02.04 – அண்ணாமலை - (அடியேற்கு அருள்வாய்)
(2010-ஆம் வருடக் கார்த்திகைத் தீபத்தை ஒட்டி).
2010-11-06
திருவண்ணாமலை
"அடியேற்கு அருள்வாய்"
------------------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே)
1)
பெண்ணோர் புறமாகப் பிறையார் முடிமேலே
தண்ணார் நதிசூடீ தாழும் சடையானே
எண்ணா அயன்மால்முன் எரியாய் வளர்வோனே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
புறம் - பக்கம்; பிறை ஆர் முடி - திங்கள் பொருந்திய சென்னி; தண்ணார் நதி சூடீ - குளிர்ந்த கங்கையை அணிந்தவனே; அடியேற்கு அருள்வாயே - அடியேனுக்கு அருள்புரிவாயாக;
இடப்பாகத்தில் பார்வதியும், திருமுடியின்மேல் பிறைச்சந்திரனும் குளிர்ந்த கங்கை நதியும் உடையவனே! தாழ்கின்ற சடை உடையவனே! உன்னை எண்ணாத பிரமன் திருமால் இவர்கள்முன் சோதியாகி ஓங்கியவனே! அண்ணாமலையானே! அடியேனுக்கு அருள்புரிவாயாக!
2)
விண்ணார் புரமூன்றும் வெந்து விழவெய்தாய்
கண்ணார் நுதலானே கருதார்க் கரியானே
பண்ணார் இசைபாடிப் பணிவார்க் கினியானே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
பதம் பிரித்து:
விண் ஆர் புரம் மூன்றும் வெந்து விழ எய்தாய்;
கண் ஆர் நுதலானே; கருதார்க்கு அரியானே;
பண் ஆர் இசை பாடிப் பணிவார்க்கு இனியானே;
அண்ணா மலையானே; அடியேற்கு அருள்வாயே.
கண் ஆர் நுதலான் - நெற்றிக்கண்ணன்;
விண்ணில் திரியும் முப்புரங்களும் வெந்து சாம்பாலாக ஓர் அம்பை எய்தவனே! நெற்றிக்கண்ணனே! எண்ணாதவர்களால் அடையப்படாதவனே! பண்ணோடு இசை பாடி வணங்குபவர்களுக்கு இனிமை பயப்பவனே! அண்ணாமலையானே! அடியேனுக்கு அருள்புரிவாயாக!
3)
மண்ணோர் பலர்காண மயிலை நகர்தன்னில்
தண்ணார் தமிழ்கேட்டுச் சாம்பல் தனையன்று
பெண்ணாக் கியவெந்தாய் பேதை பிரியானே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
* மயிலாப்பூரில் சம்பந்தர் பதிகம் பாடிப் பூம்பாவையை எழுப்பியது.
சாம்பல்தனை அன்று பெண் ஆக்கிய எந்தாய் - சாம்பலை முன்பு (சம்பந்தர் பதிகம் பாடிய அன்று) ஒரு பெண் ஆக்கிய எந்தையே; (சாம்பல் - குடத்தில் இருந்த அஸ்தி);
அன்று மயிலாப்பூரில் மக்கள் பலரும் சூழ்ந்து நின்று காணும்பொழுது, சம்பந்தரின் குளிர்ந்த தமிழாகிய தேவாரத்தைக் கேட்டு இரங்கிக், குடத்திலிருந்த சாம்பலை மீண்டும் பூம்பாவை ஆக்கிய எந்தையே! பார்வதியை நீங்காதவனே! அண்ணாமலையானே! அடியேனுக்கு அருள்புரிவாயாக!
4)
உண்ணா முலையாளை ஒருகூ றுடையானே
தண்ணீர்ச் சடையானே தாளும் முடிதேடி
நண்ணா அயன்மாலார் நாணி அடிபோற்றும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
உண்ணா முலையாள் - திருவண்ணாமலையில் இறைவி திருநாமம்; தண்ணீர்ச் சடையானே - குளிர்ந்த கங்கையைச் சடையில் உடையவனே; தாளும் முடிதேடி - உம்மைத்தொகை - தாளையும் முடியையும் தேடி; நண்ணா - நண்ணாத - அடையாத; (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்); நாணுதல் - அஞ்சுதல்; வெட்கப்படுதல்;
5)
வெண்ணீ றொளிர்மார்பா வீரக் கழலானே
தெண்ணீர்ச் சடையானே செங்கண் விடையானே
பெண்ணாண் அலியென்று பேசற் கரியானே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
வெண்ணீறு ஒளிர் மார்பா - வெண் நீறு திகழும் மார்பினனே; வீரக் கழலானே - தாளில் வீரக்கழலை அணிந்தவனே; தெண்ணீர் - தெள் நீர் - தெளிந்த நீர் - கங்கை; செங்கண் விடை - சினக்கும் இடபம்; பெண் ஆண் அலி என்று பேசற்கு அரியானே - பெண் ஆண் அலி என்று சொல்வதற்கு அரியவனே;
6)
திண்போர் விடையானே திங்கட் சடையானே
கண்மூன் றுடையானே கருதார் அடையானே
உண்ணார் அமுதாவாய் உன்னும் அடியார்க்கே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
திண் போர் விடையானே - திடமான, போர்க்குரிய இடபத்தை உடையவனே; திங்கட் சடையானே - பிறையைச் சடையில் அணிந்தவனே; உண் ஆர் அமுது ஆவாய் உன்னும் அடியார்க்கே - தியானிக்கிண்ற பக்தர்களுக்கு உண்ணும் அரிய அமுதம் ஆனவனே; உன்னுதல் - தியானித்தல்;
7)
வண்ணான் அடிவீழ்ந்த மன்னர் புகழ்ச்சேரர்
உண்ணீங் ககிலாதாய் உமையாள் ஒருபங்கா
விண்ணோர் பெருமானே வேதப் பொருளானே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
* கழறிற்றறிவார் (சேரமான் பெருமாள் நாயனார்) வண்ணானைச் சிவனடியார் என எண்ணித் தரையில் வீழ்ந்து வணங்கியதைச் சுட்டியது. இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க;
உண்ணீங்ககிலாதாய் - உள் நீங்ககிலாதாய் - உள்ளத்தை நீங்காதவனே;
8)
எண்ணா அவுணன்தோள் இருப தடர்த்தோனே
எண்ணா யிரநாமம் இமையோர் தொழுதேத்த
உண்ணா அருநஞ்சை உண்ட மணிகண்டா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
அவுணன் - அரக்கன் - இங்கே இராவணன்; (அவுணன், அரக்கன் என்ற இரு சொற்களும் ஒத்த பொருள் உடையனவென்றே கருதுகின்றேன். இராவணனை அவுணர்கோன் என்றும் தேவாரத்திற் கூறக் காணலாம். - சம்பந்தர் தேவாரம் - 1.51.8 - "... இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே"); அடர்த்தல் - நெரித்தல்; நசுக்குதல்; எண்ணாயிரநாமம் - எண் ஆயிர நாமம் - எண்ணும் ஆயிரம் திருப்பெயர்கள்; உண்ணா அருநஞ்சு - உண்ண இயலாத கொடிய விடம்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.21.8 - "உண்ணா அருநஞ்சம் உண்டார் போலும்");
சிறிதும் சிந்தியாமல், "கயிலைமலையைப் பெயர்த்து எறிவேன்" என்று ஓடிவந்த இராவணனின் இருபது தோள்களையும் நசுக்கியவனே! தியானிக்கும் சஹஸ்ரநாமங்களையும் தேவர்கள் சொல்லிப் போற்ற, யாராலும் உண்ண இயலாத ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனே! அண்ணாமலையானே! அடியேனுக்கு அருள்புரிவாயாக!
9)
திண்ணே றுடையானே செம்பொற் சடையானே
விண்ணே றயனோடு மண்தோண் டரியாரும்
நண்ணா எரியாகி நடுவே உயர்வோனே
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
திண் ஏறு - வலிய இடபம்; செம்பொற் சடையானே - செம்பொன் போன்ற சடையை உடையவனே; விண் ஏறு அயனோடு மண் தோண்டு அரியாரும் - வானில் அன்னமாய்ப் பறந்து சென்ற பிரமனும் மண்ணைத் தோண்டும் திருமாலும்; நண்ணா எரி ஆகி - நண்ணாத சோதி ஆகி; (நண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);
10)
உண்ணே யமிலாமல் ஓயா தலர்தூற்றிப்
புண்ணே படுவார்தம் பொய்யை மதியாமல்
அண்ணா எனவேத்தும் அன்பர் வினைதீர்க்கும்
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
பதம் பிரித்து:
உள் நேயம் இலாமல் ஓயாது அலர்தூற்றிப்
புண்ணே படுவார்தம் பொய்யை மதியாமல்,
"அண்ணா" என ஏத்தும் அன்பர் வினை தீர்க்கும்
அண்ணாமலையானே; அடியேற்கு அருள்வாயே.
உண்ணேயம் - உள் நேயம் - மனத்தில் அன்பு; அலர்தூற்றுதல் - பழி சொல்லுதல்; அண்ணா - தந்தையே; தலைவனே; 'அண்ணால்' என்பது 'அண்ணா' என மருவிற்று; (அண்ணல் - தலைவன்);
11)
கண்ணீர்க் கசிவோடு கைகள் அவைகூப்பிப்
பண்ணார் பதிகங்கள் பாடிப் பணிவார்க்கு
விண்ணே இடமாக விரும்பித் தருமீசா
அண்ணா மலையானே அடியேற் கருள்வாயே.
பண் ஆர் பதிகம் - இசையோடு பாடும் தேவாரப் பதிகங்கள்; விண்ணே இடமாக விரும்பித் தரும் ஈசா - அந்த அடியவர்கள் மண்ணில் மீண்டும் பிறவாமல், எப்போதும் விண்ணுலகிலேயே இருக்கும் நிலையை அருளும் ஈசனே; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்");
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களும் ஒரே எதுகை (ஒரு விகற்பம்) கொண்டு அமைந்தவை.
2) இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் ஒரே ஈற்றடி பயின்று வருகின்றது.
-------------------
No comments:
Post a Comment