Saturday, April 30, 2016

03.01-01 - அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



முற்குறிப்பு:

இப்பாடல்கள் 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எழுதப்பட்டவை. அவ்வாண்டின் கார்த்திகைத் தீபத்தை ஒட்டி இப்பாடல்களுள் முதல் பாடலை எழுதினேன். அப்பாடலை எழுதியபொழுது, அதனைத் தனிப்பாடலாகத்தான் எழுதினேன். பிறகு ஏதோ ஓர் உந்துதலால் மேலும் தொடர்ந்து எழுதினேன். எழுதத் தொடங்கும்போது இத்தனை பாடல்கள் எழுதவேண்டும் என்று நினைத்து எழுதப்பட்டவை அல்ல இவை. இப்பாடல்களில் முதல் பத்து ஓர் அந்தாதியாக அமைந்தது. பிறகு, சிவன் அருளால் தொடர்ந்து எழுதி, மொத்தம் நூறு பாடல்கள் ஆயின. 1 முதல் 100 வரை அந்தாதித் தொடராக அமைந்து மண்டலித்து வந்தாலும், 1-10, 11-20, 21-30, 31-40, 41-50, 51-60, 61-70. 71-80, 81-90, 91-100 என்று பத்துப் பத்துப் பாடல்களாகத் தனித்தனியாகவும் அந்தாதியாக மண்டலித்து அமைந்துள்ளன இவை. (ஒவ்வொரு பத்தும் 'ஒளி'யில் தொடங்கி 'ஒளி'யில் நிறைவு பெறுகின்றது).


01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
1)
ஒளிப்பிழம்பாய் நின்ற ஒருவனை, உள்ளும்
வெளியும் இருப்பவனை, மேலே நெளியும்
அரவம் அணிந்தவனை, அண்ணா மலையை
உரைப்பவர் எய்துவர் உய்வு.

ஒளிப்பிழம்பாய் நின்ற ஒருவனை - எல்லையற்ற சோதியாகி உயர்ந்த ஒப்பற்றவனை;
உள்ளும் வெளியும் இருப்பவனை - இவ்வண்டத்தின் உள்ளும் அதனைக் கடந்தும் உள்ளவனை;
மேலே நெளியும் அரவம் அணிந்தவனை - திருமேனியின்மேல் நெளிகின்ற பாம்புகளை அணிந்தவனை;
அண்ணா மலையை - திருவண்ணாமலையை;
உரைப்பவர் எய்துவர் உய்வு - துதிப்பவர்கள் உய்தி பெறுவார்கள்;

2)
உய்வைத் தருவ தொருநாமம்; சொல்பவர்
தொய்வை அகற்றிச் சுகளிக்கும்; ஐயமிலை;
மாலடி காணா மலையை, அறுமுக
வேலவன் தந்தையை வேண்டு.

உய்வைத் தருவது ஒரு நாமம் - நமக்கு உய்தி தருவது ஈசன் திருநாமம்;
சொல்பவர் தொய்வை அகற்றிச் சுகம் அளிக்கும்; ஐயம் இலை; - அது சொல்லும் அடியவரின் சோர்வை அகற்றிச் சுகத்தைத் தரும்; சந்தேகம் இல்லை;
மால் அடி காணா மலையை, - விஷ்ணுவால் திருவடி காண ஒண்ணாத மலையை;
அறுமுக வேலவன் தந்தையை வேண்டு - முருகனுக்குத் தந்தையை வழிபடு;

3)
வேண்டுவதைப் பெற்று மிகமகிழ் வெய்தலாம்;
மாண்ட பிறகிந்த மண்ணுலகில் மீண்டும்
பிறவா நிலையைப் பெறலாம்; மனமே
மறவாெண் ணண்ணா மலை.

வேண்டுவதைப் பெற்று மிக மகிழ்வு எய்தலாம்;
மாண்ட பிறகு இந்த மண்ணுலகில் மீண்டும் பிறவா நிலையைப் பெறலாம்;
மனமே, மறவாது எண்ணு அண்ணாமலை;

4)
மலையிலும் காட்டிலும் மாதவம் வேண்டா;
அலகிலாப் பேரொளி அண்ணா மலையை
நினைத்திடக் கிட்டுமே நிம்மதிஎன் பேதை
மனமே இதைஉணர் வாய்.

மலையிலும் காட்டிலும் மா தவம் வேண்டா; (மா தவம் - சிறந்த தவம்);
அலகு இலாப் பேரொளி அண்ணா மலையை நினைத்திடக் கிட்டுமே நிம்மதி; (அலகு இலாப் பேர் ஒளி - அளவு இல்லாத பெரிய சோதி;)
என் பேதை மனமே இதை உணர்வாய்.

5)
வாய்த்தது மண்ணில் மனிதப் பிறவி;அதைப்
போய்ப்பாழ்க் கிறைத்தல் பொருந்துமா? ஆய்நெஞ்சே;
பாம்பணைமேல் பள்ளிகொண்டான் பார்க்கஒண்ணா மாமலையை
ஓம்ப வருமே உயர்வு.

பாழ்க்கிறைத்தல் - வீணாக்குதல்;
அதைப்போய்ப் பாழ்க்கிறைத்தல் - அதைப் பாழ்க்கிறைக்கப் போதல்;
ஆய்தல் - ஆராய்தல்; ஆலோசித்தல்;
பாம்பணைமேல் பள்ளிகொண்டான் - பாம்பின் மேல் துயின்றவன் - விஷ்ணு; (பாம்பு அணை - ஆதிசேஷனாகிய படுக்கை);
பார்க்க ஒண்ணா = காண இயலாத;
ஓம்புதல் - பேணுதல்; மனதில் நினைத்தல்;

6)
உயர்ந்தவர் தாம்என் றுலகளந் தானும்
அயனும் பிணங்கும்போங்கே வியந்திட
மாசுடராய் நின்ற மலையை மனத்திலெண்ண
மாசுபோய் இன்பம் வரும்.

உயர்ந்தவர் தாம் என்று உலகு அளந்தானும் அயனும் பிணங்கும்போது
அங்கே வியந்திட மா சுடராய் நின்ற மலையை
மனத்தில் எண்ண, மாசு போய் இன்பம் வரும்.

(லகளந்தான் - உலகு அளந்தான் - விஷ்ணு;
அயன் - பிரமன்;
பிணங்குதல் - மாறுபடுதல்;
மா சுடர் - பெரிய ஒளி;
மாசு - குற்றம்; பாவம்;)

7)
வருவதும் போவதும் மாறி,வற்றா இன்பம்
பருகலாம்; மால்ஒரு பன்றி உருவினில்
சென்டி தேடித் திகைத்தஅண் ணாமலை
என்றென்றும் என்நெஞ்சே எண்ணு.

வருவதும் போவதும் மாறி, வற்றா இன்பம் பருகலாம்;
மால் ஒரு பன்றி உருவினில் சென்று அடி தேடித் திகைத்த அண்ணாமலை
என்று என்றும் என் நெஞ்சே எண்ணு.

(வருவதும் போவதும் மாறி - பிறப்பதும் இறப்பதும் மாறி - பிறவா நிலை பெற்று;
மால் - திருமால்; விஷ்ணு;
அண்ணாமலை என்றென்றும் - அண்ணாமலை என்று என்றைக்கும்;)

8)
எண்ணத்துக்ப்பால் இருக்கின்ற ஈறில்லா
அண்ணல் அடிமுடியை ஆணவத்தால் கண்ணினால்
காண முயன்றோர் கருத்ழிஅண் ணாமலை
பேண வரும்பெரும் பேறு.

எண்ணத்துக்கு அப்பால் இருக்கின்ற, ஈறு இல்லா, அண்ணல் அடிமுடியை - நம் அறிவுக்கு அப்பாற்பட்டவனும் முடிவு இல்லாதவனும் ஆகிய சிவபெருமானின் அடியையும் முடியையும்;
ஆணவத்தால் கண்ணினால் காண முயன்றோர் கருத்து அழி அண்ணாமலை - தங்கள் அகந்தையால் காண முயன்ற பிரம விஷ்ணுக்களின் கருத்தை அழித்த அண்ணாமலையை;
பேண வரும்பெரும் பேறு - போற்றினால் பெரிய பேறு நம்மை வந்தடையும்;

(ஈறு - முடிவு;
கருத்து - நோக்கம்; கொள்கை;
பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்;)

9)
பேறாவ தோர்தீப் பிழம்பாக நின்றவன்மேல்
ஆறாத காதல் அகத்தென்றும் மாறா
திருப்பண் ணாமலை என்றுசொல்ல ஈசன்
அருளி உறைவானே அங்கு.

பேறு ஆவது, ஓர் தீப் பிழம்பாக நின்றவன்மேல்
ஆறாத காதல் அகத்து என்றும் மாறாது
இருப்பது; அண்ணாமலை என்று சொல்ல ஈசன்
அருளி உறைவானே அங்கு.

(பேறு - அடையத் தக்கது; செல்வம்;
ஆறாத - தணியாத;
காதல் - அன்பு; பக்தி;
அகத்து - மனத்தில்;
உறைதல் - வசித்தல்;)

10)
அங்கோர் அனற்பிழம் பானவன்; ஆணவம்
பொங்கிருவர் போட்டியைப் போக்கினான்; "சங்கரா!
வள்ளலே! அண்ணா மலையே!" எனத்தோன்றும்
உள்ளத்தில் இன்ப ஒளி.

அங்கு ஓர் அனல்பிழம்பு ஆனவன்;
ஆணவம் பொங்கு இருவர் போட்டியைப் போக்கினான்;
"சங்கரா! வள்ளலே! அண்ணாமலையே!" எனத், தோன்றும் உள்ளத்தில் இன்ப ஒளி.

(அனல் - நெருப்பு;
பிழம்பு - திரட்சி;
இருவர் - விஷ்ணு, பிரமன்;)

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2 comments: