Sunday, August 25, 2019

03.05.050 – ஏடகம் (திருவேடகம்) - இருளே மிகுத்த - (வண்ணம்)

03.05.050 – ஏடகம் (திருவேடகம்) - இருளே மிகுத்த - (வண்ணம்)

2007-05-15

3.5.50) இருளே மிகுத்த - ஏடகம் (திருவேடகம்)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனத்த தனனா தனத்த

தனனா தனத்த .. தனதான )

(தனனா தனத்த = தனதான தத்த)

(மருவே செறித்த குழலார் மயக்கி - திருப்புகழ் - சுவாமிமலை)

(செகமாயை உற்று - திருப்புகழ் - சுவாமிமலை)


இருளே மிகுத்த உருகா மனத்தின்

.. .. இழிவால் அவத்தை .. உறுவேனும்

.. இனிமேல் உனக்கு மணமார் சரத்தை

.. .. இனிதே தொடுக்க .. அருளாயே

கருமா விடத்தை அமுதா மடுத்த

.. .. கறைசேர் மிடற்ற .. சுரரேவக்

.. கடியார் சரத்தை விடுவேள் எரித்த

.. .. கனலார் நுதற்க .. ணுடையானே

திருமால் அயற்கும் அரியாய் நிருத்த

.. .. தெளியா மனத்தர் .. விழவேடு

.. திரையார் சலத்தில் எதிரேறி யுற்ற

.. .. திருவே டகத்தில் .. உறைவோனே

ஒருபூ இலைக்கும் அடியார் நினைத்த

.. .. துடனே கொடுக்கும் .. அருளாளா

.. உமையாள் இடத்தில் உடனா யிருக்க

.. .. ஒருகூ றளித்த .. பெருமானே.


பதம் பிரித்து:

இருளே மிகுத்த உருகா மனத்தின்

.. .. இழிவால் அவத்தை .. உறுவேனும்

.. இனிமேல் உனக்கு மணம் ஆர் சரத்தை

.. .. இனிதே தொடுக்க .. அருளாயே;

கரு-மா விடத்தை அமுதா மடுத்த

.. .. கறை சேர் மிடற்ற; .. சுரர் ஏவக்

.. கடி ஆர் சரத்தை விடு-வேள் எரித்த

.. .. கனல் ஆர் நுதற்கண் .. உடையானே;

திருமால் அயற்கும் அரியாய்; நிருத்த;

.. .. தெளியா மனத்தர் .. விழ, ஏடு

.. திரை ஆர் சலத்தில் எதிர் ஏறி உற்ற

.. .. திருவேடகத்தில் .. உறைவோனே;

ஒரு பூ இலைக்கும் அடியார் நினைத்தது-

.. .. உடனே கொடுக்கும் .. அருளாளா;

.. உமையாள் இடத்தில் உடனாய் இருக்க

.. .. ஒரு கூறு அளித்த .. பெருமானே.


இருளே மிகுத்த உருகா மனத்தின் இழிவால் அவத்தை உறுவேனும் - அறியாமையே மிகுந்த, உருகாத கல் போன்ற மனத்தின் கீழ்மையால் வேதனையே அடைகின்ற நானும்; (அவத்தை - அவஸ்தை - வேதனை);

இனிமேல் உனக்கு மணம் ஆர் சரத்தை இனிதே தொடுக்க அருளாயே - இனி உனக்கு மணம் பொருந்திய மாலைகள் (பாமாலைகள்) தொடுக்கும்படி அருள்வாயாக; (சரம் - மாலை);


கரு மா விடத்தை அமுதா மடுத்த கறை சேர் மிடற்ற - கரிய பெரிய நஞ்சை அமுதம்போல் உண்ட கறையைக் கண்டத்தில் உடையவனே; (மடுத்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

சுரர் ஏவக் கடி ஆர் சரத்தை விடு வேள் எரித்த கனல் ஆர் நுதற்கண் உடையானே - தேவர்களின் தூண்டுதலினல் மணம் பொருந்திய (மலர்) அம்பைத் தொடுத்த மன்மதனை எரித்த தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவனே; (சுரர் - தேவர்); (கடி - வாசனை); (சரம் - அம்பு ); (வேள் - மன்மதன்);


திருமால் அயற்கும் அரியாய் - விஷ்ணு பிரமன் இவர்களால் (அடிமுடி) அடைய ஒண்ணாதவனே;

நிருத்த - கூத்தனே;

தெளியா மனத்தர் விழடு திரைர் சலத்தில் எதிர் ஏறி ற்ற - தெளிவில்லாத மனத்தை உடைய சமணர்கள் தோற்று ஒழியும்படி, சம்பந்தர் இட்ட ஏடு அலை மிக்க வைகையில் எதிர்த்துச் சென்று அடைந்த; (விழுதல் - தோற்றுப்போதல்);

திருவேடகத்தில் உறைவோனே - திருவேடகத்தில் உறைகின்றவனே;


ஒரு பூ இலைக்கும் அடியார் நினைத்ததுடனே கொடுக்கும் ருளாளா - அடியார் இடும் எந்தப் பூவிற்கும் இலைக்கும் மகிழ்ந்து, அவர்கள் விரும்பிய வரத்தை உடனே அளிக்கும் அருளாளனே;

உமையாள் இடத்தில் உடனாய் இருக்க ஒரு கூறு அளித்த பெருமானே - உமை இடப்பக்கத்தில் ஒன்றாகி இருக்குமாறு திருமேனியில் ஒரு கூறு அளித்த பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment