Thursday, August 27, 2015

02.07 – ஏடகம் - (திருமுக்கால்)

02.07ஏடகம் - (திருமுக்கால்)



2010-12-04
திருவேடகம்
"ஏடு அடை ஏடகம்"
-----------------
(திருமுக்கால் அமைப்பில்).
(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - 'திடமலி மதிளணி சிறுகுடி மேவிய')



1)
எற்றிடு புனலெதிர் ஏடடை ஏடக
வெற்றிவி டைக்கொடி யீரே
வெற்றிவி டைக்கொடி யீருமை விரும்பிடும்
நற்றவர் அடைவது நலமே.



எற்றுதல் - மோதுதல் (to dash against, as the waves of the sea);
ஏடு அடை ஏடகம் - சம்பந்தர் வைகையில் இட்ட தேவாரப் பதிக ஏடு சென்று அடைந்த திருவேடகம்; (சம்பந்தர் தேவாரம் - 3.32.11 - “.... வைகைநீர் ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை …..”);


அலைமோதும் வைகை ஆற்றுநீரில் சம்பந்தர் இட்ட ஏடு எதிர்த்துச்சென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! வெற்றியை உடைய இடபக் கொடியை உடையவரே! உம்மை அன்போடு தொழும் நல்ல தவம் உடையவர்கள் நலமே அடைவார்கள்.



2)
அலைபுனல் எதிர்தமிழ் அவையடை ஏடகக்
கலையமர் கரமுடை யீரே
கலையமர் கரமுடை யீரும கழல்தொழ
வலவருக் குயர்கதி வருமே.



கலை - ஆண்மான்;
கலையமர் கரமுடையீர் - மான் பொருந்திய கையை உடையவரே;
(11.7.16 - திருவாரூர் மும்மணிக்கோவை - "... கலையமர் கையன் ...");
வலவர் - வல்லவர்; (இடைக்குறை விகாரம்);
உம - உம் + - உம்முடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);


அலைத்துவரும் வைகையை எதிர்த்துச் சென்ற சம்பந்தரின் தேவார ஏடுகள் அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! மானைக் கையில் ஏந்தியவரே! உம்முடைய திருவடியைத் தொழ வல்லவர்களுக்கு உயர்கதி வரும்.



3)
வைகையில் இடுதமிழ் வந்தடை ஏடக
மையணி மிடறுடை யீரே
மையணி மிடறுடை யீரும மலரடி
கைதொழு பவர்இலர் கலியே.



மை - கருநிறம்;
அணி - அழகு;
அணிதல் - பூணுதல்;
மிடறு - கண்டம்;
உம மலரடி - உம்முடைய மலர்ப்பாதங்கள்; ('' - ஆறாம் வேற்றுமை உருபு);
கலி - துன்பம்;


வைகையில் இட்ட தேவார ஏடுகள் வந்தடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! கருமை திகழும் அழகிய கண்டத்தை உடையவரே! உம்முடைய மலர் போன்ற திருவடிகளைக் கையால் தொழுபவர்கள் துன்பம் இன்றி மகிழ்வர்.



4)
ஆற்றினில் இடுதமிழ் அடைதிரு வேடக
ஏற்றுயர் கொடியுடை யீரே
ஏற்றுயர் கொடியுடை யீரும திணையடி
போற்றிட வரும்மிகு புகழே.



ஏற்றுயர் கொடி - 'ஏற்றுக் கொடி, உயர் கொடி' எனத் தனித்தனி இயைக்க - உயர்ந்த இடபக் கொடி; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 1 - "போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே ... ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்...");



5)
எறிபுனல் இடையிடும் ஏடடை ஏடக
மறியொரு கரமுடை யீரே
மறியொரு கரமுடை யீருமை வழிபடும்
அறிவுடை யவர்இலர் அயர்வே.



எறிபுனல் - அலைமோதும் நதி;
மறி - மான்கன்று;
அயர்வு - தளர்ச்சி; வருத்தம்;



6)
வருபுனல் எதிர்தமிழ் வந்தடை ஏடகக்
கருமணி மிடறுடை யீரே
கருமணி மிடறுடை யீரும கழல்தொழத்
திருமலி நிலைவரும் திடனே.



கரு மணி மிடறு உடையீரே - நீலமணி போன்ற கண்டத்தை உடைவரே - மணிகண்டரே;
உம கழல் - உம் திருவடிகளை;
திரு மலி நிலை - நன்மை/செல்வம் பெருகும் நிலை;
திடன் - திடம் - நிச்சயம்;



7)
திரைநதி எதிர்தமிழ் சென்றடை ஏடக
அரையினில் அரவணி வீரே
அரையினில் அரவணி வீருமை அன்பொடு
பரவிடப் பழவினை படுமே.



திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்;
அரை - இடை (Waist, loins);
பரவுதல் - புகழ்தல்; துதித்தல்;
படுதல் - அழிதல்;


அலையெழும் வைகையை எதிர்த்துச் சம்பந்தரின் தமிழ் சென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! அரையில் பாம்பைக் கச்சாக அணிந்தவரே! உம்மை அன்போடு துதித்தால் பழவினைகள் எல்லாம் அழியும்.



8)
இசைமலி தமிழ்புனல் எதிர்ந்தடை ஏடகத்
தசமுகன் அழநெரித் தீரே
தசமுகன் அழநெரித் தீரும தாள்தொழும்
நசையுடை யவர்இலர் நலிவே.



எதிர்தல் - எதிர்த்தல் (To oppose, confront);
இசைமலி தமிழ் புனல் எதிர்ந்து அடை ஏடகம் - இசைத்தமிழான சம்பந்தர் தேவாரம் வைகை ஆற்றில் எதிர்ந்துசென்று அடைந்த திருவேடகம்; ('இசை = புகழ்' என்றும் பொருள்கொள்ளலாம்);
தசமுகன் - இராவணன்;
நசை - அன்பு; விருப்பம்;
உம - உம் + - உம்முடைய; (- ஆறாம் வேற்றுமை உருபு);
நலிவு - துன்பம்;


திருவடியைப் புகழும் இசைத்தமிழான சம்பந்தர் தேவாரம் வைகை ஆற்றுநீரை எதிர்ந்துசென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! பத்துத்தலைகளை உடைய அரக்கனை நசுக்கி அழவைத்தவரே! உம் திருவடியை வணங்கும் அன்புடையவர்கள் துன்பம் இல்லாதவர்கள்.



9)
சாலவும் உயர்தமிழ் தானடை ஏடக
மாலயன் அறிவரி யீரே
மாலயன் அறிவரி யீருமை வழிபடு
சீலர்கள் பெறுவது தெளிவே.



சாலவும் - மிகவும்;
உயர்தல் - மேன்மையுறுதல் (To be excellent, exalted, eminent, superior);
உயர்த்தல் - உயர்த்துதல் - மேனிலைக்குக் கொண்டுவருதல் (To exalt, ennoble);
மால் அயன் அறிவு அரியீர் - பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவராக விளங்கிய சிவபெருமானே;


மிகவும் உயர்ந்த தமிழான (நம்மை மிகவும் மேல்நிலைக்கு உயர்த்தும் தமிழான) சம்பந்தர் தேவார ஏடு சென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! பிரமன், திருமால் இவர்களால் காண்பதற்கு அரியவரே! உம்மை வழிபடும் சீலர்கள் தெளிவைப் பெறுவார்கள்.



10)
மெய்ந்நெறி புகல்தமிழ் வென்றடை ஏடகப்
பொய்ந்நெறி யார்க்கரி யீரே
பொய்ந்நெறி யார்க்கரி யீருமைப் போற்றுதல்
செந்நெறி நின்றவர் செயலே.



பதம் பிரித்து:
மெய்ந்நெறி புகல் தமிழ் வென்று அடை ஏடகப்,
பொய்ந்நெறியார்க்கு அரியீரே;
பொய்ந்நெறியார்க்கு அரியீர் உமைப் போற்றுதல்,
செந்நெறி நின்றவர் செயலே.


மெய்ந்நெறி - உண்மைவழி;
புகல்தல் - சொல்லுதல்;
பொய்ந்நெறி - தீயவழி (False path; evil way);
செந்நெறி - செவ்விய வழி; சன்மார்க்கம் (Path of virtue, the right way);
நிற்றல் - உறுதியாயிருத்தல் (To be steadfast; to persevere, persist in a course of conduct);


உண்மையான நெறியைச் சொல்கின்ற சம்பந்தர் தேவாரம் புனல்வாதத்தில் வென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! பொய்ந்நெறியார்களால் அடையப்படாதவரே! உம்மைப் போற்றுவது செம்மையான நெறியில் ஒழுகுபவர்கள் செயல் ஆகும்.



11)
புனலிடை இடுதமிழ் போயடை ஏடக
மினலிடை உமையவள் கோனே
மினலிடை உமையவள் கோனுமை நினைபவர்
வினையவை அனலடை விறகே.



மினல் இடை உமையவள் கோன் - மின்னல் போன்ற இடையை உடைய பார்வதிக்குத் தலைவன்;
நினைபவர் - நினைப்பவர்;
அனல் அடை விறகு - தீப்புகுந்த விறகு;


வைகை ஆற்றில் இட்ட தேவார ஏடு வெள்ளத்தை எதிர்த்துச்சென்று அடைந்த திருவேடகத்தில் எழுந்தருள்பவரே! மின்னல் போன்ற இடையை உடைய பார்வதிக்குத் தலைவனே! உம்மை நினைபவர்களின் வினைகள் எல்லாம் தீப்புகுந்த விறகுபோல் சாம்பல் ஆகிவிடும்.


(அப்பர் தேவாரம் - 4.11.3
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
இப்பாடல்கள் தேவாரத்தில் திருமுக்கால் என்று குறிப்பிடப்படும் பதிகங்களின் அமைப்பில் உள்ளன. இவற்றை "ஆசிரிய இணைக்குறட்டுறை". என்று கருதலாம். (முதல் அடியும் மூன்றாம் அடியும் அளவடி; இரண்டாம் அடியும் நான்காம் அடியும் சிந்தடி).



திருமுக்கால் பாடல் அடிகளின் அமைப்பு:
தானன தானன தானன தானன
தானன தானன தானா
தானன தானன தானன தானன
தானன தானன தானா



தானன வரும் இடத்தில் தனதன வரலாம். அதேபோல் தானா வரும் இடத்தில் தனனா வரலாம்.
தானன / தனதன – இச்சீர்கள் எல்லாம் குறில் / குறில்+ஒற்று என்ற ஒலியில் முடியும்.
1, 3-ஆம் அடிகளின் ஈற்றில் உள்ள தானன என்பது தானனா என்றும் ஒரோவழி (சில சமயம்) வரலாம்.



இப்பாடல்களில் இரண்டாம் அடி மீண்டும் மூன்றாம் அடியில் வரும். (இடைமடக்கு).



(சம்பந்தர் தேவாரம் - 3.97.1 - (திருமுக்கால்) -
திடமலி மதிளணி சிறுகுடி மேவிய
படமலி ரவுடை யீரே
படமலி ரவுடை யீருமைப் பணிபவர்
அடைவதும் அமருல கதுவே)
-------- ------------
திருவேடகம் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=484

----------- --------------

No comments:

Post a Comment