Wednesday, August 19, 2015

01.62 – குன்றத்தூர்

01.62 – குன்றத்தூர்



2010-02-06
குன்றத்தூர்
"குன்றத்தூர் அமர்ந்த கோவே”
-------------------------------------
(அறுசீர் விருத்தம் - காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு)



1)
மறைபோற்றும் மணியே; நீல
.. மணிகண்டா; முடியின் மீது
பிறைகாட்டும் பிரானே; பேதை
.. பிரியானே; அன்று தேவர்
சிறைமீட்ட முருகன் தாதாய்;
.. சேவடியைப் போற்றி நின்றேன்;
குறைதீர்த்துக் காத்த ருள்வாய்;
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



பேதை பிரியான் - அர்த்தநாரீஸ்வரன்;
தாதாய் - தாதை என்பதன் விளி - தந்தையே;
அமர்தல் - தங்குதல்; விரும்புதல்;


வேதங்கள் துதிக்கும் மணியே! நீலமணி போல் விடம் திகழும் கண்டனே! திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனே! அர்த்தநாரீஸ்வரனே! தேவர்களைச் சிறைமீட்ட முருகனின் தந்தையே! குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! உன் சிவந்த திருவடியை வணங்கினேன். என் குறைகளைத் தீர்த்து அருள்வாயாக!



2)
படுதுயரம் தாங்கா வானோர்
.. பாதத்தைப் பணிந்து வேண்டச்,
சுடுகணையால் முன்னம் விண்ணில்
.. சுற்றியமுப் புரங்கள் அட்டாய்;
நடுவிலனாய் நானி லத்தில்
.. நாள்தோறும் செய்து சேர்த்த
கொடுவினைதீர்த் தென்னைக் காப்பாய்;
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



அடுதல் - அழித்தல்;
அட்டாய் - அட்டான் என்ற பெயர் விளி ஏற்று அட்டாய் என வந்தது. - அட்டவனே;
நடு - நியாய உணர்வு;
நானிலத்தில் - நானிலம் - பூமி; ('நான் நிலத்தில்' என்றும் பிரிக்கலாம்);


முன்னொரு சமயம், பெரும் துயரம் தாளாமல் தேவர்கள் உன் பாதத்தைப் பணிந்து வேண்ட, விண்ணில் திரிந்த முப்புரங்களையும் தீச்சரத்தால் அழித்தவனே! குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இவ்வுலகில் தினந்தோறும் நியாய உணர்வின்றி நான் புரிந்த தீவினைகளைத் தீர்த்து என்னைக் காப்பாயாக!



3)
அளியாத கல்ம னத்தேன்,
.. அனுதினம்மூ வாசை பொங்கத்,
துளியேனும் நாணம் இன்றித்,
.. துன்மதியே மிக்கு ழன்றேன்;
தெளியாத சிந்தை யேன்செய்
.. தீவினைகள் தீர்த்த ருள்வாய்;
குளிராற்றை முடியில் வைத்த,
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



அளியாத கல் மனத்தேன் - குழையாத, கல் போன்ற மனத்தை உடைய நான்; ('அளியாத - இரப்பவர்க்கு ஈயாத' என்றும் பொருள்கொள்ளலாம்);
அனுதினம் மூவாசை - நாள்தோறும் மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்ற மூவகைப்பட்ட பற்று;
துன்மதி - கெட்ட புத்தி;
தெளியாத சிந்தையேன் - மனத்தில் தெளிவு இல்லாத நான்;



4)
வெஞ்சினத்தின் வடிவே ஆகி,
.. வெறுப்பனவே நாளும் செய்து
சஞ்சரிக்கும் தமியேன் தன்னைத்
.. தாயெனவே வந்து காப்பாய்;
பஞ்சடுத்த தீயாய் நின்று
.. பழவினைகள் தீர்த்த ருள்வாய்;
குஞ்சரத்தின் உரியைப் போர்த்த,
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



வெஞ்சினம் - கொடிய கோபம்;
சஞ்சரித்தல் - திரிதல்;
தமியேன் - கதியற்ற நான்;
அடுத்தல் - சமீபமாதல்; சார்தல்;
குஞ்சரம் - யானை;
உரி - தோல்;



5)
பண்டேஉன் பாதம் ஏத்தேன்;
.. பாவங்கள் பலவும் செய்து
திண்டாடும் என்னைக் காப்பாய்;
.. தேவரெலாம் வேண்ட நஞ்சை
உண்டாய்நல் அமுதம் ஆக;
.. உன்னடியை உள்ளே வைத்துக்
கொண்டாடும் அன்பர் கூடும்
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



பண்டே - முன் நாளிலேயே;
ஏத்தேன் - நான் துதிக்கமாட்டேன்;
ஏத்துதல் - துதித்தல்;
உள்ளே - நெஞ்சில்;


தேவர்கள் வேண்ட, நல் அமுதம் போல ஆலகால விடத்தை உண்டவனே! உன் திருவடியை நெஞ்சில் வைத்துப் போற்றும் பக்தர்கள் திரள்கிற குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! முன்னமே உன் திருவடியைத் தொழ மறந்தேன். பல பாவங்கள் செய்து அல்லல் உறும் என்னைக் காப்பாயாக!



6)
கும்பிக்கே நாளும் ஓடிக்,
.. குன்றைப்போல் வினையும் கூடித்,
தம்பித்தேன் மிகவும் வாடிச்;
.. சங்கரனே காவாய்; நாடிச்,
செம்பொற்றாள் புகழைப் பாடிச்,
.. செழுமலர்கள் தூவி நின்று
கும்பிட்டார் குறைகள் தீர்க்கும்,
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



கும்பி - வயிறு;
தம்பித்தல் - ஸ்தம்பித்தல் - அசையாதிருத்தல் (to be paralyzed, stiff, stunned);
காவாய் - காப்பாயாக;
செம்பொற்றாள் - செம் பொன் தாள் - சிறந்த பொன் போன்ற திருவடி;


நாடி வந்து, உன் பொன்னடியின் புகழைப் பாடி, அழகிய பூக்களைச் சொரிந்து வழிபடும் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பவனே! குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! உடலை ஓம்பவே தினந்தோறும் உழன்று, மலை போல் தீவினைகளைப் பெருக்கி, அதனால் வாடித், திகைத்து நிற்கின்றேன். சங்கரனே, காத்தருள்வாய்!



7)
பற்றுகளின் பிடியில் சிக்கிப்
.. பாழ்நரகில் வீழ லாமோ?
கற்றவர்கள் கருது கின்ற
.. கண்ணுதலே காத்த ருள்வாய்;
நற்றமிழ்செய் சேக்கி ழார்ஊர்,
.. நாளுமடி யார்கள் வந்து
குற்றமறு தமிழால் ஏத்தும்,
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



* சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்.
கற்றவர் - ஞானிகள்;
கண்ணுதல் - நெற்றிக்கண்ணன்;
குற்றமறு தமிழ் - 1) குற்றமற்ற தமிழ்; 2) குற்றங்களைத் தீர்க்கும் தமிழ்;


பற்றுகளின் பிடியில் சிக்கிப் பாழ்நரகில் வீழலாமோ? - சிவனே! பல்வேறு பற்றுகளின் பிடியில் சிக்கி நான் கொடுநரகத்தில் விழுவேனோ?
கற்றவர்கள் கருதுகின்ற கண்ணுதலே; காத்து அருள்வாய்; - சிவஞானியர் போற்றும் நெற்றிக்கண்ணனே! காப்பாயாக!
நற்றமிழ்செய் சேக்கிழார் ஊர் - நல்ல தமிழ் ஆன பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் ஊரும்;
நாளும் அடியார்கள் வந்து குற்றம் அறு தமிழால் ஏத்தும் - தினந்தோறும் பக்தர்கள் வந்து, எல்லாக் குற்றங்களையும் தீர்க்கும் செந்தமிழான தேவாரப் பாடல்களைப் பாடி வழிபடும் ஊரும் ஆன;
குன்றத்தூர் அமர்ந்த கோவே - குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் தலைவனே.



8)
ஆறாத சினத்தி னாலே
.. அம்மலையை எறிவேன் என்ற
தேறாத இலங்கைக் கோனின்
.. சிரம்பத்தும் நெரித்த தேவா;
ஆறாரும் சிரத்தாய்; உன்றன்
.. அடியாரின் தேவை எல்லாம்
கூறாதே அறிவாய் அன்றோ;
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



தேறாத இலங்கைக் கோன் - தெளிவில்லாத புத்தியை உடைய இராவணன்;
ஆறு ஆரும் சிரத்தாய் - கங்கை பொருந்தும் திருமுடியானே;


தேர் செல்லாமல் நின்றதும், அடங்காக் கோபத்தோடு கயிலை மலையைப் பெயர்த்து எறியச் சென்ற, தெளிவில்லாத இராவணனின் பத்துத் தலைகளையும் நசுக்கிய தேவனே! கங்கையை முடியில் கொண்டவனே! குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! உன் பக்தர்களின் தேவைகளை எல்லாம் அவர்கள் சொல்லாமலே நீ அறிவாயே!



9)
ஒருகுறையும் இல்லேன் ஆகி
.. உன்னடியே வாழ்த்த நல்காய்;
இருவரடை யாத சோதீ;
.. ஈறில்லா திருக்கும் ஆதீ;
தருமபுரம் சாமி நாதன்
.. தமிழ்பாடக் கேட்டு ந்தாய்;
குருவடிவாய் அறமு ரைத்த,
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



* வாழ்வெல்லாம் திருமுறைகள் பாடிப் பணிசெய்த தருமபுரம் சுவாமிநாதனார் நெடுநாள் வாழ்ந்த ஊர் குன்றத்தூர்.
நல்காய் - அருள்வாயாக;
சோதீ, ஆதீ - சோதியே, ஆதியே என்ற விளிகள்;
கேட்டுந்தாய் - கேட்டு உந்தாய் - கேட்டு மகிழ்ந்தவனே;


ஒரு குறையும் இல்லேன் ஆகி உன் அடியே வாழ்த்த நல்காய் - எல்லாக் குறைகளும் தீர்ந்து நான் என்றும் உன் திருவடிகளையே போற்ற அருள்புரிவாயாக;
இருவர் அடையாத சோதீ - அயனும் மாலும் அடைய ஒண்ணாத சோதியே;
ஈறு இல்லாது இருக்கும் ஆதீ - முடிவின்றி இருக்கும் முதற்பொருளே;
தருமபுரம் சாமிநாதன் தமிழ் பாடக் கேட்(டு) ந்தாய் - தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, முதலிய திருமுறைகளைத் தருமபுரம் சுவாமிநாதன் பாடக் கேட்டு மகிழ்ந்தவனே;
குரு வடிவாய் அறம் உரைத்த, குன்றத்தூர் அமர்ந்த கோவே - தட்சிணாமூர்த்தியாகி நால்வர்க்கு அறம் உபதேசித்தவனே. குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் தலைவனே.



10)
பொய்ம்மையிலே புரள்வார் நாளும்;
.. புறனுரையே சொல்லி நிற்பார்;
மெய்ந்நெறியை அறியா வீணர்;
.. மிண்டுமனத்(து) அவரை நீங்கி,
நைம்மனத்தா ரோடு கூடி,
.. நானுன்னைப் பாடு கின்றேன்;
கொய்ம்மலர்போல் பாதா; காப்பாய்;
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



புறனுரை - பழிச்சொல் (Slander); வெற்றுரை (Meaningless utterance);
மிண்டு மனம் - உருகாத கல் நெஞ்சம்;
நைம் மனத்தார் - வினைத்தொகை - நைகின்ற மனத்தை உடையவர்கள் - பக்தர்கள்;
கொய்ம் மலர் - வினைத்தொகை - பறித்தற்கு உரிய மலர் - அப்பொழுது அலர்ந்த மலர்; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் .... கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே");


பொய்யிலேயே என்றும் புரள்வார்கள். பழிச்சொல்லும் பொருளற்ற பேச்சுமே பேசுவார்கள். உண்மை மார்க்கத்தை உணராத வீணர்கள். உருகாத கல்நெஞ்சு உடைய அவர்களை விட்டு விலகிப், பக்தியில் உருகும் மனம் கொண்ட அடியவர்களோடு சேர்ந்து, நான் உன்னைப் பாடிப் பணிகின்றேன். புத்தம்புது மலர் போன்ற திருப்பாதம் உடையவனே! குன்றத்தூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! காத்தருள்வாயாக!



11)
தோற்றுவினை ஓட, என்றும்
.. சுகம்நிலைக்க அருள்வாய் ஐயா;
ஆற்றலையும் கொன்றைப் பூவும்
.. அணிமதியும் முடிமேல் காட்டும்
தோற்றமிலாச் சிவனே; நாளும்
.. தோத்திரித்த அடியார்க் காகக்
கூற்றையுதை செய்த ஈசா;
.. குன்றத்தூர் அமர்ந்த கோவே.



தோற்றுதல் - தோன்றச்செய்தல் (to show; to produce); பிறப்பித்தல்;
தோற்றுவினை ஓட - 1) வெல்ல வந்த வினைப்பகை தோல்வியுற்று ஓடிப்போக; 2) பிறப்பு அளிக்கும் வினை நீங்க;
ஆற்றலையும் - ஆற்று அலையும் - கங்கையின் அலைகளும்;
அணி மதி - அழகிய பிறைச்சந்திரன்;
தோற்றம் - 1) ஆரம்பம்; பிறப்பு; 2) வடிவம்;
தோத்திரித்தல் - துதித்தல்;
கூற்று - எமன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
குன்றத்தூர் -
இவ்வூர் சென்னைப் புறநகர்ப் பகுதியில் பல்லாவரத்திற்கு அருகில் உள்ளது. இது சேக்கிழார் அவதரித்த தலம். வாழ்வெல்லாம் தேவாரம் பாடித் தொண்டாற்றிய தருமபுரம் சுவாமிநாதன் வாழ்ந்த ஊர். இவ்வூரில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற சிவன் கோயில் சேக்கிழாரால் கட்டப்பெற்றது. தருமபுரம் சுவாமிநாதனாரால் திருப்பணி செய்யப்பெற்றது.



குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.aspx?id=97




------------------- 

No comments:

Post a Comment