Thursday, August 13, 2015

01.45 – ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

01.45ஒற்றியூர் - (திருவொற்றியூர்)



2008-12-21
திருவொற்றியூர்
"பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே"
-----------------------------
(எழுசீர்ச் சந்த விருத்தம். "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - தென்திருமுல்லைவாயில் - பண் : பியந்தைக்காந்தாரம்
"துளிமண்டி ண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")



1)
அரவம்பி டித்து வரைமத்து கொண்டு திரையாழி தன்னை முனைநாள்
சுரர்தான வர்கள் கடைகின்ற போது சுடுநஞ்சு தோன்றி யதனால்
அரனாரை அண்டி அடிபோற்றி வேண்ட அதையுண்டு காத்த மிடறன்
பரனாரி பாகன் பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
அரவம் பிடித்து, வரை மத்து கொண்டு, திரை ஆழி தன்னை முனை நாள்
சுரர் தானவர்கள் கடைகின்ற போது சுடு நஞ்சு தோன்றியதனால்,
அரனாரை அண்டி அடி போற்றி வேண்ட, அதை உண்டு காத்த மிடறன்;
பரன்; நாரி பாகன்; பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


அரவம் - பாம்பு;
வரை - மலை;
திரை ஆழி = அலை வீசும் கடல்;
முனை நாள் - முன்னை நாள் - முற்காலத்தில்;
சுரர் - தேவர்;
தானவர் - அசுரர்;
மிடறன் - கண்டன்; (மிடறு = கழுத்து);
நாரி பாகன் - அர்த்தநாரீஸ்வரன்;
பவன் - கடவுள் (God, as self-existent) - சிவன்;
மேவுதல் - உறைதல்;


(சம்பந்தர் தேவாரம் - 1.20.1:
தடநில வியமலை நிறுவிஒர் தழல்உமிழ் தருபட அரவுகொ(டு)
அடல்அசு ரரொ(டு)அம ரர்களலை கடல்கடை வுழிஎழு மிகுசின
விடம்அடை தருமிட(று) உடையவன் விடைமிசை வரும்அவன் உறைபதி
திடமலி தருமறை முறைஉணர் மறையவர் நிறைதிரு மிழலையே.)



2)
அழகான பந்தர் அதைநூற்று நாளும் அரனார்க்கு நல்ல பணிசெய்
இழைவாய்ச்சி லந்தி இருஞாலம் ஆள இனிதேய ருள்கள் புரிவான்
கழல்ஏத்தும் அம்மை கவலாத வாறு கணவன்பு சிக்க இனிய
பழம்ஈயும் எந்தை பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
அழகான பந்தர் அதை நூற்று, நாளும் அரனார்க்கு நல்ல பணி செய்
இழை வாய்ச் சிலந்தி இரு ஞாலம் ஆள இனிதே அருள்கள் புரிவான்;
கழல் ஏத்தும் அம்மை கவலாதவாறு கணவன் புசிக்க இனிய
பழம் ஈயும் எந்தை; பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


* அடிகள் 1,2 - கோச்செங்கணான் வரலாறு;
** அடி 3 - காரைக்கால் அம்மையார் வரலாறு;
பந்தர் - பந்தல் - சிலந்திவலை;
இரு ஞாலம் - பெரிய உலகு;
அம்மை - காரைக்கால் அம்மையார்;
கவலாதவாறு - மனம் கலங்காதபடி; (கவலுதல் - மனம்வருந்துதல் - To be distressed, anxious, troubled);
பழம் - இங்கே மாம்பழம்;



3)
திரிமூவ ரண்கள் செயுமின்னல் நீக்கி அருளென்று தேவர் அடைய
எரிகாற்று மாலும் இணையம்பை எய்ய இரதத்தில் ஏறி யதுமே
தரியாமல் அச்சு முரியப்பு ரங்கள் எரியச்சி ரித்த இறைவன்
பரிவோடு சென்று பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
"திரி மூ அரண்கள் செயும் இன்னல் நீக்கி அருள்" என்று தேவர் அடைய,
எரி காற்று மாலும் இணை அம்பை எய்ய இரதத்தில் ஏறியதுமே
தரியாமல் அச்சு முரியப், புரங்கள் எரியச் சிரித்த இறைவன்;
பரிவோடு சென்று பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


திரி மூ அரண்கள் - திரிந்த மூன்று கோட்டைகள்;
எரி காற்று மாலும் இணை அம்பு - அக்கினிதேவனை வலிய வாயாகவும், வாயுதேவனை இறகாகவும் கொண்ட திருமால் ஆகிய அம்பு (1.11.6 - "கல்லானிழற் ..... எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல் வில்லாலெயி லெய்தான் ....")
இரதம் - தேர்;
தரியாமல் - தாங்காமல்;
முரிதல் - ஒடிதல்;
பரிவு - அன்பு; பக்தி;



4)
இலையோடு வாச மலரோடு நல்ல இசைபாடி எந்தை இறைவன்
நிலவேறு சென்னி நிமலன்ப தத்தை நிதமேத்தும் அன்பர் உயிரைக்
கொலவந்த காலன் இலனாக மார்பில் உதைதந்த காலன் உலகில்
பலவாறு நின்று பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
இலையோடு, வாச மலரோடு, நல்ல இசை பாடி , எந்தை இறைவன்
நில(வு) ஏறு சென்னி நிமலன் பதத்தை நிதம் ஏத்தும் அன்பர் உயிரைக்
கொல வந்த காலன் இலன் ஆக மார்பில் உதை தந்த காலன்; உலகில்
பலவாறு நின்று பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


பதம் - திருவடி;
நிதம் - எப்பொழுதும்;
ஏத்துதல் - துதித்தல்;
அன்பர் - பக்தர் - இங்கே மார்க்கண்டேயர்;
கொல வந்த - கொல்ல வந்த;
இலன் ஆக - இல்லாதவன் ஆகும்படி - அழியும்படி;
ஆறு - வழி/மார்க்கம்; சமயம்; விதம்; இயல்பு;
உலகில் பலவாறு நின்று பணிவார்க்(கு) அருள்செய் - 1) பலவேறு ரூபங்கள் கொண்டு பக்தர்களுக்கு அருளும்; 2) பல மார்க்கங்களைப் பின்பற்றி/ பல விதங்களில் பணிபவர்களுக்கு அருளும்;



5)
விசுவத்தி லெங்கும் மிகுகால மாக அரசாண்ட சூரன் எனுமவ்
அசுரன்செ யின்னல் அதுதீர வேண்டி அரனாரை வேண்ட முருகன்
சிசுவாக வந்து செருவென்று தேவர் உயுமாற ருள்கண் ணுதலான்
பசுவேறும் எந்தை பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
விசுவத்தில் எங்கும் மிகு காலமாக அரசாண்ட சூரன் எனும் அவ்
அசுரன் செய் இன்னல் அது தீர வேண்டி அரனாரை வேண்ட, முருகன்
சிசுவாக வந்து செரு வென்று தேவர் உயுமா(று) அருள் கண்ணுதலான்;
பசுவேறும் எந்தை; பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


விசுவம் - பிரபஞ்சம்;
சூரன் - சூரபதுமன்;
சிசு - குழந்தை;
செரு - போர்;
உயுமாறு - உய்யுமாறு; (உய்தல் - தப்புதல் - To escape, as from danger);
கண்ணுதலான் - கண் நுதலான் - நெற்றிக்கண்ணன்;
பசு ஏறும் எந்தை - எருதின் மீது ஏறி வரும் எம் தந்தை;
(சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் ....");



6)
முடிமீது நாகம் முளைதிங்க ளோடு முதுகானில் ஆடும் இறைவன்
அடிபோற்று நாவின் அரசர்க்கு நஞ்சும் அமுதாகும் ஐயன் அருளால்
முடியாத தில்லை முதலாகி நின்ற பெருமானை ஏத்த எவரும்
படிகின்ற மேன்மை பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
முடிமீது நாகம் முளை திங்களோடு முதுகானில் ஆடும் இறைவன்
அடி போற்று நாவின் அரசர்க்கு நஞ்சும் அமுது ஆகும் ஐயன் அருளால்;
முடியாத(து) இல்லை, முதல் ஆகி நின்ற பெருமானை ஏத்த; எவரும்
படிகின்ற மேன்மை பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


* அடி 2 - திருநாவுக்கரசரைக் கொல்ல அவருக்கு விஷம் கலந்த சோற்றைச் சமணர்கள் கொடுத்தபோது சிவன் அருளால் அவர் உய்ந்ததைச் சுட்டியது.
(அப்பர் தேவாரம் - 4.70.5 - "துஞ்சிருள் காலை மாலை .... அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே")


முளை திங்கள் - வினைத்தொகை - முளைக்கின்ற திங்கள் - பிறைச்சந்திரன்;
முதுகானில் - மயானத்தில்; (3.81.6)
நாவின் அரசர் - திருநாவுக்கரசர்;
முதல் ஆகி நின்ற - அனைத்துக்கும் முதலாக இருக்கும்;
படிதல் - கீழ்ப்படிதல் (to obey); வணக்கக்குறியாகக் கீழேவிழுதல் (to fall prostrate);



7)
அழிவின்றி ஊழி பலகண்ட அண்ணல் அமரர்க ளேத்து தலைவன்
விழிமூன்று காட்டி விடையேறும் ஈசன் மிளிர்கொன்றை சூடி அவனை
ஒழிவின்றி எண்ணி விழிசோர நின்று வழிபாடு செய்யும் அடியார்
பழிநீங்கு மாறு பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
அழி(வு) இன்றி ஊழி பல கண்ட அண்ணல்; அமரர்கள் ஏத்து தலைவன்;
விழி மூன்று காட்டி; விடை ஏறும் ஈசன்; மிளிர் கொன்றை சூடி அவனை
ஒழிவு இன்றி எண்ணி விழி சோர நின்று வழிபாடு செய்யும் அடியார்
பழி நீங்குமாறு பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


ஏத்துதல் - துதித்தல்;
விடை - இடபம்;
காட்டி - காட்டுபவன்;
சூடி - சூடுபவன்;
ஒழிவு இன்றி - இடைவிடாமல்;
விழி சோர்தல் - கண்ணீர் வடிதல்;
பழி - குற்றம்; பாவம்;


(சம்பந்தர் தேவாரம் - 3.107.3 -
"தோடொரு காது ..... திருநாரை யூரானைப் பாடுமி னீர்பழி போகும் வண்ணம் ..." - திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள்.);



8)
இடிபோன்றொ லிக்கும் இடபத்தில் ஏறும் இறைவன்பொ ருப்பை எறியக்
கடிதோட ரக்கன் முடிபத்த டர்த்த கறைசேர்மி டற்றன் அழகார்
அடியேவ ணங்கும் அடியார்க ளென்றும் மிடியின்றி வாழ இனிதே
படியீயும் எந்தை பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
இடி போன்று ஒலிக்கும் இடபத்தில் ஏறும் இறைவன் பொருப்பை எறியக்
கடி(து) (டு) அரக்கன் முடி பத்(து) அடர்த்த கறை சேர் மிடற்றன் அழகு ஆர்
அடியே வணங்கும் அடியார்கள் என்றும் மிடி இன்றி வாழ இனிதே
படி ஈயும் எந்தை, பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


இடபம் - ஏறு (Bull);
(சம்பந்தர் தேவாரம் - 3.55.2 - "இடியார் ஏறுடையாய் ..." - இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே)
பொருப்பு - மலை - இங்கே கயிலைமலை;
கடிது - விரைவாய் (speedily, quickly); மிக. (exceedingly, very greatly, to a great degree);
முடி பத்து - பத்துத் தலைகள்;
கறை சேர் மிடற்றன் - நீலகண்டன்;
அழகு ஆர் அடி - அழகிய திருவடி;
மிடி - வறுமை; துன்பம்;
படி - (படிக்காசு) - நாட்செலவுக்குக் கொடுக்கும் பணம் (subsistence allowance for a day);
(1. திருவீழிமிழலையில் சம்பந்தரும் அப்பரும் படிக்காசு பெற்றனர்.
சம்பந்தர் தேவாரம் - 1.92.1 -
வாசி தீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏச லில்லையே.


2. அரிசிற்கரைப்புத்தூரில் புகழ்த்துணைநாயனார் படிக்காசு பெற்றார்.
சுந்தரர் தேவாரம் - 7.9.6 -
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
.. அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
.. முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
.. வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
.. பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.)



9)
மயலாகி நேடு மலர்மேலி ருக்கும் அயனோடு மாலும் அடைய
இயலாத வண்ணம் உயர்கின்ற சோதி எனநின்ற ஈசன் அடியை
நியமத்த ராகி மலர்தூவி நாளும் நினைவார்க்கு நல்ல துணையாய்ப்
பயநீக்கும் எந்தை பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
மயல் ஆகி நேடு[ம்] மலர்மேல் இருக்கும் அயனோடு மாலும் அடைய
இயலாத வண்ணம் உயர்கின்ற சோதி என நின்ற ஈசன், அடியை
நியமத்தர் ஆகி மலர் தூவி நாளும் நினைவார்க்கு நல்ல துணை ய்ப்
பய[ம்] நீக்கும் எந்தை; பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


மயல் - மயக்கம்; அறியாமை;
நேடுதல் - தேடுதல்;
அயன் - பிரமன்;
மால் - திருமால்;
நியமத்தர் - ஒழுக்கம் உடையவர்கள்;
பயம் - அச்சம்;



10)
மதமேபி டித்து வழிமாறி வந்து விடுமென்றி யம்பி அலைவோர்
சதமான ஒன்றை அறியாது ழல்வர் இதமான தொன்றும் உரையார்
நிதமூன்று வேளை திருவைந்தெ ழுத்து நினைகின்ற சிந்தை யுடனே
பதமேத்தி நின்று பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
மதமே பிடித்து, "வழி மாறி வந்துவிடும்" என்(று) இயம்பி அலைவோர்,
சதமான ஒன்றை அறியா(து) உழல்வர்; இதம் ஆன(து) ஒன்றும் உரையார்;
நித[ம்] மூன்று வேளை திரு ஐந்து எழுத்து நினைகின்ற சிந்தையுடனே
பதம் ஏத்தி நின்று பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


மதம் - செருக்கு (pride, arrogance, presumption); வெறி (madness, frenzy);
வந்துவிடும் - வந்துவிடுங்கள்; (உம் - ஏவற்பன்மைவிகுதி);
சதம் - நித்தியமானது;
இதம் - நன்மை (sage counsel, wholesome words);
சிந்தை - மனம்;
நிற்றல் - உறுதியாயிருத்தல் (to be steadfast; to persevere, persist in a course of conduct);



11)
மணிநீல கண்டன் மணம்வீசு மத்த மலர்சூடும் அண்டன் மதியை
அணிகின்ற ஐயன் அனலேந்து கையன் அலைவீசு கங்கை முடியன்
பணிவீக்கு மெய்யன் அடைவோர்க்கு வெய்ய பிணிதீர்க்கு மெய்யன் எனவே
பணிசெய்து நின்று பணிவார்க்க ருள்செய் பவனொற்றி மேவு சிவனே.



பதம் பிரித்து:
"மணி நீல கண்டன்; மணம் வீசும் மத்த மலர் சூடும் அண்டன்; மதியை
அணிகின்ற ஐயன்; அனல் ஏந்து கையன்; அலை வீசு கங்கை முடியன்;
பணி வீக்கு மெய்யன்; அடைவோர்க்கு வெய்ய பிணி தீர்க்கும் மெய்யன் " எனவே
பணி செய்து நின்று பணிவார்க்(கு) அருள்செய் பவன் ஒற்றி மேவு சிவனே.


மத்த மலர் - ஊமத்தை மலர்;
அண்டன் - அண்டங்களின் தலைவன் - கடவுள் (God, as lord of the universe);
மெய் - உடல்; உண்மை;
வீக்குதல் - கட்டுதல்;
பணி வீக்கு மெய்யன் - பாம்புகளைக் கட்டிய திருமேனி உடையவன்;
அடைவோர்க்கு வெய்ய பிணி தீர்க்கும் மெய்யன் - சரண் அடைந்தவர்களுக்கு அவர்களது துன்பம் தரும் பிணிகளைத் தீர்த்து அருளும் மெய்ப்பொருள்;
எனவே - என்று சொல்லி;
பணி செய்தல் - தொண்டுசெய்தல்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment