Friday, August 28, 2015

02.12 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)

02.12 – கோடிகா - (திருக்கோடிக்காவல்)



2011-01-27
திருக்கோடிகா (திருக்கோடிக்காவல்)
---------------------------------------------------------------
(இதில் 12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு.
மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - கற்றாங் கெரியோம்பி)



1)
வெயிலில் நிழல்போல வினைதீர்த் தருள்செய்யும்
கயிலை மலையானைக் காண அடைநெஞ்சே
வயலின் அயலெங்கும் வாழை மரம்சேரக்
குயில்கள் பயில்சோலைக் கோடி காவையே.



பயில்தல் - ஒலித்தல் (To utter indistinct sounds, as birds; to sound);
கோடிகா - திருக்கோடிகா - (இக்காலத்தில் "திருக்கோடிக்காவல்” என்ற பெயருடைய தலம்);



2)
வேலை விடமுண்ட மிடறன் இலையாரும்
சூலன் உமைகோனைத் தொழச்சென் றடைநெஞ்சே
நீலக் குயில்கூடி நித்தல் இசைபாடும்
கோலப் பொழில்சூழும் கோடி காவையே.



வேலை - கடல்;
மிடறு - கழுத்து; கண்டம்;
வேலை விடம் உண்ட மிடறன் - நஞ்சுண்ட கண்டன் - நீலகண்டன்;
இலை ஆரும் சூலன் - இலை போன்ற வடிவம் உடைய நுனிகளை உடைய சூலத்தை உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.62.8 - "இலையாருஞ் சூலத்தாய்");
நீலம் - கறுப்பு;
நித்தல் - தினமும்;
கோலப் பொழில் - அழகிய சோலை;



3)
நளிர்வெண் மதியானை நதியார் சடையானை
ஒளிர்வெண் பொடியானை உரைசெய் தடைநெஞ்சே
களிவண் டறையோவாக் கந்த மலர்ச்சோலை
குளிர்தெண் புனல்சூழும் கோடி காவையே.



நளிர்தல் - குளிர்தல்; (நளிர் வெண் மதியானை - குளிர் வெண் திங்களைச் சூடியவனை);
ஆர்தல் -பொருந்துதல்; (நதி ஆர் சடையானை - கங்கைச்சடையானை);
ஒளிர் வெண்பொடி - ஒளி வீசும் திருநீறு;
உரைசெய்து - துதித்துப் பாடி;
களி வண்டு அறை ஓவா - மகிழும் வண்டுகளின் பாடல் ஓயாத;
தெண் புனல் - தெளிந்த நீர்;


குளிர்ந்த வெண்பிறைச்சந்திரனைச் சூடியவனைக், கங்கை தங்கும் சடை உடையவனை, ஒளிவீசும் வெண் திருநீறு பூசியவனைத் துதிசெய்து, நெஞ்சே நீ அடைவாயாக, மகிழும் வண்டுகளின் பாடல் எப்பொழுதும் நீங்காமல் திகழும் வாச மலர்ச்சோலைகளும் குளிர்ந்த தெளிந்த நீர்நிலைகளும் சூழும் திருக்கோடிகாவை.



4)
வெங்கா டதிலாடும் விகிர்தன் மலர்த்தாளை
மங்கா உணர்வோடு வாழ்த்தி அடைநெஞ்சே
தெங்கார் பொழிலோடு சிறைவண் டினம்பாடும்
கொங்கார் பொழில்சூழும் கோடி காவையே.



வெம் காடு - சுடுகாடு;
விகிர்தன் - மாறுபட்ட செயலினன் - இறைவன்;
மலர்த்தாள் - லர் போன்ற திருவடி; (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.39 - “ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து”);
மங்குதல் - குறைதல்;
உணர்வு - அன்பு; அறிவு;
தெங்கு - தென்னை;
ஆர்தல் - நிறைதல்;
சிறை வண்டினம் - சிறகுகளை உடைய வண்டுகள்;
கொங்கு - வாசனை; தேன்;


நெஞ்சே! சுடுகாட்டில் திருநடம் செய்யும் சிவபெருமானின் மலர்ப்பாதத்தை மிகுந்த பக்தியோடு போற்றித், தென்னந்தோப்புகளும் சிறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் வாசனை கமழும் சோலைகளும் சூழும் திருக்கோடிகாவை அடைவாயாக!


(அப்பர் தேவாரம் - 5.90.10
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.)

5)
நக்காய் புரம்வேவ நாலு மறையாய்எண்
திக்காய் அருளென்று செப்பி அடைநெஞ்சே
மிக்கார் வண்டாரும் விரையார் பொழிலோடு
கொக்கார் புனல்சூழும் கோடி காவையே.



பதம் பிரித்து:
"நக்காய் புரம் வேவ; நாலு மறையாய்; எண்
திக்காய்; அருள்" என்று செப்பி அடை நெஞ்சே;
மிக்கு ஆர் வண்டு ஆரும் விரை ஆர் பொழிலோடு
கொக்கு ஆர் புனல் சூழும் கோடிகாவையே.


ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
மிக்கு ஆர் வண்டு ஆரும் - மிக ஒலிக்கும் வண்டுகள் பொருந்தும்;
விரை ஆர் பொழில் - வாசம் கமழும் சோலை;


"முப்புரங்கள் எரியச் சிரித்தவனே! நால்வேதத்தினனே! எட்டுத் திக்குகளாய் உள்ளவனே! அருள்வாயாக" என்று துதித்து, நெஞ்சே, மிகவும் ரீங்காரம் செய்யும் வண்டுகள் பொருந்திய வாசனை மிகும் சோலைகளும் கொக்குகள் பொருந்திய நீர்நிலைகளும் சூழும் திருக்கோடிகாவை அடைவாயாக!



6)
பாதி உருமாதாய்ப் பரிவின் வடிவான
ஆதி அவன்தாளை அடைய அடைநெஞ்சே
பூதி அரணாகப் பொல்லா வினைதீர்ந்த
கோதில் அடியார்சேர் கோடி காவையே.



பாதி உரு மாது ஆய் - தன் திருமேனியில் பாதி பெண் ஆகி;
பரிவின் வடிவான ஆதி - தயையே உருவமான ஆதிமூர்த்தி;
அடைதல் - 1. பெறுதல் (To get, obtain, enjoy); 2. சேர்தல் (To reach, arrive at);
பூதி அரண் ஆக - திருநீறே சிறந்த பாதுகாவல் ஆக;
கோது இல் அடியார் சேர் - குற்றமற்ற பக்தர்கள் சேரும்;



7)
காறு விடமுண்ட கண்டன் எருதேறி
பேறு தருவான்சீர் பேசி அடைநெஞ்சே
நாறு மலர்த்தேனை நாடி முரல்வண்டாய்க்
கூறும் அடியார்சேர் கோடி காவையே.



காறுதல் - கறுத்தல் (To be blackened); காறற்சுவையாதல் (To taste bitter, musty or rancid);
காறு விடமுண்ட கண்டன் - கரிய விடத்தை உண்ட நீலகண்டன்; ('கைக்கும் விடத்தை உண்ட கரிய கண்டன்' என்றும் பொருள்கொள்ளலாம்);
பேறு தருவான் சீர் - எல்லாப் பேறுகளையும் தருபவனின் புகழை;
நாறு மலர்த்தேனை நாடி - வாசம் கமழும் மலர்த்தேனை விரும்பி;
முரல்தல் - ஒலித்தல்; பாடுதல்;
கூறுதல் - புகழ்தல்;



8)
மலையை இடந்தானை வாட்ட விரலூன்றும்
தலைவன் பெயர்சொல்லிச் சார்ந்து மகிழ்நெஞ்சே
பலபண் சுரும்பார்க்கப் பரிசில் தருதேன்பூங்
குலைகள் மலிசோலைக் கோடி காவையே.



மலையை இடந்தானை - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை;
சார்தல் - சென்றடைதல் (To reach, approach); புகலடைதல் (take shelter in);
பல பண் சுரும்பு ஆர்க்க - பல பண்களை வண்டினங்கள் பாட;
பரிசில் தரு தேன் பூங்குலைகள் மலி சோலை - கொடை தரும் தேன் நிறைந்த பூங்கொத்துகள் மிகுந்த சோலை;



9)
தேடும் அயன்மால்முன் தீயாய் உயர்வான்நீர்
ஓடும் சடையான்சீர் ஓதி அடைநெஞ்சே
வீடும் விழையாமல் விரையார் கழலன்பே
கூடும் அடியார்சேர் கோடி காவையே.



தீயாய் உயர்வான் நீர் ஓடும் சடையான் - சோதியாக உயர்ந்தவன்; நதி ஓடும் சடையை உடையவன்; ('தீயாய் உயர், வான்நீர் ஓடும் சடையான்' - என்றும் கொள்ளலாம். வான் நீர் - ஆகாய கங்கை);
வீடு - மோட்சம்; முக்தி;
விழையாமல் - விரும்பாமல்; (விழைதல் - விரும்புதல்);
விரை ர் கழல் அன்பே கூடும் அடியார் சேர் - மணம்கமழும் திருவடிகளுக்கு அன்பே மிகுகின்ற பக்தர்கள் சேரும்;;


(பெரிய புராணம் - திருக்கூட்டச் சிறப்பு:
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.)



10)
எத்தே மொழிவஞ்சர் இறையும் உணராரே
பித்தா அருளாய்எம் பிரானென் றடைநெஞ்சே
தெத்தே எனவண்டு தீம்பண் இசைபாடும்
கொத்தார் மலர்ச்சோலைக் கோடி காவையே.



எத்து - வஞ்சகம் (cheating, seducing, deceiving);
மொழிதல் - பேசுதல்; சொல்லுதல்;
வஞ்சர் - வஞ்சகர்;
இறையும் - கொஞ்சமும்; கடவுளையும்; (இறை - சிறிது; கடவுள்):
தெத்தே - வண்டின் ஒலிக்குறிப்பு;
தீம் பண் - இனிய பண்;
கொத்து ஆர் மலர்ச்சோலை - மலர்க்கொத்துகள் நிறைந்த சோலை;



11)
சண்டைப் புலனைந்தின் தாக்கல் அதனோடு
பண்டை வினைதீரப் பாடி அடைநெஞ்சே
வண்டின் இசைகேட்க வானில் தவழ்கின்ற
கொண்டல் அடைசோலைக் கோடி காவையே.



சண்டைப் புலன் ஐந்தின் தாக்கல் - போரிடும் ஐம்புலன்களின் தாக்குதல்;
பண்டை வினை - பழவினை;
கொண்டல் - மேகம்;
கொண்டல் அடைசோலை - வானளாவ உயர்ந்த சோலை;



12)
ஆல நிழல்மேவும் ஐயன் அழகாரும்
நீல மிடறன்தாள் நினைந்து மனமேசேர்
வேலைப் புனலுண்ட மேகம் தவழ்கின்ற
கோலப் பொழில்சூழும் கோடி காவையே.



ஆல நிழல் மேவும் ஐயன் - கல்லாலின்கீழ் நான்மறையை விரித்தருளிய தட்சிணாமூர்த்தி;
அழகு ஆரும் நீல மிடறன் - அழகிய நீலகண்டன்;
வேலைப் புனல் உண்ட மேகம் - கடலின் நீரை உண்ட மேகம்;
கோலப் பொழில் - அழகிய சோலை;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
கோடிகா - (திருக்கோடிக்காவல்) - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=1064

------------------- 

No comments:

Post a Comment