Saturday, April 30, 2016

03.01-71 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
71)
ஒளியாய் உயர்ந்தாய் உருகித் தொழுவார்க்
கெளியாய் புனலாய் எரியாய் வளியாய்
நிலனாய் வெளியாய் நிறைதிரு அண்ணா
மலையாய் தொழுதேன் மகிழ்ந்து.



ஒளியாய் உயர்ந்தாய்! உருகித் தொழுவார்க்கு எளியாய்!
புனல் ஆய், எரி ஆய், வளி ஆய்,
நிலன் ஆய், வெளி ஆய் நிறை திரு அண்ணாமலையாய்!
தொழுதேன் மகிழ்ந்து.


(ஒளியாய் உயர்ந்தாய் - பெரிய ஒளியாக உயர்ந்தவனே;
எளியாய் - எளியவனே;
புனல் ஆய் - நீர் ஆகி;
எரி - தீ;
வளி - காற்று;
நிலன் - நிலம்;
வெளி - ஆகாயம்;
நிறை - நிறைகிற
திரு அண்ணா மலையாய் - திருவண்ணாமலையானே;)



72)
மகிழ்ந்தடி போற்றி வணங்க, மனமும்
நெகிழ்ந்துனை என்றும் நினைக்க அகிலம்
அனைத்தும் படைத்தருளும் அண்ணா மலையாய்
எனக்கருள் செய்வாயே இன்று.



(உரைநடை அமைப்பில்:
அகிலம் அனைத்தும் படைத்துஅருளும் அண்ணாமலையாய்!
மகிழ்ந்து அடி போற்றி வணங்க, மனமும் நெகிழ்ந்து உன்னை என்றும் நினைக்க, இன்று எனக்கு அருள் செய்வாயே.)



73)
இன்று வரம்ஒன் றிரந்தேன், உனதுகழல்
என்றும் மறவா திருக்கவே, ஒன்றும்
பலவும் எனஆம் பரமனே! அண்ணா
மலையாய்! அருள்தர வா.



இன்று வரம் ஒன்று இரந்தேன், உனது கழல்
என்றும் மறவாது இருக்கவே, ஒன்றும்
பலவும் என ஆம் பரமனே! அண்ணா
மலையாய்! அருள் தர வா.


(உரைநடை அமைப்பில்:
ஒன்றும் பலவும் என ஆம் பரமனே! அண்ணாமலையாய்!
உனது கழல் என்றும் மறவாது இருக்கவே, இன்று வரம் ஒன்று இரந்தேன்;
அருள் தர வா.)


ஒன்றும் பலவும் என ஆம் பரமனே - ஏகனும் அனேகனும் ஆன பரமன்;
இரந்தேன் - யாசித்தேன்; வேண்டினேன்;



74)
வாக்கில் செயலில் மனத்தில்நீ நின்றெனைத்
தாக்குமிவ் வைவர் தளைகளைப் போக்கி
அருள்வாய், அழல்உருவா! அண்ணா மலையாய்!
கருணைக் கடல்உன்தாள் காப்பு.



வாக்கில் செயலில் மனத்தில் நீ நின்று,
எனைத் தாக்கும் இவ் வர் தளைகளைப் போக்கி அருள்வாய்,
அழல் உருவா! அண்ணாமலையாய்!
கருணைக் கடல் உன் தாள் காப்பு.


(உரைநடை:
அழல் உருவா! அண்ணாமலையாய்! நீ வாக்கில் செயலில் மனத்தில் நின்(று),
[ன்]னைத் தாக்கும் இவ் ஐவர் தளைகளைப் போக்கி அருள்வாய்;
கருணைக் கடல் உன் தாள் காப்பு.
)


தாக்கும் இவ் ஐவர் - தாக்குகின்ற இந்த ஐம்புலன்கள்;
அழல் உருவா - நெருப்பு வடிவானவனே;
கருணைக் கடல் - அண்மைவிளி - கருணைக்கடலே என்ற பொருள்;
காப்பு - பாதுகாப்பு அளிப்பது;


(அப்பர் தேவாரம் - திருமுறை 5.47.7 -
மூக்கு வாய் செவி கண்ல் ஆகி வந்து
ஆக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்து அருள்
நோக்குவான் நமை நோய் வினை வாராமே
காக்கும் நாயகன் கச்சியேகம்பனே.)



75)
காப்பாய்என் றுன்றன் கழல்பணிந்தேன்; என்வினை
தீர்ப்பாய் சிவனே! திரிபுரம் தீப்பாய
நக்கவனே! நாரணன் நான்முகன்கா ணாவண்ணம்
மிக்கவனே! நீகை விடாய்.



காப்பாய் என்று உன்றன் கழல் பணிந்தேன்; என் வினை
தீர்ப்பாய், சிவனே! திரிபுரம் தீப் பாய
நக்கவனே! நாரணன் நான்முகன் காணா வண்ணம்
மிக்கவனே! நீ கைவிடாய்.


(உரைநடை அமைப்பில்:
சிவனே! திரிபுரம் தீப் பாய நக்கவனே!
நாரணன் நான்முகன் காணா வண்ணம் மிக்கவனே!
காப்பாய் என்று உன்றன் கழல் பணிந்தேன்;
நீ கைவிடாய்; என் வினை தீர்ப்பாய். )


(திரிபுரம் - விண்ணில் திரிந்த புரங்கள்;
நக்கவன் - சிரித்தவன்;
நாரணன் - விஷ்ணு;
நான்முகன் - பிரமன்;
மிக்கவன் - மிகுந்தவன்;
நீ கைவிடாய் - நீ கைவிட மாட்டாய்.)



76)
விடாய்பல நெஞ்சில் மிகுந்து,நான் நாளும்
அடாதன செய்தாலும், ஐயா, விடாதென்னைத்
தேடிவந் தாண்டாய்! திருமால் அயன்இருவர்
நேடியவா! அன்புருவே நீ!



விடாய் பல நெஞ்சில் மிகுந்து, நான் நாளும்
அடாதன செய்தாலும், ஐயா, விடாது என்னைத்
தேடிவந்து ஆண்டாய்! திருமால் அயன் இருவர்
நேடியவா! அன்புருவே நீ!


(உரைநடை அமைப்பில்:
திருமால் அயன் இருவர் நேடியவா! ஐயா!
நெஞ்சில் பல விடாய் மிகுந்து, நான் நாளும் அடாதன செய்தாலும்,
விடாது என்னைத் தேடி வந்(து) ஆண்டாய்! நீ அன்பு உருவே!)


விடாய் - தாகம்; ஆசை;
அடாதன - தகாத செயல்கள்;
ஆண்டாய் - ஆட்கொண்டு அருள்புரிந்தாய்;
திருமால் அயன் இருவர் நேடியவா - விஷ்ணுவும் பிரமனும் தேடிய ஒருவனே; (நேடுதல் - தேடுதல்);



77)
நீரும் அரவும் நிலவும் முடிமேலே
சேரும் சிவன்திருத்தாள் சிந்தித்தால், பாரும்
உனைவணங்கும் வண்ணம் உயர்நிலை ஈவான்;
மனமே,சொல் அண்ணா மலை!



(நீரும் அரவும் நிலவும் - கங்கையும் பாம்பும் சந்திரனும்;
பார் - உலகம்;
உனை - உன்னை;
ஈவான் - அளிப்பான்;)



78)
மலையெடுத்த தென்னிலங்கை மன்னனது பத்துத்
தலைநெரித்துப் பின்வரங்கள் தந்த தலைவனை,
அண்ணா மலையனை அன்போடு நெஞ்சினில்
எண்ணார் பிறந்த தெதற்கு?



மலைடுத்த தென்-லங்கை மன்னனது பத்துத்
தலை நெரித்துப், பின் வரங்கள் தந்த தலைவனை,
அண்ணாமலையனை அன்போடு நெஞ்சினில்
எண்ணார் பிறந்தது எதற்கு?


தென் - அழகிய;
எண்ணார் - எண்ணாதவர்கள்;
( அப்பர் தேவாரம் - 6.95.6 -
"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில் ..... அளியற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
... பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே")



79)
எதற்குமே அஞ்சா திருக்கலாம், அஞ்சு
பதம்சொல்லி நாளும் பணிந்தால்; அதனால்
மடநெஞ்சே, அண்ணா மலையானைப் பாடிக்
கடப்பாய் பிறவிக் கடல்.



எதற்குமே அஞ்சாது இருக்கலாம், அஞ்சு
பதம் சொல்லி நாளும் பணிந்தால்; அதனால்
மடநெஞ்சே, அண்ணாமலையானைப் பாடிக்
கடப்பாய் பிறவிக் கடல்.


(அஞ்சு பதம் - நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்து;
நாளும் - தினமும்;
மட நெஞ்சே - பேதை மனமே;)



80)
கடல்விடம் உண்ட கறைக்கண்டன் தாளை
அடைந்தவரை நீசென்டைவாய் மடநெஞ்சே;
அண்ணா மலைஅண்ணல் அன்பர் அவர்மனத்தின்
ண்ணின் றுவக்கும் ஒளி;



கடல்விடம் உண்ட கறைக்கண்டன் தாளை
அடைந்தவரை நீ சென்று அடைவாய் மடநெஞ்சே;
அண்ணாமலை அண்ணல் அன்பர்அவர் மனத்தின்
ள் நின்று உவக்கும் ஒளி;


(கறைக்கண்டன் - நீலகண்டன்;
தாள் - திருவடி;
கறைக்கண்டன் தாளை அடைந்தவரை - சிவனடியார்களை;
அன்பர் - அடியார்
உண்ணின்று - உள் நின்று - உள்ளே தங்கி;
உவத்தல் - மகிழ்தல்;)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment