Saturday, August 10, 2019

03.05.039 – ஐயாறு - நிலவு சூடு நினை மறந்து - (வண்ணம்)

03.05.039 – ஐயாறு - நிலவு சூடு நினை மறந்து - (வண்ணம்)

2007-04-27

3.5.39 - நிலவு சூடு நினை மறந்து (ஐயாறு - திருவையாறு)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த .. தனதான )

(முறுகு காள விடம யின்ற - திருப்புகழ் - சுவாமிமலை)


நிலவு சூடு நினைம றந்து

.. .. நிதமும் ஆசை மிகவ ளர்ந்து

... நிதியை நாடி மிகமு யன்று .. புவிமீது

.. நிறைய வாதை வரவ ருந்து

.. .. நிலையு(ம்) மாறி இனிமை பொங்க

... நினது நாம(ம்) மனமி லங்க .. அருளாயே


தொலைவி லாத புகழி லங்கு

.. .. பரவை கேள்வ னுடன டந்து

... சுலப மான வழியி தென்று .. தமிழ்நாடித்

.. துணைவ னாக உனைவ ழங்கி

.. .. அருளும் ஈச கழல டைந்து

... தொழுத நாலு முனிவர் சங்கை .. களைவோனே


தலைவ பேய்கள் உலவு கின்ற

.. .. சுடலை ஆடு தலம தென்று

... தனிய தான நட(ம்)ம கிழ்ந்த .. சடையானே

.. தருமன் ஏவும் இளவல் அன்று

.. .. தொழுத போது படைய தொன்று

... தரவொர் மாது தொடர வந்த .. திருவேடா


கலனில் ஊணை இடுமின் என்று

.. .. கடைகள் தோறு(ம்) மிகந டந்த

... கமல பாத கொடிய நஞ்சை .. அமுதாகக்

.. கருது(ம்) நாத கரிய வண்டு

.. .. மலரில் ஊது பொழிலி லங்கு

... கவினை யாறு தனிலு றைந்த .. பெருமானே.


பதம் பிரித்து:

நிலவு சூடு நினை மறந்து, .. .. நிதமும் ஆசை மிக வளர்ந்து,

... நிதியை நாடி மிக முயன்று, .. புவிமீது

.. நிறைய வாதை வர, வருந்து .. .. நிலையும் மாறி, இனிமை பொங்க,

... நினது நாமம் மனம் இலங்க .. அருளாயே;


தொலைவு இலாத புகழ் இலங்கு .. .. பரவை கேள்வனுடன் நடந்து,

... சுலபமான வழியிது என்று, .. தமிழ் நாடித்,

.. துணைவனாக உனை வழங்கி .. .. அருளும் ஈச; கழல் அடைந்து

... தொழுத நாலு முனிவர் சங்கை .. களைவோனே;


தலைவ; பேய்கள் உலவுகின்ற .. .. சுடலை ஆடு தலமது என்று

... தனியது ஆன நடம் மகிழ்ந்த .. சடையானே;

.. தருமன் ஏவும் இளவல் அன்று .. .. தொழுத போது படையது ஒன்று

... தர ஒர் மாது தொடர வந்த .. திரு-வேடா;


"கலனில் ஊணை இடுமின்" என்று .. .. கடைகள் தோறும் மிக நடந்த

... கமல பாத; கொடிய நஞ்சை .. அமுதாகக்

.. கருது(ம்) நாத; கரிய வண்டு .. .. மலரில் ஊது பொழில் இலங்கு

... கவின் ஐயாறுதனில் உறைந்த .. பெருமானே.


நிலவு சூடு நினை மறந்து - சந்திரனை அணியும் உன்னை மறந்து;

நிதமும் ஆசை மிக வளர்ந்து - தினமும் ஆசைகளே மிகவும் பெருகி;

நிதியை நாடி மிக முயன்று - பொருள் சேர்க்கவே மிகவும் முயற்சி செய்து;

புவிமீது நிறைய வாதை வர, வருந்து நிலையும் மாறி, இனிமை பொங்க - இந்தப் பூமியில் பல துன்பங்கள் வந்துசேர்வதால் வருந்துகின்ற நிலையும் தீர்ந்து, இன்பமே பெருக;

நினது நாமம் மனம் இலங்க அருளாயே - உன் திருநாமம் என் மனத்தில் திகழ அருள்வாயாக;


தொலைவு இலாத புகழ் இலங்கு பரவை கேள்வனுன் நடந்து சுலபமான வழியிது என்று தமிழ் நாடித் - தமிழ்ப் பாமாலையைக் கேட்க விரும்பி, அழியாத புகழை உடையவரும் பரவையாரின் கணவருமான சுந்தரருடன் (திருமுதுகுன்றம் செல்லச்) சுலபமான வழி இது என்று கூட நடந்து சென்று; (இவ்வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க; சுந்தரர் தேவாரம் - 7.85.1 - "கூடலை யாற்றூரில் அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே");

துணைவனாக உனை வழங்கி அருளும் ஈ - அவருக்கு உன்னை வழித்துணைவனாகத் தந்தருளிய ஈசனே; அவருக்கு உன்னைத் தோழனாகத் தந்தருளிய ஈசனே; (துணைவன் - வழித்துணை; தோழன்);

கழல் அடைந்து தொழுத நாலு முனிவர் சங்கை களைவோனே - உன் திருவடியை அடைந்து வணங்கிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கு மறைப்பொருளை உபதேசித்து அவர்களது ஐயங்களைத் தீர்த்தவனே; (சங்கை - ஐயம்);

தலைவ - தலைவனே;

பேய்கள் உலவுகின்ற சுடலை ஆடு தலம்அது என்றுனியது ஆன நடம் மகிழ்ந்த சடையானே - பேய்கள் திரியும் சுடுகாட்டை ஆடும் இடம் என்று கருதி அங்கே ஒப்பற்ற திருநடத்தை விரும்பிச் செய்யும் சடையினனே; (தனி - ஒப்பின்மை);

தருமன் ஏவும் இளவல் அன்று தொழுத போது படையது ஒன்று தரர் மாது தொடர வந்த திருவேடா - தர்மனுக்குக் கீழ்ப்படியும் தம்பியான அருச்சுனன் தவம் செய்தபோது பாசுபதாஸ்திரத்தை வரமருள்வதற்கு உமை உன்னைப் பின் தொடர ஒரு வேடன் உருவில் வந்தவனே;

"கலனில் ஊணை இடுமின்" ன்று கடைகள் தோறும் மிக நடந்த கமல பாத - "உண்கலனான மண்டையோட்டில் உணவை இடுங்கள்" என்று யாசித்து மனைவாயில்கள் தோறும் நடந்து திரிந்த தாமரைப்பாதனே; (ஊண் - உணவு); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

கொடிய நஞ்சை அமுதாகக் கருது(ம்) நாத - கொடிய ஆலகால விடத்தை அமுதமாக விரும்பி உண்ட நாதனே;

கரிய வண்டு மலரில் ஊது பொழில் இலங்கு கவின் ஐயாறுதனில் உறைந்த பெருமானே - கரிய வண்டுகள் பூக்களில் ரீங்காரம் செய்யும் சோலை திகழ்கின்ற திருவையாற்றில் எழுந்தருளிய பெருமானே; (ஊதுதல் - வண்டு ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment