Saturday, August 31, 2019

03.04.073 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 2

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-20

03.04.73 - சிவன் - மைசூர்ப்பாகு - சிலேடை - 2

-------------------------------------------------------

அடைந்தார்க்கும் விள்ளற் கரிதாகி நிற்கும்

உடையா நிலைகொள்ளும் செய்ய - மடவார்கள்

ஐயம்கொள் ஓர்பொருளே என்றிங் கழைப்பதால்

ஐயன்மை சூர்ப்பா கறி.


சொற்பொருள்:

அடைதல் - 1. பெறுதல்; / 2. சேர்தல்;

விள்ளல் - 1. உடைதல்; / 2. சொல்லுதல்;

அரிது - அரியது; கஷ்டமானது; அருமையானது;

நில் - இருத்தல்;

உடைதல் - தகர்தல்; பிளத்தல்;

உடையான் - சுவாமி; (உடையர் - தலைவர்); உடையா - உடையன் என்பதன் விளி. (உடையாய், உடையானே என்ற விளி கடைக்குறையாய் உடையா என்று வந்தது எனவும் கொள்ளலாம்.)

நிலை - தன்மை;

நிலைகொள்ளுதல் - 1. தன்னிலை அடைதல்; / 2. அழியாது இருத்தல்;

செய்தல் - பண்ணுவது; செய்வது;

செய்யன் - செம்மேனியன்; (செய் - செம்மை); செய்ய - செய்யன் என்பதன் விளி.

மடவார்கள் - பெண்கள்;

ஐயம் - 1. சந்தேகம்; / 2. பிச்சை;

ஓர் பொருள் - 1. ஒரு பண்டம்; / 2. ஒப்பில்லாத வஸ்து (இறைவன்);

அழைத்தல் - 1. பெயரிட்டுக் கூப்பிடுதல்; / 2. கூப்பிடுதல்;

ஐயன் - கடவுள்;


மைசூர்ப்பாகு:

அடைந்தார்க்கும் விள்ளற்கு அரிது ஆகி நிற்கும் உடையா நிலை கொள்ளும் - கிட்டியவர்களுக்கும் அது விள்ள முடியாததாகி இருக்கும்படி உடையாத (கெட்டியான) தன்மை கொள்ளும்;

செய்ய மடவார்கள் ஐயம் கொள் ஓர் பொருளே என்று இங்கு அழைப்பதால் - அதனைச் செய்வதற்குப் பெண்டிர் (செய்ம்முறை பற்றியும், தம் செய்தால் எப்படி வருமோ என்றும்) சந்தேகம் கொள்கின்ற ஒரு பண்டம்" என்று உலகு சொல்லும்.

மைசூர்ப்பாகு -


சிவன்:

"அடைந்தார்க்கும் விள்ளற்கு அரிது ஆகி நிற்கும் உடையா! - "திருவடியைச் சேர்ந்தவர்களாலும் சொல்லி விளக்க முடியாது இருக்கும் சுவாமியே!

நிலைகொள்ளும் செய்ய! - அழியாது இருக்கும், செம்மேனியனே!

மடவார்கள் ஐயம் கொள் ஓர் பொருளே! - பெண்கள் (இடும்) பிச்சையை ஏற்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளே!

என்று இங்கு அழைப்பதால் - என்று பூவுலகில், பக்தர்கள், போற்றுவதால்;

ஐயன் - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment