Saturday, April 30, 2016

03.01-61 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
61)
ஒளிஉருவாய் நின்ற ஒருவனை, எல்லாம்
அளிதருவை, அன்பர் உளத்தில் களிப்பவனை,
அந்தமில்லா ஐயனை, அண்ணா மலையனைப்,
பந்தமற என்நாவே பாடு.



(உரைநடை அமைப்பில்:
என் நாவே! பந்தம் அற, ஒளி உருவாய் நின்ற ஒருவனை, எல்லாம் அளி தருவை,
அன்பர் உளத்தில் களிப்பவனை, அந்தம் இல்லா ஐயனை, அண்ணாமலையனைப் பாடு.)


ஒளிஉருவாய் நின்ற ஒருவனை - சோதி வடிவாகி உயர்ந்த ஒப்பற்றவனை;
எல்லாம் அளி தருவை - எல்லா வரங்களையும் தரும் கற்பக மரம் போன்றவனை;
அன்பர் உளத்தில் களிப்பவனை - அடியார் நெஞ்சில் மகிழ்பவனை;
அந்தம் இல்லா ஐயனை - சாவாது என்றும் இருக்கும் தலைவனை;
அண்ணாமலையனைப், பந்தம் அ என் நாவே பாடு - அத்தகைய அண்ணாமலையனை, நம் வினைக்கட்டு நீங்குமாறு, என் நாவே, பாடுவாயாக;


(எல்லாம் அளி தரு - வேண்டும் வரம் எல்லாம் அளிக்கின்ற கற்பக மரம்;
அந்தம் - முடிவு;
ஐயன் - தலைவன்;
பந்தம் அற - வினைக்கட்டு நீங்க;)



62)
பாடுபட்டு நாளும் பணத்தையே தேடுகிறாய்;
கூடுவிடுங் கால்வருமோ கூடவே? நாடு
மடநெஞ்சே அண்ணா மலையானை; ஈவான்
தடையின்றி, அவ்வான் தரு.



(உரைநடை அமைப்பில்:
மட நெஞ்சே! பாடுபட்டு நாளும் பணத்தையே தேடுகிறாய்;
கூடு விடும்கால் கூடவே வருமோ?
அண்ணாமலையானை நாடு;
அவ் வான் தரு தடை இன்றி ஈவான்)


(கூடுவிடுங்கால் - (உயிர் இந்த உடலான) கூட்டை விடும் பொழுது;
வான் தரு - Celestial tree; கற்பக மரம்;)


(அப்பர் தேவாரம் - 5.31.6 -
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.


சுந்தரர் தேவாரம் - 7.34.1
தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ் சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே.)



63)
தருவதற் கேனோ தயங்குகிறாய்; காலன்
வருமுன் வழங்கி, மனமே திருநடம்
ஆடிமகிழ் அண்ணலை, அண்ணா மலையானைப்
பாடி நிதிபெறு வாய்.



(உரைநடை அமைப்பில்:
மனமே! தருவதற்கு ஏனோ தயங்குகிறாய்;
காலன் வரும் முன் வழங்கித்,
திருநடம் ஆடி மகிழ் அண்ணலை,
அண்ணாமலையானைப் பாடி நிதி பெறுவாய்.)


(நிதி - அருட்செல்வம்;)


(திருநாவுக்கரசர் தேவாரம் - திருமுறை - 5.60.2 -
அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள்
நிச்சலுந் நினையாய் வினை போய்அறக்
கச்ச மாவிடம் உண்ட கண்டா என
வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே.)



64)
வாயுரைக்கும் மாதேவா மாதேவா என்றே;ஓர்
தீயுருவாய் நின்ற சிவன்புத் தாயுருவும்
ஆனவன், அண்ணா மலையான், அவன்அருளால்
ஈனமின்றி வாழலாம் இங்கு.



வாய் உரைக்கும் மாதேவா மாதேவா என்றே; ஓர்
தீருவாய் நின்ற சிவன், அன்புத் தாய் உருவும்
ஆனவன், அண்ணாமலையான், அவன் அருளால்
ஈனம் இன்றி வாழல் ஆம் இங்கு.


(வாய் உரைக்கும் - வாய் சொல்லும்;
மாதேவன் - மகாதேவன்;
தீ உருவாய் - அனல் பிழம்பாகி;
தாய் உருவும் ஆனவன் - தாயுமானவன்;
ஈனம் இன்றி - குறைகள் இன்றி;
இங்கு - இவ்வுலகில்;)



65)
இங்கேஎன்ன்பர் இடம்தேடி வந்ருளும்
எங்கோனைத் தேடி இளைப்பதேன்? கங்காளன்,
மாவிடைஏண்ணா மலையான் கழல்பாடும்
நாவிலுறைந் தீவான் நலன்.



"இங்கே" என்று அன்பர் இடம் தேடிவந்து அருளும்
ம் கோனைத் தேடி இளைப்பது ஏன்? கங்காளன்,
மா விடை று அண்ணாமலையான் கழல் பாடும்
நாவில் உறைந்து ஈவான் நலன்.


(தன் அடியவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிவந்து, "இங்கே உள்ளேன்" என்று அவர்களுக்கு அருள்புரியும் எம் பெருமானைத் தேடி வருந்துவது ஏன்? எலும்பை அணியும் கோலம் உடையவன், பெரிய இடபவாகனமுடையவன், அண்ணாமலையான், தன் திருவடியைப் பாடும் அன்பரின் நாக்கில் உறைந்து நலம் அருள்வான்;


(அன்பர் - பக்தர்;
எங்கோனை - எம் கோனை; கோன் - தலைவன்;
இளைத்தல் - வருத்துதல்;
கங்காளன் - எலும்பு அணிபவன் - சிவன்;
மா விடை ஏறு - சிறந்த/பெரிய எருதினை வாகனமாக ஏறுகிற;)


(சம்பந்தர் தேவாரம்: திருமுறை 2.40.6 -
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்னடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் எருதுஏறித்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்
சங்கேஒத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே.)



66)
நலன்வேண்டில், நாவே நவில்வாய் சிவன்பேர்;
பலன்காண்பாய்; ஆட்டிப் படைக்கும் புலன்களின்
வஞ்சம்போம்; அண்ணா மலையான் அருளாலே
அஞ்சு விடமுமு தாம்.



நலன் வேண்டில், நாவே, நவில்வாய் சிவன் பேர்;
பலன் காண்பாய்; ஆட்டிப் படைக்கும் புலன்களின்
வஞ்சம் போம்; அண்ணாமலையான் அருளாலே
அஞ்சு விடமும் அமுது ஆம்.


(நவில்வாய் - சொல்வாய்;
வஞ்சம் போம் - வஞ்சனை போகும்;
அஞ்சு விடமும் - அஞ்சுகின் விமும்; -- அல்லது - ஐம்புலன்களாகிய விடங்களும்;)


(அப்பர் தேவாரம் - திருமுறை 4.70.5
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக்ன் தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த
நஞ்மு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே.
பொ-ரை: இருள் நீங்கும் காலையிலும் மாலையிலும் பெருமானுக்கும் தமக்கும் உள்ள உறவை மறவாமல் திருவைந்தெழுத்தை ஓதினால், நாள்தோறும் சிவனடிக்கண் அன்பு பெருகி வளரும். செய்யும் வஞ்சனையால் பாற்சோற்றை நஞ்சுடன் கலந்து சமைத்து நல்ல வழக்கம் இல்லாத சமணர்கள் எனக்குக் கொடுத்தபொழுது, அந்த நஞ்சை அமுதமாக்கி அருளினார் திருநனிபள்ளியடிகள்.)



67)
ஆமென்று சொல்லியே அற்பரிடம் நிற்பதேன்?
ஓமென்று சொல்பவர் உய்வரே! தூமென்
மலரடியை எண்ணு மடநெஞ்சே! அண்ணா
மலையரன் தாளே வழி.



"ம்" ன்று சொல்லியே அற்பரிடம் நிற்பது ஏன்?
"ம்" ன்று சொல்பவர் உய்வரே! தூ மென்
மலரடியை எண்ணு மடநெஞ்சே!
அண்ணாமலைரன் தாளே வழி.


(உரைநடை அமைப்பில்:
மட நெஞ்சே! ஏன் அற்பரிடம் "ஆம்" என்று சொல்லியே நிற்ப(து)?
"ஓம்" என்று சொல்பவர் உய்வரே!
அண்ணாமலை அரன் தாளே வழி. தூ மென் மலரடியை எண்ணு.)


(ஆமென்று - ஆம் என்று - ஆமாம் என்று (அவர் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி);
ஓமென்று - ஓம் என்று;
தூ மென் மலரடி - தூய மென்மையான மலர் போன்ற திருவடி;
அண்ணாமலை அரன் - அண்ணாமலையில் உறையும் சிவன்;
தாள் - திருவடி;)



68)
வழிகெட்டு, வாழ்வினில் வாடியே, ஏன்நீ
இழிகிறாய் என்நெஞ்சே? எல்லாப் பழிகளையும்
மாய்த்திடும் அண்ணா மலையான் திருநாமம்
தோத்திரிக்கப் போகும் துயர்.



(தோத்திரித்தல் - ஸ்தோத்திரம் செய்தல்;)



69)
துயர்சேர் பிறவித் தொடர்அற, நெஞ்சே,
கயல்விழி மாதின் கணவன், புயங்கப்
பெருமான்,மால் காணாத பேரொளியாய் நின்றான்
திருநாமம் எந்நாளும் செப்பு.



கயல்விழி மாது - அங்கயற்கண்ணி - கயல் மீனைப் போன்ற விழி உடைய பார்வதி;
புயங்கப் பெருமான் - பாம்பை அணிந்தவன் - சிவன்; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு);
செப்பு - சொல்;



70)
செப்புவேன் கேள்நெஞ்சே, சீர்அடியார் கூட்டத்தை
எப்பொழுதும் சேர்ந்திருப்பாய்; எம்பெருமான் ஒப்பில்லா
அண்ணலவ் வண்ணா மலையான் அருளாலே
உண்ணிறையும் இன்ப ஒளி.



செப்புவேன் கேள், நெஞ்சே, சீர் அடியார் கூட்டத்தை
எப்பொழுதும் சேர்ந்து இருப்பாய்; எம்பெருமான், ஒப்பு இல்லா
அண்ணல், அவ் அண்ணாமலையான் அருளாலே,
உள் நிறையும் இன்ப ஒளி .


செப்புவேன் - சொல்வேன்;
சீர் அடியார் கூட்டம் - பெருமை மிக்க அடியார் குழாம்;
உண்ணிறையும் - உள் நிறையும்;
உள் நிறையும் இன்ப ஒளி - இன்ப ஒளி உள்ளே நிறையும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment