Saturday, August 29, 2015

02.14 - கழுமலம் (சீகாழி) - (கழுமலம் அடை நெஞ்சே)

02.14 - கழுமலம் (சீகாழி) - (கழுமலம் அடை நெஞ்சே)



2011-03-21
கழுமலம் (சீகாழி) (சீர்காழி)
"கழுமலம் அடை நெஞ்சே"
--------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதானா தனதன தனதானா” என்ற சந்தம்.
தனதன என்பது தானன என்றும் வரலாம். தனதானா என்பது தானானா என்றோ தானதனா என்றோ வரலாம்.)
(சுந்தரர் தேவாரம் - 7.85.1 - 'வடிவுடை மழுவேந்தி மதகரி யுரிபோர்த்து')



1)
நெடிதுயர் மலையொத்த செடிவினை அவையெல்லாம்
பொடிபட வழிவேண்டில் புகலென அடைநெஞ்சே
அடிமலர் துதியன்பர் அணியென வரிவண்டார்
கடிமலர்ப் பொழில்சூழும் கழுமல நகர்தானே.



நெடிது யர் மலை த்தபெரிய மலையைப் போன்ற;
செடி வினை - தீவினை;
பொடிபட வழி வேண்டில் - அழியும் உபாயம் விரும்பினால்;
அடிமலர் துதி ன்பர் அணி திருவடித்தாமரையைத் துதிக்கும் பக்தர்களைப் போல;
வரி வண்டு ஆர் கடி மலர்ப் பொழில் சூழும் - வரிகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்யும் வாச மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த;
கழுமல நகர்தானே - திருக்கழுமலம் என்ற சீகாழிப் பதி.



2)
உயர்வழி உணராமல் உலகினில் உழல்கின்ற
மயலற வழிவேண்டில் வழிபட அடைநெஞ்சே
அயலரை மதிசேர அரவையும் அணிவானூர்
கயலுகள் வயல்சூழும் கழுமல நகர்தானே.



மயல் அற வழி வேண்டில் - மயக்கம் தீர ஓர் உபாயத்தை விரும்பினால்;
அயல் அரை மதி சேர - பக்கத்தில் பிறைச்சந்திரன் பொருந்துமாறு;
அரவையும் அணிவான் ஊர் - பாம்பையும் அணிகின்ற சிவபெருமான் உறையும் ஊரான;
கயல் உகள் வயல் சூழும் - கயல் மீன்கள் குதிக்கின்வயல் சூழ்ந்த;
கழுமல நகர்தானே - திருக்கழுமலம் என்ற சீகாழிப் பதி.



3)
புவிமிசை மகிழ்வோடு புகழுற அடைநெஞ்சே
செவியினில் ஒருதோடு திகழ்பவன் இவனென்று
சவிமிகு தமிழ்பாடு கவுணியர் பதியான
கவினுறு பொழில்சூழும் கழுமல நகர்தானே.



செவியினில் ஒரு தோடு திகழ்பவன் இவன் என்று - (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - “தோடுடைய செவியன் ….. பெம்மான் இவன்அன்றே");
சவி - ஒளி; அழகு;
கவுணியர் - திருஞான சம்பந்தர்;
கவின் - அழகு;



4)
ஒலிமிகு கடல்போல வலிமிகு வினையெல்லாம்
வலிதர வருமுன்னே வழிபட அடைநெஞ்சே
நலிவறு சிவன்நாமம் நவில்கிற அடியார்சேர்
கலிமலி விழவாரும் கழுமல நகர்தானே.



வலி - 1) வன்மை (Strength, power); 2) துன்பம் / நோவு;
நலிவு அறு - துன்பத்தைத் தீர்க்கும்;
கலி மலி விழவு ஆரும் - ஆரவாரம் மிகுந்த விழாக்கள் நிறைந்த;



5)
குறைகெட வழிவேண்டில் இறைதொழ அடைநெஞ்சே
மறைவிரி குருவாகி வருபவன் உமைகேள்வன்
அறைகடல் உமிழ்நஞ்சும் அழகிய மணியாகும்
கறைமிட றுடையானூர் கழுமல நகர்தானே.



இறை தொழஇறைவனைத் தொழுவதற்கு;
மறை விரி குரு - வேதப்பொருளை விளக்கும் குரு - தட்சிணாமூர்த்தி;
உமைகேள்வன் - உமாபதி;
அறைதல் - ஒலித்தல்; மோதுதல்;
கறைமிடறு உடையான் - நீலகண்டன்;



6)
முனைவினை அவைமூடி முடிவில தெனநாளும்
இனல்விளை வதுதீர இனியடை மடநெஞ்சே
புனைவென முடிமீது புனலொடு மதிசூடி
கனவிடை உடையானூர் கழுமல நகர்தானே.



முனை, இனல் - முன்னை, இன்னல் - இடைக்குறையாக வந்தன;
இனி - இப்பொழுது (Now, immediately);
புனைவு - அலங்காரம்; அழகு;
முடிமீது புனலொடு மதிசூடி - சென்னிமேல் கங்கையையும் சந்திரனையும் அணிந்தவன்;
கன விடை - பெரிய எருது;



7)
மினலன புவிவாழ்வில் மேதியன் வரவாலே
அனலிடை அடையாமுன் அடிதொழ அடைநெஞ்சே
புனலடை சடையீசன் பூங்கணை மதன்வேவக்
கனலுமிழ் விழியானூர் கழுமல நகர்தானே.



மினல் அன - மின்னல் அன்ன - மின்னலைப் போன்ற - நிலையற்ற;
மேதியன் - இயமன் (Yama, as riding a buffalo); (மேதி - எருமை);
அனலிடை அடையாமுன் - தீயிற் புகுவதன் முன்னமே;
புனல் அடை சடை ஈசன் - கங்கை அடைந்த சடையை உடைய ஈசன் / கங்கையை அடைத்த சடையை உடைய ஈசன்;
பூங்கணை மதன் - மலர்க்கணை ஏவும் மன்மதன்;



8)

சதிபுரி புலனைந்தின் தளைகளும் இடரேசெய்

பொதிவினை அவைதீர்ந்து பொலிவுற அடைநெஞ்சே

எதிரிலன் வலியார்தோள் இருபதை நெரிசெய்து

கதிர்மதி அணிவானூர் கழுமல நகர்தானே.



சதிபுரி புலன் ஐந்தின் தளைகளும் - வஞ்சப் புலன்கள் ஐந்தின் கட்டுகளும்;

இடரேசெய் பொதிவினை - துன்பத்தையே நல்கும் வினைப்பொதி; (பொதி - மூட்டை);

அவை தீர்ந்து பொலிவுற அடை நெஞ்சே - அவையெல்லாம் நீங்கி இன்புற, மனமே நீ அடைவாயாக;

எதிர் இலன் வலி ஆர் தோள் இருபதை நெரிசெய்து – போர் இல்லாதவனான இராவணனது வலிமை மிக்க இருபது புஜங்களையும் நசுக்கி; (எதிர் - போர்); (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே" - செரு இல் அரக்கன் - போரில்லாத இராவணன்);

கதிர்மதி அணிவான் ஊர் கழுமல நகர்தானே - கதிர்கள் வீசும் சந்திரனை அணிந்த சிவன் உறையும் ஊரான திருக்கழுமலமே;




9)
உலகினில் உழலாமல் நிலைபெற அடைநெஞ்சே
மலரவன் அரிநேட வளரெரி எனவான
அலகிலன் அரவாரம் அணியரன் ஒருகையில்
கலைதரி பெருமானூர் கழுமல நகர்தானே.



மலரவன் அரி நேட - பிரமனும் திருமாலும் தேடுமாறு;
வளர் எரி என வளரும் தீ என்று ஆன;
அலகு இலன் - அளவு இல்லாதவன்;
அரவு ஆரம் அணி அரன் - பாம்பு மாலை அணியும் ஹரன்;
ஒரு கையில் கையில் கலை தரி பெருமான் - ஒரு கரத்தில் மானை ஏந்தும் பெருமான்;



10)
உணர்விலர் ஒழிவின்றி ஒழிமினும் வழியென்பர்
குணமிலர் அவர்சொல்லும் கூற்றுகள் பொருளல்ல
இணையடி தொழுதேவர் இடர்கெட மதில்மூன்றோர்
கணைகொடு சுடுவானூர் கழுமல நகர்தானே.



உணர்வு இலர் - அறிவு இல்லாதவர்; தெளிவு இல்லாதவர்;
ஒழிவின்றி - ஓயாமல்; எப்போதும்;
ஒழிமினும் - ஒழிமின் உம் / ஒழிமின் நும்;
"ஒழிமின் உம் வழி" ன்பர் - "உங்கள் நெறியை விட்டு நீங்குங்கள்” என்று சொல்வார்கள்;
குணமிலர் அவர் சொல்லும் கூற்றுகள் பொருள் அல்ல – குணமிலிகளான அவர்கள் சொல்லும் வார்த்தைகளில் பொருள் இல்லை; அவற்றை மதிக்கவேண்டா;
இணையடி தொழு தேவர் இடர் கெடஅடியிணையைத் தொழுத தேவர்களின் துன்பம் நீங்கும்படி;
மதில் மூன்று ஓர் கணைகொடு சுடுவான் ஊர் - முப்புரங்களை ஓர் அம்பால் எரித்தவன் உறையும் ஊர்;
கழுமல நகர்தானே - திருக்கழுமலம் (சீகாழி);



11)
அயர்வற வழிவேண்டில் அடிதொழ அடைநெஞ்சே
பயிர்வளர் புனல்போல்நம் உயிர்வளர் பரமேட்டி
மயிலன மடமங்கை ஒருபுறம் மகிழ்எந்தை
கயிலைமன் னரனாரூர் கழுமல நகர்தானே.



அயர்வு - சோர்வு;
பரமேட்டி - பரம்பொருள்; தனக்குமேல் ஒன்றில்லாத உயர்ந்த இடத்திலிருப்பவன்;
பயிர் வளர் புனல்போல் நம் உயிர் வளர் பரமேட்டி - பயிரைக் காக்கும் நீர் போல், நம் உயிரைக் காக்கும் பரம்பொருள்;
மயில் அன மட மங்கை ஒரு புறம் மகிழ் எந்தை - மயில்போன்ற அழகிய பார்வதியை ஒரு பங்கில் விரும்பும் எம் தந்தை;;
கயிலை மன்னு அரனார் ஊர் - கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் உறையும் ஊர்; ('கயிலை மன் அரனார்' - 'கயிலை இறைவன் அரன்' என்றும் பொருள்படும்);
கழுமல நகர்தானே - திருக்கழுமலம் (சீகாழி);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

-------------- --------------

No comments:

Post a Comment