Monday, August 10, 2015

01.36 – பொது - (தோடகம்)

01.36பொது - (தோடகம்)

Note: English translation of the meaning is provided in the second half of this page.


2008-08-10
நாடகனுக்குத் தோடகம் - 1
---------------------------------
(தோடகம் என்பது ஒரு சமஸ்கிருத பாடல் அமைப்பு.
"தனனா தனனா தனனா தனனா” என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - “சடையாய் எனுமால் சரணீ எனுமால்”);



(நாடகன் - நடனமாடுவோன் - சிவன்;
திருவாசகம் - கீர்த்தித் திருஅகவல் - ".... பதஞ்சலிக் கருளிய பரம நாடக ..")

1)
எனையாள் இறைவா இமையோர் தலைவா
எனவே இரவும் பகலும் தொழுவோர்
வினைபோக் கியருள் புரியும் விமலன்
தனைநீ மறவா திருவென் மனமே.



பதம் பிரித்து:
"எனை ஆள் இறைவா! இமையோர் தலைவா!"
எனவே இரவும் பகலும் தொழுவோர்
வினை போக்கி அருள்புரியும் விமலன்தனை
நீ மறவா(து) இரு என் மனமே.


இமையோர் - தேவர்கள்;



2)
பிறையும் புனலும் பிரியா(து) அரவோ(டு)
உறையும் சடையான் உமைகூ(று) உடையான்
கறைசேர் மிடறன் கழலே நினைவார்
உறவாய் வருவான் உணரென் மனமே.



கறை சேர் மிடறன் - நீலகண்டன்; (மிடறன் - மிடற்றன் என்பது ஓசை கருதி மிடறன் என்று வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 1.23.1 – "மழையார் மிடறா மழுவா ளுடையாய்");
கழலே நினைவார் உறவு ஆய் வருவான் - திருவடியையே சிந்திப்பவர்களுக்கு உற்றவன் ஆகி வருவான்;

3)
அயிலோ டெமனார் அடைநா ளினிலே
உயிரே கிடுமார் உடனே வருவார்
துயிலாப் பொழுதும் துயிலும் பொழுதும்
கயிலா யனையே கருதாய் மனமே.



பதம் பிரித்து:
அயிலோ(டு) எமனார் அடை நாளினிலே
உயிர் ஏகிடும்; ஆர் உடனே வருவார்;
துயிலாப் பொழுதும், துயிலும் பொழுதும்,
கயிலாயனையே கருதாய் மனமே.


அயில் - வேல்; (சம்பந்தர் தேவாரம் - 2.79.2 - “... கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார்...” - இயம தூதர்கள் வேலைக் கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர்);
ஏகுதல் - போதல்;
ஆர் உடனே வருவார் - யார் காப்பாற்ற உடனே வருவார்கள்;
துயிலாப் பொழுதும், துயிலும் பொழுதும், கயிலாயனையே கருதாய் - இரவும் பகலும் சிவனையே சிந்திப்பாயாக;
(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்")


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.77.5:
எண்ணி நாளும் எரிஅயில் கூற்றுவன்
துண்ணென் தோன்றில் துரக்கும் வழிகண்டேன்
திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
அண்ண லார்உளர் அஞ்சுவ தென்னுக்கே.


எரி அயில் - எரியும் நெருப்புப் போன்ற கூரிய வேல். )



4)
கடலைக் கடையும் பொழுதில் வருமா
விடமுண் மிடறன் விடைமேல் வருவோன்
மடவாள் ஒருபால் மகிழும் பெருமான்
அடைவார்க்(கு) இனியான் அடிசேர் மனமே.



பதம் பிரித்து:
கடலைக் கடையும் பொழுதில் வரு[ம்] மா
விடம் உண் மிடறன், விடை மேல் வருவோன்,
மடவாள் ஒரு பால் மகிழும் பெருமான்,
அடைவார்க்(கு) இனியான் அடி சேர் மனமே.


மிடறு - கழுத்து;
மா விடம் உண் மிடறன் - பெரிய விஷத்தை உண்ட கண்டன் - நீலகண்டன்;
(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே ...");
மடவாள் - பெண்; இங்கே, உமை;
ஒரு பால் - ஒரு பக்கம்;
அடைவார் - சரண் புகுபவர்கள்;



5)
பிரமன் சிரமோர் கலனாம் பெருமான்
புரமூன் றெரியப் புரிவான் முறுவல்
சுரரின் தலைவன் தொழுவோர் வினைதீர்
அரனா மமுரைத் தடிசேர் மனமே.



பதம் பிரித்து:
பிரமன் சிரம் ஓர் கலன் ஆம் பெருமான்;
புர[ம்] மூன்(று) எரியப் புரிவான் முறுவல்;
சுரரின் தலைவன்; தொழுவோர் வினை தீர்
அரன் நாமம் உரைத்(து) அடி சேர் மனமே.


பிரமன் சிரம் ஓர் கலன் ஆம் பெருமான் - பிரமனின் மண்டையோடு பிச்சைப்பாத்திரம் ஆகும் பெருமான்;
சுரர் - தேவர்கள்;
தொழுவோர் வினை தீர் அரன் - வணங்குபவர்களின் வினைகளைத் தீர்க்கின்ற ஹரன்;

6)
அரவே அரைநாண் அரவே அணியாம்
அரவே வரைவில் அதிலும் பிணிநாண்
அரையா கமுமைக் களியீ சனைநீ
அரையா அருளென் றடையாய் மனமே.



பதம் பிரித்து:
அரவே அரை நாண்; அரவே அணி ஆம்;
அரவே வரை வில் அதிலும் பிணி நாண்;
அரை ஆகம் உமைக்(கு) அளி ஈசனை நீ
"அரையா அருள்" என்(று) அடையாய் மனமே.


அரவு - பாம்பு;
அரை - இடை; பாதி;
வரை - மலை;
பிணி நாண் - கட்டுகிற நாண்;
ஆகம் - உடல்;
அரையன் - அரசன்;
அடைதல் - சரண் புகுதல்;


சிவனுக்குப் பாம்பே அரைஞாண் (அரையிற் கட்டும் கயிறு); பாம்பே ஆபரணம்; (முப்புரங்களை எரித்துச் சாம்பல் ஆக்கிய நாளில்) மலையால் ஆகிய வில்லில் கட்டிய நாணும் பாம்பே. தன் உடலில் பாதியைப் பார்வதிக்குத் தந்த ஈசன் அவன். மனமே, நீ அவனை "அரசனே! அருள்வாயாக" என்று தொழுது சரண் புகுவாயாக.

7)
இமையோர்க் கரசே இணையில் பொருளே
உமையாள் கணவா ஒளிரும் பிறையாய்
அமரர் தொழநஞ் சமுதுண் டவனே
அமலா அருளென் றடிசேர் மனமே.



பதம் பிரித்து:
"இமையோர்க்(கு) அரசே; இணை இல் பொருளே;
உமையாள் கணவா; ஒளிரும் பிறையாய்;
அமரர் தொழ, நஞ்(சு) அமுது உண்டவனே;
அமலா; அருள்" என்(று) அடி சேர் மனமே.


இமையோர் - தேவர்கள்;
இணை இல் பொருள் - ஒப்பற்ற மெய்ப்பொருள்;
நஞ்சு அமுது ண்டவனே - நஞ்சை அமுதாக உண்டவனே;
அமலன் - மலம் அற்றவன்;



8)
இடையூ றிதுவோ எறிவேன் எளிதில்
தடவெற் பெனவெண் ணியவன் துயருற்
றிடவோர் விரலூன் றியருள் கிழவன்
மடமா துடையான் அடிசேர் மனமே.



பதம் பிரித்து:
"இடையூ(று) இதுவோ? எறிவேன் எளிதில்
தட வெற்(பு)" என எண்ணியவன் துயர் உற்றிட
ஓர் விரல் ஊன்றி அருள் கிழவன்;
மட மா(து) உடையான் அடி சேர் மனமே.


(வானில் செல்லும் இராவணனது தேர் கயிலைமலையின்மேல் செல்லாது தடைப்பட, ஆணவத்தோடு கயிலையைப் பெயர்க்கச் சென்ற இராவணனை அம்மலையின்கீழ் நசுக்கிய வரலாறு.)


தட வெற்பு - பெரிய மலை - இங்கே கயிலாய மலை;
கிழவன் - முதியவன்; தலைவன்; உரியவன்;
மட மாது - இளமை பொருந்திய பெண் - இங்கே பார்வதி;


(சுந்தரர் தேவாரம் - 7.12.5 - "குழலை வென்ற மொழி ... மால்வரைக் கிழவன் ..." ;
அப்பர் தேவாரம் - 4.77.2 - "கோவணம் உடுத்த வாறும் ... பூவணக் கிழவனாரை ...";
திருவாசகம் - கீர்த்தித்திருஅகவல் - "ஒலிதரு கைலை உயர்கிழ வோனே" - ஒலிக்கின்ற கயிலாய மலையின் சிறந்த தலைவன்; )



9)
அரிநான் முகனார் முடியோ டடிகாண்
பரியான் அடிபோற் றடியார்க் கெளியான்
கரியீ ருரியான் கருமா மிடறன்
பரிவோ டவனைப் பணியாய் மனமே.



பதம் பிரித்து:
அரி நான்முகனார் முடியோ(டு) அடி காண்(பு)
அரியான்; அடி போற்(று) அடியார்க்(கு) எளியான்;
கரி ஈர் உரியான்; கரு மா மிடறன்;
பரிவோ(டு) அவனைப் பணியாய் மனமே.


காண்பு அரியான் - காண்பதற்கு அரியவன்;
எளியான் - எளிதில் அடையப்படுபவன்;
கரி ஈர் உரி - யானையின் உரித்த தோல்; (ஈர்த்தல் - உரித்தல்);
மா - அழகிய;
மிடறு - கழுத்து;
கரு மா மிடறன் - நீலகண்டன்;
பரிவு - அன்பு; பக்தி;
பணியாய் - பணிவாயாக;
(அரியும் நான்முகனும் ஈசனின் அடி முடி காணாதது இப்பாடலில் எதிர்நிரல்நிரையாக வந்தது)



10)
வழியொன் றறியார் இழிசொல் மிகவே
மொழிவார் அவரால் அறிதற் கரியான்
விழிமூன் றுடையான் விடைமேல் வருவான்
அழியாப் புகழான் அடிசேர் மனமே.



பதம் பிரித்து:
வழி ஒன்(று) அறியார்; இழி சொல் மிகவே
மொழிவார்; அவரால் அறிதற்(கு) அரியான்;
விழி மூன்(று) உடையான்; விடைமேல் வருவான்;
அழியாப் புகழான் அடி சேர் மனமே.


இழிசொல் - பழிச்சொல் (calumny, slander;);
அவரால் அறிதற்(கு) அரியான் - அவர்களால் அறியப்படாதவன்;
விடை - எருது; இடபம்;



11)
பிறவா இறவாப் பெருமான் கழலே
மறவா அடியார் மனமே இடமா
உறைவான் திருநா மமுரைத் திடுவாய்
அறவே விடுமுன் அகலா வினையே.



பதம் பிரித்து:
பிறவா இறவாப் பெருமான், கழலே
மறவா அடியார் மனமே இடமா
உறைவான், திருநாமம் உரைத்திடுவாய்;
அறவே விடுமுன் அகலா வினையே.


கழல் - (ஆகுபெயர்) - கழலை அணிந்த திருவடி; (கழலே என்பதில் '' அசையாகவோ தேற்றமாகவோ கொள்ளலாம்);
இடமா - இடமாக;
விடுமுன் அகலா வினை - விடும் உன் அகலா வினை; விடும் முன் அகலா வினை; (அகல்தல் - நீங்குதல்);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
தோடகம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
இந்த அமைப்பில் அமைந்த பாடல்களில் பலரும் அறிந்திருக்கூடிய ஒன்று தோடகாஷ்டகம். .



தோடகத்தின் இலக்கணம்:
Thotakam Meter
4 அடிகள். அடிக்கு 4 "தனனா" -- 'லகு-லகு-குரு' இருக்கும்.
Scheme : ஸ ஸ ஸ ஸ
Name : தோடகம்
= லகு-லகு-குரு



லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்).
(For more details on Sanskrit prosody: https://en.wikipedia.org/wiki/Sanskrit_prosody )



தோடக அமைப்பில் பலரும் அறிந்த பாடல் தோடகாஷ்டகம்.



அதில் முதல் பாடல்:
विदिताखिलशास्त्रसुधाजलधे
महितोपनिषत्कथितार्थनिधे ।
ह्रुदये कलये विमलं चरणं
भव शंकर देशिक मे शरणम् ॥


விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் ------------(1)



இப்பாடலை கீழ்க்கண்டவாறு சீர் பிரித்தால் அதன் அமைப்புத் தெளிவாகத் தெரியும்:



விதிதா கிலசாஸ்த் ரஸுதா ஜலதே
மஹிதோ பநிஷத் கதிதார்த் தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவசங் கரதே சிகமே சரணம்.
=========================

English Tranlsation for this padhigam


Meaning - Translation - Verse-1:

"எனை ஆள் இறைவா! இமையோர் தலைவா!"

எனவே இரவும் பகலும் தொழுவோர்

வினை போக்கி அருள்புரியும் விமலன்தனை

நீ மறவாது இரு என் மனமே.


enaiyāḷ iṟaivā imaiyōr talaivā

enavē iravum pagalum toḻuvōr

vinai pōkki aruḷ puriyum vimalan

tanai nī maṟavādu iru en manamē.


Siva, the Pure One (vimalan), removes the karma (vinai) of ardent devotees who praise Him day and night saying "O my Master! O Lord of the Devas!". O my mind, never forget Him!


Meaning - Translation - Verse-2:

பிறையும் புனலும் பிரியாது அரவோடு

உறையும் சடையான் உமை கூறு உடையான்

கறைசேர் மிடறன் கழலே நினைவார்

உறவாய் வருவான் உணரென் மனமே.


piṟaiyum punalum piriyādu aravōḍu

uṟaiyum saḍaiyān umai kūṟu uḍaiyān

kaṟaisēr miḍaṟan kaḻalē ninaivār

uṟavāy varuvān uṇaren manamē.


Siva wears the crescent moon (piṟai), Ganga river (punal), and a snake (aravu) on His matted locks (saḍai). He has Uma (உமை) as one half (கூறு). He has a dark throat (kaṟai sēr miḍaṟan). O my mind, realize (uṇar) that He will come as the true relation (uṟavu) and save the devotees who always think of His holy feet (kaḻal).


Meaning - Translation - Verse-3:

அயிலோடு எமனார் அடை நாளினிலே

உயிர் ஏகிடும்; ஆர் உடனே வருவார்;

துயிலாப் பொழுதும், துயிலும் பொழுதும்,

கயிலாயனையே கருதாய் மனமே.


ayilōḍu emanār aḍai nāḷinilē

uyir ēgiḍum; ār uḍanē varuvār;

tuyilāp poḻudum, tuyilum poḻudum,

kayilāyanaiyē karudāy manamē.


On the day when Yama (emanār) comes wielding his trisulam (ayil), life will go away. Who will come to help? Therefore, O mind, always think of Siva, the Kailasapathi (kayilāyan), while you are awake and while you are asleep!


Meaning - Translation - Verse-4:

கடலைக் கடையும் பொழுதில் வரு-மா

விடம்-உண் மிடறன் விடைமேல் வருவோன்

மடவாள் ஒரு-பால் மகிழும் பெருமான்

அடைவார்க்கு இனியான் அடிசேர் மனமே.


kaḍalaik kaḍaiyum poḻudil varu-mā

viḍam-uṇ miḍaṟan viḍaimēl varuvōn

maḍavāḷ oru-pāl magiḻum perumān

aḍaivārkku iniyān aḍisēr manamē.


Siva has the throat (miḍaṟan) that ate the deadly poison (viḍam) that arose when the milky ocean (kaḍal) was churned. He rides on a bull (viḍai). He is the Lord (perumān) who enjoys having Uma (maḍavāḷ) on one side (oru-pāl) of his Holy form. He is sweet to His devotees (aḍaivārkku iniyān). (i.e. He bestows happiness). O mind, always think of Siva's holy feet (aḍi).


Meaning - Translation - Verse-5:

பிரமன் சிரமோர் கலனாம் பெருமான்

புரமூன்று எரியப் புரிவான் முறுவல்

சுரரின் தலைவன் தொழுவோர் வினை தீர்

அரன் நாமம் உரைத்து அடிசேர் மனமே.


piraman siramōr kalanām perumān

puramūṇḍru eriyap purivān muṟuval

surarin talaivan toḻuvōr vinai tīr

aran nāmam uraittu aḍisēr manamē.


Siva (perumān) has Brahma's skull (piraman siram) as His begging bowl (kalan). He laughed (purivān muṟuval) and burnt down the three forts (puramūṇḍru). He is the Lord (talaivan) of the Devas. He is Hara (aran) who removes the karma (vinai) of His devotees (toḻuvōr). O mind, chant His holy name and worship His holy feet (aḍi).


Meaning - Translation - Verse-6:

அரவே அரைநாண் அரவே அணியாம்

அரவே வரைவில் அதிலும் பிணி நாண்

அரை-ஆகம் உமைக்கு அளி ஈசனை நீ

அரையா அருள் என்று அடையாய் மனமே.


aravē araināṇ aravē aṇiyām

aravē varaivil adilum piṇi nāṇ

arai-āgam umaikku aḷi īsanai nī

araiyā aruḷ eṇḍru aḍaiyāy manamē.


A snake (aravē) is His belt ( araināṇ)! A snake is His ornament (aṇi)! A snake is the tying string (piṇi nāṇ) for His Meru mountain bow (varaivil)! He gave half of His holy form (arai-āgam) to Uma. O mind, may you worship that Lord Siva by saying "O King (araiyā)! Bestow Your grace on me (aruḷ)"!


Meaning - Translation - Verse-7:

இமையோர்க்கு அரசே; இணை-இல் பொருளே;

உமையாள் கணவா; ஒளிரும் பிறையாய்;

அமரர் தொழ நஞ்சு அமுது உண்டவனே;

அமலா; அருள் என்று அடிசேர் மனமே.


imaiyōrkku arasē; iṇai-il poruḷē;

umaiyāḷ kaṇavā; oḷirum piṟaiyāy;

amarar toḻa nañju amudu uṇḍavanē;

amalā; aruḷ eṇḍru aḍisēr manamē.


O mind! Worship Siva's holy feet with words like - "O Lord of the Devas (imaiyōrkku arasē)! O incomparable one (iṇai-il poruḷē)! O Husband of Uma (umaiyāḷ kaṇavā)! O Wearer of bright crescent moon (oḷirum piṟaiyāy)! O Eater of the poison (nañju amudu uṇḍavanē) when Devas prayed! O Pure one (amalā)! May You bestow Your grace (aruḷ)"!


Meaning - Translation - Verse-8:

இடையூறு இதுவோ எறிவேன் எளிதில்

தடவெற்பு என எண்ணியவன் துயருற்றிட

ஓர் விரல் ஊன்றி அருள் கிழவன்

மடமாது உடையான் அடிசேர் மனமே.


iḍaiyūṟu iduvō eṟivēn eḷidil

taḍaveṟpu ena eṇṇiyavan tuyaruṭriḍa

ōr viral ūṇḍri aruḷ kiḻavan

maḍamādu uḍaiyān aḍisēr manamē.


Ravana thought - "Is this the hindrance (to my flying chariot) (iḍaiyūṟu iduvō)? I will easily throw away (eṟivēn eḷidil) this big mountain (Kailasam) (taḍaveṟpu)". When Ravana tried to lift Kailasa, Siva, the ultimate master of all (kiḻavan) crushed Ravana by gently pressing one toe (ōr viral ūṇḍri) of His holy feet. He has Uma as His one half (maḍamādu uḍaiyān). O mind! Worship Siva's holy feet!


Meaning - Translation - Verse-9:

அரி நான்முகனார் முடியோடு அடி காண்பு

அரியான்; அடி போற்று அடியார்க்கு எளியான்;

கரி ஈர்-உரியான்; கரு-மா மிடறன்;

பரிவோடு அவனைப் பணியாய் மனமே.


ari nānmuganār muḍiyōḍu aḍi kāṇbu

ariyān; aḍi pōṭru aḍiyārkku eḷiyān;

kari īr-uriyān; karu-mā miḍaṟan;

parivōḍu avanaip paṇiyāy manamē.


Neither Vishnu (ari) nor Brahma (nānmuganār) could reach His bottom or top (when Siva stood as an infinite column of light / fire). He is easily obtained by devotees (aḍiyārkku eḷiyān) who worship His holy feet. He wraps an elephant-skin around (kari īr-uriyān). He has a dark throat (karu-mā miḍaṟan). O mind! Worship Him (avanaip paṇiyāy) with love (parivōḍu).


Meaning - Translation - Verse-10:

வழி-ஒன்று அறியார்; இழிசொல் மிகவே

மொழிவார்; அவரால் அறிதற்கு அரியான்;

விழி-மூன்று உடையான்; விடைமேல் வருவான்;

அழியாப் புகழான் அடிசேர் மனமே.


vaḻi-oṇḍru aṟiyār; iḻisol migavē

moḻivār; avarāl aṟidaṟku ariyān;

viḻi-mūṇḍru uḍaiyān; viḍaimēl varuvān;

aḻiyāp pugaḻān aḍisēr manamē.


There are some people who do not know (aṟiyār) the path (vaḻi) to follow. They speak vile words (iḻisol). Siva is beyond them. (They cannot comprehend). (avarāl aṟidaṟku ariyān). Siva has three eyes (viḻi-mūṇḍru uḍaiyān). He rides on a bull (viḍaimēl varuvān). He has eternal glory (aḻiyāp pugaḻān). O mind! Worship His holy feet.


Meaning - Translation - Verse-11:

பிறவா இறவாப் பெருமான், கழலே

மறவா அடியார் மனமே இடமா

உறைவான், திருநாமம் உரைத்திடுவாய்;

அறவே விடுமுன் அகலா வினையே.


piṟavā iṟavāp perumān, kaḻalē

maṟavā aḍiyār manamē iḍamā

uṟaivān, tirunāmam uraittiḍuvāy;

aṟavē viḍumun agalā vinaiyē.


Siva is the Lord who has neither birth nor death (piṟavā iṟavāp perumān). He dwells in the hearts of devotees (aḍiyār manamē iḍamā uṟaivān) who never forget to worship His holy feet (kaḻalē maṟavā aḍiyār). O mind! Chant His holy names (tirunāmam uraittiḍuvāy)! Your inseparable karma (un agalā vinaiyē) will be utterly destroyed (aṟavē viḍum).

=========================



No comments:

Post a Comment