Saturday, April 30, 2016

03.01-31 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
31)
ஒளிக்குள் ஒளியாய்! உயிருள் உயிராய்!
விளித்திறைஞ்சும் அன்பர் விருப்பம் அளிப்பவனே!
மாமதிசூண்ணா மலையானே! செந்தமிழ்ப்
பாமலர் இட்டேன் பணிந்து.



ஒளிக்குள் ஒளியாய்! உயிருள் உயிராய்! - ஒளியினுள் ஒளியாகியவனே; உயிருள் உயிராகியவனே;
விளித்து இறைஞ்சும் அன்பர் விருப்பம் அளிப்பவனே! - உன் திருப்பயரை அழைத்து வழிபடும் பக்தர்களுடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுபவனே;
மாமதி சூடு அண்ணாமலையானே! - அழகிய திங்களை அணிந்தவனே;
செந்தமிழ்ப் பாமலர் இட்டேன் பணிந்து - உன்னைப் பணிந்து உன் திருவடியில் பாமாலையை இட்டேன்;



32)
பணிசெய்டிபோற்றிப் பாடினேன், திங்கள்
அணிசிவனே! அண்ணா மலையாய்! பிணிதீர்
மருந்தே! வரம்தா! மறுபிறப் புண்டென்
றிருந்தால் துணையாய் இரு.



பணி செய்து, அடி போற்றிப் பாடினேன், திங்கள் அணி சிவனே! - சந்திரசேகரனே, திருத்தொண்டு செய்து உன் திருவடியை வணங்கிப் பாடினேன்;
அண்ணாமலையாய்! பிணி தீர் மருந்தே! - அண்ணாமலையானே; பிணிகளைத் தீர்க்கும் மருந்தே!
வரம் தா! மறுபிறப்பு உண்டு என்று இருந்தால் துணையாய் இரு.


33)
இருப்பவனே, எல்லைஇன்றி! ஏழைஅடி யார்சொல்
விருப்புடன் கேட்பவனே! மீண்டும் கருப்பை
அடையா வரம்தருவாய் அண்ணா மலையாய்!
விடையாய்! உனைவேண்டேன் வேறு.



இருப்பவனே, எல்லை இன்றி! - என்றும் இருப்பவனே;
ஏழை அடியார் சொல் விருப்புடன் கேட்பவனே! - பக்தர்கள் சொல்லை விரும்பிக் கேட்டருள்பவனே;
மீண்டும் கருப்பை அடையா வரம் தருவாய் - அடியேன் மீண்டும் பிறவி அடையாதபடி வரம் அருள்வாய்;
அண்ணா மலையாய்! விடையாய்! உனை வேண்டேன் வேறு - அண்ணாமலையானே; இடப வாகனே; யான் உன்னை வேறு ஏதும் வேண்டேன்.



34)
வேறிங் கொருபொருளும் வேண்டேன் விமலனே!
மாறி விடும்உலகில் மாறாய்நீ! ஏறிவர
ஏற்றை விரும்பும் இறைவனே! ஏழைஎன்
கூற்றைஉகந் தேற்பாயோ கூறு!



வேறு இங்கு ஒரு பொருளும் வேண்டேன் விமலனே!
மாறிவிடும் உலகில் மாறாய் நீ!
ஏறிவர ஏற்றை விரும்பும் இறைவனே!
ஏழை என் கூற்றை உகந்து ஏற்பாயோ கூறு!


(விமலன் - மலம் அற்றவன்;
ஏறு - காளை மாடு;
கூற்று - மொழி;
உகத்தல் - விரும்புதல்;)



35)
கூறுமை சேர்வாள்; குளிர்நிலாச் சென்னிமேல்
ஏறும்; மழுவைக்கை ஏந்திடும் ஈறும்
முதலுமிலாச் சோதி முழுவடிவைச் சொல்ல
உதவுமொழி உண்டோ உரை.



கூறுமை சேர்வாள்; குளிர் நிலாச் சென்னிமேல் ஏறும்;
மழுவைக் கை ஏந்திடும், ஈறும் முதலும் இலாச் சோதி முழுவடிவைச் சொல்ல
உதவுன் மொழி உண்டோ உரை.


(கூறுமை - கூறு உமை - உடலில் ஒரு கூறாக பார்வதி;
சென்னி - தலை; முடி;
ஈறு - முடிவு;
இலக்கணக் குறிப்பு : நெடிலில் முடியும் சொற்களை அடுத்து வல்லொற்று மிகும்,
உதாரணம்:
அப்பர் தேவாரம் - 6.4.10 - "எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்.. இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே......"
பெரியபுராணம் - திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம் - 12.19.19 - "நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல்....")



36)
உரைக்குமே என்நா உனதுபெயர் ஒன்றே
கரைசேர்க்கும் தெப்பமெனக் கண்டேன்; வரைஇலாச்
சோதியே! மாமதி சூடியே! மாதொரு
பாதியே! ஈசா!காப் பாய்.



உரைக்குமே என் நா, உனது பெயர் ஒன்றே, கரை சேர்க்கும் தெப்பம் எனக் கண்டேன் - என் நாக்கு உன் திருப்பெயரையே உரைக்கும்; உன் திருப்பெயரே பிறவிக்கடலைக் கடப்பிக்கும் தெப்பம் என அறிந்தேன்;
வரை இலாச் சோதியே! மாமதி சூடியே! - அளவில்லாத சோதியே; அழகிய சந்திரனைச் சூடியவனே; (வரை - அளவு; எல்லை;)
மாது ஒரு பாதியே! ஈசா! காப்பாய் - உமைபங்கனே; ஈசனே; காப்பாயாக!



37)
காப்பாய், படைப்பாய், கடையில் ஒடுக்குவாய்,
மூப்பே இலாத முதல்வனே! யாப்பே
அறியேனைப் பாடவைத்த அண்ணா மலையாய்!
நெறியே! கதிஎனக்கு நீ.



காப்பாய், படைப்பாய், கடையில் ஒடுக்குவாய் - படைப்பவனே; காப்பவனே; முடிவில் ஒடுக்குபவனே;
மூப்பே இலாத முதல்வனே - என்றும் இளமையோடு இருக்கும் ஆதிமூர்த்தியே;
யாப்பு - செய்யுள்; செய்யுள் இலக்கணம்;
அறியேனை - அறியாத என்னை;
நெறி - வழி; மார்க்கம்;
கதி - புகலிடம்; வழி;



38)
நீசன் எனும்நிலை நீங்க, எமனது
பாசமெனும் அச்சம் பறந்தோடத், தேசனுன்மேல்
நேசமிகக் கொண்டேன்; நெருப்பென நீண்டவனே!
ஈசனே! ஏற்பாய் எனை.



நீசன் எனும் நிலை நீங்க, - இழிந்தவன் என்ற நிலை நீங்கவும்;
எமனது பாசம் எனும் அச்சம் பறந்து ஓடத் - கூற்றுவனின் பாசத்தைக் கண்டு அஞ்சும் (எமபயம்) விலகவும்;
தேசன் உன்மேல் நேசம் மிகக் கொண்டேன்; - ஒளி உருவினனான உன்மேல் மிகுந்த அன்பு கொண்டேன்;
நெருப்பு எ நீண்டவனே! - சோதியாகி உயர்ந்தவனே;
ஈசனே! ஏற்பாய் எனை. - ஈசனே, என்னை ஏற்றுக் காத்தருள்வாயாக;


(நீசன் - இழிந்தவன்;
தேசன் - தேஜன் - ஒளி உருவினன்;
நேசம் - அன்பு; பக்தி;)



39)
என்னை அடியார் இடையே இருத்துவாய்!
உன்னை இரந்தேன் உமைகோனே! முன்னை
நெருப்பாய் உயர்ந்த நிமலனே! வேறு
விருப்பில்லை! தாராய் விரைந்து.



இடையே - நடுவே;
இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;
உமைகோன் - பார்வதி நாயகன் - சிவன்;
முன்னை - முன்பு; முற்காலம்;
நிமலன் - மலம் அற்றவன்;
தாராய் - தருவாயாக;



40)
விரைவில் அருள்வாய் விமலனே! அன்று
வரைவில் தனைக்கொண்டு வானில் - விரையும்
மதில்எரித்த அண்ணா மலையாய்! உளத்தில்
உதிக்கச்செய் ஞான ஒளி.



விமலன் - மலம் அற்றவன்; தூயவன்;
வரை வில் - மேரு மலை என்ற வில்; (வரை - மலை);
மதில் - கோட்டை - முப்புரங்கள்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

No comments:

Post a Comment