Wednesday, August 7, 2019

03.05.036 – பொது - நிதியை யேபெ ருக்க - (வண்ணம்)

03.05.036 – பொது - நிதியை யேபெ ருக்க - (வண்ணம்)

2007-04-24

3.5.36 - நிதியையே பெருக்க - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தத்த தனன தான தத்த

தனன தான தத்த .. தனதான)

(மகர கேத னத்தன் - திருப்புகழ் - சுவாமிமலை)


நிதியை யேபெ ருக்க .. மிகவும் ஆசை யுற்று

.. .. நிறைய நாள வத்தில் .. உழல்வேனை

.. நிமல நேய(ம்) மிக்க .. அடிய ரோடி ணைத்து

.. .. நினது தாள்து திக்க .. அருளாயே

மதிய ராவ லைக்கு(ம்) .. நதிகு ராவெ ருக்க

.. .. மலரும் வேணி வைத்த .. அருளாளா

.. வலிய தோர்வி டத்தை .. அமுத மாம டுத்த

.. .. மணிகொள் மாமி டற்றை .. உடையானே

மதியை மால ழிக்க .. மலையின் நேரி ருக்கும்

.. .. வலிய தோள்கள் தட்டி .. மதியாமல்

.. வசைக ளேயு ரைத்து .. வரையை வீச லுற்ற

.. .. மகிபன் நீடு கத்த .. ஒருபாத

நுதியி னால்நெ ரித்து .. நுனது சீர்மி குத்து

.. .. நுவல நாள ளித்த .. கயிலாயா

.. நுதலில் ஓர்க ணத்த .. இகலி யார்பு ரத்தை

.. .. நொடியில் வேவ வைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நிதியையே பெருக்க .. மிகவும் ஆசை உற்று

.. .. நிறைய நாள் அவத்தில் .. உழல்வேனை,

.. நிமல நேயம் மிக்க .. அடியரோடு இணைத்து

.. .. நினது தாள் துதிக்க .. அருளாயே;

மதி அரா அலைக்கும் .. நதி குரா எருக்க

.. .. மலரும் வேணி வைத்த .. அருளாளா;

.. வலியதோர் விடத்தை .. அமுதமா மடுத்த

.. .. மணிகொள் மா மிடற்றை .. உடையானே;

மதியை மால் அழிக்க .. மலையின் நேர் இருக்கும்

.. .. வலிய தோள்கள் தட்டி, .. மதியாமல்

.. வசைகளே உரைத்து .. வரையை வீசலுற்ற

.. .. மகிபன் நீடு கத்த .. ஒரு பாத

நுதியினால் நெரித்து, .. நுனது சீர் மிகுத்து

.. .. நுவல, நாள் அளித்த .. கயிலாயா;

.. நுதலில் ஓர் கண் அத்த; .. இகலியார் புரத்தை

.. .. நொடியில் வேவ வைத்த .. பெருமானே.



நிதியையே பெருக்க மிகவும் ஆசையுற்று நிறைய நாள் அவத்தில் உழல்வேனை - பொருட்செல்வத்தையே பெருக்க மிகவும் ஆசைகொண்டு நெடுங்காலமாகப் பயனற்றவற்றையே செய்து உழல்கின்ற என்னை;

நிமல நேயம் மிக்க அடியரோடு இணைத்து நினது தாள் துதிக்க அருளாயே - தூய அன்பு மிக்க அடியவர்களோடு சேர்த்து உன்னுடைய திருவடியைத் துதிக்கும்படி அருள்வாயாக; (நிமலம் - தூய்மை); (நிமல - 1. தூய. 2. நிமலனே - தூயனே என்ற விளியாகவும் கொள்ளல் ஆம்);


மதிராலைக்கும் நதி குராருக் மலரும் வேணி வைத்த அருளாளா - திங்கள், பாம்பு, அலைக்கின்ற கங்கை, குரவமலர், எருக்கமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்த அருளாளனே; (வேணி - சடை);

வலியதோர் விடத்தை அமுதமா மடுத்த மணிகொள் மா மிடற்றை உடையானே - கொடிய ஆலகால விடத்தை அமுதமாக உண்டு மணி இலங்கும் அழகிய கண்டத்தை உடையவனே; (மடுத்தல் - உண்ணுதல்);


மதியை மால் அழிக்க மலையின் நேர் இருக்கும் வலிய தோள்கள் தட்டி மதியாமல் - தன் அறிவை ஆணவம் மறைக்கவும் மலைபோல் இருக்கும் வலிய புஜங்களைத் தட்டிச் சிறிதும் மதியாமல்;

வசைகளேரைத்து வரையை வீசலுற்ற மகிபன் நீடு கத்த - பலவாறு திட்டிக் கயிலைமலையைப் பேர்த்து எறிய முயன்ற இலங்கை மன்னனான இராவணன் பெரிதும் கத்தும்படி அவனை; (வரை - மலை); (மகிபன் - அரசன்);

ஒரு பாத நுதியினால் நெரித்து நுனது சீர் மிகுத்து நுவல நாள் அளித்த கயிலாயா - ஒரு திருப்பாதத்தின் நுனியால் நசுக்கிப் பின் அவன் உன் புகழை மிகவும் ஓத அவனுக்கு நீண்ட ஆயுளை வரமளித்த கயிலைமலையானே; (நுதி - நுனி); (நுனது - உனது); (நுவல்தல் - சொல்லுதல்);

நுதலில் ஓர் ண் அத்த - நெற்றியில் ஒரு கண்ணை உடைய தந்தையே; (நுதல் - நெற்றி); (அத்தன் - தந்தை);

இகலியார் புரத்தை நொடியில் வேவ வைத்த பெருமானே - பகைவர்களது முப்புரத்தை ஒரு நொடியளவில் சாம்பலாக்கிய பெருமானே; (இகலியார் - பகைவர்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, August 6, 2019

03.05.035 – பொது - அகலா வினைத்தொகுதி - (வண்ணம்)

03.05.035 – பொது - அகலா வினைத்தொகுதி - (வண்ணம்)

2007-04-21

3.5.35 – அகலா வினைத்தொகுதி - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தத்ததன தனதான தத்ததன

தனதான தத்ததன .. தனதான )

(வலிவாத பித்தமொடு - திருப்புகழ் - திருவண்ணாமலை)


அகலாவி னைத்தொகுதி அறுமாறு னைச்சரணம்

..... அடைமாத வர்க்கருளும் .. உனையோரேன்

.. அவமேபெ ருக்கியிரு நில(ம்)மீது நித்தமிடர்

..... அடைவால்வ ருத்த(ம்)மிக .. உறுவேனும்

புகல்நீயெ னத்தினமு(ம்) மணமேறு சொற்களொடு

..... புகழ்மாலை கட்டிவழி .. படுவேனோ

.. புரம்வேவ வெற்பையொரு சிலையாவ ளைத்துநகை

..... புரிவீர நச்சரவ .. அரைநாணா

அகமாச கற்றியுன தடியேநி னைத்துருகும்

..... அடியார்ம னத்தளியில் .. மகிழ்வோனே

.. அலர்மேலி ருப்பவனும் அரமேலி ருப்பவனும்

..... அறியாநெ ருப்புருவில் .. எழுவோனே

முகமாறு பெற்றவனை அருள்நாத கைத்தவிட(ம்)

..... முனைநாள்ம டுத்துமிட .. றிடுவோனே

.. முதல்வாம டக்கொடியை ஒருபாகம் வைத்துநதி

..... முடிமீது வைத்தசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

அகலா வினைத்தொகுதி அறுமாறு உனைச் சரணம்

..... அடை மாதவர்க்கு அருளும் உனை ஓரேன்;

.. அவமே பெருக்கி இருநிலம் மீது நித்தம் இடர்

..... அடைவால் வருத்தம் மிக உறுவேனும்,

"புகல் நீ" எனத் தினமும் மணம் ஏறு சொற்களொடு

..... புகழ்மாலை கட்டி வழிபடுவேனோ;

.. புரம் வேவ வெற்பை ஒரு சிலையா வளைத்து நகை

..... புரி வீர; நச்சரவ அரைநாணா;

அக-மாசு அகற்றி, உனது அடியே நினைத்து உருகும்

..... அடியார் மனத்-தளியில் மகிழ்வோனே;

.. அலர்மேல் இருப்பவனும் அரமேல் இருப்பவனும்

..... அறியா நெருப்பு உருவில் எழுவோனே;

முகம் ஆறு பெற்றவனை அருள் நாத; கைத்த விடம்

..... முனைநாள் மடுத்து மிடறு இடுவோனே;

.. முதல்வா; மடக்கொடியை ஒரு பாகம் வைத்து, நதி

..... முடிமீது வைத்த சிவபெருமானே.


அகலா வினைத்தொகுதி அறுமாறு உனைச் சரணம் அடை மாதவர்க்கு அருளும் உனை ஓரேன் - நீங்காத பழவினையெல்லாம் தீரும்படி உன்னைச் சரண்புகுந்த பெரும் தவத்தினர்க்கு அருளும் உன்னை நான் நினக்கமாட்டேன்;

அவமே பெருக்கி இருநிலம் மீது நித்தம் இடர் அடைவால் வருத்தம் மிக உறுவேனும் - பயனற்ற செயல்களே செய்து இந்தப் பூமியில் தினமும் துன்பத்தைப் பெறுதலால் மிகவும் வருந்தும் நானும்; (அடைவு - அடைதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.125.4 - "துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு பிணியடை விலர்");

"புகல் நீ" எனத் தினமும் மணம் ஏறு சொற்களொடு புகழ்மாலை கட்டி வழிபடுவேனோ - "நீயே புகல்" என்று உன்னைச் சரணடைந்து நாள்தோறும் வாசம் மிக்க சொற்களால் உன் புகழ்பாடும் பாமாலைகளைத் தொடுத்து வழிபட எனக்கு அருள்வாயாக;

புரம் வேவ வெற்பை ஒரு சிலையா வளைத்து நகை புரி வீர - முப்புரங்களும் வெந்து சாம்பலாகும்படி மேரு மலையை ஒரு வில்லாக வளைத்துச் சிரித்த வீரனே;

நச்சரவ அரைநாணா - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

அக-மாசு அகற்றி, உனது அடியே நினைத்து உருகும் அடியார் மனத்-தளியில் மகிழ்வோனே - மனத்தின் மாசுகளை நீக்கி, உன் திருவடியையே நினைத்து உருகும் பக்தர்களது மனமே கோயிலாக விரும்பி உறைபவனே; (பூசலார் நாயனார், வாயிலார் நாயனார், முதலியோரது வரலாறுகளைப் பெரியபுராணத்திற் காண்க);

அலர்மேல் இருப்பவனும் அரமேல் இருப்பவனும் அறியா நெருப்பு உருவில் எழுவோனே - பூமேல் இருக்கும் பிரமனாலும் பாம்பின்மேல் இருக்கும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதியாகி உயர்ந்தவனே; (அர = பாம்பு ); (சம்பந்தர் தேவாரம் - 1.98.9 - "அரப்பள்ளியானு மலருறைவானு மறியாமைக்");

முகம் ஆறு பெற்றவனை அருள் நாத - முருகனைத் தந்தருளிய நாதனே;

கைத்த விடம் முனைநாள் மடுத்து மிடறு இடுவோனே - கசந்த ஆலகால நஞ்சை முன்பு உண்டு கண்டத்தில் இட்டவனே; (மிடறு - கண்டம்)

முதல்வா - முதல்வனே;

மடக்கொடியை ஒரு பாகம் வைத்து நதி முடிமீது வைத்த சிவபெருமானே - இளங்கொடி போன்ற உமையை ஒரு பாகமாக வைத்துக், கங்கையைத் திருமுடிமேல் வைத்த சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, August 5, 2019

03.05.034 – பொது - எரியெனவே சுடு பழவினை - (வண்ணம்)

03.05.034 – பொது - எரியெனவே சுடு பழவினை - (வண்ணம்)

2007-04-17

3.5.34 – எரியெனவே சுடு பழவினை (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தானன தனதன தானன

தனதன தானன .. தனதான )

(பரவரி தாகிய வரையென நீடிய - திருப்புகழ் - சுவாமிமலை)


எரியென வேசுடு பழவினை நாடொறும்

.. .. இடரவை யேதர .. அதனாலே

.. இருநில(ம்) மீதுழல் நிலையுடை யேனையும்

.. .. இணையடி பாடிட .. அருள்வாயே

அரியயன் நேடிட அழலுரு வாயுயர்

.. .. அரியவ னேமறை .. உரைநாவா

.. அடிதொழு மாணியின் உயிர்கொல ஓடிய

.. .. அடல்நமன் மார்பினில் .. உதைகாலா

திரிபுர(ம்) நீறெழ ஒருகணை ஏவிய

.. .. சிலையுடை யாய்ஒரு .. தருநீழல்

.. திருமணி வாசகர் வருவழி மேவிய

.. .. திகழொளி யேஅடர் .. வனமாரும்

நரிகளை மாபரி எனவொரு நாடக(ம்)

.. .. நலமுற ஆடிய .. குழகாவான்

.. நதியொடு கூவிள(ம்) மதிபுனை வேணிய

.. .. நரைவிடை ஏறிய .. பெருமானே.


பதம் பிரித்து:

எரி எனவே சுடு பழவினை நாள்தொறும்

.. .. இடரவையே தர, அதனாலே

.. இருநிலம் மீது உழல் நிலை உடையேனையும்

.. .. இணையடி பாடிட அருள்வாயே;

அரி அயன் நேடிட அழல்-உருவாய் உயர்

.. .. அரியவனே; மறை உரை-நாவா;

.. அடிதொழு மாணியின் உயிர் கொல ஓடிய

.. .. அடல்-நமன் மார்பினில் உதை-காலா;

திரிபுரம் நீறெழ ஒரு கணை ஏவிய

.. .. சிலையுடையாய்; ஒரு தரு-நீழல்

.. திருமணி வாசகர் வரு-வழி மேவிய

.. .. திகழ்-ஒளியே; அடர் வனம் ஆரும்

நரிகளை மா-பரி என ஒரு நாடகம்

.. .. நலமுற ஆடிய குழகா; வான்

.. நதியொடு கூவிளம் மதி புனை வேணிய;

.. .. நரை-விடை ஏறிய பெருமானே.


எரினவே சுடு பழவினை நாள்தொறும் டர் அவையே தர அதனாலே - தீப் போலச் சுடுகின்ற பழைய வினைகள் தினமும் துன்பத்தையே தர, அதனால்;

இருநிலம் மீதுழல் நிலைடையேனையும் இணையடி பாடிட அருள்வாயே - இந்தப் பூமியின்மேல் வாடி உழல்கின்ற என்னையும் உன் இருதிருவடிகளைப் பாடுமாறு அருள்வாயாக; (இருநிலம் - பூமி);

அரின் நேடிட அழல் உருவாய் உயர் அரியவனே - திருமால் பிரமன் இவர்கள் தேடும்படி சோதி வடிவில் உயர்ந்த அரியவனே;

மறை உரை நாவா - வேதங்களைப் பாடியருளியவனே;

அடிதொழு மாணியின் உயிர் கொல ஓடிய அடல்-நமன் மார்பினில் உதை காலா - உன் திருவடியை வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்காக ஓடிய கொடிய வலிய கூற்றுவனது மார்பில் உதைத்த காலனே; (அடல் - கொல்லுதல்; வலிமை);

திரிபுரம் நீறு எழ ஒரு கணை ஏவிய சிலையுடையாய் - முப்புரங்களும் சாம்பலாகும்படி ஒரு கணையை எய்த வில்லை ஏந்தியவனே; (சிலை - வில்; மலை);

ஒரு தரு-நீழல் திருமணிவாசகர் வருவழி மேவிய திகழ் ஒளியே - ஒரு (குருந்த) மரத்தடியில் திருவுடைய மாணிக்கவாசகர் வரும் வழியில் ஞானஒளி வீசும் குருவாகி வீற்றிருந்தவனே;

அடர் வனம் ஆரும் நரிகளை மா பரி எனரு நாடகம் நலமுற ஆடிய குழகா - அடர்ந்த காட்டில் இருக்கும் நரிகளைச் சிறந்த குதிரைகள் ஆக்கித் திருவிளையாடல் புரிந்த அழகனே; (குழகன் - அழகன்; இளைஞன்); (இதனைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க);

வான்நதியொடு கூவிளம் மதி புனை வேணிய - கங்கை, வில்வம், திங்கள் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனே; (வானதி - வான் நதி - கங்கை); (கூவிளம் - வில்வம்); (வேணி - சடை);

நரைவிடை ஏறிய பெருமானே - வெள்ளை இடபத்தை வாகனமாக உடைய பெருமானே; (நரை - வெண்மை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, August 4, 2019

03.05.033 – கயிலாயம் - துயர்மிகு வழிகளை - (வண்ணம்)


03.05.033 – கயிலாயம் துயர்மிகு வழிகளை - (வண்ணம்)

2007-04-17

3.5.33 - துயர்மிகு வழிகளை (கயிலாயம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான)

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)



துயர்மிகு வழிகளை .. மிகநாடிச்
.. சுடுவினை தனிலுழல் .. அடியேனும்
மயலற நிதமுன .. தடிபேணி
.. வழிபட இனிதருள் .. புரிவாயே
எயிலவை படவொரு .. கணையேவி
.. இமையவர் இடரது .. களைவோனே
குயிலன மொழியுமை .. ஒருகூறா
.. குளிர்மலி கயிலையில் .. உறைவோனே.


துயர்மிகு வழிகளை மிக நாடிச் சுடுவினைதனில் உல் அடியேனும் - துன்பம் மிகும் வழிகளிலேயே மிகவும் விரும்பி ஈடுபட்டுத் தீவினையில் உழல்கின்ற அடியேனும்;
மயல் அற நிதம் உது அடிபேணி வழிபட இனிது அருள் புரிவாயே - என் மயக்கம் தீரத் தினமும் உன் திருவடியைப் போற்றி வழிபடுமாறு எனக்கு இன்னருள் புரிவாயாக;
எயில் அவை படரு கணைவி இமையவர் இடர் அது களைவோனே - முப்புரங்களும் அழிய ஒரு கணையை எய்து தேவர்களது இடரைத் தீர்த்தவனே;
குயில் அன மொழிமை ஒரு கூறா - குயில் போன்ற இன்மொழியை உடைய உமையை ஒரு பாகமாக உடையவனே; (சம்பந்தர் தேவாரம் - 2.106.8 - "குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக்");
குளிர்மலி கயிலையில் உறைவோனே - குளிர்ச்சி மிக்க கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமானே;

வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------

03.05.032 – இடைமருதூர் - இளமையில் இறையுனை - (வண்ணம்)

03.05.032 – இடைமருதூர் - இளமையில் இறையுனை - (வண்ணம்)

2007-04-11

3.5.32 - இளமையில் இறையுனை (இடைமருதூர் - திருவிடைமருதூர்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன .. தனதான )

(நிறைமதி முகமெனு மொளியாலே - திருப்புகழ் - சுவாமிமலை)


இளமையி லிறையுனை .. நினையாமல்

.. இழிவினை அனுதின .. மிகநாடி

அளவில தெனமிகு .. வினைதீர

.. அடிமலர் தொழுமனம் .. அருளாயே

வளையணி மலைமக .. ளொருகூறா

.. வடியுடை மழுவமர் .. கரவீரா

வளவயல் இடைமரு .. துறைவோனே

.. வளர்மதி நதிபுனை .. பெருமானே.


பதம் பிரித்து:

இளமையில் இறை உனை .. நினையாமல்,

.. இழிவினை அனுதினம் .. மிக நாடி,

அளவிலது என மிகு .. வினை தீர,

.. அடிமலர் தொழு மனம் .. அருளாயே;

வளை அணி மலைமகள் .. ஒரு கூறா;

.. வடியுடை மழு அமர் .. கர வீரா;

வள வயல் இடைமருது .. உறைவோனே;

.. வளர்மதி, நதி புனை .. பெருமானே.


இளமையில் இறைனை நினையாமல் - இளமையிலே இறைவனான உன்னைச் சிறிதும் எண்ணிப் போற்றுதலைச் செய்யாமல்; (இறை - 1. இறைவன்; 2. சிறிது); ("இறை" என்ற சொல்லை இப்படி இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);

இழிவினை அனுதினம் மிக நாடி - இழிந்தவற்றையே தினமும் மிகவும் விரும்பி;

அளவு இது எ மிகு வினை தீர - அளவற்றது என்னுமாறு மிகுந்த வினையெல்லாம் இனித் தீருமாறு;

அடிமலர் தொழு மனம் அருளாயே - உன் திருவடித்தாமரையை வழிபடும் மனத்தை எனக்கு அருள்வாயாக;

வளைணி மலைமகள் ரு கூறா - வளையல் அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனே;

வடியுடை மழுமர் கர வீரா - கூர்மையான மழுவைக் கையில் ஏந்திய வீரனே; (வடி - கூர்மை);

வள வயல் இடைமருது றைவோனே - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்றவனே;

வளர் மதி, நதி புனை பெருமானே - பிறைச்சந்திரனையும் கங்கையையும் சூடிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, August 3, 2019

03.07.002 – காரைக்கால் அம்மையார் துதி - கனிவுடைய மங்கை - (வண்ணம்)

03.07.002 – காரைக்கால் அம்மையார் துதி - கனிவுடைய மங்கை - (வண்ணம்)

2007-04-10

3.7.2 - காரைக்கால் அம்மையார் துதி

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தந்த தானனத்

தனதனன தந்த தானனத்

தனதனன தந்த தானனத் .. தனதான);

(கறைபடுமு டம்பி ராதெனக் - திருப்புகழ் - சுவாமிமலை)


கனிவுடைய மங்கை வாயிலிற்

... ... கறைமிடறன் அன்பர் சேர்தரக்

.. .. கழலிணைவ ணங்கி மாதவர்க் .. குணவோடு

.. கறியெனம கிழ்ந்து போடவப்

... ... பொழுதெதுவும் அங்கி லாதுநற்

.. .. கனிதனைஅ ரிந்து சோறிடப் .. பகல்வேளை

புனிதவதி அன்பு நாதனுக்

... ... கமுதையிடு கின்ற போதிலிப்

.. .. புசிகனியும் நன்று கூறெனக் .. குளவாறே

.. புனிதவதி என்று கூறமுக்

... ... கணனடிவ ணங்கி ஓர்புதுக்

.. .. கனிவரவி யந்து மாதினைப் .. பிரிவானே

தனியளென நின்ற நாளினிற்

... ... சருமவெழில் விண்டு போயிடத்

.. .. தனிஉருவம் என்று பேயுருப் .. பெறுமாறே

.. சரணகம லங்கள் ஓதிடத்

... ... தழலெனவி ளங்கு மேனிமுத்

.. .. தலைவடியி லங்கு வேலனப் .. பரிசீவான்

பனிமலைஅ டைந்த நாளினிற்

... ... பரமனிடம் என்று கால்வரைப்

.. .. படமிகவும் அஞ்சி ஏறிடப் .. பெருமானும்

.. பரியுமமை என்று பேசிடப்

... ... பிறவிதொறும் அன்ப றாமையைப்

.. .. பணியெனவி ரந்த தாயவர்க் .. கடியேனே.


பதம் பிரித்து:

கனிவுடைய மங்கை வாயிலில் .. கறைமிடறன் அன்பர் சேர்தரக்,

.. .. கழலிணை வணங்கி, மாதவர்க்கு .. உணவோடு

.. கறி என மகிழ்ந்து போட அப் ... பொழுது எதுவும் அங்கு இலாது, நற்-

.. .. கனிதனை அரிந்து சோறிடப், .. பகல்வேளை

புனிதவதி அன்பு நாதனுக்கு ... அமுதை இடுகின்ற போதில், "இப்-

.. .. புசி-கனியும் நன்று; கூறு எனக்கு .. உளவாறே

.. புனிதவதி" என்று கூற, முக் ... கணன் அடி வணங்கி ஓர் புதுக்-

.. .. கனி வர, வியந்து மாதினைப் .. பிரிவானே;

தனியள் என நின்ற நாளினில், ... சரும-எழில் விண்டு போயிடத்,

.. .. தனி-உருவம் என்று பேய்-உருப் .. பெறுமாறே

.. சரண-கமலங்கள் ஓதிடத், ... தழல் என விளங்கு மேனி முத்-

.. .. தலை-வடி-இலங்கு வேலன் அப் .. பரிசு ஈவான்;

பனிமலை அடைந்த நாளினில் ... பரமன்-இடம் என்று கால் வரைப்-

.. .. பட மிகவும் அஞ்சி ஏறிடப், .. பெருமானும்

.. "பரியும் அமை" என்று பேசிடப், ... "பிறவிதொறும் அன்பு அறாமையைப்

.. .. பணி" என இரந்த தாய்-அவர்க்கு .. அடியேனே.


கனிவுடைய மங்கை வாயிலிற் கறைமிடறன்ன்பர் சேர்தரக் - மிகவும் கனிவை உடைய மங்கையான புனிதவதியாரது வீட்டுவாயிலில் சிவனடியார் ஒருவர் வரவும்; (கறைமிடறன் - நீலகண்டன்); (சம்பந்தர் தேவாரம் - 1.19.2 - "மணிபடு கறைமிடறனை நலம்மலி கழலிணை தொழல் மருவுமே");

கழல்-ணை வணங்கி மாதவர்க்குணவோடு கறி மகிழ்ந்து போடப்பொழுது எதுவும் அங்கு இலாது நற்கனிதனை அரிந்து சோறு இடப் - அவரது இரு-பாதங்களை வணங்கி, அந்தப் பெரும்-தவசியார்க்கு உணவோடு இடுவதற்கு அச்சமயத்தில் கறி எதுவும் சமைத்திலாததால், ஒரு நல்ல மாம்பழத்தை நறுக்கி அவர் இலையில் இட்டு உணவு-படைத்து;

பகல்வேளை புனிதவதி அன்பு நாதனுக்கு அமுதைடுகின்ற போதில் "ப் புசி கனியும் நன்று; கூறு எனக்குளவாறே புனிதவதி" என்று கூற - உச்சிப்பொழுதில் தன் கணவனுக்கு உணவிட்டபொழுது, (அவன் ஒரு கனியை உண்டு இரண்டாம் கனியையும் கேட்க, ஈசன் அருளால் அரிய கனி ஒன்றைப் புனிதவதியார் பெற்று இட, அதனை உண்ட அவன்) "இந்த உண்ட பழம் மிக அருமை; எனக்கு இதன் உண்மையைக் கூறு" என்று சொல்லவும்;

முக்கணன் அடி வணங்கி ஓர் புதுக் கனி வர, வியந்து மாதினைப் பிரிவானே - (அவர் ஈசன் அருளால் பழம் வந்த உண்மையைச் சொல்லவும், அவன் இன்னொரு கனி வரவழைத்துக் காட்டு என்றதும்) புனிதவதியார் மீண்டும் சிவபெருமானை வேண்டியதும் இன்னொரு புதுப்பழம் கையில் வரக்கண்டு ஆச்சரியம் அடைந்து (இவர் தெய்வப்பெண் என்று எண்ணி) அவரைப் பிரிந்து சென்றான்;

தனியள் என நின்ற நாளினில் சருமழில் விண்டு போயிடத் தனி உருவம் என்று பேய் உருப் பெறுமாறே - கணவன் பிரிந்து சென்றதால் தனியளான அவர் தமது வடிவழகு நீங்கி ஒப்பற்ற பேய்வடிவத்தைப் பெறும்படி; (தனி - ஒப்பற்ற);

சரண-கமலங்கள் ஓதிடத், தழல் எ விளங்கு மேனி முத்தலை-வடி-லங்கு வேன் அப்பரிசு ஈவான் - திருவடித்தாமரையைப் போற்றி வணங்கியதும், தீப் போல் திகழும் திருமேனியையும் மூன்று நுனிகளும் கூர்மையும் பொருந்திய சூலத்தை ஏந்தியவனுமான சிவபெருமான் அவர் விரும்பிய அந்த வரத்தை அருள்செய்தான்; (முத்தலைவேல் - திரிசூலம்); (வடி - கூர்மை); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற இலைபுனைவேலரோ" - இலை புனை வேலர் - இலைவடிவாகப் புனையப்பெற்ற வேலினையுடையவர்);

பனிமலை அடைந்த நாளினில் பரமன்-டம் என்று கால் வரைப்-பட மிகவும் அஞ்சி ஏறிடப், பெருமானும் "பரியும் அமை" என்று பேசிடப் - கயிலைமலையை அடைந்தபொழுது, இது பரமன் உறையும் புனித மலை என்று தமது கால்கள் அந்த மலையின்மேல் படக்கூடாது என்று தலையால் ஏறித் தொழவும், சிவபெருமான் (உமாதேவியிடம்) "இவள் நம்மைப் பேணும் அம்மை" என்று கூறக் கேட்டு அப்பெருமானிடம்; (வரை - மலை); (அமை - அம்மை - இடைக்குறை விகாரம்);

பிறவிதொறும் அன்பு அறாமையைப் பணிரந்த தாய் அவர்க்கு அடியேனே - "இனிப் பிறவிகள் உண்டு என்றால் உன்னை என்றும் மறவாமையை அருள்" என்று வேண்டிய காரைக்கால் அம்மையார்க்கு நான் அடியேன்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1. பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 12.24.58 -

வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்

பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை

அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை

ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.


2. பெரியபுராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - 12.24.60 -

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி

அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

-------------------------------- -------------------------------

03.05.031 – பொது - ஓயாமல் ஆசை மிக்கு - (வண்ணம்)

03.05.031 – பொது - ஓயாமல் ஆசை மிக்கு - (வண்ணம்)

2007-04-09

3.5.31 - ஓயாமல் ஆசை மிக்கு - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தத்த

தானான தான தத்த

தானான தான தத்த .. தனதான )

(நாவேறு பாமணத்த - திருப்புகழ் - சுவாமிமலை)


ஓயாமல் ஆசை மிக்கு மேனாடு போயி ருக்க

..... ஊரோடு நாடு விட்டு .. வெளியேறி

.. ஊனாரு(ம்) மேனி இற்று மாளாத வாதை யுற்றும்

..... ஓராறு வேணி வைத்த .. உனையோரேன்

நீயாக வேயெ னக்கும் ஆறாத நேய மிக்கு

..... நேரான தோர்ம னத்தை .. அருளாயே

.. நீராரு(ம்) மேகம் ஒத்த மாகாய மால்வ ழுத்த

..... நீள்சோதி யாகி நிற்க .. வலதேவா

பாயாலம் ஓட வைத்த வானோர்ப ராவ மிக்க

..... பாகாக மாவி டத்தை .. அயில்வோனே

.. பாலாடு நாத பெற்ற(ம்) மீதேறி னாய்தொ டுத்த

..... பாமாலை பாடு பத்தர் .. உள(ம்)மேயாய்

தாயான மாதி டத்தில் ஓர்பாக மாவி ணைத்த

..... தாதாயி ராவ ணற்கும் .. அருள்வோனே

.. தாராக மாசு ணத்தை மார்மீது பூண்நி ருத்த

..... தானாக வேமு ளைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓயாமல் ஆசை மிக்கு, மேல்நாடு போய் இருக்க

..... ஊரோடு நாடு விட்டு .. வெளியேறி,

.. ஊன் ஆரும் மேனி இற்று, மாளாத வாதை உற்றும்

..... ஓர் ஆறு வேணி வைத்த .. உனை ஓரேன்;

நீயாகவே எனக்கும் ஆறாத நேயம் மிக்கு

..... நேர் ஆனதோர் மனத்தை .. அருளாயே;

.. நீர் ஆரும் மேகம் ஒத்த மா காய மால் வழுத்த

..... நீள் சோதியாகி நிற்க வல தேவா;

பாய் ஆலம் ஓடவைத்த வானோர் பராவ, மிக்க

..... பாகாக மா விடத்தை .. அயில்வோனே;

.. பால் ஆடு நாத; பெற்றம் மீது ஏறினாய்; தொடுத்த

..... பாமாலை பாடு பத்தர் .. உளம் மேயாய்;

தாயான மாது இடத்தில் ஓர் பாகமா இணைத்த

..... தாதாய்; இராவணற்கும் .. அருள்வோனே;

.. தாராக மாசுணத்தை மார்மீது பூண் நிருத்த;

..... தானாகவே முளைத்த .. பெருமானே.


ஓயாமல் ஆசை மிக்கு, மேல்நாடு போய் இருக்க ஊரோடு நாடு விட்டு வெளியேறி - எப்பொழுதும் ஆசையே மிகுந்து, மேல்நாட்டில் போய் வாழ்வதற்காக, ஊரையும் நாட்டையும் நீங்கி;

ஊன் ஆரும் மேனி இற்று, மாளாத வாதை உற்றும், ஓர் ஆறு வேணி வைத்த உனை ஓரேன் - (நாள்கள் ஓடித்) தசை பொருந்திய மேனி தளர்ந்து, தாளாத துன்பம் அடைந்தும், கங்கையைச் சடையில் வைத்த உன்னை எண்ணமாட்டேன்; (இறுதல் - தளர்தல்); (வாதை - துன்பம்); (வேணி - சடை); (ஓர்தல் - எண்ணுதல்);

நீயாகவே எனக்கும் ஆறாத நேயம் மிக்கு நேர் ஆனதோர் மனத்தை அருளாயே - (அதனால்) நீயே என்மேல் இரக்கம்கொண்டு, உன்மேல் பெருங்காதல் எழுந்து நற்குணம் அடைந்த மனத்தை எனக்கும் அருள்வாயாக; (எனக்கு மாறாத நேயம் = எனக்கும் மாறாத நேயம் / எனக்கும் ஆறாத நேயம்); (மாறுதல் - நீங்குதல்; இல்லாமற்போதல்); (ஆறுதல் - தணிதல்);

நீர் ஆரும் மேகம் ஒத்த மா காய மால் வழுத்த நீள் சோதியாகி நிற்க வல தேவா - மழைமேகம் போன்ற அழகிய கரிய மேனியை உடைய திருமால் (உன் திருவடியைத் தேடிக் காணாது) துதிக்கும்படி நீண்ட சோதி வடிவை ஏற்று நிற்கவல்ல தேவனே; (மா = அழகு); (காயம் - உடல்); (வழுத்துதல் - துதித்தல்);

பாய் ஆலம் ஓடவைத்த வானோர் பராவ, மிக்க பாகாக மா விடத்தை அயில்வோனே - பாய்ந்த ஆலகாலநஞ்சைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்கள் துதிக்க, அவர்களுக்கு இரங்கிச், சிறந்த பாகு போலக் கருதி அந்தக் கொடியவிடத்தை உண்டவனே; (பாகு - வெல்லப்பாகு); (அயில்தல் - உண்ணுதல்);

பால் ஆடு நாத - பாலால் அபிஷேகம் செய்யப்பெறுபவனே;

பெற்றம் மீது ஏறினாய் - இடபவாகனனே; (பெற்றம் - ஆன் - இங்கே, எருது);

தொடுத்த பாமாலை பாடு பத்தர் உளம் மேயாய் - பாமாலைகளைப் பாடும் பக்தர்களது உள்ளத்தில் உறைபவனே;

தாய் ஆன மாது இடத்தில் ஓர் பாகமா இணைத்த தாதாய் - எல்லா உயிர்களுக்கும் தாய் ஆன உமையம்மையை உன் திருமேனியில் இடப்பக்கத்தில் ஒரு பாகமாகச் சேர்த்த தந்தையே; (பாகமா - பாகமாக); (தாதை - தந்தை; தாதாய் - தாதை என்பதன் விளி);

இராவணற்கும் அருள்வோனே - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுக்கும் அருள்புரிந்தவனே;

தாராக மாசுணத்தை மார்மீது பூண் நிருத்த - மாலையாகப் பாம்பை மார்பின்மேல் அணிந்த பெருங்கூத்தனே; (தார் - மாலை); (மாசுணம் - பாம்பு); (நிருத்தன் - கூத்தன்);

தானாகவே முளைத்த பெருமானே - சுயம்புவாகி என்றும் இருக்கும் பெருமானே; (அப்பர் தேவாரம் - 4.15.11 - "முந்தித் தானே முளைத்தானை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------