Saturday, November 14, 2020

03.07.008 – மாணிக்க வாசகர் துதி - பணி ஆபரணன் பணியே

03.07.008 – மாணிக்க வாசகர் துதி - பணிபரணன் பணியே

2009-06-26

3.7.8 - மாணிக்க வாசகர் துதி

---------------------------------------

(3 பாடல்கள்)


1) -- (கலிவிருத்தம் - "புளிமா புளிமா புளிமா தேமா" என்ற வாய்பாடு) --

பணியா பரணன் பணியே என்றும்

பணியா உருகிப் பலபா மாலை

அணிவித் தரனார் அடிசேர் அன்பர்

மணிவா சகர்மா மலர்த்தாள் போற்றி.


பணி ஆபரணன் பணியே என்றும் பணியா - நாகாபரணனான சிவபெருமான் திருத்தொண்டே என்றும் தம் தொழிலாகக் கொண்டு; (பணி - 1. நாகம்; 2. தொண்டு; தொழில்); (பணியா - பணியாக);

உருகிப் பல பாமாலை அணிவித்து - மனம் உருகிப் பல பாமாலைகளைப் பாடி அவன் திருவடியில் சூட்டி;

அரனார் அடிசேர் அன்பர் - சிவனார் திருவடியை அடைந்த அன்பரான;

மணிவாசகர் மாமலர்த்தாள் போற்றி - மாணிக்க வாசகரது தாமரை போன்ற திருவடிகளை வணங்குகின்றேன்;


2) -- (கலித்துறை - "மா மா மா மா காய்" என்ற வாய்பாடு) --

ஆலம் உண்ட அரனே அன்போ டன்றொருநாள்

ஞாலம் உய்யக் குருவாய் நணுகிக் குருந்தின்கீழ்க்

காலைக் காட்டி ஆட்கொள் அடியார், கழல்மறவாச்

சீலர், வாத வூரர் செய்ய தாள்போற்றி


ஆலம் - ஆலகாலம்; நணுகுதல் - நெருங்குதல்; குருந்து - குருந்தமரம்; வாதவூரர் - வாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர்; செய்ய - சிவந்த;


3) -- வெண்பா --

உறங்குவோர் எல்லாம் உணர்வெய்தி இந்தப்

பிறப்பிறப் பில்லாப் பெருவாழ் - வுறநெஞ்சே

எம்பாவை பாடிய எம்மணி வாசகர்

செம்பொற் கழல்சிந்தை செய்.


பதம் பிரித்து:

உறங்குவோர் எல்லாம் உணர்வு எய்தி, இந்தப்

பிறப்பு இறப்பு இல்லாப் பெருவாழ்வு - உற, நெஞ்சே,

எம்பாவை பாடிய எம் மணிவாசகர்

செம்பொற்கழல் சிந்தை செய்.


மனமே! அறியாமையில் இருப்போரெல்லாம் நல்லறிவு பெற்று இந்த ஜனனமரணச் சுழலிலிருந்து விடுபட்டுப் பேரின்பம் அடையத் திருவெம்பாவை பாடியருளிய நம் மாணிக்கவாசகரது செம்பொற்பாதத்தை எண்ணு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment