Saturday, August 29, 2015

02.15 – திருமாற்பேறு - ("திருமால்பூர்”)

02.15 – திருமாற்பேறு - ("திருமால்பூர்”)



2011-03-25
திருமாற்பேறு - (இக்காலத்தில் "திருமால்பூர்”)
மாற்பேற்று அரன்தன்னைச் சிந்தி
---------------------------------------------
(திருத்தாண்டக அமைப்பு - எண்சீர் விருத்தம். பொதுவாகக் 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு. ஒரோவழி காய்ச்சீர் வருமிடத்தில் விளம் / மா வரும். அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 6.1.1 - அரியானை அந்தணர்தம்)



1)
கள்ளமலி புலன்கள்செய் சூழ்ச்சி யாற்சேர்
.. கவலைமலி இந்நிலைபோய்க் களிக்க வேண்டில்
வள்ளிமண வாளனவன் தாதை தன்னை
.. மயிலன்ன மலைமகள்சேர் வாமத் தானை
வெள்ளிமலை போல்விடையை விரும்பு வானை
.. மெய்ப்பொருளை வேண்டுவரம் நல்கு வானைத்
தெள்ளுபுனல் நிறைவாவி சூழ்ந்த சீரார்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



கவலைமலி இந்நிலை - கவலைகள் மிக்க இந்த நிலைமை;
வள்ளி மணவாளனவன் தாதை - வள்ளி கணவனான முருகனுக்குத் தந்தை;
வாமம் - இடப்பக்கம்;
மெய்ப்பொருளை வேண்டுவரம் நல்குவானை - "மெய்ப்பொருளை நல்குவானை, வேண்டுவரம் நல்குவானை" என்றும் பொருள்கொள்ளலாம்;
தெள்ளு புனல் நிறை வாவி - தெளிந்த நீர் நிறைந்த நீர்நிலைகள்;
திருமாற்பேற்று அரன்தன்னை - திருமாற்பேற்றில் உறையும் சிவபெருமானை;





2)
நாம்பண்ணு வினைவந்து நலியா முன்னம்
.. நல்லரணம் ஒன்றடைய வேண்டு வாயேல்
வீம்பின்றி என்சொல்கேள் கீற்றுப் போல
.. வெண்டிங்கள் விளங்குகின்ற முடியின் மேலே
பாம்பொன்றை வைத்தவனைப் பரமன் தன்னைப்
.. பாடலுக்குப் பரிசளிக்கும் மலரை நாடித்
தீம்பண்ணை முரல்வண்டார் சோலை சூழும்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



நலியா முன்னம் - வருத்துவதன்முன்; (நலித்தல் - To afflict, cause distress; துன்புறுத்துதல்);
அரணம் - காவல் (Protection);
ஏல் - என்றால் (If, used as an ending in a conjuctional sense, as in வந்தாயேல்);
வேண்டுவாயேல் - விரும்பினால்;
வெண்டிங்கள் - வெண் திங்கள்;
தீம் பண்ணை முரல் வண்டு ஆர் சோலை - இனிய பண்களை ஒலிக்கும் வண்டினங்கள் நிறைந்த பொழில்;



3)
நம்பழைய வினைவந்து நலியா முன்னம்
.. நல்லரணம் ஒன்றடைய வேண்டு வாயேல்
கம்பமத கரியுரிவைப் போர்வை யானைக்
.. கண்கள்மூன் றுடையானைப் போற்று வாரின்
வெம்பவநோய் தீர்த்தருளும் மருந்து தன்னை
.. விடையின்மேல் வருவானை வெண்ணீற் றானைச்
செம்பவள வெற்பன்ன மேனி யானைத்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



கம்ப மத கரி உரிவைப் போர்வையானை - தூணிலே கட்டக்கூடிய மத யானையின் தோலைப் போர்த்தவனை; அசையும் இயல்பினையுடைய மதயானையின் தோலைப் போர்த்தவனை; (கம்பம் - தூண்; அசைதல்); (உரிவை - தோல்);
வெம்பவநோய் - கொடிய பிறவிப்பிணி;
செம் பவள வெற்பு அன்ன மேனியானை - செம்மலை போன்ற திருமேனி உடையவனை;



4)
வந்துவந்து வருத்துகின்ற வினைக ளாலே
.. வாழ்கின்ற நாளெல்லாம் இடர்கள் பட்டு
நொந்துநொந்து சுழலாமல் என்றும் இன்பம்
.. நுகருகின்ற உபாயமொன்று வேண்டு வாயேல்
முந்திவந்த நஞ்சையுண்ட மிடற்றி னானை
.. முரலுகின்ற சுரும்பினங்கள் மகிழ நற்றேன்
சிந்துமந்த மலர்நிறைந்த சோலை சூழும்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



சுழல்தல் - சஞ்சலப்படுதல்; சோர்தல்;
நஞ்சை உண்ட மிடற்றினானை - நீலகண்டனை;
சிந்துமந்த மலர் - சிந்தும் அந்த மலர்; / சிந்தும் மந்த மலர்;
அந்தம் - அழகு;
மந்தம் - மிருதுத்தன்மை (Softness; freshness;);



5)
போகா வினையெல்லாம் தீயிற் பஞ்சாய்ப்
.. புகழும் அகலாத இன்பும் வேண்டில்
காகா எனக்கதறும் அடியார்க் காகக்
.. காலன் தனையுதைத்த தாளி னானைச்
சாகா வரமருளும் சம்பு தன்னைச்
.. சந்திரனைப் பொற்சடைமேல் தாங்கி னானைச்
சீகா மரம்பாடும் தேனார் சோலைத்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



போகா வினை எல்லாம் - தீராத வினைகள் எல்லாம்;
தீயிற் பஞ்சாய் - தீப்புக்க பஞ்சுபோல் சாம்பலாகி;
அகலாத இன்பு - நீங்காத இன்பம்;
காகா எனக் கதறும் அடியார்க்காக - காப்பாய் காப்பாய் என்று கதறிய மார்க்கண்டேயருக்காக;
சம்பு - இன்பத்தைத் தோற்றுவிப்பவன்;
சீகாமரம் - ஒரு பண்ணின் பெயர்; வண்டுகளின் ரீங்காரத்தைச் சுட்டியது;
தேன் ஆர் சோலை - வண்டுகள் நிறைந்த பொழில்;



6)
ஆய்மலர்கள் ஆயிரத்தில் ஒன்றைக் காணா(து)
.. அரிமலர்க்கண் இடந்திட்டு வாழ்த்த அன்பு
தோய்மனத்தைக் கண்டாழி அருள்செய் தானைத்
.. துதிப்பவரின் துன்பத்தைப் போக்கு வானைப்
பாய்நதியைப் படர்சடையுள் தடுத்தான் தன்னைப்
.. பகீரதற்குப் பரிந்ததனை விடுத்தான் தன்னைத்
தேய்மதியை முடியின்மேல் சூடி னானைத்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



ஆய் மலர்கள் - தேர்ந்தெடுத்த சிறந்த பூக்கள்;
அரி மலர்க்கண் இடந்து இட்டு வாழ்த்தவிஷ்ணு தன் மலர் போன்ற கண்ணைத் தோண்டித் திருவடியில் இட்டுப் போற்றி வணங்கவும்; (இடத்தல் - தோண்டுதல்);
ஆழி - சக்கராயுதம்;
பகீரதற்குப் பரிந்து அதனை விடுத்தான்தன்னை - பகீரதனுக்கு இரங்கிக் கங்கையைச் சற்றே விடுவித்தவனை;



7)
கொய்தவனைப் பிரமன்தன் சென்னி ஒன்றைக்,
.. கொண்டதவம் குலைக்கவெண்ணி மலரம் பொன்றை
எய்தவனை ஒருநொடியிற் சாம்பல் ஆக
.. எரித்தவனை, ஒலிக்கின்ற கழலைக் காலிற்
பெய்தவனை, ஐந்தெழுத்தை நாளும் ஓதிப்
.. பேணுமன்பர் தீவினைகள் எல்லாம் தீரச்
செய்தவனைச், செழுவயல்கள் சூழு கின்ற
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



கொய்தவனைப் பிரமன்தன் சென்னி ஒன்றை - பிரமனுடைய தலைகளில் ஒன்றைக் கொய்தவனை;
மலர் அம்பு ஒன்றை எய்தவனை - ஒரு மலர்க்கணை ஏவிய மன்மதனை;
கழலைக் காலிற் பெய்தவனை - காலில் கழல் அணிந்தவனை; (பெய்தல் - கட்டுதல்; அணிதல்);



8)
ஆர்த்தவனை அரைதனிலோர் நாகம் தன்னை,
.. ஐந்நான்கு தோள்களினால் மலையை அன்று
பேர்த்தவனை விரலொன்றால் அடர்த்துப் பின்னர்ப்
.. பேரருள்செய் பெம்மானை, ஆனைத் தோலைப்
போர்த்தவனை, அன்பர்க்குப் புகலா னானைப்,
.. பொன்முடிமேல் மதியோடு புற்ற ராவைச்
சேர்த்தவனைச், செங்கமலப் பாதத் தானைத்,
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



ஆர்த்தல் - கட்டுதல்;
ஆர்த்தவனை அரைதனிலோர் நாகம் தன்னை - அரைநாணாக ஒரு பாம்பைக் கட்டியவனை;
ஐந்நான்கு தோள்களினால் மலையை அன்று பேர்த்தவனை விரலொன்றால் அடர்த்து - இருபது புயங்களால் கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற இராவணனை ஒரு விரலால் நசுக்கி;
பின்னர்ப் பேரருள்செய் பெம்மானை - பின் மிகவும் அருள்புரிந்த பெருமானை;
புகல் - அடைக்கலம்;
புற்றரா - புற்று அரா - புற்றிற்பொருந்திய பாம்பு; (5.65.3 "புற்ற ராவினன் பூவனூ ரீசன்");



9)
பங்கயத்தில் உறைகின்ற பிரம னோடு
.. பாற்கடலில் பள்ளிகொள்ளும் அரியும் தேடி
அங்கயரும் படியுயரும் அழலா னானை
.. அடியாரை என்றென்றும் அகலா தானை
அங்கயல்போல் விழியாளோர் கூறா னானை
.. அலைசேரும் கங்கையடை முடியான் தன்னைத்
தெங்கயலே சேலுகளும் கழனி சூழும்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



அங்கயரும் படியுயரும் அழலா னானை - அங்கு அயரும்படி, உயரும் அழல் ஆனானை;
அழல் - தீ; சோதி;
அங்கயல்போல் - அம் கயல் போல் - அழகிய கயல்மீனை ஒத்த;
தெங்கு அயலே சேல் உகளும் கழனி சூழும் - தென்னைமரங்களின் அருகே சேல் மீன்கள் துள்ளும் வயல் சூழ்ந்த;



10)
தெய்வமொன்றைத் தெளியாமல் சிறுசொல் பேசித்
.. திரிகின்ற மூடர்கள் பொய்ம்மை நீங்காக்
கைதவர்கள் பேச்சையென்றும் பேணார் கற்றோர்;
.. கமலமொன்று குறைந்ததென்று திருமால் அன்று
கொய்ம்மலராக் கண்ணிடந்து போற்ற ஆழி
.. கருணையொடு தந்தருளும் தேவை, அன்பு
செய்தவர்தம் தீவினைகள் எல்லாம் தீர்க்கும்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



சிறுசொல் - இழிசொல் (Slighting language, word of contempt);
கைதவர் - வஞ்சகர்;
பேணார் - மதிக்கமாட்டார்கள்; (பேணுதல் - மதித்தல்);
கொய்ம்மலராக் கண் டந்து - கொய்த மலர் போலக் கண்ணைத் தோண்டி;
தேவை - தேவனை; (தே / தேவு - தெய்வம்);



11)
பொங்கரவத் தாரானைப் போற்று வார்க்குப்
.. போகங்கள் தருவானைப் பூதி யானை
வெங்கரியின் உரியானை அமுத மாக
.. விடந்தன்னை உண்டமணி மிடற்றி னானைச்
சங்கமொரு கரத்தானைச் சரண டைந்த
.. சந்திரனைத் தன்முடிமேல் தாங்கு வானைச்
செங்கமலப் போதலரும் வாவி சூழும்
.. திருமாற்பேற் றரன்தன்னைச் சிந்தி நெஞ்சே.



தார் - மாலை;
பொங்கு அரவத் தாரானை - சீறும் பாம்பை மாலையாகப் பூண்பவனை;
பூதி - திருநீறு; செல்வம்;
வெம் கரியின் உரியானை - கொடிய யானையின் தோலைப் போர்த்தவனை;
சங்கம் - கைவளை; வளையல்;
சங்கம் ஒரு கரத்தானை - அர்த்தநாரீஸ்வரனை;
சரண் - சரணம் - பாதம்; அடைக்கலம்;
தாங்குதல் - ஆதரித்தல்; அணிதல்; சுமத்தல்;
செங்கமலப் போது அலரும் வாவி - செந்தாமரைப் பூக்கள் மலரும் நீர்நிலை;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
திருமாற்பேறு - ("திருமால்பூர்") - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=155

-------------- --------------

No comments:

Post a Comment