Tuesday, August 18, 2015

01.59 – பொது - (போற்றிப் பாட ஏதம் ஓடும்)

01.59 – பொது - (போற்றிப் பாட ஏதம் ஓடும்)



2010-01-10 - 2010-01-16
பொது
"போற்றிப் பாட ஏதம் ஓடும்"
-------------------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம். 1,3,5 சீர்களில் எதுகை.
ஈரடிகளுக்கிடையே அடி ஈற்றில் இயைபு)



1) --- 6 தேமா + கூவிளம் ---
மாத வர்கள் ஆத ரிக்கும் தாதை, ஆதி வானவன்;
தூத னாகி வீதி தன்னில் பாதம் நோவப் போனவன்;
வேதன் அண்டர் நாதன் என்று காத லோடு பாடுமே
வாதை செய்யும் ஏத மொன்றும் மீத மின்றி ஓடுமே.



அடி-2 - சுந்தரர்க்காகத் திருவாரூரில் பரவையாரிடம் தூது சென்றதைச் சுட்டியது.
மா தவர்கள் - பெரும் தவசியர்;
ஆதரிக்கும் - விரும்பும்; போற்றும்;
தாதை - தந்தை;
அண்டர் நாதன் - தேவர் தலைவன்;
காதலோடு - பக்தியோடு; அன்போடு;
பாடும் - பாடுவீர்;
வாதை - துன்பம்;
ஏதம் - குற்றம்; வினை;
ஓடும் - விரைவில் தீர்ந்துவிடும்;



2) --- தானா தனனா தானா தனனா தானா தனனா தனதானா ---
எந்தாய் இறைவா சிந்தா மணியே பந்தார் விரலாள் ஒருபங்கா
முந்தாய் இடையாய்ப் பிந்தாய் வருவாய் வெந்தார் பொடியாய் மிகுதுங்கா
நந்தா ஒளியே அந்தார் அணிவாய் வெந்தீ விழியாய் கதிநீயே
எந்தீ வினைகள் வந்தார்த் திடுமுன் இந்தா எனவந் தருள்வாயே.



பதம் பிரித்து:
எந்தாய்; இறைவா; சிந்தாமணியே; பந்தார் விரலாள் ஒரு பங்கா;
முந்தாய் இடையாய்ப் பிந்தாய் வருவாய்; வெந்தார் பொடியாய்; மிகு துங்கா;
நந்தா ஒளியே; அம் தார் அணிவாய்; வெம் தீ விழியாய்; கதி நீயே;
எம் தீ வினைகள் வந்து ஆர்த்திடுமுன் இந்தா என வந்து அருள்வாயே.


சிந்தாமணி - சிந்தாமணிபோல அன்பர்க்கு அவர் விரும்பியவற்றைக் கொடுப்பவன்;
அழியாத மணியே என்றும் பொருள்கொள்ளலாம். (சிந்துதல் - அழிதல்; - சம்பந்தர் தேவாரம் - 2.18.2 - 'சிந்தாய் எனுமால் ...');
பந்தார் விரலாள் ஒரு பங்கன் - பந்தாடும் விரலை உடைய பார்வதி ஒரு பாகமாக உள்ளவன்;
(பந்தணை மெல்விரலாள் - பந்துசேர் விரலாள் பங்க - இது மகளிரின் பொது இயல்பு குறித்ததன்றி உமையம்மையார் பந்தாடுகின்றார் என்பதன்று. 1.80.3 - 'மையா ரொண்கண்ணார் ...கையாற் பந்தோச்சுங்...')
முந்தாய் இடையாய்ப் பிந்தாய் வருவாய் - முதல் நடு இறுதியும் ஆனவனே;
வெந்தார் பொடியாய் - எரிக்கப்பட்டவருடைய சாம்பலைப் பூசியவனே; வெந்து நிறைந்த திருநீற்றை அணிந்தவனே; ('சுடலைப்பொடிபூசி')
(அப்பர் தேவாரம் - 6.6.10 - "வெந்தார் சுடலைநீ றாடும்மடி";
சுந்தரர் தேவாரம் - 7.24.7 - "வெந்தார் வெண்பொடியாய்";)
துங்கன் - உயர்ந்தவன்;
நந்தா ஒளி - அவியாத சோதி;
அம் தார் அணிவாய் - அழகிய மாலை சூடுபவனே;
வினைகள் வந்து ஆர்க்கும் முன் - ஆரவாரித்து வினைகள் வருமுன்; வினைகள் வந்து பிணிக்கும் முன்;
இந்தா - இதை வாங்கிக்கொள் என்னுங் குறிப்புமொழி;



3) --- தானா தனனா தானா தனனா தானா தனனா தனதானா ---
மன்னே மணியே பொன்னார் உருவா மின்னேர் சடையா மதன்அட்டாய்
உன்னார்க் கரியா இன்னார் எயில்கள் முன்னீ றெழவோர் கணைதொட்டாய்
தென்னா சிவனே என்னோர் அரண்நீ என்றே தொழுதால் வருமாடே
துன்னா வினைகள் இன்னா அடையா அன்னார் உறைவார் அரனோடே.



பதம் பிரித்து:
"மன்னே; மணியே; பொன் ஆர் உருவா; மின் நேர் சடையா; மதன் அட்டாய்;
உன்னார்க்கு அரியா; இன்னார் எயில்கள் முன் நீறு எழ ஓர் கணை தொட்டாய்;
தென்னா; சிவனே; என் ஓர் அரண் நீ" என்றே தொழுதால் வரும் மாடே;
துன்னா வினைகள்; இன்னா அடையா; அன்னார் உறைவார் அரனோடே;


"அரசனே / அழிவில்லாதவனே; மணியே; பொன் போன்ற மேனியனே; மின்னல் போன்ற சடை உடையவனே; மன்மதனை எரித்தவனே; நினையாதவர்களுக்கு அரியவனே; பகைவரின் முப்புரங்களும் சாம்பலாக முன்பு ஒரு கணை தொடுத்தவனே; அழகனே/இனியவனே; சிவனே; என் ஒப்பில்லாத பாதுகாவல் நீயே" என்று வணங்கினால் செல்வம் வரும்; வினைகள் நெருங்கமாட்டா; துன்பங்கள் அடையமாட்டா; அவர்கள் சிவலோகத்தில் இருப்பார்கள்.



4) --- தானா தனனா தானா தனனா தானா தனனா தனதானா ---
பொங்கார் அழலாய் அங்கே உயர்வாய் சங்கார் கரமால் அடிதேடும்
மங்கா ஒளியே கங்கா தரனே துங்கா எனநாத் துதிபாடும்
வெங்கான் அதையே அங்கா எனுமா றெங்கோன் நடம்நீ புரிவாயே
கொங்கார் மலராள் பங்கா துணைவே றிங்கார் உடனே வருவாயே.



பதம் பிரித்து:
"பொங்கு ஆர் அழலாய் அங்கே உயர்வாய்; சங்கு ஆர் கர மால் அடி தேடும்
மங்கா ஒளியே; கங்காதரனே; துங்கா" என நாத் துதி பாடும்;
"வெம் கான் அதையே அம் கா எனுமாறு எம் கோன் நடம் நீ புரிவாயே;
கொங்கு ஆர் மலராள் பங்கா; துணை வேறு இங்கு ஆர்; உடனே வருவாயே".


சங்கு ஆர் கர மால் - சங்கினை ஏந்திய கரத்தை உடைய திருமால்;
மங்கா ஒளி - அழிவில்லாத சோதி;
துங்கன் - உயர்ந்தவன்;
வெம் கான் அதையே அம் கா எனுமா(று) எம் கோன் நடம் நீ புரிவாயே - சுடுகாட்டையே அழகிய குளிர்ந்த சோலை என்று கருதும்படி அங்கே எம் தலைவனாகிய நீ திருநடம்செய்வாய்;
கொங்(கு) ஆர் மலராள் பங்கா - வாச மலர்கள் சூடிய பார்வதியை ஒரு பங்காக உடையவனே;
துணை வே(று) இங்(கு) ஆர்; உடனே வருவாயே - உன்னையன்றி வேறு யார் எனக்குத் துணை? என்னைப் பிரியாமல் உடன் வருவாயாக! (--அல்லது-- சீக்கிரம் வந்தருள்வாயாக);



5) --- 6 புளிமா + புளிமாங்காய் ---
பழையன் புதியன் மழையின் நிறமும் இழையும் மிடறன் ஒருகாதில்
குழையும் அணியும் குழகன் மழுவன் மழவெள் விடையன் முடிமீதில்
சுழலும் புனலன் தழையும் சடையன் அழலின் உருவன் சுடுகாடே
விழையும் ஒருவன் கழலை நினைமின் கழலும் வினைகள் அடியோடே



பழையன் புதியன் - அனைத்திற்கும் முன்பும் பின்பும் இருப்பவன்;
மழையின் நிறமும் இழையும் மிடறன் - மேகத்தின் நிறம் தோன்றும் கண்டத்தை உடையவன்;
ஒரு காதில் குழையும் அணியும் குழகன் - அர்த்தநாரீஸ்வரனாக ஒரு காதில் குழையும் இன்னொரு காதில் தோடும் அணிகிற அழகன்;
மழுவன் மழவெள் விடையன் - மழுவாயுதம் ஏந்துபவன்; இள வெள்ளை எருதின்மேல் வருபவன்;
முடிமீதில் சுழலும் புனலன் தழையும் சடையன் - தலையில் சுழன்று பாயும் கங்கையை உடையவன்; தழைகிற சடையை உடையவன்;
அழலின் உருவன் - தீப்போன்ற திருமேனி உடையவன்;
சுடுகாடே விழையும் ஒருவன் கழலை நினைமின் - சுடுகாட்டை விரும்பும் ஒப்பற்ற சிவனாரின் திருவடிகளை நினையுங்கள்;
கழலும் வினைகள் அடியோடே - உங்கள் வினைகள் அடியோடு தீர்ந்து போகும்;



6) --- 6 புளிமா + புளிமாங்காய் ---
தினமும் மலரும் புனலும் இடுநல் மனமுள் ளவர்கட் கெளிதாவான்
தனமும் தருவான் வினையும் களைவான் நினையும் வரமும் மிகவீவான்
சினநல் விடையான் முனைநாள் அமுதே எனநஞ் சினையும் மகிழ்வானே
அனலின் உருவன் கனலும் விழியன் வனமென் முலையாள் உமைகோனே.



பதம் பிரித்து:
தினமும் மலரும் புனலும் இடு நல் மனம் உள்ளவர்கட்கு எளிது ஆவான்;
தனமும் தருவான்; வினையும் களைவான்; நினையும் வரமும் மிக ஈவான்;
சின நல் விடையான்; முனை நாள் அமுதே என நஞ்சினையும் மகிழ்வானே;
அனலின் உருவன்; கனலும் விழியன்; வன மென் முலையாள் உமை கோனே.


சின நல் விடை - சினக்கிற (கோபிக்கிற) நல்ல இடபம்; (அப்பர் தேவாரம் - 4.2.1 – "சுண்ணவெண் ... அண்ணல் அரண் முரண் ஏறும் ...." - சிவனாரின் இடபம் அடியவர்களுக்குக் காவலாக இருக்கும். அல்லாதவர்களோடு போர்செய்யும். அதனால் சின நல் விடை.)
முனை நாள் - முன்னொரு காலத்தில்;;
அமுதே என - அமுது என்றே;
அனலின் உருவன் - தீப்போன்ற மேனியன்;
கனலும் விழியன் - தீ உமிழும் நெற்றிக்கண்ணன்;
வனம் - அழகு;



7) --- புளிமா தேமா புளிமா தேமா புளிமா தேமா புளிமாங்காய் ---
விழியில் தீயாய் இழியும் வானீர்ச் சுழியும் ஏற்றாய் விடமுண்டாய்
பழியில் சீராய் அழிவில் லாதாய் எழில்கொள் மாதை இடங்கொண்டாய்
இழிவில் லாத வழியும் ஆனாய் கழிசூழ் காழி உறைவோனே
குழியில் வீழ்த்தும் கழிபா வங்கள் கழிய உன்னைத் தொழுவேனே



பதம் பிரித்து:
விழியில் தீயாய்; இழியும் வான் நீர்ச் சுழியும் ஏற்றாய்; விடம் உண்டாய்;
பழி இல் சீராய்; அழிவு இல்லாதாய்; எழில்கொள் மாதை இடம் கொண்டாய்;
இழிவு இல்லாத வழியும் ஆனாய்; கழி சூழ் காழி உறைவோனே;
குழியில் வீழ்த்தும் கழி பாவங்கள் கழிய உன்னைத் தொழுவேனே.


இழிதல் - இறங்குதல்; விழுதல்;
வான் நீர் - கங்கை;
பழி இல் சீராய் - குற்றமற்ற புகழ் உடையவனே;
கழி - கடலையடுத்த உப்புநீர்ப் பரப்பு (Back- water, shallow sea-waters, salt river, marsh);
காழி - சீகாழி என்ற தலம்;
கழி - மிகுந்த.(Much, great, excessive, extreme); (கழி பாவங்கள் - பெரும்பாவங்கள்);
கழிதல் - ஒழிந்துபோதல்; முடிவடைதல்;



8) --- தேமா புளிமா தேமா புளிமா தேமா புளிமா புளிமாங்காய் ---
குன்றை அசைக்கச் சென்ற அரக்கன் கன்றி அரற்ற விரல்கொண்டே
அன்று நெரித்து நன்று கொடுத்த உன்றன் அருட்கும் அளவுண்டே?
என்றும் இருக்கும் நின்றன் கழற்குத் துன்றிப் பிணைத்த மலரிட்டே
ஒன்றித் துதிக்க வென்றி சிறக்கும் பொன்றும் பிணித்த வினைக்கட்டே.



கன்றுதல் - வருந்துதல்; நோதல்;
உண்டே - உண்டோ - வினா ஏகாரம்;
துன்றுதல் - நெருங்குதல்;
ஒன்றுதல் - மனம் ஒன்றுதல்;
வென்றி - வெற்றி;
பொன்றுதல் - அழிதல்;


கயிலையைப் பெயர்த்து எறிவேன் என்று எண்ணிச் சென்ற இராவணன் வருந்திப் புலம்பும்படி அவனை ஒரு விரலால் நசுக்கிப் பின் அவன் பாடலுக்கு இரங்கி வரம் கொடுத்த உன் அருளுக்கும் ஓர் அளவு உண்டோ? அழிவில்லாத உன் திருவடிக்குத் தொடுத்த மலர்களை இட்டு மனம் ஒன்றித் துதித்தால், வெற்றி சிறக்கும்; பிணித்திருந்த வினைக்கட்டும் அழியும்.



9) --- 6 புளிமா + புளிமாங்காய் ---
கரியின் உரியன், பெரிதின் பெரியன், கரியன் பிரமன் அடிகாணார்;
திரியும் எயில்கள் எரிய நகைசெய் கரிய மிடறன் அடிபேணார்,
பெரிய வினைகள் பிரிதற் கரியர்; பிரிய அரிவை ஒருகூறே
தெரியும் இறைவன் பரியும் அடியர் புரிவல் வினைகள் அறுமாறே.



கரியின் உரியன், பெரிதின் பெரியன் - யானைத்தோல் போர்த்திய சிவபெருமான், எல்லாவற்றினும் பெரியவனாக இருப்பவன்;
கரியன் பிரமன் அடி காணார் - திருமாலும் பிரமனும் அவன் திருவடியைக் காணார்;
திரியும் எயில்கள் எரிய நகைசெய் கரிய மிடறன் அடி பேணார், பெரிய வினைகள் பிரிதற்கு அரியர் - விண்ணில் திரியும் முப்புரங்களும் எரியும்படி சிரித்த நீலகண்டனின் திருவடிகளைப் போற்றாதவர், தங்களது கொடிய வினைகளை நீங்கமாட்டார்;
பிரிய அரிவை ஒரு கூறே தெரியும் இறைவன் பரியும் அடியர் புரிவல் வினைகள் அறுமாறே - அன்போடு பார்வதியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக்கொண்ட இறைவன், தன் அடியவர்களின் முன்வினை எல்லாம் நீங்கும்படி இரங்கி அருள்வான்;
பரியும் - பரிவான் - அன்பு கொள்வான்; இரங்குவான்;
(இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்: "258. செய்யும் என்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.
உதாரணம்: அவனுண்ணும்; அவளுண்ணும்;).
(காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம் - "எட்டி இலவம் .... கூளி பாடக் குழகன் ஆடுமே".
சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - 'சடையாய் எனுமால்...' - 'எனும்', 'விழும்' - செய்யும் என்னும் வாய்பாட்டு முற்று வினை; ஈண்டுப் பெண்பாற்கு வந்தது.)



10) --- தேமா தேமா தேமா தேமா தேமா தேமா கருவிளங்காய் ---
உள்ள தொன்றும் உள்ள மாட்டார்; விள்ள மாட்டார் இதமொழியே;
கள்ளம் என்றும் தள்ள மாட்டார்; கொள்ள வேண்டா அவர்வழியே;
உள்ளம் ஒன்றி வள்ளல் இன்ப வெள்ளன் எந்தை திருநடனே
நள்ளும் நல்லர் உள்ளு றைந்து கள்ளு குப்பன் அரனுடனே.



உள்ளுதல் - எண்ணுதல்;
விள்ளுதல் - 1) சொல்லுதல்;
இத மொழி - நலம் தரும் சொற்கள்;
கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் (To adhere to, observe); நன்குமதித்தல் (To regard);
நடன் - கூத்தன்;
நள்ளுதல் - விரும்புதல்;
கள் உகுத்தல் - தேன் சொரிதல்;


உள்ளது ஒன்றும் உள்ள மாட்டார் - உண்மைப் பொருளைச் சிந்திக்கமாட்டார்;
விள்ள மாட்டார் இத மொழியே - நன்மை தரும் சொற்கள் சொல்லமாட்டார்;
கள்ளம் என்றும் தள்ள மாட்டார் - வஞ்சத்தைத் தவிர்க்கமாட்டார்;
கொள்ள வேண்டா அவர் வழியே - அத்தகையோரின் வழியை மதியாதீர்; (பொருளாகக் கருதவேண்டா);
உள்ளம் ஒன்றி வள்ளல் இன்ப வெள்ளன் எந்தை திருநடனே - ஒன்றிய மனத்தர் ஆகி, வள்ளலும் இன்ப வெள்ளம் அளிப்பவனும் ஆன எம் அப்பனைத், திருநடம் செய்பவனை -
நள்ளும் நல்லர் உள் உறைந்து கள் உகுப்பன் அரன் உடனே - விரும்புகிற நல் அடியவர்களின் அகமே கோயிலாக உறைந்து சிவபெருமான் இன்பத் தேனைச் சொரிவான்.



11) -- 6 தேமா + புளிமாங்காய் --
ஈடி லாதாய் கேடி லாதாய் கோடி காவாய் பிறைசூடீ
பாடி லாதாய் காடில் லாக வீடி னாரின் பொடியாடீ
நாடி உன்சீர் பாடி அன்பில் கூடி நின்றேன் பரிதாயே
தேடி வந்த கோடி பாவம் ஓடிப் போக அருள்வாயே



பதம் பிரித்து:
ஈடு இலாதாய்; கேடு இலாதாய்; கோடிகாவாய்; பிறை சூடீ;
பாடு இலாதாய்; காடு இல் ஆக, வீடினாரின் பொடி ஆடீ;
நாடி, உன் சீர் பாடி, அன்பில் கூடி நின்றேன்; பரி தாயே;
தேடி வந்த கோடி பாவம் ஓடிப் போக அருள்வாயே.


ஈடு இலாதாய்; கேடு இலாதாய் - ஒப்பற்றவனே; அழிவற்றவனே;
கோடிகாவாய் - திருக்கோடிகா என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே;
பிறைசூடீ - பிறையைச் சூடுபவனே;
பாடு இலாதாய் - துன்பம் இல்லாதவனே; (பாடு - வருத்தம் - Affiction, suffering, hardship);
காடு இல் ஆக - சுடுகாடே இடமாக; (அப்பர் தேவாரம் - 4.37.5 - "காடிடமாக நின்று...");
வீடினாரின் பொடி ஆடீ - சுடலைப் பொடிபூசி - இறந்தாரின் சாம்பலைப் பூசியவனே;
நாடி, உன் சீர் பாடி, அன்பில் கூடி நின்றேன் - உன்னை நாடி, உன் புகழைப் பாடி, உன்மேல் மிகுந்த பக்தியோடு உள்ளேன்;
பரி தாயே - தாயே இரங்குவாயாக; (வினைத்தொகையாக, 'இரங்கும் தாயே' என்றும் கொள்ளலாம்);
தேடி வந்த கோடி பாவம் ஓடிப் போக அருள்வாயே - என்னைத் தேடி வந்த அளவில்லாத தீவினைகள் யாவும் அழிய அருள்புரிவாயாக;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
எழுசீர்ச் சந்த விருத்தம்.
பாடல்தோறும் அடிதோறும் 1,3,5 சீர்களில் எதுகை. (இதைத் தாஅவண்ணம் என்று கருதலாம்);
ஒவ்வொரு பாடலிலும் ஈரடிகளுக்கிடையே அடி ஈற்றில் இயைபு - அடி 1&2 இடையே ஈற்றில் இயைபு; அடி 3&$ இடையே ஈற்றில் இயைபு. (இயைபுத்தொடை = end rhyme);
-------



(தேடியதில் திரிகூடராசப்பரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில் சில பாடல்கள் இதே போல் அடிக்குள் சீர் எதுகை அமையப்பெற்று வந்துள்ளதைக் கண்டேன்.
"வஞ்சி எழிலப ரஞ்சி வரிவிழி நஞ்சி முழுமற நெஞ்சி பலவினில்...."
"வல்லை நிகர்முலை இல்லை யெனுமிடை
.. வில்லை யனநுதல் முல்லை பொருநகை ....")

------------------- 

No comments:

Post a Comment