Sunday, August 23, 2015

01.81 – கருவூர் - (கரூர்)

01.81 – கருவூர் - (கரூர்)



2010-10-10
கருவூர் - (கரூர்)
"கருவூர் அமர் கண்ணுதலான்"
--------------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானன தானன தானா'' என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.35.5 - 'நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்')



1)
நாவார்தமிழ் கொண்டரன் நற்புகழ் தன்னை
ஓவாதுரை பத்தருக் குற்றவன் ஆவான்
சேவார்கொடி காட்டிறை தேனமர் வண்டார்
காவார்கரு வூரமர் கண்ணுத லானே.



பதம் பிரித்து:
நா ஆர் தமிழ் கொண்டு அரன் நற்புகழ்தன்னை
ஓவாது உரை பத்தருக்கு உற்றவன் ஆவான்,
சே ஆர் கொடி காட்டு இறை, தேன் அமர் வண்டு ஆர்
கா ஆர் கருவூர் அமர் கண்ணுதலானே.


ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
சே - எருது;
கா - சோலை;
அமர்தல் - விரும்புதல்; உறைதல்;


நாவில் பொருந்திய தேவார, திருவாசகப் பாடல்களால் சிவனின் நல்ல புகழை எப்பொழுதும் உரைக்கும் அடியவர்களுக்கு உறுதுணை ஆவான்; காளைச் சின்னம் பொறித்த கொடியை உடைய இறைவன்; மதுவை நாடும் வண்டினம் ரீங்காரம் செய்யும் சோலைகள் நிறைந்த கருவூரில் (கரூரில்) எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்.



2)
செவியாற்சிவன் சீர்தனைக் கேட்டும கிழ்ந்து
கவியார்மண மாலைகள் கட்டிவ ணங்கில்
புவிமேல்வரும் புன்மையைத் தீர்த்தருள் பெம்மான்
கவினார்கரு வூரமர் கண்ணுத லானே.



சீர் - புகழ்;
கவி ஆர் மண மாலை - பாடல்கள் பொருந்திய நறுந்தொடை - பாமாலைகள்;
வணங்கில் - வணங்கினால்;
புவிமேல் வரும் புன்மை - 1) உலகில் மீண்டும் பிறக்கும் துன்பம்; 2) இவ்வுலக வாழ்வில் அனுபவிக்கும் துன்பம்;
கவின் ஆர் கருவூர் - அழகிய கரூர்;



3)
நாட்டம்பெரு மானென நாளுமுள் ளோர்க்கு
வாட்டந்தரும் வல்வினை மாய்வழி ஆவான்
தோட்டங்களில் தும்பிகள் இன்புறு கோலம்
காட்டுங்கரு வூரமர் கண்ணுத லானே.



நாட்டம் - விருப்பம்; நோக்கம்;
நாளும் - எந்நாளும்;
வாட்டம் தரும் வல்வினை மாய் வழி ஆவான் - இன்னல் விளைக்கும் வலிய வினைகளை அழிக்கும் நெறி / உபாயம் ஆவான்;
தும்பி - வண்டு;



4)
போனார்இவர் போயெரிப் பீரெனும் முன்னே
மானார்கரன் தாளிணை வாழ்த்திடில் நெஞ்சே
வானார்வினை தீர்த்தருள் வான்சிறை வண்டார்
கானார்கரு வூரமர் கண்ணுத லானே.



பதம் பிரித்து:
'போனார் இவர்; போய் எரிப்பீர்' எனும் முன்னே,
மான் ஆர் கரன் தாளிணை வாழ்த்திடில், நெஞ்சே,
வான் ஆர் வினை தீர்த்து அருள்வான், சிறை வண்டு ஆர்
கான் ஆர் கருவூர் அமர் கண்ணுதலானே.


ஆர் - ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல் / ஆர்த்தல் (ஒலித்தல்);
வான் - வானம்;
கான் - சோலை;


"இவர் போய்விட்டார்; உடலைக் கொண்டுபோய் எரிப்பீர்'” என்று பிறர் சொல்லும் நிலை அடைவதன் முன்னே, மானைக் கையில் ஏந்தும் சிவன் திருவடியை வாழ்த்துவாய் மனமே! அப்படி நீ செய்வாயேல், அழகிய சிறகுகளை உடைய வண்டுகள் நிறைந்த/ரீங்காரம் செய்கின்ற சோலைகள் நிறைந்த கருவூரில் (கரூரில்) எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன், வானளாவும் நம் வினைகளைத் தீர்த்து அருள்வான்.



5)
ஆய்மாமலர் கொண்டடி போற்றடி யார்மேல்
பாய்காலனை எட்டியு தைத்தவன் பாம்பு
சேய்மாமதி சேர்த்தவன் காமனின் தேகம்
காய்வான்கரு வூரமர் கண்ணுத லானே.



பதம் பிரித்து:
ஆய் மா மலர் கொண்டு அடி போற்று அடியார்மேல்
பாய் காலனை எட்டி உதைத்தவன்; பாம்பு
சேய் மா மதி சேர்த்தவன்; காமனின் தேகம்
காய், வான் கருவூர் அமர் கண்ணுதலானே.


ஆய்தல் - தேர்ந்தெடுத்தல்;
மா மலர் - சிறந்த பூக்கள்;
சேய் - பிள்ளை; இளமை;
வான் - அழகு; (காய்வான் - ஒரே சொல்லாகக்கொண்டு, 'காய்பவன்' என்றும் பொருள்கொள்ளலாம்);


தேர்ந்தெடுத்த சிறந்த பூக்களைக்கொண்டு திருவடியை வழிபடும் மார்க்கண்டேயர்மேல் பாய்ந்த காலனை எட்டி உதைத்தவன்; பாம்பையும் அழகிய இளம்பிறையையும் முடிமேல் சேர்த்து வைத்தவன்; மன்மதன் உடலைச் சாம்பல் ஆக்கிய, அழகிய கருவூரில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்.



6)
தெண்டன்செயும் அன்பரின் சிந்தையன் திங்கள்
துண்டன்மழு வாளொடு மூவிலைச் சூலன்
அண்டன்கடல் கக்கிய நஞ்சினை ஆர்ந்த
கண்டன்கரு வூரமர் கண்ணுத லானே.



தெண்டன் - வணக்கம்;
சிந்தை - மனம்;
திங்கட்டுண்டன் - திங்கள் துண்டன் - பிறையைச் சூடியவன்;
மூவிலைச் சூலன் - திரிசூலம் ஏந்தியவன்;
அண்டன் - கடவுள் (God, as Lord of the universe);
ஆர்தல் - உண்ணுதல்;
கடல் கக்கிய நஞ்சினை ஆர்ந்த கண்டன் - கடல் உமிழ்ந்த விஷத்தை உண்ட நீலகண்டன்;



7)
நீலந்திகழ் கின்றமி டற்றினன் நீறார்
கோலந்திகழ் மார்பினன் கூறுமை காட்டும்
சீலன்சுடு காட்டினில் தீயிடை ஆடும்
காலன்கரு வூரமர் கண்ணுத லானே.



நீலம் - கருமை;
மிடறு - கழுத்து;
நீறு ஆர் கோலம் - திருநீறு பொருந்திய கோலம்; (கோலம் - அழகு; உருவம்; தன்மை; அலங்காரம்);
கூறு உமை காட்டும் - ஒரு பங்கில் உமையைக் காட்டுகின்ற;
காலன் - திருவடியை உடையவன்


நீலகண்டன்; மார்பில் திருநீறு பூசியவன்; பார்வதிக்கு ஒரு பாதியைக் கொடுத்த பண்பினன்; சுடுகாட்டில் நெருப்பின் நடுவே நடம் செய்யும் திருவடியை உடையவன்; கருவூரில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்.



8)
உரத்தான்மலை வீசிட ஓடிய பத்துச்
சிரத்தான்அழ அம்மலை மேல்விரல் சேர்த்தான்
பரத்தான்பலி தேர்ந்துழல் பண்பினன் மானார்
கரத்தான்கரு வூரமர் கண்ணுத லானே.



உரத்தான்மலை - உரத்தால் மலை - தன்னுடைய பலத்தால் மலையை; (உரம் - பலம்; வலிமை);
பத்துச் சிரத்தான் - இராவணன்;
பரத்தான் - மேல் நிலையில் உள்ளவன்; (அப்பர் தேவாரம் - 6.50.9 - "பரத்தானை யிப்பக்கம் பலவா னானைப்....");
பலி தேர்தல் - பிச்சை ஏற்றல்;


தன் வலிமையைப் பெரிதாக எண்ணிக் கயிலைமலையைப் பிடுங்கி எறிய ஓடிய இராவணன் அழுது புலம்பும்படி தன் கால்விரல் ஒன்றை அம்மலை மேல் சிறிது இட்டு அவனை நசுக்கியவன்; மேல் நிலையில் உள்ளவன்; பிச்சையேற்றுத் திரியும் பண்பு உடையவன்; மானைக் கையில் ஏந்தும் அப்பெருமான் கருவூரில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்.



9)
மடந்தான்மிக வாதுசெய் மாகடல் மீது
கிடந்தான்மலர் மேலுறை நான்முகன் கீழ்மேல்
இடந்தான்அறி யாஎரி யாகிமண் விண்ணைக்
கடந்தான்கரு வூரமர் கண்ணுத லானே.



மடம் - அறியாமை;
மா கடல்மீது கிடந்தான் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;
மலர்மேல் உறை நான்முகன் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
கீழ் மேல் இடம்தான் அறியா எரி ஆகி - அடித்தலமும் முடியும் அறியாத சோதியாகி;


அறியாமையே மிக வாதுசெய்த திருமால் பிரமன் என்ற இவர்களால் அடியும் முடியும் அறிய இயலாத சோதி கி எல்லா அண்டங்களையும் கடந்து நின்றவன் கருவூரில் எழுந்தருளியிருக்கும் நெற்றிக்கண்ணன்.



10)
பொய்யர்க்கலர் இட்டரன் பொன்னடி போற்றாக்
கையர்க்கலர் தூற்றிடு வார்க்கிலன் காதல்
செய்யன்பருக் கன்பினன் செய்யவன் தீயார்
கையன்கரு வூரமர் கண்ணுத லானே.



பதம் பிரித்து:
பொய்யர்க்கு அலர் இட்டு அரன் பொன்னடி போற்றாக்
கையர்க்கு, அலர்தூற்றிடுவார்க்கு இலன்; காதல்
செய் அன்பருக்கு அன்பினன்; செய்யவன்; தீ ஆர்
கையன்; கருவூர் அமர் கண்ணுதலானே.


பொய்யர் - பொய்ம்மை மிக்க மனம் உடையவர்கள்; பொய்யே பேசுபவர்கள்;
அலர் - மலர்; பூ;
கையர் - கீழோர்;
அலர்தூற்றுதல் - பழித்துக் கூறுதல்;
இலன் - அருள் இல்லாதவன்;
காதல் - அன்பு; பக்தி;
செய்யவன் - சிவந்த திருமேனியன்;
தீ ஆர் கையன் - தீயை ஏந்திய கையை உடையவன்;



11)
விருத்தன்மலை யான்மகள் மேனியில் கூறாம்
அருத்தன்கழல் ஆர்த்திடத் தில்லையில் ஆடும்
நிருத்தன்தினம் சேவடி கைதொழும் நேயர்
கருத்தன்கரு வூரமர் கண்ணுத லானே.



விருத்தன் - முதியவன்;
அருத்தன் - பொருளானவன் (அர்த்தம் - பொருள்; செல்வம்); அருத்தநாரீஸ்வரன்; (அருத்தம் - அர்தம் - பாதி); (சம்பந்தர் தேவாரம் - 2.33.7 - "நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை பாதியர்...");
ஆர்த்தல் - ஒலித்தல்;
நிருத்தன் - கூத்தன்;
கருத்தன் - மனத்தில் இருப்பவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இத்தலத்தைத் தரிசிப்பதன்முன் மனத்தால் உன்னிப் பாடியது இப்பதிகம்.
2) இப்பதிகத்தின் யாப்பு அமைப்பு :
  • சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானன தானன தானா'' என்ற சந்தம்.
  • சில பாடல்களில் அடியின் முதற்சீர் தனனாதன என்றும் வரும்.
  • முதல் மூன்று சீர்களின் ஈற்றில் குறில் / குறில்+ஒற்று அமையும்;
  • சம்பந்தர் பதிகத்தில் "தானன" என்ற விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி "தான" என்ற மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கக் காணலாம்.
  • ஒரோவழி அடியின் ஈற்றுச் சீர் தனனா என்ற அமைப்பில் வரும்.



3) சம்பந்தர் தேவாரம் - 2.35.1 -
பரவக்கெடும் வல்வினை பாரிடஞ் சூழ
இரவிற்புறங் காட்டிடை நின்றெரி யாடி
அரவச்சடை யந்தணன் மேய வழகார்
குரவப்பொழில் சூழ்குரங் காடு துறையே..

----------------- ----------------

No comments:

Post a Comment