Sunday, August 30, 2015

02.17 – பொது - (உயிரானான் போற்றி)

02.17 – பொது - (உயிரானான் போற்றி)



2011-04-30
பொது
"உயிரானான் போற்றி"
----------------------------
(12 பாடல்கள் - அகர வரிசையில் - அ முதல் ஔ வரை - தொடங்கும் பாடல்கள்)
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் 2.66.1 - மந்திர மாவது நீறு)



1)
அம்மையும் அப்பனும் ஆகி
.. அருள்மழை பொழிகிற ஐயன்
செம்மலை போன்றொளிர் மெய்யன்
.. திருவடி தொழுமடி யார்கள்
இம்மையில் இடர்களி லாமல்
.. இன்புற நல்வரம் நல்கும்
செம்மலின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



மெய்யன் - மெய்ப்பொருளாக உள்ளவன்; திருமேனி உடையவன்;



2)
ஆதியும் அந்தமும் ஆகி
.. அனைத்தையும் ஆள்கிற ஐயன்
பாதியும் முழுமையும் ஆவான்
.. பதமலர் பணியடி யார்க்கு
மேதியி னான்அணு காத
.. மேல்நிலை யைத்தரும் வீரன்
நாதியன் சேவடி போற்றி
.. நம்பெரு மானடி போற்றி.



மேதியினான் - எருமையை வாகனமாக உடையவன் - எமன்; (மேதி - எருமை);
நாதியன் - தலைவன்; (நாதி - Protector; காப்பாற்றுவோன்);



3)
இருவரும் மூவரும் ஆகி
.. எளியனும் அரியனும் ஆகும்
பெருமையன் நுண்ணியன் நாளும்
.. பிணைமலர் கொடுபணி அன்பர்
அருவினை யாலிடர் எய்தி
.. அலமரா வணம்அருள் செய்யும்
திருவனின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இருவரும் மூவரும் ஆகி - சிவமும் சக்தியும் ஆகி, மும்மூர்த்திகளும் ஆகி;
எளியனும் அரியனும் ஆகும் - எளிதில் அடையப்படுபவனும் அரிதில் அடையப்படுபவனும் ஆகின்ற;
பெருமையன் நுண்ணியன் - பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன், நுண்ணியன யாவற்றினும் மிக நுண்ணியன்;
நாளும் பிணைமலர் கொடு பணி அன்பர் - தினமும் தொடுத்த மலர்களால் வழிபடும் பக்தர்கள்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு);
அலமரா வணம் - துன்புறாதபடி; (அலமருதல் - கலங்குதல்; வருந்துதல்);
திருவன் - செல்வன்(அப்பர் தேவாரம்- 5.13.5 - "திருவனே திரு வீழிமிழலையுள் குருவனே");



4)
ஈறொடு முதலென ஆகி
.. ஈறொடு முதலிலா ஈசன்
வேறொரு துணையிலை என்று
.. விரைமலர்த் தாள்பணி வார்க்குப்
பேறருள் புரிகிற பெம்மான்
.. பிறைமதி ஒளிர்சடை எந்தை
சீறர வன்பதம் போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



(சம்பந்தர் தேவாரம் – 3.52.7 - “ஆதியந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே”;
திருவாசகம் - திருவெம்பாவை - 7 - “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை”);
விரைமலர்த்தாள் பணிவார்க்கு - மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை வணங்குபவர்களுக்கு;
பேறருள் - பேறு அருள்;
சீறரவன் - சீறு அரவன் - சீறும் பாம்பை அணிந்தவன்; (5.79.5 - "... பொங்கரவனை...")



5)
உருவமும் அருவமும் ஆகி
.. உயிர்களுக் கருள்கிற நேசன்
வருவதும் போவதும் இல்லான்
.. மலரடி வாழ்த்தடி யாரின்
இருவினை வேரறச் செய்வான்
.. இமையவர்க் காவெயில் எய்த
செருவனின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இமையவர்க்கா எயில் எய்த செருவன் - தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தலாகிய போரைச் செய்தவன்; (அப்பர் தேவாரம் - 5.83.9 - "கருவனைக் ... புர மூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீருமே.");



6)
ர்விடை ஊர்திவி ரும்பி
.. உமையொடு வருகிற ஈசன்
நீர்மலர் கொடுதொழு வார்க்கு
.. நிம்மதி யைத்தரும் இன்பன்
பேர்பல உடையவன் பூமேற்
.. பிரமனின் சிரத்தினில் பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஓர் விடை ஊர்தி விரும்பி - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாக விரும்பியவன் - இடபவாகனன்;
நீர் மலர் கொடு தொழுவார்க்கு - நீராலும் பூக்களாலும் வழிபடுபவர்களுக்கு; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு);
பூமேல் பிரமனின் சிரத்தினில் - பூமியில் பிரமனின் மண்டையோட்டில்; / தாமரைப்பூவின் மேல் இருக்கும் பிரமனின் மண்டையோட்டில்;
பிச்சை தேர்பவன் - பிச்சை ஏற்பவன்;



7)
எவ்வணம் ஏத்தினும் அன்பர்
.. எண்ணிய வண்ணம ருள்வான்
வெவ்விடம் திகழ்மணி கண்டன்
.. விரைந்தடி யாருயிர் தன்னை
வவ்விட வருநம னாரை
.. மலரடி யாலுதை செய்த
செவ்வழல் வணன்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



வணம் - வண்ணம் - வகை (Way, manner, method); நிறம்;
எவ்வணம் - எவ்வண்ணம் - எப்படி;
வெவ்விடம் - கொடிய விஷம்;
வவ்வுதல் - கவர்தல் (To snatch);
நமனார் - காலன்; எமன்;
செவ்வழல்வணன் - செந்தீப் போன்ற நிறம் உடைய மேனியன்;


(சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலா - திருமுறை 11.8
".... .....
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் .... " -
எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான். இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் ...)



8)
ஏசும னத்தொடு சற்றும்
.. எண்ணுதல் இன்றியிவ் வெற்பை
வீசுவேன் என்றவன் தன்னை
.. மெல்விரல் இட்டழ வைத்தான்
மாசுணம் நாணது வாக
.. மலைவிலால் முப்புரம் எய்த
தேசுடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஏசு - குற்றம்; ஏசுதல் - இகழ்தல்;
ஏசுமனம் - ஏசுகிற மனம்; குற்றம் உடைய மனம்;
வெற்பு - மலை;
மாசுணம் - பாம்பு;
மலைவிலால் - மலைவில்லால்;
தேசு - ஒளி; புகழ்; பெருமை;



9)
ஐந்தலை அரவமும் ஆறும்
.. அம்புலி யோடணி ஐயன்
வந்தனை செய்பவர் தங்கள்
.. வல்வினை தீர்த்தருள் செய்வான்
முந்தயன் மாலிவ ரால்தன்
.. முடியடி காணுதற் கொண்ணாச்
செந்தழ லான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



முந்தயன் மாலிவரால் - முந்து அயன் மால் இவரால் - முன்னர்ப் பிரமன் விஷ்ணு என்ற இவர்களால்; (முந்து - முன்பு);
செந்தழலான் - செந்தீ ஆனவன்;



10)
ஒளியடை யாமதி யார்கள்
.. உண்மையை ஒளித்துழல் வார்கள்
தெளிவிலா அவர்களின் சொல்லைத்
.. தீதென நீங்கிய நல்லார்
அளிமனத் தால்பணிந் தேத்த
.. அவர்க்கருள் புரிபவன் கங்கை
தெளிசடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஒளி டையா மதியார்கள் - தெளிவில்லாத மதியை உடையவர்கள்; (ஒளி - வெளிச்சம்; ஞானம்);
தீது - தீமை; குற்றம்;
அளிமனம் - அளிகிற மனம் - குழைந்த மனம்;
கங்கை தெளிசடையான் - கங்கை தெளிக்கும் சடையை உடையவன்;



11)
ஓவுதல் தோன்றுதல் இல்லான்
.. ஒழிவிலா துன்னுவார் உள்ளம்
மேவுநற் றளியெனக் கொள்வான்
.. வேதனை தருவினைப் பந்தம்
யாவும றுத்தருள் செய்யும்
.. அங்கணன் ஆயிழை கூறன்
சேவுடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஓவுதல் - முடிதல்;
உன்னுவார் - தியானிப்பவர்; கருதுபவர்;
மேவுதல் - விரும்புதல்; உறைதல்;
தளி - கோயில்;
மேவு நற்றளி - மேவு நல் தளி - விரும்பி உறையும் நல்ல கோயில்;
வேதனை தருவினைப் பந்தம் யாவும் அறுத்து - துன்பம் தரும் வினைக்கட்டுகளை எல்லாம் போக்கி;
அங்கணன் - அருட்கண் உடையவன் (gracious-eyed);
ஆயிழை - பெண்; பார்வதி;
கூறன் - ஒரு கூறாக உடையவன்;
சே உடையான் - இடபத்தை ஊர்தியாக உடையவன்;



12)
ஔவிட வந்தடை கின்ற
.. அருவினை தீர்த்தருள் செய்வான்
செவ்வழி வண்டினம் பாடும்
.. செழும்பொழில் இடைமரு தூரன்
கொவ்வையின் கனியன வாயாள்
.. கூறினன் அம்பவ ளம்போல்
செவ்வணன் திருந்தடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஔவுதல் - வாயாற் பற்றுதல் (To grasp, seize, take hold of, with the mouth);
செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்; நல்ல மார்க்கம்;
இடைமருதூரன் - திருவிடைமருதூரில் உறையும் சிவபெருமான்;
கொவ்வையின் கனி அன வாயாள் கூறினன் - கொவ்வைக்கனி போலச் சிவந்த வாயை உடைய பார்வதியை ஒரு கூறாக உடையவன்;
அம் பவளம் போல் செவ்வணன் - அழகான பவளம் போன்ற சிவந்த நிறத்தினன்;
திருந்து அடி - அழகிய திருவடி; பொலிவுடைய திருவடி;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • "விளம் விளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு.
  • இது ஓரளவிற்குக் கீழ்க்குறித்துள்ள சம்பந்தர் தேவாரத்தின் அமைப்பில் உள்ளது.



2) சம்பந்தர் தேவாரம் - 2.68.2 -
அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.


சம்பந்தரின் இத்தேவாரப் பதிகத்தின் அமைப்பு:
  • "தானன தானன தானா" என்ற அரையடி அமைப்பு.
  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள்; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகள்.
  • அரையடிக்குள் வெண்டளை பயிலும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.
  • அரையடியின் ஈற்றுச் சீர் மாச்சீர்.

----------------- ----------------

No comments:

Post a Comment