Saturday, April 30, 2016

03.01-11 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
11)
ஒளிவீசி எல்லையிலா ஒன்றாகி நின்றாய்,
தெளிவிலா மால்அயன் தேட; எளிதில்
அடியார்க் ருள்கின்ற அண்ணா மலையே!
கொடியேனை நீஏற்றுக் கொள்.



ஒளிவீசி, எல்லை இலா ஒன்று ஆகி நின்றாய்,
தெளிவு இலா மால் அயன் தேட;
எளிதில் அடியார்க்கு அருள்கின்ற அண்ணாமலையே!
கொடியேனை நீ ஏற்றுக் கொள்.


12)
கொள்வேன் உனையே குறிக்கோளாச் சங்கரா!
கள்வா! மனத்தைக் கவர்ந்தவனே! புள்ளேறும்
மாலறியா அண்ணா மலையே! எமனைஉதை
காலனே! நல்வழி காட்டு.



கொள்வேன் உனையே குறிக்கோளாச் சங்கரா - சங்கரனே, உன்னையே குறிக்கோளாகக் கொள்வேன்;
புள் ஏறும் மால் - கருட வாகனம் உடைய விஷ்ணு; (புள் - பறவை);
எமனை உதை காலனே - எமனை உதைத்த காலை உடையவன்; காலகாலனே;



13)
காட்டிலொரு வேடனது கண்பெற்றாய்; பாண்டிய
நாட்டிலொரு புண்பெற்றாய்; நல்லமுதைக் காட்டிலும்
நஞ்சே விரும்பினாய்; நம்பனே! நான்தொழுதேன்!
வஞ்சன் எனைக்காக்க வா!



காட்டில் ஒரு வேடனது கண் பெற்றாய்; - காட்டில் கண்ணப்பரின் கண்ணை உன் கண்ணாக அடைந்தவனே;
பாண்டிய நாட்டில் ஒரு புண் பெற்றாய்; - பிட்டுக்கு மண் சுமந்து பாண்டிய நாட்டில் பிரம்படி பட்டுப் புண் அடைந்தவனே;
நல்லமுதைக் காட்டிலும் நஞ்சே விரும்பினாய்; - தேவர்கள் இனிய அமுதத்தை உண்பதற்காக, விடத்தை உண்டவனே;
நம்பன் - கடவுள்; சிவன்;






14)
வாடி அயன்மால் வருந்தினார், உன்னடியைத்
தேடிச் சிவனே!உன் சேவடியைப் பாடி
உருகும் அடியாரை உய்விக்க வந்த
அருள்மலையே! அஞ்சல் அளி.



வாடி அயன் மால் வருந்தினார், உன்டியைத் தேடிச் சிவனே! - சிவபெருமானே, உன் திருவடியைத் தேடிக் காணாமல் நான்முகனும் விஷ்ணுவும் வருந்திணார்கள்;
உன் சேவடியைப் பாடி உருகும் அடியாரை உய்விக்க வந்த அருள்மலையே! - உன் சிவந்த திருவடியைப் பாடி உருகுகின்ற பக்தர்களை ஈடேற்ற வந்த அருள்வடிவான மலையே;
அஞ்சல் அளி - அடியேனுக்கு அபயம் அருள்வாயாக;



15)
அளிஇன்றி ஆணவத்தால் அன்றிருவர் தேட
ஒளித்திருந்தாய்; ஓர்கூ றொருத்திக்ளித்துவந்தாய்;
அண்ணா மலையே! அருட்கடலே! நெற்றியிலோர்
கண்ணா! கழல்தொழுதேன்; கா!



அளி இன்றி ஆணவத்தால் அன்று இருவர் தேட ஒளித்து இருந்தாய்;
ஓர் கூறு ஒருத்திக்கு அளித்து உவந்தாய்;
அண்ணா மலையே! அருட்கடலே! நெற்றியில் ஓர் கண்ணா!
கழல்தொழுதேன்; கா!


(அளி - அன்பு; பக்தி;
ஒளித்தல் - மறைத்துக்கொள்ளல்;
கூறு - பாகம்;
ஒருத்தி - உமை;
உவத்தல் - மகிழ்தல்;
கழல் - திருவடி;
கா - காப்பாற்று;)


இலக்கணக் குறிப்பு : ஒளித்தல் - (ஒளிந்தான், ஒளிந்தாய், என்பன பிழையான பிரயோகங்கள் என்று எண்ணுகின்றேன்) ஒளித்தான், ஒளித்தாய் என்பனவே சரியான பிரயோகங்கள்போல்.
(அப்பர் தேவாரம் - 6.55.1 - "..... ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி....")
(அப்பர் தேவாரம் - 5.50.7 -
பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு
வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல்
தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா
ஓடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ.)


( காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதி - 11.4.54 -
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய்
ஓருருவாய் நின்னோடு உழிதருவான் - நீருருவ
மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய
பாகத்தான் காணாமே பண்டு.
--- "மாயோன், நின்னுடைய பாகத்தானாய் நின்னோடு ஓருருவாய் உழிதருவானாகவும், அவன் பண்டொருகால் காணாதபடி நீ எங்குச் சென்று ஒளித்தாய்" என்க.);



16)
காத்திடுமால் தேடியவா! கண்ணுதலாய்! பாமலர்கள்
கோத்துனது சேவடியில் சாத்துகிறேன்; தீத்திரளாய்
ஓங்கியவா! நான்மறையின் உட்பொருளே! மாநதியைத்
தாங்கியவா! காத்தருள்தாள் தந்து.



காத்திடும் மால் தேடியவா! கண்ணுதலாய்! - காக்கும் தொழிலைச் செய்யும் திருமாலால் தேடப்பட்டவனே! நெற்றிக்கண்ணனே!
பாமலர்கள் கோத்து உனது சேவடியில் சாத்துகிறேன்; - பாமாலைகள் புனைந்து உன் சிவந்த பாதத்தில் சூட்டுகின்றேன்; (சாத்துதல் - அணிவித்தல்);
தீத்திரளாய் ஓங்கியவா! நான்மறையின் உட்பொருளே! - சோதிப்பிழம்பாகி உயர்ந்தவனே! நால்வேதத்தின் பொருளே;
மாநதியைத் தாங்கியவா! காத்து அருள் தாள் தந்து. - கங்காதரனே! உன் திருவடியை அடியேனுக்கு அருளிக் காப்பாயாக!




(திருவாசகம் - திருவண்டப் பகுதி - அடி 12-14
"...........
முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள்...."
---- எல்லாப் பொருள்களையும் படைக்கும் பிரமனைப் படைக்கின்ற பழையவன். படைக்கப்பட்ட பொருளைக் காப்போனாகிய திருமாலைக் காக்கின்ற கடவுள்.)



17)
தந்தாய் பதவிதன் தந்தைதாள் வெட்டியதற்
கெந்தாய்! செருக்ழிக்க அன்ழலாய் வந்தாய்;
அருள்மலையே! அன்போடிபோற்றும் என்றன்
மருள்கெடுப்பாய் சீக்கிரம் வந்து.



தந்தாய் பதவி, தன் தந்தை தாள் வெட்டியதற்கு; - சண்டேச நாயனார் தம் தந்தையின் கால்களை வெட்டியது கண்டு அவருக்குச் சண்டீசப் பதவியைத் தந்தவனே; (சண்டேசுர நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);
எந்தாய்! செருக்கு அழிக்க அன்று அழலாய் வந்தாய்; - எம் தந்தையே; பிரவிஷ்ணுக்களின் ஆணவத்தை அழிக்க அன்று சோதியாகி வந்தவனே;
அருள்மலையே! அன்போடு அடி போற்றும் என்றன் மருள் கெடுப்பாய் சீக்கிரம் வந்து. - அருள்மலை போன்றவனே; பக்தியோடு உன் திருவடியை வணங்கும் எனக்கு விரைந்து அருள்புரிந்து என் மயக்கங்களைத் தீர்ப்பாயாக;


(சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - 9.29.10 -
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும்அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. )



18)
வந்தித்து நிற்கின்றேன் மாதேவா! வல்வினைப்
பந்தத்தைச் சுட்டெரிப்பாய்; பண்டொருநாள் வந்திக்கா
மண்சுமந்தாய்; இன்ப மலையே! முடிமேலே
பெண்சுமந்தாய்; நான்சுமையோ பின்.



வந்தித்து நிற்கின்றேன் மாதேவா! - மகாதேவனே, உன்னைத் துதித்து நிற்கின்றேன்
வல்வினைப் பந்தத்தைச் சுட்டு எரிப்பாய்; - வல்வினைப் பந்தங்களைச் சுட்டு எரிப்பவனே;
பண்டு ஒருநாள் வந்திக்கா மண் சுமந்தாய்; - முன்னொரு நாள், மதுரையில் வந்தி என்ற அடியவர் தந்த பிட்டுக்காக மண் சுமந்தவனே; (மதுரையில் வந்தி என்ற பக்தைக்காகப் பிட்டுக்கு மண்சுமந்த வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்தில் காண்க).
இன்ப மலையே! முடிமேலே பெண் சுமந்தாய்; நான் சுமையோ பின் - இன்ப மலை போன்றவனே; திருமுடிமேல் கங்கையைச் சுமந்தவனே; அடியேன் உனக்கு ஒரு சுமையோ?



19)
பின்னும் அரவு; பிறையோ முடிமேலே
மின்னும்; கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்
ளிஇலார் எட்டார் அறி.



பின்னும் அரவு; பிறையோ முடிமேலே மின்னும்;
கொடிமேலே வெள்விடைச் சின்னம்;
ஒளியாய் உயர்ந்த ஒருவன், அவனுக்கு அளி இலார் எட்டார் அறி.
(பின்னுதல் - தழுவுதல்;
அரவு - பாம்பு;
பிறை - பிறைச்சந்திரன்;
மின்னுதல் - ஒளிவீசுதல்;
வெள் விடை - வெண்ணிற எருது - இடபம்;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அளி - அன்பு; பக்தி;
எட்டுதல் - நெருங்குதல்; கிட்டுதல்;)



20)
அறிவுக்றிவாய் அவன்உள்ளான்; ஐந்து
பொறிகளுக் கெட்டான்; புகழ்சேர் நெறியான்;
மனமேநீ அண்ணா மலையான்தாள் சிந்தி;
உனதிருள்போய்த் தோன்றும் ஒளி.



அறிவுக்கு அறிவாய் அவன் உள்ளான்;
ஐந்து பொறிகளுக்கு எட்டான்;
புகழ்சேர் நெறியான்;
மனமே! நீ அண்ணாமலையான் தாள் சிந்தி;
உனது இருள் போய்த் தோன்றும் ஒளி.


(ஐந்து பொறிகள் - ஐம்புலன்கள்;
எட்டான் - எட்டாதவன்; அடைய முடியாதவன்;
நெறி - வழி; மார்க்கம்;
தாள் - திருவடி; பாதம்;)


(அப்பர் தேவாரம் - 6.97.10 -
"மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.");



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்

1 comment:

  1. அன்புள்ள சிவசிவா வி.சு அவர்களே, இன்றுதான் இவ்வலைப்பதிவைக் காண்கின்றேன். மிக அருமையாகப் படைத்திருக்கின்றீர்கள். சிவனருள் என்றே எண்ணுகின்றேன்.

    //இலக்கணக் குறிப்பு : ஒளித்தல் - (ஒளிந்தான், ஒளிந்தாய், என்பன பிழையான பிரயோகங்கள் என்று எண்ணுகின்றேன்) ஒளித்தான், ஒளித்தாய் என்பனவே சரியான பிரயோகங்கள்போல்.
    (அப்பர் தேவாரம் - 6.55.1 - "..... ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி....")// --

    இங்கே ஒளிந்தான் -- ஒளித்தான் என்பன தன்வினை பிறவினையாக இருக்கும் வாய்ப்புள்ளதன்றோ?

    ReplyDelete