Saturday, August 3, 2019

03.05.031 – பொது - ஓயாமல் ஆசை மிக்கு - (வண்ணம்)

03.05.031 – பொது - ஓயாமல் ஆசை மிக்கு - (வண்ணம்)

2007-04-09

3.5.31 - ஓயாமல் ஆசை மிக்கு - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானான தான தத்த

தானான தான தத்த

தானான தான தத்த .. தனதான )

(நாவேறு பாமணத்த - திருப்புகழ் - சுவாமிமலை)


ஓயாமல் ஆசை மிக்கு மேனாடு போயி ருக்க

..... ஊரோடு நாடு விட்டு .. வெளியேறி

.. ஊனாரு(ம்) மேனி இற்று மாளாத வாதை யுற்றும்

..... ஓராறு வேணி வைத்த .. உனையோரேன்

நீயாக வேயெ னக்கும் ஆறாத நேய மிக்கு

..... நேரான தோர்ம னத்தை .. அருளாயே

.. நீராரு(ம்) மேகம் ஒத்த மாகாய மால்வ ழுத்த

..... நீள்சோதி யாகி நிற்க .. வலதேவா

பாயாலம் ஓட வைத்த வானோர்ப ராவ மிக்க

..... பாகாக மாவி டத்தை .. அயில்வோனே

.. பாலாடு நாத பெற்ற(ம்) மீதேறி னாய்தொ டுத்த

..... பாமாலை பாடு பத்தர் .. உள(ம்)மேயாய்

தாயான மாதி டத்தில் ஓர்பாக மாவி ணைத்த

..... தாதாயி ராவ ணற்கும் .. அருள்வோனே

.. தாராக மாசு ணத்தை மார்மீது பூண்நி ருத்த

..... தானாக வேமு ளைத்த .. பெருமானே.


பதம் பிரித்து:

ஓயாமல் ஆசை மிக்கு, மேல்நாடு போய் இருக்க

..... ஊரோடு நாடு விட்டு .. வெளியேறி,

.. ஊன் ஆரும் மேனி இற்று, மாளாத வாதை உற்றும்

..... ஓர் ஆறு வேணி வைத்த .. உனை ஓரேன்;

நீயாகவே எனக்கும் ஆறாத நேயம் மிக்கு

..... நேர் ஆனதோர் மனத்தை .. அருளாயே;

.. நீர் ஆரும் மேகம் ஒத்த மா காய மால் வழுத்த

..... நீள் சோதியாகி நிற்க வல தேவா;

பாய் ஆலம் ஓடவைத்த வானோர் பராவ, மிக்க

..... பாகாக மா விடத்தை .. அயில்வோனே;

.. பால் ஆடு நாத; பெற்றம் மீது ஏறினாய்; தொடுத்த

..... பாமாலை பாடு பத்தர் .. உளம் மேயாய்;

தாயான மாது இடத்தில் ஓர் பாகமா இணைத்த

..... தாதாய்; இராவணற்கும் .. அருள்வோனே;

.. தாராக மாசுணத்தை மார்மீது பூண் நிருத்த;

..... தானாகவே முளைத்த .. பெருமானே.


ஓயாமல் ஆசை மிக்கு, மேல்நாடு போய் இருக்க ஊரோடு நாடு விட்டு வெளியேறி - எப்பொழுதும் ஆசையே மிகுந்து, மேல்நாட்டில் போய் வாழ்வதற்காக, ஊரையும் நாட்டையும் நீங்கி;

ஊன் ஆரும் மேனி இற்று, மாளாத வாதை உற்றும், ஓர் ஆறு வேணி வைத்த உனை ஓரேன் - (நாள்கள் ஓடித்) தசை பொருந்திய மேனி தளர்ந்து, தாளாத துன்பம் அடைந்தும், கங்கையைச் சடையில் வைத்த உன்னை எண்ணமாட்டேன்; (இறுதல் - தளர்தல்); (வாதை - துன்பம்); (வேணி - சடை); (ஓர்தல் - எண்ணுதல்);

நீயாகவே எனக்கும் ஆறாத நேயம் மிக்கு நேர் ஆனதோர் மனத்தை அருளாயே - (அதனால்) நீயே என்மேல் இரக்கம்கொண்டு, உன்மேல் பெருங்காதல் எழுந்து நற்குணம் அடைந்த மனத்தை எனக்கும் அருள்வாயாக; (எனக்கு மாறாத நேயம் = எனக்கும் மாறாத நேயம் / எனக்கும் ஆறாத நேயம்); (மாறுதல் - நீங்குதல்; இல்லாமற்போதல்); (ஆறுதல் - தணிதல்);

நீர் ஆரும் மேகம் ஒத்த மா காய மால் வழுத்த நீள் சோதியாகி நிற்க வல தேவா - மழைமேகம் போன்ற அழகிய கரிய மேனியை உடைய திருமால் (உன் திருவடியைத் தேடிக் காணாது) துதிக்கும்படி நீண்ட சோதி வடிவை ஏற்று நிற்கவல்ல தேவனே; (மா = அழகு); (காயம் - உடல்); (வழுத்துதல் - துதித்தல்);

பாய் ஆலம் ஓடவைத்த வானோர் பராவ, மிக்க பாகாக மா விடத்தை அயில்வோனே - பாய்ந்த ஆலகாலநஞ்சைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்கள் துதிக்க, அவர்களுக்கு இரங்கிச், சிறந்த பாகு போலக் கருதி அந்தக் கொடியவிடத்தை உண்டவனே; (பாகு - வெல்லப்பாகு); (அயில்தல் - உண்ணுதல்);

பால் ஆடு நாத - பாலால் அபிஷேகம் செய்யப்பெறுபவனே;

பெற்றம் மீது ஏறினாய் - இடபவாகனனே; (பெற்றம் - ஆன் - இங்கே, எருது);

தொடுத்த பாமாலை பாடு பத்தர் உளம் மேயாய் - பாமாலைகளைப் பாடும் பக்தர்களது உள்ளத்தில் உறைபவனே;

தாய் ஆன மாது இடத்தில் ஓர் பாகமா இணைத்த தாதாய் - எல்லா உயிர்களுக்கும் தாய் ஆன உமையம்மையை உன் திருமேனியில் இடப்பக்கத்தில் ஒரு பாகமாகச் சேர்த்த தந்தையே; (பாகமா - பாகமாக); (தாதை - தந்தை; தாதாய் - தாதை என்பதன் விளி);

இராவணற்கும் அருள்வோனே - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுக்கும் அருள்புரிந்தவனே;

தாராக மாசுணத்தை மார்மீது பூண் நிருத்த - மாலையாகப் பாம்பை மார்பின்மேல் அணிந்த பெருங்கூத்தனே; (தார் - மாலை); (மாசுணம் - பாம்பு); (நிருத்தன் - கூத்தன்);

தானாகவே முளைத்த பெருமானே - சுயம்புவாகி என்றும் இருக்கும் பெருமானே; (அப்பர் தேவாரம் - 4.15.11 - "முந்தித் தானே முளைத்தானை");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment