Friday, August 28, 2015

02.09 – இடைமருதூர் - (தேர் ஓடும் திருவிடைமருதூர்)

02.09 – டைமருதூர் - (தேர் ஓடும் திருவிடைமருதூர்)



2011-01-14
திருவிடைமருதூர்
"தேர் ஓடும் திருவிடைமருதூர்"
--------------------------------------
(நாலடித்தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - 'கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்')



1)
பிறப்போடு மரணமிலாப் பெருமையினான் தமிழ்கேட்டு
மறைக்காட்டில் மாக்கதவம் திறந்தருள்வான் மகிழுமிடம்
உறைப்போடு திருநாமம் உரையடியார் வடம்பிடிக்கச்
சிறப்பாகத் தேரோடும் திருவிடை மருதூரே.



மறைக்காட்டில் - வேதாரண்யத்தில்;
மாக்கதவம் - பெரிய கதவு;
உறைப்பு - உறுதி; (உறைப்பு - திருத்தொண்டின் வலிமை);
(அப்பர் தேவாரம் - 5.50.8 "திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்புப் பாடி டைப்பித்தார் ந்நின்றார்")



2)
ஆணோடு பெண்ணலியும் ஆவானோர் அரவவரை
நாணோடு பலிக்குழலும் நக்கனவன் நயக்குமிடம்
பூணோடு பூவணிந்து பூவையர்கள் போற்றிசைக்கச்
சேணோங்கு தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
ஆணோடு பெண் அலியும் ஆவான்; ஓர் அரவ அரை
நாணோடு பலிக்கு உழலும் நக்கன் அவன் நயக்கும் இடம்;
பூணோடு பூ அணிந்து பூவையர்கள் போற்றிசைக்கச்
சேண் ஓங்கு தேர் ஓடும் திருவிடைமருதூரே.


அரவ அரை நாண் - நாகக் கச்சு;
பலி - பிச்சை;
நக்கன் - நக்னன்; உடையில்லாதவன்; இது பிட்சாடன கோலத்தைக் குறித்தது;
நயக்கும் இடம் - விரும்பும் தலம்;
பூண் - நகை;
பூவையர்கள் - பெண்கள்;
சேண் ஓங்கு - வானளாவும்; (சேண் - ஆகாயம்);
(அப்பர் தேவாரம் - 6.57.9 - "போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி ...." - 'போற்றி இசைத்து' என்பது, 'போற்றிசைத்து' என நின்றது)



3)
சாந்தமென நீறணிந்து சடையின்மேல் பிறையோடு
பாந்தளையும் சேர்த்துவைத்த பசுபதியார் மகிழுமிடம்
சார்ந்திருக்கும் அடியார்கள் சங்கரனார் தாள்பணிந்து
சேர்ந்திழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே.



சாந்தம் - சந்தனம்;
நீறு - திருநீறு;
பாந்தள் - பாம்பு;



4)
அன்றிமையோர் கடல்நஞ்சுக் கஞ்சிவந்து காத்தருள்வாய்
என்றிறைஞ்ச அமுதுசெய்த எம்பெருமான் மகிழுமிடம்
துன்றியடி யார்பலரும் தூமலர்த்தாள் துதிபாடிச்
சென்றிழுக்கும் தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
அன்று இமையோர் கடல்நஞ்சுக்கு அஞ்சிவந்து "காத்தருள்வாய்"
என்று இறைஞ்ச, அமுதுசெய்த எம்பெருமான் மகிழும் இடம்;
துன்றி அடியார் பலரும் தூமலர்த்தாள் துதி பாடிச்
சென்று இழுக்கும் தேர் ஓடும் திருவிடைமருதூரே.


இமையோர் - தேவர்கள்;
அமுதுசெய்தல் - உண்ணுதல்;
துன்றி - நெருங்கி;



5)
போர்விடைமேல் ஏறிவரும் பொற்சடையன் மணிபோலக்
கார்திகழும் கண்டத்தன் கண்ணுதலான் மகிழுமிடம்
ஆர்வமிக அடியார்கள் அஞ்செழுத்தை ஓதிவரச்
சீர்மலியும் தேரோடும் திருவிடை மருதூரே.



கார் - கருமை;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
ஆர்வம் - அன்பு;
சீர் - அழகு; நன்மை; செல்வம்; புகழ்; பெருமை;



6)
ஒருநகையால் புரமெரித்த ஒருவன்தன் பத்தரிடம்
வருநமனை மார்பிலுதை மணிகண்டன் மகிழுமிடம்
தெருநிறையத் திரளன்பர் திருப்புகழைப் பாடிவரத்
திருமலியும் தேரோடும் திருவிடை மருதூரே.



நகை - சிரிப்பு;
ஒருவன் - ஒப்பற்றவன்;
பத்தர் - பக்தர் - மார்க்கண்டேயர்;
நமன் - எமன்;
திருப்புகழ் - இறைவனின் புகழ்;
திரு- செல்வம்; நன்மை; அழகு;



7)
வெவ்விடமும் அணிசெய்யும் மிடறுடையான் அடியாரைக்
கவ்விடவந் தடைவினையைக் கடிந்தருள்வான் மகிழுமிடம்
எவ்விடமும் அரன்நாமம் எதிரொலிக்க இசைமுழங்கச்
செவ்விமிகு தேரோடும் திருவிடை மருதூரே.



வெவ்விடம் - கொடிய விடம்;
அணி - அழகு; ஆபரணம்;
மிடறு - கண்டம்; கழுத்து;
கவ்வுதல் - வவ்வுதல்; (To seize, grasp with eagerness);
கடிதல் - அழித்தல்; விலக்குதல்;
செவ்வி - அழகு;



8)
அகழ்வேனிம் மலையையெனும் அரக்கனையன் றழவைத்தான்
புகழ்பாடி வணங்கவருள் புரிந்தசிவன் மகிழுமிடம்
மகிழ்கின்ற மனத்தடியார் வழிபட்டு வடம்பிடிக்கத்
திகழ்கின்ற தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
"அகழ்வேன் இம்மலையை" எனும் அரக்கனை அன்று அழவைத்தான்;
புகழ் பாடி வணங்க அருள்புரிந்த சிவன் மகிழும் இடம்;
மகிழ்கின்ற மனத்து அடியார் வழிபட்டு வடம்பிடிக்கத்
திகழ்கின்ற தேர் ஓடும் திருவிடைமருதூரே.


மகிழ்தல் - 1) விரும்புதல்; 2) மனம் களித்தல்;
திகழ்தல் - விளங்குதல்; சிறப்பு மிகுதல்;



9)
முரண்டயன்மால் வாதிடுங்கால் முடிவில்லா எரியானான்
அரண்டவர்கள் அருளாயென் றிறைஞ்சுமரன் மகிழுமிடம்
இரண்டுகரம் குவித்தேத்தி எம்பெருமான் தமரெல்லாம்
திரண்டிழுக்கத் தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
முரண்டு அயன் மால் வாதிடுங்கால் முடிவு இல்லா எரி ஆனான்;
அரண்டு அவர்கள் "அருளாய்" என்று இறைஞ்சும் அரன் மகிழும் இடம்;
இரண்டு கரம் குவித்து ஏத்தி, எம்பெருமான் தமர் எல்லாம்
திரண்டு இழுக்கத் தேர் ஓடும் திருவிடைமருதூரே.


முரண்தல் (முரண்டல்) - பகைத்தல்; (To be at variance; to be opposed);
வாதிடுங்கால் - வாதுசெய்யும்பொழுது;
எம்பெருமான் தமர் - சிவன் அடியார்கள்;



10)
கூவித்தம் பொய்வழிக்கே கூப்பிடுவார்க் கெட்டாதான்
சேவிற்செல் சிவபெருமான் செஞ்சடையான் மகிழுமிடம்
ஆவிக்குத் துணைநீயென் றடியார்கள் வழியெங்கும்
சேவிக்கத் தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
கூவித் தம் பொய்வழிக்கே கூப்பிடுவார்க்கு எட்டாதான்;
சேவில் செல் சிவபெருமான், செஞ்சடையான் மகிழும் இடம்;
"ஆவிக்குத் துணை நீ" என்று அடியார்கள் வழி எங்கும்
சேவிக்கத் தேர் ஓடும் திருவிடைமருதூரே.


சேவில் செல் - இடபத்தின்மேல் செல்லும்; (சே - எருது);
சேவித்தல் - வணங்குதல்; தரிசித்தல்;



11)
முப்புரங்கள் வெந்தழிய முறுவலித்த முக்கண்ணன்
அப்புறமும் உள்ளசிவன் ஆயிழையோ டமருமிடம்
அப்பழுக்கில் அடியார்கள் ஆனந்தம் கொண்டாடச்
செப்பருஞ்சீர்த் தேரோடும் திருவிடை மருதூரே.



பதம் பிரித்து:
முப்புரங்கள் வெந்து அழிய முறுவலித்த முக்கண்ணன்;
அப்புறமும் உள்ள சிவன் ஆயிழையோடு அமரும் இடம்;
அப்பழுக்கு இல் அடியார்கள் ஆனந்தம்கொண்டு ஆடச்,
செப்பரும் சீர்த் தேர் ஓடும் திருவிடைமருதூரே.


அப்புறமும் உள்ள சிவன் - (அண்டத்திற்கு உள்ளும்) வெளியிலும் இருப்பவன்;
ஆயிழை - பெண்; இங்கே பார்வதி;
அமர்தல் - விரும்புதல்; இருத்தல்;
அப்பழுக்கு இல் - குற்றமற்ற;
செப்பரும் சீர் - சொல்வதற்கு அரிய பெருமை; (செப்பரும் - செப்ப அரும்);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
2011 ஜனவரி 19-ஆம் தேதியில் - தைப்பூச நன்னாளில் - 77 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருவிடைமருதூர்த் தேரோட்டம் நிகழ்ந்தது. அதற்குச் சில நாள்கள் முன் எழுதிய பதிகம் இது.

----------------- ----------------

No comments:

Post a Comment