Saturday, April 30, 2016

03.01-51 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)

03.01 – அண்ணாமலை - (அண்ணாமலை அந்தாதி)



01-23 Dec 2006
அண்ணாமலை அந்தாதி
--------------------------------------
(வெண்பா)
51)
ஒளிதிகழ் திங்களை உச்சியில் வைத்தாய்!
தெளிவிலார் காணாச் சிவனே! வளிநீர்
அனல்மண் வெளியான அண்ணா மலையாய்!
உனக்கிணை யாரிங் குளர்?



ஒளி திகழ் திங்களை உச்சியில் வைத்தாய் - பிரகாசிக்கும் சந்திரனைத் தலையில் அணிந்தவனே;
தெளிவு இலார் காணாச் சிவனே! - தெளிவில்லாதவர்களால் அறியப்படாத சிவனே;
வளி நீர் அனல் மண் வெளி அண்ணாமலையாய் - காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் என ஐம்பூதங்கள் ஆன அண்ணாமலையானே;
உனக்கு இணை யார் இங்கு உளர் - உன்னை ஒப்பார் எவர் உள்ளார்?



(உச்சி - முடி; தலை;
வைத்தாய் - வைத்தவனே;
தெளிவு - ஞானம்;
வளி - காற்று;
அனல் - நெருப்பு;
மண் - நிலம்;
வெளி - ஆகாயம்;
இணை - ஒப்பு; சமம்;)



52)
இங்குளாய் அங்குளாய் என்ன இயலுமோ,
எங்குமுள எந்தையே! என்னுளத்தும் தங்க
வருவாயே, அண்ணா மலையாய்! பிறவாப்
பெருமானே! நீயே பிரான்.



இங்கு உளாய், அங்கு உளாய், என்ன இயலுமோ,
எங்கும் உ எந்தையே! என்ளத்தும் தங்க வருவாயே,
அண்ணாமலையாய்! பிறவாப் பெருமானே! நீயே பிரான்.


உளாய் - உள்ளாய் - இருக்கின்றாய்;
எந்தை - எம் தந்தை;
என் உளத்தும் - அடியேனுடைய உள்ளத்திலும்;
பிரான் - தலைவன்;



53)
பிரானே! உலகு பிறப்பித்த தாயே!
அராஅணியும் ஐயா! அடியேன் இராப்பகல்
எண்ணி இறைஞ்சும் இறைவனே! என்அகக்
கண்ணைத் திறந்துனைக் காட்டு!



பிரானே! உலகு பிறப்பித்த தாயே!
அரா அணியும் ஐயா!
அடியேன் இராப்பகல் எண்ணி இறைஞ்சும் இறைவனே!
என் அகக்கண்ணைத் திறந்து உனைக் காட்டு!
(பிரான் - தலைவன்;
பிறப்பித்தல் - தோன்றச்செய்தல்;
அரா - பாம்பு;
இறைஞ்சுதல் - வேண்டுதல்; தொழுதல்;)



54)
உனைக்காட்டில் இங்கே உயர்ந்தவர் யாரே!
வினைச்சூட்டில் வேகும் மிடியன் எனக்ருள்வாய்!
அண்ணலே! அன்றெழுந்த ஆலம் அமுதாக
உண்ணும்நீ அன்பின் உரு!



உனைக்காட்டில் இங்கே உயர்ந்தவர் யாரே!
வினைச்சூட்டில் வேகும் மிடியன் எனக்கு அருள்வாய்!
அண்ணலே! அன்று எழுந்த ஆலம் அமுதாக உண்ணும் நீ அன்பின் உரு!


(உனைக்காட்டில் - உன்னினும் - உன்னைவிட;
மிடியன் - தரித்திரன்;
ஆலம் - ஆலகால விஷம்;
ஆலம் அமுதாக உண்ணும் நீ - ஆலகால விஷத்தை அமிர்தமாக உண்ட நீ;
அன்பின் உரு - அன்பின் வடிவம்;)



55)
உருவமெனும் அன்பர்க் குருவம் உடைய
அருவமே! ஆலின்கீழ் அன்று குருவாய்
அமர்ந்த மறைப்பொருளே! அண்ணா மலையாய்!
உமைப்போல் துணையார் உளர்!



உருவம் எனும் அன்பர்க்கு உருவம் உடைய அருவமே!
ஆலின்கீழ் அன்று குருவாய் அமர்ந்த மறைப்பொருளே!
அண்ணா மலையாய்! உமைப்போல் துணை யார் உளர்!



(அருவம் - உருவம் அற்ற பொருள்;
ஆல் - கல்லா மரம் (ஆல மரத்தில் ஒரு வகை);
குரு - தட்சிணாமூர்த்தி;
மறை - வேதம்;
உமைப்போல் - உம்மைப் போன்ற; (உனை என்பது எதுகை நோக்கி உமை என்று வந்தது. ஒருமை பன்மை மயக்கம்);
உளர் - உள்ளார்;)


இலக்கணக் குறிப்பு : ஒருமை பன்மை மயக்கம் - உதாரணம்: அப்பர் தேவாரம் - 4.1.4 - "முன்னம் அடியேன் ..... தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான்..." - குறிப்புரையிற் காண்பது: "மூன்றாவதடியில் தன்னை என்றும், தலையாயவர் என்றும் உள்ளது ஒருமை பன்மை மயக்கம் ஆயினும், எதுகை நோக்கியதாகும்")



56)
உளர்சிலர்; நீஇலைஎன் றோயா துரைப்பார்;
வளர்மதி சூடும்பெம் மான்உன் விளையாட்டே!
வெண்ணீறு பூசும் விமலா! அடிதொழுதேன்;
அண்ணா மலையாய், அருள்!



உளர் சிலர்; நீ இலை என்று ஓயாது உரைப்பார்;
வளர்மதி சூடும் பெம்மான் உன் விளையாட்டே!
வெண்ணீறு பூசும் விமலா! அடி தொழுதேன்;
அண்ணாமலையாய், அருள்!
(உரைநடை அமைப்பில்:
நீ இலை என்று ஓயாது உரைப்பார் சிலர் உளர்; வளர் மதி சூடும் பெம்மான் உன் விளையாட்டே!
வெண்ணீறு பூசும் விமலா! அண்ணா மலையாய்! அடி தொழுதேன்; அருள்! )


(இலை - இல்லை;
வளர்மதி = வளர்கின்ற சந்திரன்;
பெம்மான் - கடவுள்;
வெண்ணீறு - திருநீறு;
விமலன் - மலம் அற்றவன்;)



57)
அருள்என்மரர் அடிதொழ, நஞ்சுண்
டிருள்சேர் கழுத்துடைய ஈசா! மருள்போக்கும்
ஐந்தெழுத்து மந்திரத்தாய்! அண்ணா மலையானே!
மைந்தா!காட் டாய்நல் வழி.



"அருள்" என்று அமரர் அடி தொழ, நஞ்சுண்டு,
இருள் சேர் கழுத்துடைய ஈசா!
மருள் போக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தாய்!
அண்ணாமலையானே! மைந்தா! காட்டாய் நல்வழி.


(நஞ்சு - ஆலகால விஷம்;
மருள் - மயக்கம்;
மைந்தன் - வீரன்;
"வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி" - அப்பர் தேவாரம் - திருமுறை 6.32.8
)



58)
வழிஒன்றியாமல் வாழ்ந்து மிகவே
இழிந்தேனை ஈர்த்துள்ளே இன்பம் வழியவைத்தாய்!
ஆனந்தத் தாண்டவனே! அண்ணா மலையாய்!நீ
வானம் அளிக்கும் மருந்து.



வழி ஒன்று அறியாமல் வாழ்ந்து, மிகவே
இழிந்தேனை ஈர்த்து, உள்ளே இன்பம் வழியவைத்தாய்!
ஆனந்தத் தாண்டவனே! அண்ணாமலையாய்! நீ
வானம் அளிக்கும் மருந்து.


(இழிந்தேனை - இழிந்த என்னை;
ஈர்த்து - (உன்னிடம்) இழுத்து;
உள் - உள்ளிடம்; மனம்;
வானம் - வானுலகம்;
மருந்து - அமிர்தம்;
வானம் அளிக்கும் மருந்து. - பிறவிப்பிணியைத் தீர்த்துச் சிவலோகம் அளிக்கும் மருந்து)



59)
மருந்தாகித் தீர்த்தாய் மயலை, மறந்தே
இருந்தேனைத் தேடிவந்(து) ஈர்த்தே! அருந்தேனாய்த்
தித்திக்கும் தேவா! சிவனே!அண் ணாமலையாய்!
பத்தியொடு செய்வேன் பணி.



மருந்தாகித் தீர்த்தாய் மயலை, மறந்தே
இருந்தேனைத் தேடிவந்து ஈர்த்தே! அரும் தேனாய்த்
தித்திக்கும் தேவா! சிவனே! அண்ணாமலையாய்!
பத்தியொடு செய்வேன் பணி.


(உரைநடை:
அரும் தேனாய்த் தித்திக்கும் தேவா! சிவனே! அண்ணாமலையாய்!
மறந்தே இருந்தேனைத் தேடிவந்து ஈர்த்தே,
மருந்தாகி மயலைத் தீர்த்தாய்!
பத்தியொடு பணி செய்வேன்.)


(மருந்து - ஔஷதம்;
மயல் - மயக்கம்;
மறந்தே இருந்தேனை - மறந்து இருந்த என்னை;
ஈர்த்தல் - இழுத்தல்;
அரும் தேன் ஆய் - சிறந்த தேனாகி;
பத்தியொடு - பக்தியோடு;
பணி - தொண்டு;)



60)
பணிவேன்; பழவினைப் பற்றுக்க வெண்ணீ
ணிவேன்; தெவிட்டா அமுதே! மணியே!
அருமறைபோற்ண்ணா மலையாய்!நீ அன்றோ
ஒருவரை இல்லா ஒளி.



பணிவேன்; பழவினைப் பற்று அறுக்க வெண்ணீறு
அணிவேன்; தெவிட்டா அமுதே! மணியே!
அருமறை போற்று அண்ணாமலையாய்! நீ அன்றோ
ஒரு வரை இல்லா ஒளி.


(உரைநடை:
தெவிட்டா அமுதே! மணியே! அரு மறை போற்று அண்ணாமலையாய்!
நீ அன்றோ ஒரு வரை இல்லா ஒளி!
பழவினைப் பற்று அறுக்க வெண் நீறு அணிவேன்; பணிவேன்.)


(அருமறை - சிறந்த வேதங்கள்;
ஒரு வரை - ஒரு வரம்பு; ஓர் அளவு;)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



No comments:

Post a Comment