Friday, August 21, 2015

01.76 – பொது - (தாயுமானவனே)

01.76 – பொது - (தாயுமானவனே)



2010-07-28
பொது
"தாயுமானவனே
---------------------
(அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் 2.90.1 - 'எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்'



1)
வந்து வந்திடர் செய்யும் வல்வினை மலையெலாம் பொடியாய்
அந்தம் அற்றதொர் இன்பம் அடியவர் அடைந்திட அருள்வான்
சந்தம் ஆர்தமிழ் பாடு சம்பந்தர்க் காயிரம் பொன்னைத்
தந்தை யார்க்கென அன்று தந்தநம் தாயுமா னவனே.



* திருவாவடுதுறையில் தந்தையாரின் வேள்விக்கெனச் சம்பந்தர் வேண்டி 'இடரினும் தளரினும்' என்ற பதிகம் பாடி ஆயிரம்பொன் பெற்றதைச் சுட்டியது.


அந்தம் அற்றதொர் இன்பம் - முடிவில்லாத இன்பம்;
சந்தம் ஆர் தமிழ் - சந்தம் பொருந்திய தமிழ் - தேவாரம்;



2)
பூசை செய்தடி யிணையைப் போற்றிடு பத்தரின் நெஞ்சில்
வாசம் செய்தவர்க் கின்பம் மலிந்திட இன்னருள் செய்வான்
நேசர் தம்பசி யாற்ற நிதம்படி கவுணிய ரோடு
தாசர் அப்பருக் கன்று தந்தநம் தாயுமா னவனே.



* பஞ்சம் ஏற்பட்டபோது திருவீழிமிழலையில் அடியவர்கள் பசிதீர்க்கவேண்டி அப்பருக்கும் சம்பந்தருக்கும் சிவன் படிக்காசு அளித்ததைச் சுட்டியது.


வாசம் - வசிக்கை (Dwelling);
பசியாற்றுதல் - உண்டு பசியைத் தணித்தல்; உண்பித்தல் (To feed);
நிதம் - தினந்தோறும்;
படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள் (subsistence allowance);
கவுணியர் - திருஞான சம்பந்தர்;
தாசன் - அடிமை; பக்தன்;



3)
பண்டு செய்வினை அனைத்தும் பகலவன் முன்னிருள் ஆகத்
தொண்டு செய்யடி யார்க்குத் துணையென நின்றருள் செய்வான்
மிண்டர் தாம்குரு டாகி வெருவிட விழிகளி ரண்டும்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே.



* கண்ணில்லாத தண்டியடிகள் திருவாரூரில் குளத்தில் திருப்பணி செய்வதற்கு இடையூறு செய்த சமணர்கள் எல்லாரும் கண்ணிழந்து அஞ்சும்படியும் தண்டியடிகளுக்குப் பார்வை கொடுத்தும் திருவருள் புரிந்த நிகழ்ச்சியைச் சுட்டியது.
பண்டு - முன்பு;
மிண்டர் - கல் நெஞ்சர்; இங்கே சமணர்களைச் சுட்டியது.
வெருவுதல் - அஞ்சுதல்;
தண்டியார் - தண்டி அடிகள்; (அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; பிறவிக்குருடராக இருந்தவர்);



4)
அண்டர் நாயகன் அடியை அனுதினம் அகமகிழ்ந் தேத்தும்
தொண்டர் செய்வன எல்லாம் தூயநற் பூசையாக் கொள்வான்
தண்டும் ஓர்மழு வாளாய்த் தாதையின் தாளற வீசும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே.



* சிவபூசைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமர்க்குச் சண்டேசுர பதவி அருளியதைச் சுட்டியது.


பூசையா - பூசையாக;
தண்டு - கோல் (Cane, staff, stick);
தாதை - தந்தை;
தாள் - கால்;
சண்டி - சண்டேசுர நாயனார்;
தானம் - ஸ்தானம் - பதவி (Position, status); இடம் (Place, location,);



5)
ஏங்கு நெஞ்சினர் ஆகி இருவிழி கசியடி யார்க்குத்
தீங்கு செய்வினைத் தொடரைத் தீர்த்தருள் புரிகிற ஈசன்
ஆங்க ருந்தமிழ் பாடும் அப்பரைப் பிணித்தவக் கல்லைத்
தாங்கு மோர்புணை ஆக்கித் தந்தநம் தாயுமா னவனே.



பதம் பிரித்து:
ஏங்கு நெஞ்சினர் ஆகி இருவிழி கசி அடியார்க்குத்
தீங்குசெய் வினைத்தொடரைத் தீர்த்து அருள்புரிகிற ஈசன்
ஆங்கு அரும் தமிழ் பாடும் அப்பரைப் பிணித்த அக்கல்லைத்
தாங்கும் ஓர் புணை ஆக்கித் தந்த நம் தாயுமானவனே.


* திருநாவுக்கரசரைக் கல்லோடு கட்டிச் சமணர்கள் கடலுள் ஆழ்த்தியபோது, சிவன் அருளால் அக்கல்லே ஓர் தெப்பம் போல் மிதந்து அவர் கரைசேர்ந்ததைச் சுட்டியது.


ஏங்குதல் - மனம்வாடுதல் (To long for, yearn after);
ஆங்கு - அங்கே; அச்சமயத்தில்; அவ்விடத்தில்; ஓர் அசைச்சொல்;
அரும் தமிழ் - அரிய தமிழ் - தேவாரம்;
பிணித்தல் - சேர்த்துக் கட்டுதல் (To tie, fasten with ropes, fetter);
புணை - தெப்பம் (Float, raft);



6)
பாடல் பாடிவ ணங்கும் பத்தரின் இடர்களைந் தருள்வான்
ஆடல் வல்லபி ரானின் அடிதொழும் அன்பினள் மாலை
போட வந்திடும் போது புடைவையும் நெகிழ்வுறக் கண்டு
தாட கைக்கெனச் சாய்ந்து தந்தநம் தாயுமா னவனே.



* திருப்பனந்தாளில் தாடகை என்ற பெண் பூசிக்கும்போது மாலை அணிவிக்கவரும்போது அவள் ஆடையும் நெகிழ, அவள் முழங்கைகளால் ஆடையை அழுத்திப்பற்றிக்கொள்ள, இலிங்கத்திருமேனியைச் சாய்த்து இறைவன் அம்மாலையை ஏற்றுக்கொண்டான். இப்பாடல் இந்நிகழ்ச்சியைச் சுட்டியது.


புடைவையும் நெகிழ்வுற - அவள் மனம் நெகிழ்ந்தது மட்டுமன்றி அவள் அணிந்த ஆடையும் நெகிழ்ந்தது என்பதைப் புலப்படுத்தும் பிரயோகம்; (உம் - எச்சவும்மை - something understood);


நெகிழ்தல் - குழைதல்; இளகுதல்; நழுவுதல் (To slip off, as a garment);


(பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் - 3330
கோடுநான் குடைய வேழந் தானவன் குறைத்த கோட்டைப்
பாடற நோற்றுப் பெற்ற பதியிது மாலை சாத்துந்
தாடகை மானங் காப்பான் றாழ்ந்துபூங் கச்சிட் டீர்க்கும்
பீடுறு கலய னன்பி னிமிர்ந்தவெம் பிரானூ ரீதால்.


மாலை சாத்தும் தாடகை மானம் காப்பான் - மாலை சூட்டும் தாடகை என்னும் மாதின் மானத்தைக் காக்கும் பொருட்டு, தாழ்ந்து - வளைந்து, பூங்கச்சு இட்டு ஈர்க்கும் - அழகிய கச்சினைப் பூட்டி இழுத்த, பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த - பெருமை பொருந்திய குங்கிலியக்கலய நாயனார் அன்பினால் நிமிர்ந்த, எம்பிரான் ஊர் ஈது - எமது பிரான் ஊராகிய திருப்பனந்தாள் இதுவாகும்.)



7)
பொக்கம் நெஞ்சினில் இன்றிப் பொன்னடி இரண்டினை நாளும்
மிக்க அன்பொடு தொழுவார் வேண்டுவ ரங்களைத் தருவான்
தக்க நன்மல ராகத் தன்விழி இடந்திடக் கண்டு
சக்க ரத்தினை மாற்குத் தந்தநம் தாயுமா னவனே.



* திருவீழிமிழலையில் சக்கராயுதம் வேண்டித் திருமால் தினம் ஆயிரம் தாமரைமலர்களைக் கொண்டு பூசித்துவரும்போது ஒருநாள் ஒரு மலர் குறையத் தன் கண் ஒன்றை இடந்து மலராக இட்டு வழிபட்டுச் சிவனருள் பெற்றதைச் சுட்டியது.


பொக்கம் - பொய்; வஞ்சகம்;
மாற்கு - மாலுக்கு - திருமாலுக்கு;



8)
வரையின் றிப்பல பாவம் வாழ்வினில் செய்தவர் கூடக்
கரையும் நெஞ்சொடு போற்றிக் காவெனில் இன்னருள் செய்வான்
வரையை ஆட்டுமி லங்கை மன்னனை அடர்த்திசை கேட்டுத்
தரையில் நாளொடு வாளும் தந்தநம் தாயுமா னவனே.



* கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை நசுக்கிப் பின் அவன் இசைபாடித் துதிக்கவும் அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும் அருளியதைச் சுட்டியது.


கரைதல் - உருகுதல்;
வரை - 1) அளவு; எல்லை; 2) மலை; இங்கே, கயிலைமலை;
கா எனில் - 'காத்தருளாய்' என்றால்;
அடர்த்தல் - நசுக்குதல்;
தரையில் நாள் - நீண்ட ஆயுள்; (தரை - பூமி);
வாள் - சந்திரஹாஸம் என்ற வாள்;



9)
செங்கண் மாலயன் தேடத் தீயென ஓங்கிய தேவன்
தங்கை யால்தொழும் அன்பர் தங்களைத் தாங்கிடும் நேயன்
திங்கள் தேய்ந்தழி நாளில் திருவடி போற்றவும் என்றும்
தங்கப் பொற்சடை தன்னைத் தந்தநம் தாயுமா னவனே.



* தக்கனது சாபத்தால் தேய்ந்த சந்திரனை அழிந்தொழியாதவாறு சிவனார் தம் முடியில் அணிந்தார்.


செங்கண் மால் அயன் - சிவந்த கண்களையுடைய திருமாலும், பிரமனும்;
தங்கையால் - தம் கையால்;
திங்கள் தேய்ந்து அழி நாளில் - சாபத்தால் சந்திரன் தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சமயத்தில்;
திருவடி போற்றவும் - திருவடியை வணங்கவும்;
என்றும் தங்கப் பொற்சடை தன்னைத் தந்த - அழியாமல் நிலைத்து இருக்கப் பொற்சடைமேல் இடம் தந்த;



10)
தருமம் தானறி யாமல் தத்துவங் களும்தெளி யாமல்
கருவம் கொண்டலை மூடர் கண்களி ருந்துமி லாரே
எருதின் மேல்வரும் ஈசன் இன்தமிழ்ப் புலவனு மாகித்
தருமி வேண்டிய பொன்னைத் தந்தநம் தாயுமா னவனே.



* திருமணம் செய்ய விரும்பிய 'தருமி' என்னும் வறிய அந்தண பிரமசாரிக்கு அவன் பொற்குவை பெறக், 'கொங்கு தேர் வாழ்க்கை' என்ற பாடலை அளித்ததைச் சுட்டியது. திருவிளையாடற்புராணம் - 'தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்'.


தருமம்தான் அறியாமல், தத்துவங்களும் தெளியாமல் - அறங்களையும் அறியாமல், மெய்ப்பொருள்களையும் தெளியாமல்;
கருவம் கொண்டலை மூடர் கண்கள் இருந்தும் இலாரே - ஆணவத்தோடு அலைகின்ற மூடர்கள் கண்கள் இருந்தும் இல்லாதவரே;



11)
உமைக்கு நாதனைப் போற்றும் உத்தம மனத்தடி யாரைக்
குமைக்கச் சேர்வினைச் சரத்தைக் குளிர்மலர்ச் சரமெனச் செய்வான்
அமைத்த நல்விளக் கெரிய அமணரின் முன்நமி நந்தி
தமக்கு நீரைநெய் ஆக்கித் தந்தநம் தாயுமா னவனே.



* திருவாரூரில் சிவன் கோயிலில் விளக்கெரிக்க நெய் தர மறுத்த சமணர்கள் நாணும்படி நமிநந்தி அடிகள் விடும் குளத்துநீராலேயே கோயில் விளக்குகள் எரியச் சிவன் அருள்புரிந்ததைச் சுட்டியது.


உமைக்கு நாதன் - உமாபதி;
குமைத்தல் - வருத்தல்;
சரம் - 1) அம்பு; 2) மாலை;
அமைத்தல் - ஆயத்தஞ் செய்தல் (To prepare, get ready);
அமணர் - சமணர்;
நமிநந்தி - அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்;


உமாபதியை வணங்கும் தூயமனத்தினரான அடியவர்களை வருத்த வரும் வினை அஸ்திரங்களைக் குளிர்ச்சிபொருந்திய மலர்மாலைகளாக ஆக்குவான் சிவபெருமான்.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' - என்ற வாய்பாடு;
  • (சம்பந்தர் தேவாரம் 2.90.1 - 'எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்'
  • அடிதோறும் முதற்சீரின் அமைப்பு : குறில் அல்லது குறில்+ஒற்று என்று முடியும்;
  • அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்.

---- --------

No comments:

Post a Comment