02.05
– ஆனைக்கா
-
(யமகம்)
2010-11-13
திருவானைக்கா - யமகம்
"அடியேனைக் காவாய்"
-----------------------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'மா மா மா காய்' - அரையடி ஈற்றில் மடக்கு)
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 3.113.1 - திருவியமகம் - "உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே ...");
1)
வினையே உயிரை அரிக்கும் கறையானே
.. விரைவில் தீர்ப்பாய் கண்டம் கறையானே
உனையே உன்னில் வைப்பு மாட்டினையே
.. ஒத்துப் புரப்பாய் உகப்பாய் மாட்டினையே
முனமோர் ஆல்கீழ்த் தீர்ப்பாய் ஐயத்தை
.. முடையார் தலையில் ஏற்பாய் ஐயத்தைப்
புனலார் சடையா என்பார் மன்னினையே
.. பொழில்சூழ் திருவா னைக்கா மன்னினையே.
2)
வல்லாய் உமைக்குப் பாதி தந்தாய்நீ
.. மறவா தேத்தும் அன்பர் தந்தாய்நீ
சொல்லா தறஞ்சொல் இடமாம் கல்லாலே
.. தொழுதார் அன்றோர் தொண்டர் கல்லாலே
நல்லார் போற்றும் நான்கு மறையானே
.. நமனை உதைத்தாய் என்றும் மறையானே
பொல்லா நஞ்சை அமுதா அமர்வோனே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அமர்வோனே.
3)
நிகரில் தலைவ உமையோர் பாலாவாய்
.. நெற்றிக் கண்ண வண்ணம் பாலாவாய்
மகரக் கொடியான் அம்பை எய்தானே
.. மாய்க்கும் தீப்பட் டிலக்கை எய்தானே
திகழும் மதியைச் சடைமேல் உடையானே
.. செல்வா சீறும் புலித்தோல் உடையானே
புகழும் அடியார்க் கருளைப் புரிவோனே
.. பொழில்சூழ் ஆனைக் காவைப் புரிவோனே.
4)
நலியா வண்ணம் அருளும் மதியானே
.. நடலை உள்ளார் பூசை மதியானே
கலிசேர் வினைவெ யிலுக்கு நிழல்தானே
.. கருதன் பர்க்குத் திருத்தாள் நிழல்தானே
ஒலிநீர் சடைசேர் மழுவாட் படையானே
.. உலகை ஆளும் பூதப் படையானே
பொலிவாய் உகந்தே றுவதும் ஊரானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா ஊரானே.
5)
உன்மேல் அம்பை எய்த அவ்வேளை
.. உமிழ்தீ விழியால் எரித்தாய் அவ்வேளை
அன்பாய்த் தொழுவார் வினையை வீட்டினையே
.. அருள்வாய் அடியார் அவர்க்கு வீட்டினையே
நின்மேல் அரவம் பலவும் காட்டினையே
.. நிருத்தம் செய்ய உகந்தாய் காட்டினையே
புன்கூர் தன்னில் கொண்டாய் நகரானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா நகரானே.
6)
செம்மை மனத்து வேடன் கண்டந்தான்
.. சிவனே காட்டும் கறையுன் கண்டந்தான்
நைம்ம னத்தப் பர்க்குச் சூட்டினையே
.. நற்றாள்; அழிப்பாய் வினையின் சூட்டினையே
கொய்ம்ம லர்த்தாள் தொழுவார் கூட்டினையே
.. கோயி லாக்கொண் டின்பம் கூட்டினையே
பொய்ம்மை யாளர் மனத்திற் பதியானே
.. பொழில்சூழ் திருவா னைக்காப் பதியானே
7)
அகலா தொருபால் உமையும் நின்றாளே
.. அன்பர் பரவிப் பணிவார் நின்றாளே
பகவா உடையாய் பாண்டி நாட்டினையே
.. பத்தர் மனத்துள் உன்னை நாட்டினையே
மிகவே உகப்பாய் பண்ணார் பாட்டினையே
.. விரைந்து களைவாய் அடியார் பாட்டினையே
புகல்நீ என்பார் வினைதீர் உற்றவனே
.. பொழில்சூழ் திருவா னைக்கா உற்றவனே.
8)
மதுரை தன்னில் நட்டம் புரிகாலை
.. மாற்று வாய்மன் றினடம் புரிகாலை
சதுர ஆற்றைச் சடையுட் கொள்வாயே
.. தகிக்கும் விடத்தை எடுத்துட் கொள்வாயே
கதுமென் றரக்கன் கயிலை இடந்தானே
.. கத்த விரலிட் டதுமவ் விடந்தானே
புதுமை பழமை என்னும் நிலையானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா நிலையானே.
9)
மாற்றில் லாதாய் என்றும் அழிவில்லாய்
.. மாற்றார் புரங்கள் மூன்றும் அழிவில்லாய்
ஆற்றுச் சடைமேல் சீறும் பணியேற்றாய்
.. அன்பர் எல்லாம் நாளும் பணியேற்றாய்
நாற்ற மலரான் கரிய அரியானே
.. நாதன் என்றார் காண அரியானே
போற்றி செய்யும் அடியே னைக்காவாய்
.. பொழில்கள் சூழும் திருவா னைக்காவாய்.
10)
தூற்றும் மூடர் அறியா வான்மதியாய்
.. சுழல்சேர் நதியார் முடிமேல் வான்மதியாய்
ஏற்ற வடிவுள் ஆம்ஐம் பூதங்கள்
.. இருளில் ஆடச் சூழும் பூதங்கள்
ஏற்றிற் செல்வாய் இயம்பிங் காரூரில்
.. என்ற சேரர் தோழர்க் காரூரில்
போற்றிப் பாடத் தருவாய் அடிகேளே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அடிகேளே.
11)
முன்னம் மாலுக் கருள்வாய் ஆழிதனை
.. முனிவர் மகற்கீந் தாய்பால் ஆழிதனை
பன்னும் அடியார்க் கெல்லாம் உரியானே
.. பாய்ந்து வந்த பகட்டின் உரியானே
முந்நீர் நஞ்சை உண்ணக் கையானே
.. முதல்வா தாவும் மானார் கையானே
பொன்னார் சடைநீர் நோக்கும் அம்மானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அம்மானே.
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) தருமை ஆதீனம் வெளியிட்ட பெரியபுராண உரையில் காணும் விளக்கம்:
திருவியமகம் : திருஇயமகம்: `யமகம்' என்பது வடசொல். தமிழ் வழக்குப்படி யகரம் மொழிமுதற்கண் வாராமையின் இகரம் பெற்று இயமகம் ஆயிற்று. ஓரடியில் முன் வைத்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது இவ்வகையதாம். இதனை `மடக்கு ' என்றும் கூறுவர்.
2) சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 3.113.1 - திருவியமகம் -
----------------- ----------------
2010-11-13
திருவானைக்கா - யமகம்
"அடியேனைக் காவாய்"
-----------------------------------------------------
(எண்சீர் விருத்தம் - 'மா மா மா காய்' - அரையடி ஈற்றில் மடக்கு)
(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 3.113.1 - திருவியமகம் - "உற்றுமை சேர்வது மெய்யினையே உணர்வது நின்னருள் மெய்யினையே ...");
1)
வினையே உயிரை அரிக்கும் கறையானே
.. விரைவில் தீர்ப்பாய் கண்டம் கறையானே
உனையே உன்னில் வைப்பு மாட்டினையே
.. ஒத்துப் புரப்பாய் உகப்பாய் மாட்டினையே
முனமோர் ஆல்கீழ்த் தீர்ப்பாய் ஐயத்தை
.. முடையார் தலையில் ஏற்பாய் ஐயத்தைப்
புனலார் சடையா என்பார் மன்னினையே
.. பொழில்சூழ் திருவா னைக்கா மன்னினையே.
கறையான்
-
1) சிதல்
(termite);
2) கறையை
உடையவன்;
உன்னுதல்
-
எண்ணுதல்;
மாடு
-
1) செல்வம்;
2) எருது;
வைப்பு
மாடு -
சேமித்து
வைத்த நிதி;
ஐயம்
-
1) சந்தேகம்;
2) பிச்சை;
முடை
ஆர் தலை -
புலால்
நாற்றம் பொருந்திய பிரமனது
சிரம்;
மன்னினை
-
1) மன்
நினை -
அரசன்
உன்னை;
2) மன்னினாய்
(மன்னுதல்
-
நிலையாகத்
தங்குதல்);
வினையே
உயிரை அரிக்கும் கறையானே
-
வினையே
நம்மைச் சிறிது சிறிதாக
அரிக்கும் கறையான் ஆகும்;
விரைவில்
தீர்ப்பாய் கண்டம் கறையானே
-
அவ்வினைகளைச்
சீக்கிரம் தீர்த்தருள்வாய்
நீலகண்டனே;
உனையே
உன்னில் வைப்பு மாட்டினையே
ஒத்துப் புரப்பாய்;
உகப்பாய்
மாட்டினையே -
உன்னையே
எண்ணுபவர்களுக்கு அவர்களின்
சேமநிதி போல இருந்து காப்பவனே;
காளையையே
வாகனமாக விரும்புபவனே;
முனம்
ஓர் ஆல்கீழ்த் தீர்ப்பாய்
ஐயத்தை -
முன்னம்
ஓர் ஆலமரத்தின்கீழ் இருந்து
நால்வர்க்கு வேதப்பொருளை
விளக்குபவனே;
முடை
ஆர் தலையில் ஏற்பாய் ஐயத்தைப்
புனலார் சடையா என்பார் மன்
நினையே -
'கங்கைச்
சடையானே;
புலால்
நாறும் பிரமனது சிரத்தில்
பிச்சை ஏற்பவனே'
என்பார்கள்
தலைவனான உன்னையே;
பொழில்சூழ்
திருவானைக்கா மன்னினையே
-
சோலை
சூழும் திருவானைக்காவில்
நீங்காது உறைபவனே;
2)
வல்லாய் உமைக்குப் பாதி தந்தாய்நீ
.. மறவா தேத்தும் அன்பர் தந்தாய்நீ
சொல்லா தறஞ்சொல் இடமாம் கல்லாலே
.. தொழுதார் அன்றோர் தொண்டர் கல்லாலே
நல்லார் போற்றும் நான்கு மறையானே
.. நமனை உதைத்தாய் என்றும் மறையானே
பொல்லா நஞ்சை அமுதா அமர்வோனே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அமர்வோனே.
தந்தாய்
-
1) கொடுத்தாய்;
2) தம்
தாய்;
தந்தையே;
கல்லால்
-
1) கல்லால
மரம்;
2) கல்லைக்கொண்டு;
மறையான்
-
1) வேதத்தன்;
2) அழியாதவன்;
அமர்தல்
-
1) விரும்புதல்;
2) இருத்தல்;
வல்லாய்;
உமைக்குப்
பாதி தந்தாய் நீ -
வல்லவனே;
பார்வதிக்குப்
பாதி உடலைக் கொடுத்தவனே;
மறவாது
ஏத்தும் அன்பர்தம் தாய் நீ
-
என்றும்
துதிக்கும் பக்தர்களின் தாய்
நீ;
சொல்லாது
அறம் சொல் இடம் ஆம் கல்லாலே
-
நீ
மொழியின்றி அறத்தை உபதேசிக்கும்
இடம் ஆகும் கல்லால மரம்;
தொழுதார்
அன்று ஓர் தொண்டர் கல்லாலே
-
முன்னாளில்
ஒரு பக்தர் (சாக்கிய
நாயனார்)
உன்னைக்
கல்லெறிந்து வழிபட்டார்;
நல்லார்
போற்றும் நான்கு மறையானே
-
நல்லவர்கள்
போற்றும் நான்மறைப்பொருளே;
நமனை
உதைத்தாய் என்றும் மறையானே
-
எமனை
உதைத்தவனே;
என்றும்
அழியாதவனே;
பொல்லா
நஞ்சை அமுதா அமர்வோனே -
கொடிய
விடத்தை அமுதாக விரும்புவனே;
பொழில்
சூழ் திருவானைக்கா அமர்வோனே
-
சோலை
சூழ்ந்த திருவானைக்காவில்
எழுந்தருளியிருப்பவனே.
3)
நிகரில் தலைவ உமையோர் பாலாவாய்
.. நெற்றிக் கண்ண வண்ணம் பாலாவாய்
மகரக் கொடியான் அம்பை எய்தானே
.. மாய்க்கும் தீப்பட் டிலக்கை எய்தானே
திகழும் மதியைச் சடைமேல் உடையானே
.. செல்வா சீறும் புலித்தோல் உடையானே
புகழும் அடியார்க் கருளைப் புரிவோனே
.. பொழில்சூழ் ஆனைக் காவைப் புரிவோனே.
பால்
-
1) பக்கம்;
2) பசுவிலிருந்து
பெறும் பால்;
எய்தான்
-
1) பாணம்
பிரயோகித்தான்;
(எய்தல்);
2) அடையமாட்டான்;
(எய்துதல்);
உடையான்
-
1) உடையவன்;
2) உடையை
அணிபவன்;
புரிதல்
-
1) செய்தல்;
2) விரும்புதல்;
நிகர்
இல் தலைவ உமை ஓர் பால் ஆவாய்
-
ஒப்பில்லாத
தலைவனே;
பார்வதி
ஒரு பக்கம் ஆனவனே;
நெற்றிக்
கண்ண;
வண்ணம்
பால் ஆவாய் -
நெற்றிக்
கண்ணனே;
திருநீற்றை
எங்கும் அணிந்து பால் போன்ற
நிறத்தினனே;
மகரக்
கொடியான் அம்பை எய்தானே -
மகரமீன்கொடி
உடைய மன்மதன் உன்மேல் கணையை
ஏவினான்;
மாய்க்கும்
தீப்பட்டு இலக்கை எய்தானே
-
நெற்றிக்கண்ணின்
தீப்பட்டுத் தன் நோக்கம்
நிறைவேறமாட்டான்;
திகழும்
மதியைச் சடைமேல் உடையானே
-
ஒளிரும்
பிறைச்சந்திரனைச் சடைமேல்
கொண்டவனே;
செல்வா
சீறும் புலித்தோல் உடையானே
-
செல்வனே;
சீறும்
புலியின் தோலை உடையாக அணிபவனே;
புகழும்
அடியார்க்கு அருளைப் புரிவோனே
-
துதிக்கும்
பக்தர்களுக்கு அருள் செய்பவனே;
பொழில்
சூழ் ஆனைக்காவைப் புரிவோனே
-
சோலை
சூழும் திருவானைக்காவை
விரும்புபவனே.
4)
நலியா வண்ணம் அருளும் மதியானே
.. நடலை உள்ளார் பூசை மதியானே
கலிசேர் வினைவெ யிலுக்கு நிழல்தானே
.. கருதன் பர்க்குத் திருத்தாள் நிழல்தானே
ஒலிநீர் சடைசேர் மழுவாட் படையானே
.. உலகை ஆளும் பூதப் படையானே
பொலிவாய் உகந்தே றுவதும் ஊரானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா ஊரானே.
நலிதல்
-
மெலிதல்;
அழிதல்;
நடலை
-
வஞ்சனை;
பொய்ம்மை;
மதியான்
-
1) மதியை
அணிந்தவன்;
2) மதிக்கமாட்டான்;
கலி
-
துன்பம்;
கருது
அன்பர்க்கு -
போற்றும்
பக்தர்களுக்கு;
நிழல்
-
1) சாயை;
வெயிலில்
குளிர்ச்சி தரும் நிழல்;
2) இடம்;
தானம்;
படை
-
1) ஆயுதம்;
2) சேனை;
பொலிவாய்
-
பொலிபவனே
என்ற விளி;
(பொலிதல்
-
விளங்குதல்;
சிறத்தல்);
ஊரான்
-
1) ஊர்
ஆன் (ஏறிச்செல்லும்
இடபம்);
2) ஊரில்
இருப்பவன்;
நலியா
வண்ணம் அருளும் மதியானே -
சாபத்தால்
தேய்ந்து வந்த சந்திரனை
அழியாமல் இருக்கும்படி
அருள்செய்து அதைத் தலையில்
சூடியவனே;
நடலை
உள்ளார் பூசை மதியானே -
வஞ்ச
நெஞ்சரின் பொய்ப்பூசையைப்
பொருட்படுத்தாதவனே;
கலிசேர்
வினை வெயிலுக்கு நிழல்தானே
கருது அன்பர்க்குத் திருத்தாள்
நிழல்தானே -
துன்பம்
பெருக்கும் வினை என்ற வெயிலுக்கு
நிழலாகிக் குளிர்விக்கும்,
போற்றும்
பக்தர்களுக்கு உன் திருவடித்
தானம்;
ஒலிநீர்
சடைசேர் மழுவாட் படையானே
-
ஒலிக்கும்
கங்கை சடையைச் சேர்கிற,
மழுவாள்
ஆயுதம் ஏந்தியவனே;
உலகை
ஆளும் பூதப் படையானே -
எல்லா
உலகங்களையும் ஆள்கிற,
பூதகணங்களை
உடையவனே;
பொலிவாய்
உகந்து ஏறுவதும் ஊர் ஆனே -
விளங்குபவனே;
நீ
விரும்பி ஏறுவதும் ஊர்கிற
இடபமே;
பொழில்சூழ்
திருவானைக்கா ஊரானே -
சோலை
சூழும் திருவானைக்கா ஊரில்
உறைபவனே;
5)
உன்மேல் அம்பை எய்த அவ்வேளை
.. உமிழ்தீ விழியால் எரித்தாய் அவ்வேளை
அன்பாய்த் தொழுவார் வினையை வீட்டினையே
.. அருள்வாய் அடியார் அவர்க்கு வீட்டினையே
நின்மேல் அரவம் பலவும் காட்டினையே
.. நிருத்தம் செய்ய உகந்தாய் காட்டினையே
புன்கூர் தன்னில் கொண்டாய் நகரானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா நகரானே.
அவ்வேளை
-
1) அந்த
மன்மதனை;
2) அச்சமயத்தில்;
உமிழ்தீ
விழி -
தீ
உமிழும் விழி -
நெற்றிக்கண்;
வீட்டினை
-
1) நீக்கினாய்;
அழித்தாய்;
2) வீட்டை
(வீடு
-
மோட்சம்;);
காட்டினை
-
1) காட்டினாய்;
2) காட்டை
(சுடுகாட்டை);
நிருத்தம்
-
ஆடல்;
நகரான்
-
1) நகர்
ஆன் -
நகர்ந்த
எருது;
2) நகரத்தில்
இருப்பவன்;
*
திருப்புன்கூரில்
திருநாளைப்போவாருக்காக இடபம்
விலகியதைச் சுட்டியது.
உன்மேல்
அம்பை எய்த அவ்வேளை உமிழ்தீ
விழியால் எரித்தாய் அவ்வேளை
-
உன்மேல்
மலர்க்கணை தொடுத்த அந்த
மன்மதனை அப்பொழுது நெற்றிக்கண்ணால்
எரித்தவனே;
அன்பாய்த்
தொழுவார் வினையை வீட்டினையே
-
காதலோடு
தொழும் அன்பரின் வினையை
நீக்கியவனே;
அருள்வாய்
அடியார் அவர்க்கு வீட்டினையே
-
அவ்வடியார்களுக்கு
மோட்சம் அளிப்பவனே;
நின்மேல்
அரவம் பலவும் காட்டினையே
-
உன்மேல்
பல பாம்புகளைக் காண்பிப்பவனே
(அணிந்தவனே);
நிருத்தம்
செய்ய உகந்தாய் காட்டினையே
-
ஆடலுக்குச்
சுடுகாட்டை விரும்புபவனே;
புன்கூர்
தன்னில் கொண்டாய் நகர் ஆனே
-
திருப்புன்கூரில்
நந்தனாருக்காக நகரும் எருதை
உடையவனே;
பொழில்சூழ்
திருவானைக்கா நகரானே -
சோலை
சூழும் திருவானைக்கா நகரில்
உறைபவனே;
6)
செம்மை மனத்து வேடன் கண்டந்தான்
.. சிவனே காட்டும் கறையுன் கண்டந்தான்
நைம்ம னத்தப் பர்க்குச் சூட்டினையே
.. நற்றாள்; அழிப்பாய் வினையின் சூட்டினையே
கொய்ம்ம லர்த்தாள் தொழுவார் கூட்டினையே
.. கோயி லாக்கொண் டின்பம் கூட்டினையே
பொய்ம்மை யாளர் மனத்திற் பதியானே
.. பொழில்சூழ் திருவா னைக்காப் பதியானே
கண்டந்தான்
-
1) கண்
தந்தான்;
2) கண்டம்
தான்;
நைம்
மனத்து அப்பர்க்கு -
நைந்து
உருகும் மனத்தை உடைய
திருநாவுக்கரசருக்கு;
சூட்டினை
-
1) சூட்டினாய்;
(அணிவித்தல்)
2) சூட்டை
(வெப்பத்தை);
கொய்ம்மலர்த்தாள்
-
அப்போது
மலர்ந்த பூவைப் போன்ற திருவடி;
(அப்பர்
தேவாரம் -
6.98.1 - "நாமார்க்கும்
குடியல்லோம் ....
கொய்ம்மலர்ச்சே
வடிஇணையே குறுகி னோமே."
- கொய்ம்மலர்
-
'பறித்தற்கு
உரிய மலர்'
என்றது
அப்பொழுது அலர்ந்து பொலிவு
பெற்றிருப்பதனை.)
கூட்டினை
-
1) உடலை
(கூடு
-
உடல்)
; 2) கூட்டினாய்
(சேர்த்தாய்;
பெருக்கினாய்);
பதியான்
-
1) மனத்தில்
தங்காதவன்;
2) தலத்தில்
இருப்பவன்;
*
கண்ணப்பர்
தம் கண்ணை இடந்து அப்பியதைச்
சுட்டியது;
*
திருநல்லூரில்
திருநாவுக்கரசர் தலைமேல்
சிவன் தன் பாதமலரை வைத்தருளியதைச்
சுட்டியது.
(அப்பர்
தேவாரம் -
6.14.1 - "நினைந்துருகும்
அடியாரை ....
இனமலர்கள்
போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் தலைமேல்
வைத்தார் நல்லூரெம் பெருமானார்")
செம்மை
மனத்து வேடன் கண்டந்தான்
-
பக்தியிற்
சிறந்த வேடனான கண்ணப்பன் தன்
கண்ணைத் தந்தான்;
சிவனே
காட்டும் கறை உன் கண்டந்தான்
-
சிவனே;
உண்ட
விஷத்தின் கருமையைக் காட்டும்
உன் மிடறே;
நைம்மனத்து
அப்பர்க்குச் சூட்டினையே
நற்றாள் -
நைந்து
உருகும் மனத்தை உடைய
திருநாவுக்கரசருக்குத்
திருநல்லூரில் உன் திருப்பாதத்தைச்
சூட்டினாய்;
அழிப்பாய்
வினையின் சூட்டினையே -
உன்
அடியாரின் வினைச்சூட்டை
அழித்து அவர்க்குக் குளிர்ச்சி
தருவாய்;
கொய்ம்மலர்த்தாள்
தொழுவார் கூட்டினையே கோயிலாக்
கொண்டு இன்பம் கூட்டினையே
-
அப்பொழுது
அலர்ந்த பூவைப் போன்ற திருவடியைத்
தொழும் பக்தர்களின் உடலையே
உன் கோயிலாகக் கொண்டு அவர்களுக்கு
இன்பம் சேர்ப்பவனே;
பொய்ம்மையாளர்
மனத்திற் பதியானே -
பொய்யர்களின்
மனத்தில் தங்காதவனே;
பொழில்சூழ்
திருவானைக்காப் பதியானே
-
சோலை
சூழும் திருவானைக்காத்
தலத்தில் உறைபவனே;
7)
அகலா தொருபால் உமையும் நின்றாளே
.. அன்பர் பரவிப் பணிவார் நின்றாளே
பகவா உடையாய் பாண்டி நாட்டினையே
.. பத்தர் மனத்துள் உன்னை நாட்டினையே
மிகவே உகப்பாய் பண்ணார் பாட்டினையே
.. விரைந்து களைவாய் அடியார் பாட்டினையே
புகல்நீ என்பார் வினைதீர் உற்றவனே
.. பொழில்சூழ் திருவா னைக்கா உற்றவனே.
நின்றாள்
-
1) இருந்தாள்;
2) நின்
தாள்;
பகவா
-
பகவானே;
நாட்டினை
-
1) நாட்டை
(தேசத்தை);
2) நாட்டினாய்;
உடையாய்
பாண்டி நாட்டினையே -
"தென்னாடு
உடைய சிவனே போற்றி"
பாட்டினை
-
1) பாட்டை
(பாடலை);
2) துன்பத்தை;
(பாடு
-
துன்பம்);
உற்றவன்
-
1) நண்பன்;
சுற்றத்தான்;
2) இருப்பவன்;
(உறுதல்);
புகல்
நீ என்பார் வினை தீர் உற்றவனே
-
"நீயே
எனக்குப் புகல்'
என்பவர்களின்
வினையைத் தீர்க்கும் துணைவனே!
(புகல்
நீ,
என்பு
ஆர்,
வினை
தீர்,
உற்றவனே
-
"எலும்பை
அணியும்,
வினையைத்
தீர்க்கும்,
துணைவனே!
என்
புகல் நீயே"
- என்றும்
பொருள்கொள்ளலாம்)
8)
மதுரை தன்னில் நட்டம் புரிகாலை
.. மாற்று வாய்மன் றினடம் புரிகாலை
சதுர ஆற்றைச் சடையுட் கொள்வாயே
.. தகிக்கும் விடத்தை எடுத்துட் கொள்வாயே
கதுமென் றரக்கன் கயிலை இடந்தானே
.. கத்த விரலிட் டதுமவ் விடந்தானே
புதுமை பழமை என்னும் நிலையானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா நிலையானே.
காலை
-
1) பொழுது;
தருணம்;
சமயத்தில்;
2) திருவடியை;
மன்றினடம்
-
மன்றில்
நடம்;
நட்டம்/நடம்
புரிகாலை -
1) நாட்டியம்
செய்யும்பொழுது;
2) நாட்டியம்
செய்யும் திருவடியை;
சதுர
-
சதுரனே
-
சமர்த்தனே;
வல்லவனே;
சடையுட்
கொள்ளுதல் -
சடையின்
உள்ளே வைத்தல் (To
contain, hold);
எடுத்து
உட்கொள்ளுதல் -
எடுத்து
உண்ணுதல்;
கதுமென்று
-
விரைவுக்குறிப்பு;
இடந்தான்
-
1) பெயர்த்தான்;
2) இடமே;
சமயமே/பொழுதே;
நிலையான்
-
1) தன்மையன்;
2) ... தலத்தை
நிலையாகக் கொண்டவன்;
*
பாண்டியனுக்காக
மதுரையில் நடராஜர் கால் மாறி
ஆடியதைச் சுட்டியது.
மதுரை
தன்னில் நட்டம் புரிகாலை
மாற்றுவாய் மன்றில் நடம்புரி
காலை -
மதுரையில்
திருநடம் செய்யும்பொழுது,
பாண்டியன்
வேண்டலுக்கு இரங்கித்,
தில்லையில்
ஆட உயர்த்தும் காலை ஊன்றி,
மற்ற
திருவடியைத் தூக்குபவனே;
சதுர;
ஆற்றைச்
சடையுள் கொள்வாயே -
வல்லவனே;
கங்கையைச்
சடையுள் அடக்கியவனே;
தகிக்கும்
விடத்தை எடுத்து உட்கொள்வாயே
-
எரிக்கும்
நஞ்சை எடுத்து உண்டவனே;
கதுமென்று
அரக்கன் கயிலை இடந்தானே -
திடீரென்று
விரைந்து சென்று இராவணன்
கயிலையைப் பெயர்க்க முயன்றான்;
கத்த
விரல் இட்டதும் அவ்விடந்தானே
-
அவன்
கத்தி அழும்படி நீ திருவிரலை
ஊன்றியதும் அந்த இடமே;
(சமயமே/பொழுதே;)
புதுமை
பழமை என்னும் நிலையானே -
காலத்தைக்
கடந்தவனே;
பொழில்சூழ்
திருவானைக்கா நிலையானே -
சோலை
சூழும் திருவானைக்காவில்
நீங்காது உறைபவனே;
9)
மாற்றில் லாதாய் என்றும் அழிவில்லாய்
.. மாற்றார் புரங்கள் மூன்றும் அழிவில்லாய்
ஆற்றுச் சடைமேல் சீறும் பணியேற்றாய்
.. அன்பர் எல்லாம் நாளும் பணியேற்றாய்
நாற்ற மலரான் கரிய அரியானே
.. நாதன் என்றார் காண அரியானே
போற்றி செய்யும் அடியே னைக்காவாய்
.. பொழில்கள் சூழும் திருவா னைக்காவாய்.
மாற்று
-
ஒப்பு;
மாற்றார்
-
பகைவர்;
அழிவில்லாய்
-
1) அழிவு
இல்லாதவனே;
2) அழிக்கும்
வில்லை ஏந்தியவனே;
பணி
-
1) பாம்பு;
2) பணியும்;
வணங்கும்;
ஏற்றாய்
-
1) தரித்தவனே;
2) இடப
வாகனனே;
அரியானே
-
1) திருமால்
நானே;
2) அரியவனே;
காவாய்
-
1) காப்பாயாக;
(காத்தல்);
2) காவில்
இருப்பவனே;
மாற்று
இல்லாதாய் என்றும் அழிவு
இல்லாய் -
ஒப்பில்லாதவனே;
என்றும்
அழிவு இல்லாதவனே;
மாற்றார்
புரங்கள் மூன்றும் அழி வில்லாய்
-
பகைவரின்
முப்புரங்களையும் அழித்த
வில்லை ஏந்தியவனே;
ஆற்றுச்
சடைமேல் சீறும் பணி ஏற்றாய்
-
கங்கை
தங்கும் சடையின்மேல் சீறுகிற
பாம்பை அணிந்தவனே;
அன்பர்
எல்லாம் நாளும் பணி ஏற்றாய்
-
பக்தர்கள்
அனைவரும் தினமும் வணங்கும்
இடப வாகனனே;
நாற்ற
மலரான் கரிய அரி 'யானே
நாதன்'
என்றார்
காண அரியானே -
வாசத்
தாமரைமேல் இருக்கும் பிரமனும்
கரிய திருமாலும்,
'நானே
தலைவன்'
என்றவர்களால்
காணப்படாதவனே;
போற்றி
செய்யும் அடியேனைக் காவாய்
-
உன்னைத்
தொழும் என்னைக் காப்பாயாக;
பொழில்கள்
சூழும் திருவானைக்காவாய்
-
சோலை
சூழ்ந்த திருவானக்காவில்
எழுந்தருளியிருப்பவனே.
10)
தூற்றும் மூடர் அறியா வான்மதியாய்
.. சுழல்சேர் நதியார் முடிமேல் வான்மதியாய்
ஏற்ற வடிவுள் ஆம்ஐம் பூதங்கள்
.. இருளில் ஆடச் சூழும் பூதங்கள்
ஏற்றிற் செல்வாய் இயம்பிங் காரூரில்
.. என்ற சேரர் தோழர்க் காரூரில்
போற்றிப் பாடத் தருவாய் அடிகேளே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அடிகேளே.
வால்
-
தூய்மை;
வெண்மை;
வான்
-
வானம்;
அழகு;
வான்மதியாய்
-
1) வால்
மதியாய் -
தூய
ஞானஸ்வரூபியே;
2) வான்
மதியாய் -
அழகிய
வெண்பிறை அணிந்தவனே;
இயம்பிங்
காரூரில் -
இயம்பு
இங்கு ஆர் ஊர் இல்;
ஆரூரில்
-
1) ஆர்
ஊர் இல் -
எந்த
ஊர் உறைவிடம்;
(யார்
இருக்கும் ஊர்);
2) திருவாரூரில்;
அடிகேளே
-
1) அடி
கேளே;
2) அடிகேள்
+
'ஏ'
ஈற்றசை;
(அடிகள்
என்பதன் விளி);
அடி
-
பாடலுக்கு
அடி;
கேள்
-
தோழன்;
சுற்றம்;
அடிகேள்
-
அடிகள்
என்பதன் விளி -
அடிகளே;
(சுந்தரர்
தேவாரம் -
7.28.1 - "பொடியார்
மேனியனே .....
அடிகேள்
என்னமுதே எனக் கார்துணை
நீயலதே")
*
சுந்தரருக்குத்
திருத்தொண்டத்தொகை பாடச்
சிவபெருமான் அடியெடுத்துக்
கொடுத்தைச் சுட்டியது.
*
சேரமான்
பெருமான் அருளிய பொன்வண்ணத்து
அந்தாதி -
11.6.46 - "அந்தணராம்
இவர் ஆரூர் உறைவது என்றேன்
அதுவே சந்தணை தோளி என்றார்
..."
தூற்றும்
மூடர் அறியா வான்மதியாய்
-
தூற்றுகிற
மூடர்கள் அறியாத தூய அறிவினனே;
சுழல்சேர்
நதி ஆர் முடிமேல் வான்மதியாய்
-
சுழல்கள்
இருக்கும் கங்கை பொருந்திய
தலைமேல் அழகிய வெண்பிறை
அணிந்தவனே;
ஏற்ற
வடிவுள் ஆம் ஐம்பூதங்கள்
-
நீ
ஏற்ற அட்டமூர்த்தங்களுள்
பஞ்சபூதங்களும் அடங்கும்;
இருளில்
ஆடச் சூழும் பூதங்கள் -
நீ
இரவில் ஆடும் போது பூதகணங்கள்
சூழ்ந்திருக்கும்;
"ஏற்றில்
செல்வாய் இயம்பு இங்கு ஆர்
ஊர் இல்"
என்ற
சேரர் தோழர்க்கு ஆரூரில்
போற்றிப் பாடத் தருவாய் அடி
கேளே -
"இடபத்தில்
செல்பவனே!
சொல்,
நீ
உறையும் ஊர் எது?"
என்று
(பொன்வண்ணத்தந்தாதியில்)
பாடிய
கழறிற்றறிவார் நாயனாரின்
தோழரான சுந்தரர்க்குத்
திருவாரூரில் திருத்தொண்டத்தொகை
பாட அடி எடுத்துக்கொடுத்த
நண்பனே;
பொழில்சூழ்
திருவானைக்கா அடிகேளே -
சோலை
சூழும் திருவானைக்காவில்
உறையும் கடவுளே;
(அடிகேளே
என்பதில் -
ஏ
– ஈற்றசை);
11)
முன்னம் மாலுக் கருள்வாய் ஆழிதனை
.. முனிவர் மகற்கீந் தாய்பால் ஆழிதனை
பன்னும் அடியார்க் கெல்லாம் உரியானே
.. பாய்ந்து வந்த பகட்டின் உரியானே
முந்நீர் நஞ்சை உண்ணக் கையானே
.. முதல்வா தாவும் மானார் கையானே
பொன்னார் சடைநீர் நோக்கும் அம்மானே
.. பொழில்சூழ் திருவா னைக்கா அம்மானே.
ஆழி
-
1) சக்கராயுதம்;
2) கடல்;
மகற்கு
ஈந்தாய் -
மகனுக்குக்
கொடுத்தாய்;
பன்னுதல்
-
புகழ்தல்;
பாடுதல்;
பகடு
-
ஆண்
யானை;
உரியான்
-
1) உரியவன்;
2) தோலை
அணிபவன்;
(சம்பந்தர்
தேவாரம் -
2.61.9 - "... எங்கள்
பெருமான் என்பார்கட்கு உரியான்
...")
முந்நீர்
-
கடல்;
கைத்தல்
-
வெறுத்தல்;
கோபித்தல்;
வருந்துதல்;
மான்
ஆர் கையான் -
மான்
பொருந்திய கரத்தை உடையவன்;
அம்மான்
-
1) அந்த
மான்;
2) கடவுள்;
தந்தை;
முன்னம்
மாலுக்கு அருள்வாய் ஆழிதனை
-
முன்பு
திருமாலுக்குச் சக்கராயுதத்தை
அளித்தவனே;
முனிவர்
மகற்கு ஈந்தாய் பால் ஆழிதனை
-
வியாக்கிரபாத
முனிவர் புதல்வனாகிய
உபமன்யுவிற்குப் பாற்கடலையே
அழைத்து வழங்கியவனே;
பன்னும்
அடியார்க்கு எல்லாம் உரியானே
-
புகழ்ந்து
பாடும் பக்தர்களுக்கு உரியவனே;
பாய்ந்து
வந்த பகட்டின் உரியானே -
விரைந்தோடித்
தாக்க வந்த யானையின் தோலை
உரித்துப் போர்த்தவனே;
முந்நீர்
நஞ்சை உண்ணக் கையானே -
தேவர்கள்
வேண்டியபொழுது கடலில் எழுந்த
விஷத்தை வெறாமல்
(வெறுத்து
ஒதுக்காமல்)
உண்டவனே;
முதல்வா
தாவும் மான் ஆர் கையானே -
முதல்வனே;
தாவும்
மானை ஏந்திய கரத்தினனே;
பொன்
ஆர் சடை நீர் நோக்கும் அம்
மானே -
உன்
பொற்சடையில் இருக்கும்
கங்கையைப் பார்க்கும்
அந்த மான்;
பொழில்சூழ்
திருவானைக்கா அம்மானே -
சோலை
சூழும் திருவானைக்காவில்
உறையும் கடவுளே;
(திருப்பல்லாண்டு
-
திருமுறை
9.29.9
-
பாலுக்குப்
பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச்
சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும்
அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து
நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பாலை
உண்பதற்கு வியாக்கிரபாத
முனிவர் புதல்வனாகிய உபமன்யு
என்ற சிறுவன் விரும்பிப்
பால்பெறாது அழுது வருந்த,
அவனுக்குப்
பாற்கடலையே அழைத்து வழங்கிய
பெருமான்;
ஒரு
காலத்தில் திருமாலுக்குச்
சக்கராயுதத்தை அருள் செய்தவன்;)
அன்போடு,
வி. சுப்பிரமணியன்
பிற்குறிப்பு :
1) தருமை ஆதீனம் வெளியிட்ட பெரியபுராண உரையில் காணும் விளக்கம்:
திருவியமகம் : திருஇயமகம்: `யமகம்' என்பது வடசொல். தமிழ் வழக்குப்படி யகரம் மொழிமுதற்கண் வாராமையின் இகரம் பெற்று இயமகம் ஆயிற்று. ஓரடியில் முன் வைத்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது இவ்வகையதாம். இதனை `மடக்கு ' என்றும் கூறுவர்.
2) சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 3.113.1 - திருவியமகம் -
உற்றுமை
சேர்வது மெய்யினையே உணர்வது
நின்னருண் மெய்யினையே
கற்றவர்
காய்வது காமனையே கனல்விழி
காய்வது காமனையே
அற்ற
மறைப்பது முன்பணியே அமரர்கள்
செய்வது முன்பணியே
பெற்று
முகந்தது கந்தனையே பிரம
புரத்தை யுகந்தனையே.
----------------- ----------------
No comments:
Post a Comment