாமமும் ஏற்றவன்; ஆண் அலி பெண்ணும் அவன்;
மறையவனோ(டு) அரி வாதிடு[ம்] நாள் எழு மா அழல் ஆம் அருணாசலனே.


உள்குதல் - எண்ணுதல்;
உள் - உள்ளே; மனம்;
படை - ஆயுதம்;
அற வடிவு - தருமத்தின் உரு;
மறையவன் - பிரமன்;
எழு மா அழல் - எழுந்த பெரிய சோதி;



8)
கடுகியி யங்கிடு தேர்தரை கண்டதும் ஆத்திர மாய்க்கரம் அத்தனையால்
விடுவிடு வென்றரு வெற்பையெ டுக்கமு யன்றவ ரக்கனை மெல்விரலால்
படுவலி கொள்ளவ டர்த்தவன் ஏழிசை யாழொடு பாடந லம்புரிவான்
நடுமுதல் ஈறவன் அன்றரி நான்முக னுந்தொழு தீஅரு ணாசலனே.



பதம் பிரித்து:
கடுகி இயங்கிடு தேர் தரைகண்டதும் ஆத்திரமாய்க் கரம் அத்தனையால்
விடுவிடுவென்(று) அரு வெற்பை எடுக்க முயன்ற அரக்கனை மெல் விரலால்
படு வலி கொள்ள அடர்த்(து), அவன் ஏழிசை யாழொடு பாட நலம்புரிவான்;
நடு முதல் ஈ(று) அவன்; அன்(று) அரி நான்முகனும் தொழு தீ அருணாசலனே.


கடுகுதல் - விரைதல்;
இயங்குதல் - போதல்;
தரைகாணுதல் - கீழ் விழுதல் (To drop or fall to the ground);
அரு வெற்பு - பெருமை மிகுந்த மலை - கயிலை;
அரக்கன் - இராவணன்;
மெல் - மிருதுவான;
படு - பெரிய;
வலி - நோவு;
அடர்த்தல் - நசுக்குதல்;
ஏழிசை - ழு சுரங்களாலும் ஆன இன்னிசை;
நடு முதல் ஈ(று) - "முதல் நடு ஈறு" - எதுகைக்காக முறை மாறி வந்தன;
(திருவாசகம் - சிவபுராணம் - "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே" - முதல்வனே! முடிவும் நடுவும் ஆகி அவையல்லாது இருப்பவனே!);



9)
மருளுரை சொல்லியு ழல்கிற மூடரை வஞ்சரை நீங்கிம திச்சடையான்
திருவடி யேநினை வோர்தமை நாடுப வர்வினை தீர்நிலை யெய்துவரே
திருவடி வாகிய எவ்வடி வேத்தினும் அவ்வணம் ஈகிற செம்பெருமான்
திருமுடி யோடடி தேடிய மாலய னுந்தொழு தீஅரு ணாசலனே.



பதம் பிரித்து:
மருள் உரை சொல்லி உழல்கிற மூடரை வஞ்சரை நீங்கி, மதிச்சடையான்
திருவடியே நினைவோர்தமை நாடுபவர் வினை தீர் நிலை எய்துவரே;
திருவடி(வு) ஆகிய எவ்வடி(வு) ஏத்தினும் அவ்வணம் ஈகிற செம் பெருமான்;
திருமுடியோ(டு) அடி தேடிய மால் அயனும் தொழு தீ அருணாசலனே.


மருள் உரை - தெளிவில்லாத பேச்சு; (மருள் - மயக்கம் (bewilderment of mind, confusion));
மதிச்சடையான் - சந்திரனைச் சடையில் சூடியவன்;
ஏத்துதல் - துதித்தல்;
அவ்வணம் - அவ்வண்ணம் - அவ்விதமே;
செம் பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான்;
தொழு தீ - வினைத்தொகை - தொழுத சோதி;
முடியோ(டு) அடி தேடிய மால் அயன் - எதிர்நிரல்நிரையாக வந்தது;


செம்பெருமான் - (திருவாசகம் - திருத்தசாங்கம் - 1:
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் - ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
எம்பெருமான் தேவர்பிரான் என்று.)


(சேரமான்பெருமாள் நாயனார் அருளிய - திருக்கைலாய ஞானஉலா - 11.8 - #7 & 8
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்.
தானேயாய் நின்றளிப்பான்........
---- எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ, அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான்.)



10)
துடியிடை யாளொரு கூறென வைத்தொரு தூநதி வண்டிரை எற்றிடவே
முடிமிசை ஏற்றவன் எவ்விட முந்திரி மூவெயில் ஓர்கணை யாற்சுடுவான்
பொடியணி மேனிய ராய்மல ராலடி போற்றிடும் அன்பரின் உள்ளுறைவான்
அடிமுடி தேடிய மாலய னார்அறி யாவழல் ஆம்அரு ணாசலனே.



பதம் பிரித்து:
துடி இடையாள் ஒரு கூ(று) என வைத்(து), ஒரு தூ நதி வண் திரை எற்றிடவே
முடிமிசை ஏற்றவன்; எவ்விடமும் திரி மூ எயில் ஓர் கணையால் சுடுவான்;
பொடி அணி மேனியராய் மலரால் அடி போற்றிடும் அன்பரின் உள் உறைவான்;
அடி முடி தேடிய மால் அயனார் அறியா அழல் ஆம் அருணாசலனே.


துடி இடையாள் - உடுக்கையைப் போன்ற மெலிந்த இடை உடையவள்;
கூறு - பங்கு;
தூ நதி - தூய கங்கை;
வண் திரை - வளமையான அலை; (வண்மை - அழகு; வளமை; வலிமை;.....)
எற்றுதல் - அடித்தல்; மோதுதல்; எறிதல்;
ஏற்றவன் - ஏற்றுக்கொண்டவன்;
திரி மூ எயில் - திரிந்த முப்புரங்கள்;
பொடி - திருநீறு;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடலின் யாப்புக் குறிப்பு:
எழுசீர்ச் சந்த விருத்தம் - "தனதன தானன தானன தானன தானன தானன தானதனா" - என்ற சந்தம்.

'தா' / னா = குரு = குறில்+ஒற்று / நெடில் / நெடில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் குரு.
'' / '' = லகு = குறில்;

மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்ரம்:
அயி கி3ரிநந்தி3னி நந்தி3தமேதி3னி விஃச்வவினோதி3னி நந்த3னுதே
கி3ரிவர விந்த்4ய ஃசிரோதி4நிவாஸினி விஷ்ணுவிலாஸினி ஜிஷ்ணுனுதே|.
43வதி ஹே ஃசிதிகண்ட2குடும்பி3னி பூ4ரி குடும்பி3னி பூ4ரி க்ரு\தே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி3னி ரம்யகபர்தி3னி ஃசைலஸுதே||.. 1..

சுந்தரர் தேவாரம் - 7.10.3 -
"கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி லாலும் மிடம்மழு வாளுடைய" -
இதை இப்படியும் நோக்கலாம்:
"கொடிகளி டைக்குயில் கூவுமி டம்மயி லாலுமி டம்மழு வாளுடைய")


----------

No comments:

Post a Comment