Wednesday, August 19, 2015

01.61 – தஞ்சாவூர் (தஞ்சை இராசராசேச்சரம்)

01.61 – தஞ்சாவூர் (தஞ்சை இராசராசேச்சரம்)



2010-02-02
தஞ்சைப் பெருங்கோயில் (தஞ்சாவூர் இராசராசேச்சரம்)
------------------------------------
(கலிவிருத்தம் - "மா மாங்காய் மா மாங்காய்" - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே)



1)
கீதம் பலபாடிப் பாதம் தொழுவோரின்
ஏதம் அவைதீர்க்கும் ஈசன்; எருதேறி;
தாதை உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
பாதை அறிநெஞ்சே பற்றா வினைதானே.



ஏதம் - துன்பம்; குற்றம்; பாவம்;
எருதேறி - இடப வாகனன்;
தாதை - தந்தை;
தஞ்சைப் பெருங்கோயில் பாதை அறிநெஞ்சே - தஞ்சையில் உள்ள பெருவுடையார் கோயில் நற்கதி அடைவிக்கும் நெறி என்று உணர்; அக்கோயிலுக்கு செல்லும் வழியை அறி ('அங்குச் சென்று தொழு' என்பது குறிப்பு);
பற்றா வினைதானே - வினைகள் நம்மைப் பற்றமாட்டா;



2)
மதிசூ டரன்பாதம் மறவா மனச்சோழன்,
பதிகம் நிதமோதப் பலரை நியமித்துப்
பதிக்குப் பணிசெய்த தஞ்சைப் பெருங்கோயில்
துதிக்கும் அடியாரைத் தொடரா துயர்தானே.



* தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவித்து, அக்கோயிலில் தேவாரம் பாட 48 ஓதுவார்களை நியமித்த ராஜராஜசோழனைச் சுட்டியது.
மதிசூடு அரன் பாதம் மறவா மனச்சோழன் - சந்திரசேகரன் திருவடியை மனத்தில் என்றும் கொண்டிருந்த ராஜராஜசோழன்;
நிதம் - தினமும்;
பதி - தலைவன்; கடவுள்;



3)
உம்பர் பெருமானார் உமையாள் ஒருகூறர்
வம்பு மலர்ப்பாதர் மறைகள் மொழிநாதர்
சம்பு உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
நம்பி அடைநெஞ்சே நாளும் வருமின்பே.



உம்பர் - தேவர்;
வம்பு - வாசனை; புதுமை;
வம்பு மலர்ப்பாதர் - வாசமலர் போன்ற திருப்பாதத்தினர்; நாண்மலர் போன்ற திருவடியினர்;
சம்பு - [சுகத்தைத் தருபவன்] சிவன்;
நம்புதல் - விரும்புதல்;
நாளும் - தினமும்;



4)
கையில் அனலேந்திக் கானில் நடமாடும்
செய்ய திருப்பாதன் சேவில் வரும்நாதன்
தையல் ஒருகூறன் தஞ்சைப் பெருங்கோயில்
ஐயன் அடிபோற்றி அல்லல் அறுநெஞ்சே.



கையில் அனல் ஏந்தி - கையில் தீயை ஏந்தி;
கானில் நடமாடும் - சுடுகாட்டில் திருநடம் செய்யும்;
செய்ய - சிவந்த;
சே - எருது;
தையல் ஒரு கூறன் - உமையைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவன்;



5)
கழலைத் துதிபாடிக், காவாய் எனும்தேவர்
விழையும் அமுதீந்தான்; விமலன்; விழிதன்னில்
தழலன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
நிழலை அடைநெஞ்சே நெருங்கா வினைதானே.



காவாய் - காத்தருள்வாய்;
விழிதன்னில் தழலன் - (நெற்றிக்)கண்ணில் தீ உடையவன்;
நிழல் - தானம்; புகலிடம்; (பல பாடல்களில் நீழல் எனவும் வரும்);



6)
விரித்தான் மறையெல்லாம்; விண்ணில் புரம்வேவச்
சிரித்தான்; திகழ்கின்ற திங்கள் சடைமீது
தரித்தான் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
கரத்தால் தொழுவாரைக் காலன் அணுகானே.



விரித்தல் - விளக்கி உரைத்தல்;
விரித்தான், சிரித்தான், தரித்தான் - விரித்தவன், சிரித்தவன், தரித்தவன்;



7)
கொங்கு மலரோடு குளிர்ந்த கிரணஞ்சேர்
திங்கள் அதனோடு திரைசேர் நதியென்றும்
தங்கும் சடையானின் தஞ்சைப் பெருங்கோயில்
உங்கை குவித்தேத்தின் உறுநோய் அடையாவே.



கொங்கு - வாசனை;
திரை - அலை;
உம் கை குவித்து ஏத்தின் - உங்கள் கைகளைக் கூப்பித் தொழுதால்;
உறுநோய் - பெருநோய்கள்; பிராரத்த வினையால் வரும் துன்பம்;



8)
மலையை அசைத்தானை மலர்போல் விரல்வைத்துப்
பலநாள் அழவைத்துப் பரிவோ டருள்செய்த
தலைவன் உறைகின்ற தஞ்சைப் பெருங்கோயில்
தலையால் தொழுவார்கள் தவியார் தரைமீதே.



மலையை அசைத்தானை - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனனை;
மலர்போல் விரல்வைத்து - (கயிலைமலைமேல்) மலர் போல விரலைச் சிறிதே ஊன்றி;
பரிவோடு அருள் செய்த இரங்கி அருள்புரிந்த;
தலையால் தொழுவார்கள் தவியார் தரைமீதே - தலைதாழ்த்தி வணங்கும் பக்தர்கள் இம்மண்ணுலகில் தவிக்கமாட்டார்கள்;



9)
சுழலார் நதியோடு தூவெண் மதிசூடி
கழலை அயன்மாலும் காணா வணம்அன்று
தழலாய் நிமிர்ந்தானின் தஞ்சைப் பெருங்கோயில்
தொழலே வினைதீர்ந்து சுகிக்கும் வழியாமே.



சுழல் ஆர் நதியோடு தூ வெண் மதிசூடி கழலை - சுழல்கள் இருக்கும் கங்கை ஆற்றோடு தூய வெண் திங்களையும் அணிந்த பெருமான் திருவடியை;
அயன் மாலும் காணா வணம் அன்று தழலாய் நிமிர்ந்தானின் - பிரமனும் திருமாலும் காண இயலாதவாறு அன்று சோதியாகி உயர்ந்தவன் உறைகின்ற;
தஞ்சைப் பெருங்கோயில் தொழலே வினை தீர்ந்து சுகிக்கும் வழி மே - தஞ்சைப் பெருங்கோயிலைத் தொழுவதே, வினைகள் நீங்கி இன்புறும் வழி ஆகும்; (சுகித்தல் - சுகமாய் இருத்தல்);



10)
அவமே மொழிவீணர் அவர்சொல் பொருளல்ல;
பவநோய் தனைத்தீர்க்கும் பரமன், கறைக்கண்டன்,
தவள விடையானின் தஞ்சைப் பெருங்கோயில்
எவர்போற் றினும்வேண்டும் எல்லாம் பெறுவாரே.



அவமே மொழி வீணர் - பயனற்ற சொற்களையே பேசுகின்ற கீழோர்; (அவம் - பயனின்மை; கேடு);
அவர் சொல் பொருள் அல்ல – அவர்கள் சொற்களைப் மதிக்கவேண்டா; (பொருள் - தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது);
பவநோய்தனைத் தீர்க்கும் பரமன் - பிறவிப்பிணியைத் தீர்க்கும் பெருமான்; (பவநோய் - பிறவிப்பிணி);
கறைக்கண்டன் - நீலகண்டன்;
தவள விடையான் - வெள்ளை எருதின்மேல் வருபவன்; (தவளம் - வெண்மை);



11)
உவமை இலனாகி உமையோ டிணைவானைப்,
புவனம் படைத்தானைப், பூதப் படையானைத்,
தவமார் பதியான தஞ்சைப் பெருங்கோயில்
சிவனைத் தொழுவார்க்குச் செம்மை திடமாமே.



உவமை இலன் ஆகி உமையோடு இணைவானை - ஒப்பு எதுவும் இல்லாதவன் ஆகி, உமை ஒரு பங்கனாகும் ஈசனை; (இணைதல் - சேர்தல் - To join, unite);
புவனம் படைத்தானைப், பூதப் படையானை - உலகங்களைப் படைத்தவனைப், பூதப்படை உடையவனை;
தவம் ஆர் பதியான தஞ்சைப் பெருங்கோயில் சிவனை - தவம் பெருகும் இடமான தஞ்சைப் பெருங்கோயிலில் உறையும் சிவனை;;
தொழுவார்க்குச் செம்மை திடமாமே - வணங்கும் அடியவர்களுக்கு நற்கதி நிச்சயம்; (திடம் - நிச்சயம்);



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment