Saturday, April 30, 2016

03.01-91 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
91)
ஒளித்தேன் இருளை உளத்திலென்றும் பொய்யில்
களித்தேன்; பலரிடம் காசுக் கிளித்தேன்;
புளித்தேன்இன் றிவ்வாழ்வு; பொன்னம் பலத்தாய்,
அளித்தேன் சுரக்க அருள்.



ஒளித்தேன் இருளை உளத்தில்; என்றும் பொய்யில்
களித்தேன்; பலரிடம் காசுக்கு இளித்தேன்;
புளித்தேன் இன்று இவ்வாழ்வு; பொன்னம்பலத்தாய்,
அளித் தேன் சுரக்க அருள்.


இருள் - அறியாமை; குற்றம்;
உளத்தில் - உள்ளத்தில்;
பொய் - நிலையற்றது; மாயை;
களித்தேன் - மகிழ்ந்தேன்;
புளித்தேன் - எனக்குப் புளித்துவிட்டது; (புளித்தல் - வெறுத்தல்);
பொன்னம்பலத்தாய் - பொன்னம்பலத்தில் ஆடுபவனே;
அளித்தேன் - அளி + தேன் - அன்புத் தேன்;
சுரத்தல் - ஊறுதல்; To spring forth, stream out, gush, flow;



92)
அருள்வாய்நீ என்றே அடிஅடைந்தேன்; ஐயா!
இருள்போய் அகல எழுந்த ஒருஞாயி(று)
அன்றோநீ! அண்ணா மலையாய்! உனைப்பாடி
நின்றேன்நான்; ஏந்தக்கை நீட்டு.



அருள்வாய் நீ என்றே அடி அடைந்தேன்; ஐயா!
இருள் போய்அகல எழுந்த ஒரு ஞாயிறு
அன்றோ நீ! அண்ணாமலையாய்! உனைப் பாடி
நின்றேன் நான்; ஏந்தக் கை நீட்டு.


இருள் போய்அகல - இருள் முழுதும் நீங்க; ("போய் அகல" - ஒரு பொருட்பன்மொழி);
(திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.2 - "அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது ..." - );
ஞாயிறு - சூரியன்;
ஒரு - ஒப்பற்ற;
ஏந்த - தாங்க; ஏந்திக்கொள்ள;



93)
நீட்டிய கையினில், நேர்இலா மாங்கனி
காட்டினாய் காரைக்கால் அம்மைக்கு; சூட்டினேன்
பாட்டினால் மாலை; பரம!உனை என்னெஞ்சில்
நாட்டினேன்; நின்ருள் நல்கு.



நீட்டிய கையினில், நேர் இலா மாங்கனி
காட்டினாய் காரைக்கால் அம்மைக்கு; சூட்டினேன்
பாட்டினால் மாலை; பரம! உனை என் நெஞ்சில்
நாட்டினேன்; நின் அருள் நல்கு.


(நேர் இலா - ஒப்பு இல்லாத - ஒப்பற்ற;
சூட்டினேன் பாட்டினால் மாலை - உனக்குப் பாமாலை சூட்டினேன்;
பரம - பரமனே;
நாட்டுதல் - நடுதல்; பதித்தல்;
நல்குதல் - அளித்தல்;)



94)
நல்குரவு போக்கிடும் நற்பெரும் செல்வமே!
செல்கதிகாட் டீசா! திருவடி வெல்கவே!
வாழ்க திருநாமம்! அண்ணா மலையானே!
ஊழ்வினை எல்லாம் ஒழி.



நல்குரவு போக்கிடும் நற்பெரும் செல்வமே!
செல்கதி காட்டு ஈசா! திருவடி வெல்கவே!
வாழ்க திருநாமம்! அண்ணாமலையானே!
ஊழ்வினை எல்லாம் ஒழி.


(நல்குரவு - வறுமை;
செல் கதி - செல்கின்ற வழி;
செல்கதி காட்டு ஈசா - செல்கின்ற வழியைக் காட்டும் ஈசனே;
ஊழ்வினை - பழவினை);



95)
ஒழிவின்றித் தீவினை ஒன்றே புரிந்து
பழிபெருக்கும் என்னைஉனைப் பாடும் வழிப்புகுத்தி,
அன்புள்ளே ஊறவைத்தாய்; அண்ணா மலையானே!
என்பொன்னே! கைம்மா றிலேன்.



ஒழிவு இன்றித் தீவினை ஒன்றே புரிந்து
பழி பெருக்கும் என்னை, உனைப் பாடும் வழிப் புகுத்தி,
அன்பு உள்ளே ஊறவைத்தாய்; அண்ணாமலையானே!
என் பொன்னே! கைம்மாறு இலேன்.

(
பாடும் வழிப்புகுத்தி - பாடும் வழியில் புகச் செய்து;
கைம்மாறு - பிரதி உபகாரம்;
பொன்னே - பொன் போன்றவனே;
கைம்மாறு இலேன் - பிரதியுபகாரம் இல்லேன்;)


(திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.10 -
"தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் ... ஈசா உடலிடங் கொண்டாய் யான்இதற் கிலன்ஓர்கைம் மாறே)



96)
இலேன்நற் குணங்கள்; இனியநின் நாமம்
சொலேன்;நான் மனத்திலும் தூயேன் அலேன்;எனினும்
ஐயா, அருள்புரிந்தாய்; அண்ணா மலையாய்!தென்
ஐயாறா! என்னேநின் அன்பு !



(இலேன் - நான் இல்லாதவன்;
சொலேன் - நான் சொல்லாதவன்;
எனினும் - இருந்தாலும்;
ஐயன் - தலைவன்;
தென் - இனிய;
ஐயாறன் - ஐயாறு எனும் தலத்தில் உறைபவன்;)


97)
"அன்பருக்ன்பனே! ஆறோடும் சென்னியனே!
என்பரக்ணி ஈசனே! இன்பனே!"
என்றுபல சொல்லிஉனை ஏத்திடும் பத்தருடன்
சென்று கலக்கஅருள் செய்.



"அன்பருக்கு அன்பனே! று ஓடும் சென்னியனே!
என்பு அவு அக்கு அணி ஈசனே! இன்பனே!"
என்று பல சொல்லி உனை ஏத்திடும் பத்தருடன்
சென்று கலக்க அருள்செய்.


(சென்னி - தலை;
என்பரவக்கணி - என்பு அரவு அக்கு அணி;
என்பு - எலும்பு;
அரவு - பாம்பு;
அக்கு - உருத்திராக்ஷம்;
அணி - அணிகின்ற;
ஏத்துதுதல் - துதித்தல்; புகழ்தல்;
சென்று கலத்தல் - போய்ச் சேர்ந்து இருத்தல்;)


98)
செய்த வினைகளின் சீற்றம் ஒழிந்திடக்
கொய்தமலர் கொண்டடி போற்றிஎயில் எய்த
வரைவில்லேந்ண்ணா மலையானே காஎன்
றுரைசெய் மனமே;உய் வுண்டு.



செய்த வினைகளின் சீற்றம் ஒழிந்திடக்,
கொய்த மலர் கொண்டு அடி போற்றி, "எயில் எய்த
வரைவில்ந்து அண்ணாமலையானே! கா" என்று
உரைசெய் மனமே; உய்வு உண்டு.


கொய்த மலர் - புதிதாகப் பறித்த பூக்கள்;
எயில் - கோட்டை; முப்புரங்கள்;
வரை வில் ஏந்து - மலையை வில்லாக ஏந்திய;
கா - காப்பாயாக;


99)
உண்டுண் டுடல்பெருக்கி ஓயா துழன்று,மால்
கொண்டு கொடுவினையே கூட்டுநெஞ்சே! பண்டு
பிரமனரி தேடு பெரும்சுடரோன் மேல்பாச்
சரம்தொடுத் தேத்துவாய் தாள்!



உண்டுண்டு உடல் பெருக்கி, ஓயாது உழன்று, மால்
கொண்டு கொடுவினையே கூட்டும் நெஞ்சே! பண்டு
பிரமன் அரி தேடு பெரும் சுடரோன்மேல்
பாச்சரம் தொடுத்து ஏத்துவாய் தாள்!


(உண்டு உண்டு - சாப்பிட்டுச் சாப்பிட்டு;
மால் - மயக்கம்;
கொடுவினை - பாவச்செயல்;
கூட்டுநெஞ்சே - கூட்டுகிற நெஞ்சமே;
பண்டு - பண்டை; முன்னொரு காலம்;
பிரமனரி - பிரமன் அரி - பிரம்மா விஷ்ணு
பாச்சரம் - பாமாலை; சரம் - மாலை;)



100)
தாள்களில் நித்தம் தமிழ்ப்பாக்கள் சாத்து,நெஞ்சே!
வேள்பொடி ஆக விழித்த,உமை கேள்வன்,
"அரையனே! அண்ணா மலையனே!" என்றென்
றுரைப்பாரைக் காக்கும் ஒளி!



தாள்களில் நித்தம் தமிழ்ப்பாக்கள் சாத்து, நெஞ்சே!
வேள் பொடி ஆக விழித்த, உமைகேள்வன்,
"அரையனே! அண்ணாமலையனே!" என்றென்று
உரைப்பாரைக் காக்கும் ஒளி!


தாள்களில் - இரு திருவடிகளில்;
நித்தம் - எப்பொழுதும்;
சாத்துதல் - அணிவித்தல்;
வேள் - மன்மதன்;
பொடி - சாம்பல்;
உமை கேள்வன் - உமைக்குக் கணவன் - உமாபதி;
அரையன் - அரசன்;
என்றென்று - என்று என்று - என்று பலமுறை சொல்லி;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இந்த வெண்பா அந்தாதி மாலை, முதற் பாடல் "ஒளிப்பிழம்பாய் நின்ற" என்று தொடங்கி, நூறாம் பாடலில் "காக்கும் ஒளி" என்று முடிந்து, மண்டலித்து வருகின்றது.



No comments:

Post a Comment