Thursday, August 27, 2015

02.03 - கழுமலம் (சீகாழி) - (வண்ணவிருத்தம்)

 02.03 – கழுமலம் (சீகாழி) - (வண்ணவிருத்தம்)


2010-10-26 - 2010-10-30

திருக்கழுமலம் (சீகாழி) (சீர்காழி)

"உனை நினைத்திடும் அகத்தினை அருள்"

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்.

"தனத்தன தனத்தன தனத்தன தனத்தன

தனத்தன தனத்தன .. தனதான" - என் சந்தக்குழிப்பு )


(இருப்பவல் திருப்புகழ் - திருப்புகழ் - திருத்தணிகை)


1)

மரிக்கிற தினத்திலும் மிகப்பல விருப்புகள்

.. மனத்தினை மலக்கிட .. அழிவேனோ

அரிக்கிற வினைத்தொகு தியைக்கரு வறுத்தெனை

.. அடித்தலம் அணைத்தருள் .. புரிவாயே

விரிக்கிற மறைப்பொருள் எனத்திகழ் குணத்தின

.. விடத்தினை மிடற்றினில் .. இடுவோனே

சிரித்தெயில் களைச்சுடு திறத்தின நிலத்துயர்

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மரிக்கிற தினத்திலும் மிகப்பல விருப்புகள்

.. மனத்தினை மலக்கிட அழிவேனோ;

அரிக்கிற வினைத்தொகுதியைக் கரு அறுத்து எனை

.. அடித்தலம் அணைத்து அருள்புரிவாயே;

விரிக்கிற மறைப்பொருள் எனத் திகழ் குணத்தின;

.. விடத்தினை மிடற்றினில் இடுவோனே;

சிரித்து எயில்களைச் சுடு திறத்தின; நிலத்து உயர்

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


மரித்தல் - இறத்தல்; மலக்குதல் - கலக்குதல்; அரித்தல் - இமிசித்தல்; சிறிது சிறிதாகக் கவர்தல்; (அப்பர் தேவாரம் - 5.1.3 - "அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்..."); அடித்தலம் அணைத்தல் - திருவடியில் சேர்த்தல்; விரித்தல் - விளக்கி உரைத்தல்; குணம் - இயல்பு; மிடறு - கண்டம்; கழுத்து; நிலம் - உலகம்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.11 - "ஞாலத் துயர்காழி ...."); திருக்கழுமலம் - சீகாழியின் பன்னிரு பெயர்களுள் ஒன்று;


விளக்கிச்சொல்லும் வேதங்களின் பொருளாக இருப்பவனே! நஞ்சைக் கண்டத்தில் வைத்தவனே! சிரித்தே முப்புரங்களையும் எரிக்கவல்லவனே! உலகில் உயர்ந்து விளங்கும் திருக்கழுமலத்தில் (சீகாழிப்பதியில்) வீற்றருளும் சிவபெருமானே! இறக்கும்போதும் பற்பல ஆசைகள் மனத்தைக் கலக்கிட, உன்னை எண்ணாமல் அழிவேனோ! என்னை அரிக்கிற வினைக்கூட்டத்தை வேரறுத்து என்னை உன் திருவடியில் சேர்ப்பாயாக!


2)

தவத்தினர் அடிப்புகழ் தனைத்தினம் உரைப்பவர்

.. தமக்கரு கிருக்கவும் .. அறியாமல்

அவத்தினை மிகப்புரி எனக்குனை நினைத்திடும்

.. அகத்தினை அளித்தருள் .. புரிவாயே

சுவைக்கிற பழத்தினில் இனிப்பென நிலைப்பவ

.. சுடர்க்கணை தொடுத்தெயில் .. எரியீசா

சிவைக்கொரு புறத்தினை அருத்தியொ டளிப்பவ

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

தவத்தினர், அடிப்புகழ்தனைத் தினம் உரைப்பவர்

.. தமக்கு அருகு இருக்கவும் அறியாமல்,

அவத்தினை மிகப் புரி எனக்கு உனை நினைத்திடும்

.. அகத்தினை அளித்து அருள் புரிவாயே;

சுவைக்கிற பழத்தினில் இனிப்பு என நிலைப்பவ;

.. சுடர்க்கணை தொடுத்து எயில் எரி ஈசா;

சிவைக்கு ஒரு புறத்தினை அருத்தியொடு அளிப்பவ;

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


தவத்தினர் - தவம் புரிபவர்கள்; அடிப்புகழ்தனைத் தினம் உரைப்பவர் - திருவடிப் பெருமையைத் தினமும் பேசும் அடியவர்கள்; அவம் - இழிவு; அகம் - மனம்; பழத்தினில் இனிப்பு என நிலைப்பவ - (அப்பர் தேவாரம் - 5.47.8 – "பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை"): சுடர்க்கணை - தீ அம்பு; எயில் - கோட்டை; இங்கே முப்புரங்கள்; சிவை - பார்வதி; அருத்தி - விருப்பம்;


3)

இருக்கிற தினத்தையும் இறக்கிற தினத்தையும்

.. எவர்க்கறி வதற்கொணும் .. மறவாதே

நெருப்பிடை உடுக்குகள் ஒலித்திட நடிக்கிற

.. நிருத்தனை அருத்தனை .. நதியோடே

எருக்கினை முடிப்புனை ஒருத்தனை விருத்தனை

.. இனித்தொழு இனித்திட .. அருள்வானே

திருப்புகழ் பொழிற்கிளி மிழற்றிடு சிறப்புறு

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இருக்கிற தினத்தையும் இறக்கிற தினத்தையும்

.. எவர்க்கு அறிவதற்கு ஒணும்? மறவாதே;

நெருப்பிடை உடுக்குகள் ஒலித்திட நடிக்கிற

.. நிருத்தனை, அருத்தனை, நதியோடே

எருக்கினை முடிப் புனை ஒருத்தனை, விருத்தனை,

.. இனித் தொழு; இனித்திட அருள்வானே;

திருப்புகழ் பொழிற்கிளி மிழற்றிடு சிறப்பு உறு

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


"மனமே" என்ற விளி தொக்கு நிற்கிறது.

இருக்கிற தினத்தையும் இறக்கிற தினத்தையும் எவர்க்கு அறிவதற்கு ஒணும் - உயிர்வாழும் நாளையும் சாகும் நாளையும் யார் அறிவார்? (சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் ஆர்அறிவார் சாநாளும் வாழ்நாளும்");

உடுக்கு - உடுக்கை; தமருகம்; நடித்தல் - நடம் செய்தல்; நிருத்தன் - கூத்தாடுபவன்; அருத்தன் - மெய்ப்பொருள் ஆனவன்; அர்தநாரீஸ்வரன்; எருக்கினை முடிப் புனை - எருக்கம்பூவைத் திருமுடியில் அணிந்த; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.79.1 - “வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை”);

ஒருத்தன் - ஒப்பற்றவன்; விருத்தன் - மூத்தவன்; இனி - இப்பொழுது: தொழு - மனமே, நீ தொழுவாயாக; மிழற்றுதல் - சொல்லுதல்;

திருப்புகழ் பொழிற்கிளி மிழற்றிடு சிறப்பு உறு திருக்கழுமலத்து உறை பெருமானே - சிவனது புகழைச் சோலைகளில் கிளிகள் சொல்கின்ற சிறப்புடைய சீகாழியில் உறையும் பெருமான்;

(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் ... வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லு மிழலையாமே" - தேன் நிறைந்த பொழில்களில் வாழும் கிளிகள் நாள்தோறும் வேதங்களுக்குப் பொருள் சொல்லும் சிறப்பினதாய திருவீழிமிழலை ஆகும்);


4)

குமிழ்த்தெழு விருப்புகள் இயக்கிடு விசைக்கிணை

.. குமைக்கிற வழிப்பட .. விரைவேனும்

தமிழ்த்தொடை தொடுத்துன மலர்ப்பதம் இடற்கருள்

.. தனக்கொரு நிகர்ப்பிலன் .. எனவானாய்

தமித்தவர் வழித்துணை எனத்திகழ் மழுப்படை

.. தரித்தவ நெருப்புமிழ் .. விழியானே

திமித்திமி எனப்பறை முழக்கொடு நடிப்பவ

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

குமிழ்த்து எழு விருப்புகள் இயக்கிடு விசைக்கு இணை

.. குமைக்கிற வழிப்பட விரைவேனும்,

தமிழ்த்தொடை தொடுத்து உன மலர்ப்பதம் இடற்கு அருள்,

.. தனக்கு ஒரு நிகர்ப்பு இலன் என ஆனாய்;

தமித்தவர் வழித்துணை எனத் திகழ் மழுப் படை

.. தரித்தவ; நெருப்பு உமிழ் விழியானே;

திமித்திமி எனப் பறை முழக்கொடு நடிப்பவ;

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


குமிழ்த்தல் - குமிழியிடுதல்; விசைக்கு இணை - எந்திரத்தைப் போல; குமைத்தல் - வருத்துதல்; அழித்தல்; தமிழ்த் தொடை - தமிழ்ப் பாடல்கள்; உன மலர்ப்பாதம் இடற்கு - உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் இடுவதற்கு; ('' - ஆறாம் வேற்றுமை உருபு); (அப்பர் தேவாரம் - 5.57.1 -

"இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்"); நிகர்ப்பு - ஒப்பு; ஆனாய் - ஆனவனே; தமித்தவர் - துணையில்லாதவர்; வழித்துணை - மார்க்கபந்து; மழுப் படை தரித்தவமழுவாயுதத்தை ஏந்தியவனே; முழக்கு - ஒலி;


5)

மறக்கிற மனத்தொடு விருப்புகள் உகைத்திட

.. மலர்த்திரு வடிப்புகழ் .. உரையாமல்

இறப்பது பிறப்பது கணக்கிலை எனச்சுழல்

.. எனைத்திரு வுளத்தினில் .. நினையாயோ

பிறைச்சடை யினிற்புனல் அலைத்திட அடைத்தவ

.. பிடிக்கிணை நடைக்கொடி .. ஒருகூறா

சிறைக்கிளி நிழற்பொழி லினிற்கனி சுவைத்திடு

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

மறக்கிற மனத்தொடு விருப்புகள் உகைத்திட

.. மலர்த்திருவடிப்புகழ் உரையாமல்,

இறப்பது பிறப்பது கணக்கு இலை எனச் சுழல்

.. எனைத் திரு உளத்தினில் நினையாயோ?

பிறைச்சடையினில் புனல் அலைத்திட அடைத்தவ;

.. பிடிக்கு இணை நடைக் கொடி ஒரு கூறா;

சிறைக் கிளி நிழற்பொழிலினில் கனி சுவைத்திடு

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


உகைத்தல் - செலுத்துதல்; மலர்த்திருவடிப்புகழ் உரையாமல் - மலர் போன்ற திருவடிகளின் புகழைப் பேசாமல்; இறப்பது பிறப்பது கணக்கு இலை எனச் சுழல் எனை - எண்ணற்ற பிறவிகளில் பிறந்து இறந்து சுழன்றுகொண்டிருக்கும் என்னை; பிறைச்சடையினில் புனல் அலைத்திட அடைத்தவ - பிறையைச் சூடிய சடையில் கங்கை அலைமோதும்படி அதனைத் தேக்கியவனே;

பிடிக்கு இணை நடைக் கொடி ஒரு கூறா - பெண் யானைக்கு நிகரான நடையை உடையவளும் கொடி போன்றவளுமான உமையை ஒரு கூறாக உடையவனே; (பிடி - பெண்யானை); சிறைக்கிளி - அழகிய இறகுகளை உடைய கிளி; (சிறை - இறகு);


6)

உவர்க்கிற புனற்கடல் அமிழ்த்தினும் மனத்தினில்

.. உறைப்பொடு திருப்பெயர் .. உரைவீரர்

அவர்க்கொரு கலைப்புணை எனச்செயும் உனைத்தொழும்

.. அகத்தினை எனக்கருள் .. புரிவாயே

அவைக்கொரு தமிழ்க்கவி எனச்செலும் விருப்பின

.. அருச்சனை எனத்தமிழ் .. மகிழ்வோனே

சிவப்பொரு புறத்தின கறுப்பணி களத்தின

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

உவர்க்கிற புனற்கடல் அமிழ்த்தினும் மனத்தினில்

.. உறைப்பொடு திருப்பெயர் உரை வீரர்

அவர்க்கு ஒரு கலைப் புணை எனச் செயும் உனைத் தொழும்

.. அகத்தினை எனக்கு அருள் புரிவாயே;

அவைக்கு ஒரு தமிழ்க்கவி எனச் செலும் விருப்பின;

.. அருச்சனை எனத் தமிழ் மகிழ்வோனே;

சிவப்பு ஒரு புறத்தின; கறுப்பு அணி களத்தின;

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


உறைப்பு - ஊற்றம்; கலை - கல்லை; (இடைக்குறையாக வந்தது); புணை - தெப்பம்; களம் - கழுத்து; கண்டம்;

உவர்க்கும் நீரை உடைய கடலில் திருநாவுக்கரசரை (கல்லோடு கட்டி) ஆழ்த்தியபொழுதும் தம் மனத்தினில் மிகுந்த பக்தியோடு உன் திருநாமத்தை உரைத்த வீரரான அவர்க்கு அவரைப் பிணித்த அக்கல்லையே தெப்பம் ஆக்கிய உன்னை வணங்கும் மனத்தை எனக்கு அருள்வாயாக! தமிழ்ப் புலவன் வடிவில் பாண்டியன் சபைக்குச் சென்றவனே! (தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல்). தமிழ்ப்பாடலையே அருச்சனை என்று விரும்புபவனே! (சுந்தரர் வரலாற்றில் காண்க). திருமேனியில் ஒரு பக்கம் செம்மை திகழ்பவனே! (அருத்தநாரீஸ்வரன்). கண்டத்தில் கறுப்பை அணிந்தவனே! (நீலகண்டன்). சீகாழிப் பதியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!


7)

இரைத்தெழு வினைக்கடல் கடத்திடு புணைக்கழல்

.. எனப்பகர் தமிழ்த்துதி .. பலபாடி

மரைக்கிணை அடித்தலம் உகப்பொடு நினைத்திடு

.. மனத்தினை எனக்கருள் .. புரிவாயே

உரைப்பவர் தமக்குயர் பதத்தினை அளிப்பவ

.. ஒளிப்பிறை தனைச்சடை .. அணிவோனே

சிரைத்தலை யினிற்பலி யினைப்பெற நடப்பவ

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இரைத்து எழு வினைக்கடல் கடத்திடு புணைக்கழல்

.. எனப் பகர் தமிழ்த்துதி பல பாடி,

மரைக்கு இணை அடித்தலம் உகப்பொடு நினைத்திடு

.. மனத்தினை எனக்கு அருள் புரிவாயே;

உரைப்பவர் தமக்கு உயர் பதத்தினை அளிப்பவ;

.. ஒளிப்பிறைதனைச் சடை அணிவோனே;

சிரைத்தலையினிற் பலியினைப் பெற நடப்பவ;

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


இரைத்தல் - ஒலித்தல்; கடத்துதல் - கடப்பித்தல்; புணை - தெப்பம்; கழல் - திருவடி; (கழல் அணிந்த திருவடிக்கு ஆகுபெயர்); புணைக்கழல் - புணை ஆகிய கழல்; பகர்தல் - சொல்லுதல்; மரைக்கு இணை - தாமரைக்கு இணை (முதற்குறை விகாரம்); உகப்பு - விருப்பம்; மகிழ்ச்சி; உரைப்பவர் - புகழ்பவர்; உயர் பதம் - மேலான நிலை; ஒளிப்பிறை - ஒளி வீசும் பிறைச்சந்திரன்; சிரைத்தலை - மயிரற்ற மண்டையோடு; (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி .... "); பலி - பிச்சை;


8)

பெருக்கிய வினைத்தொடர் எனைத்தொடர் வதைப்பல

.. பிணித்தொடர் அளிப்பதை .. நினையேனும்

உருப்பட விருப்பொடு நினைத்தினம் நினைத்திடும்

.. உளத்தினை எனக்கருள் .. புரிவாயே

பொருப்பினை எடுத்தெறி சினத்தொடு வரைக்கிணை

.. புயத்தொடு பெயர்த்திட .. முனைவானைச்

செருக்கற நெரித்தருள் கொடுத்தவ நிலத்துயர்

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

பெருக்கிய வினைத்தொடர் எனைத் தொடர்வதைப், பல

.. பிணித்தொடர் அளிப்பதை நினையேனும்

உருப்பட, விருப்பொடு நினைத் தினம் நினைத்திடும்

.. உளத்தினை எனக்கு அருள் புரிவாயே;

பொருப்பினை எடுத்து எறி சினத்தொடு வரைக்கு இணை

.. புயத்தொடு பெயர்த்திட முனைவானைச்

செருக்கு அற நெரித்து அருள் கொடுத்தவ; நிலத்து உயர்

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


தொடர் - 1. சங்கிலி; 3. விலங்கு; 4. வரிசை; நினையேனும் - எண்ணாத நானும்; உருப்படுதல் - சீர்ப்படுதல்; நினை - நின்னை - உன்னை; பொருப்பு - மலை; வரை - மலை; புயம் - புஜம்; செருக்கு - ஆணவம்; நிலத்து உயர் திருக்கழுமலம் - உலகில் உயர்ந்த தலமான சீகாழி;


கயிலைமலையைப் வீசி எறியும் கோபத்தோடு மலைபோன்ற புஜங்களால் அந்த மலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை அவனது ஆணவம் அழியும்படி (ஒரு விரலை ஊன்றி) நசுக்கி, (அவன் இசைபாடித் துதிக்கக்கேட்டு மகிழ்ந்து) அவனுக்கு வரம் கொடுத்தவனே! மண்ணுலகில் சிறந்த தலமான சீகாழியில் எழுந்தருளிய சிவபெருமானே! பல பிறவிகளில் சேர்த்த பாவத்தொடர் என்னை இப்பிறவியில் தொடர்ந்து வருவதையும், அது துன்பத்தொடரைக் கொடுப்பதையும் நினையாத நானும் நன்னிலை அடைய, அன்போடு உன்னைத் தினந்தோறும் எண்ணும் மனத்தை எனக்கு அருள்புரிவாயாக!


9)

கலக்குறு வினைப்புயல் அடித்திட அதிற்சிறு

.. கலத்தினில் அலப்புறும் .. அடியேனுன்

அலர்க்கிணை அடித்தலம் வழுத்திடு நினைப்புற

.. அளித்திடர் அழித்தருள் .. புரிவாயே

நிலத்தினை இடக்கிற அரிக்கல ரவற்கரு

.. நெருப்பென உருக்கொடு .. நிமிர்வோனே

சிலைக்கொரு பொருப்பினை எடுத்தெயில் எரித்தவ

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

கலக்கு று வினைப்புயல் அடித்திட அதில் சிறு

.. கலத்தினில் அலப்பு றும் அடியேன் உன்

அலர்க்கு இணை அடித்தலம் வழுத்திடு நினைப்பு உற

.. அளித்து, டர் அழித்து, ருள்புரிவாயே;

நிலத்தினை இடக்கிற அரிக்கு அலரவற்கு அரு

.. நெருப்பு எ உருக்கொடு நிமிர்வோனே;

சிலைக்கு ஒரு பொருப்பினை எடுத்து எயில் எரித்தவ;

.. திருக்கழுமலத்து றை பெருமானே.


கலக்கு உறு வினைப்புயல் அடித்திட - மனம் கலங்கும்படி வினைகள் என்ற புயல் வீச; கலம் - படகு; இங்கே உடம்பைச் சுட்டியது; அலப்பு - மனக்கலக்கம்; உன் அலர்க்கு இணை அடித்தலம் வழுத்திடு நினைப்பு உற அளித்து - மலர்க்கு நிகரான உனது திருவடியைத் துதிக்கும் எண்ணம் உறும்படி அருளி; (அலர் - மலர்); டர் அழித்து, ருள்புரிவாயே - என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; இடத்தல் - அகழ்தல்; தோண்டுதல்; அலரவற்கு - அலரவன்+கு - அலரவனுக்கு; (அலரவன் - பிரமன்); அரிக்கு அலரவற்கு அரு நெருப்பு என உருக் கொடு நிமிர்வோனே – திருமாலுக்கும் பிரமனுக்கும் அறிய ஒண்ணாத அரிய சோதி வடிவம்கொண்டு எல்லையின்றி உயர்ந்தவனே; (நிமிர்தல் - உயர்தல்); சிலை - வில்; பொருப்பு - மலை; எயில் - கோட்டை; முப்புரம்;


10)

அகத்தினில் இருட்டுறை குணத்தினர் உரைக்கிற

.. அசத்தினை விலக்கிய .. அடியார்கள்

மிகத்துயர் கொடுக்கிற வினைப்படை அறக்கெட

.. விதிப்படி உனைத்தொழு .. திசைபாட

இகத்துயர் துடைத்துயர் சுகத்தினை அளிப்பவ

.. எருக்கினை அழற்சடை .. அணிவோனே

செகத்தினை அமிழ்த்திடு வெளத்தினில் மிதக்கிற

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

அகத்தினில் இருட்டு உறை குணத்தினர் உரைக்கிற

.. அசத்தினை விலக்கிய அடியார்கள்,

மிகத் துயர் கொடுக்கிற வினைப்படை அறக் கெட,

.. விதிப்படி உனைத் தொழுது இசை பாட,

இகத் துயர் துடைத்து உயர் சுகத்தினை அளிப்பவ;

.. எருக்கினை அழற்சடை அணிவோனே;

செகத்தினை அமிழ்த்திடு வெளத்தினில் மிதக்கிற

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


அகம் - உள்ளம்; இருட்டு - வஞ்சம்; அறியாமை; அசத்து - பொய்ந்நெறி; விலக்குதல் - வேண்டாதவற்றை நீக்கிவிடுதல்; கண்டனஞ்செய்தல்; வினைப்படை - வினை ஆகிய படை - படை போல வரும் பழவினைகள்; அற - முழுவதும்; கெடுதல் - அழிதல்; விதி - முறை; இசை - கீதம்; புகழ்; இகம் - இம்மை; துடைத்தல் - அழித்தல்; சுகத்தினை அளிப்பவ – சுகம் அளிப்பவனே; (சுகத்தினை அளிப்பவன் - சம்பு); எருக்கு - எருக்கமலர்; அழற்சடை - அழல்போல் ஒளிர்கின்ற செஞ்சடை (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையு ளானே...”); செகம் - ஜகம் - உலகம்; வெளம் - வெள்ளம் (இடைக்குறையாக வந்தது);


உள்ளத்தில் அஞ்ஞானமும் வஞ்சமும் உறையும் இழிகுணம் உடையோர் சொல்லும் பொய்ந்நெறியை விலக்கிய அடியவர்கள், மிகவும் துயர் கொடுக்கும் படை போல வரும் பழவினைகள் முற்றிலும் அழியுமாறு, முறைப்படி உன்னைத் தொழுது உன் புகழை இசையோடு பாட, அவ்வன்பர்களின் இம்மைத் துயரைத் தீர்த்து மேலான சுகத்தை அவர்களுக்கு அளிப்பவனே! எருக்கமலரைத் தீப்போன்ற சடையின்மேல் அணிபவனே! உலகையே மூழ்கடிக்கும் வெள்ளத்தில் மிதந்த தோணிபுரம் என்ற சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!


11)

துரத்தரு வினைத்தொடர் தினப்படி கொடுப்பது

.. துளக்குறு மனத்தொடு .. துயர்தானே

இரக்கமொ டருட்கரம் அளித்தெனை வெருட்டிடும்

.. இடர்க்கடல் கடத்திட .. வருவாயே

அரற்றிமை யவர்க்கென விடத்தினை மிடற்றினில்

.. அடைத்தமு தினைத்தரும் .. அருளாளா

சிரச்சரம் ஒளிப்பிறை முடிக்கணி எனத்திகழ்

.. திருக்கழு மலத்துறை .. பெருமானே.


பதம் பிரித்து:

துரத்து அருவினைத்தொடர் தினப்படி கொடுப்பது

.. துளக்கு உறு மனத்தொடு துயர்தானே;

இரக்கமொடு அருட்கரம் அளித்து எனை வெருட்டிடும்

.. இடர்க்கடல் கடத்திட வருவாயே;

அரற்று இமையவர்க்கு என விடத்தினை மிடற்றினில்

.. அடைத்து அமுதினைத் தரும் அருளாளா;

சிரச்சரம் ஒளிப்பிறை முடிக்கு அணி எனத் திகழ்,

.. திருக்கழுமலத்து உறை பெருமானே.


துரத்தருவினை - துரத்து அருவினை - என்னைப் பின் தொடர்கின்ற கொடிய வினைகள்; ('துரத்த அருவினை' என்பதன் தொகுத்தல் விகாரமாகவும் கொள்ளலாம் - நீக்குவதற்கு அரிய வினை); தினப்படி - தினந்தோறும்; துளக்கு - அசைவு; வருத்தம்; வெருட்டுதல் - அச்சுறுத்துதல்; கடத்துதல் - கடப்பித்தல்; அரற்றுதல் - புலம்புதல்; மிடற்றினில் - கண்டத்தில்; சிரச்சரம் - தலைமாலை; முடிக்கு அணி - தலைக்கு ஆபரணம்;


என்னைத் துரத்துகின்றதும் என்னால் விலக்க அரியதுமான பழவினைத்தொடர் தினமும் மனக்கலக்கத்தையும் துன்பத்தையும் கொடுக்கின்றது; உன் அருட்கரத்தால் என்னை இந்தத் துன்பக்கடலிலிருந்து தூக்கிக் கரைசேர்த்து அருள்வாயாக; அழுது புலம்பிய தேவர்களைக் காக்கும்பொருட்டு ஆலகால விடத்தைக் கண்டத்தில் அடைத்து அவர்களுக்கு அமுதத்தை அளித்த அருளாளனே; மண்டையோட்டுமாலை, ஒளியுடைய பிறைச்சந்திரன் இவற்றைத் திருமுடிக்கு அலங்காரமாக அணிந்த, சீகாழியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!


அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment