Saturday, November 27, 2021

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

05.26 – புகலூர் (திருப்புகலூர்)

2015-03-13

புகலூர் (திருப்புகலூர்)

----------------------

(எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்")


1)

வனமேந்து கின்ற முலைமாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே

தினமோதும் அன்பர் இடர்தீர்த்து மல்கு திருவாக நல்கும் ஒருவன்

கனலேந்தி ஆடி கடல்நஞ்சம் உண்டு கறைகாட்டு கின்ற மிடறன்

புனலார்ந்த வாவி புடைசூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


வனம் ஏந்துகின்ற முலை மாதை வாமம் மகிழ்கின்ற எந்தை புகழே - அழகு மிக்க முலையையுடைய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய எம் தந்தையின் புகழையே; (வனம் - அழகு); (ஏந்துதல் - சிறத்தல்; மிகுதல்); (வாமம் - இடப்பக்கம்);

தினம் ஓதும் அன்பர் இடர் தீர்த்து மல்கு திரு ஆக நல்கும் ஒருவன் - தினமும் ஓதுகின்ற பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து மிகுந்த திருவை அருளும் ஒப்பற்றவன்;

கனல் ஏந்தி ஆடி - தீயை ஏந்தி ஆடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

கடல்நஞ்சம் உண்டு கறை காட்டுகின்ற மிடறன் - கடலில் எழுந்த விடத்தை உண்டு கறையைக் கண்டத்தில் உடையவன்;

புனல் ஆர்ந்த வாவி புடைசூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - நீர் நிறைந்த தடாகம் சூழ்ந்திருக்கும் திருப்புகலூரி உறைகின்ற பரமன்;


2)

வடியாரும் மூன்று நுனைவேலும் மானும் மழுவாளும் ஏந்தும் இறைவன்

அடியேநி னைந்து துதிபாடு கின்ற அடியார்க்கு நல்கும் அருளன்

துடியேர்ம ருங்குல் உமைபங்கன் நீறு துதைகின்ற மார்பில் அரவன்

பொடியாரும் வண்டு புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


வடியாரும் மூன்று நுனைவேலும் - கூரிய மூன்று நுனிகளையுடைய சூலத்தையும்; (வடி - கூர்மை); (நுனை - முனை; நுனி);

துடி ஏர் மருங்குல் - உடுக்கை போன்ற இடை - சிற்றிடை;

துதைதல் - படிதல்; மிகுதல்;

அரவன் - பாம்பை அணிந்தவன்;

பொடி ஆரும் வண்டு புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - பூக்களில் மதுவுண்டு மகரந்தப் பொடியை உடல்மேல் அணிந்த வண்டுகள் துதி பாடுகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (பொடி - மகரந்தம்); (திருநீறு பூசித் தொண்டர்கள் ஈசன் புகழைப் பாடுவது போல் பொடி அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற புகலூர்);


3)

பாதார விந்த இணைபோற்று பத்தர் பவநீக்கி இன்பம் அருள்வான்

மாதாரு மேனி மணியேறு கண்டம் மதியேறு சென்னி உடையான்

ஆதார மாகி உலகங்க ளாக்கி அவைநீக்கி ஆடல் புரிவான்

போதாரும் ஏர்கொள் பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


பாதாரவிந்த இணை போற்று பத்தர் பவம் நீக்கி இன்பம் அருள்வான் - இரு திருவடித்தாமரைகளைப் போற்றும் பக்தர்களது பிறவிப்பிணியை நீக்கி இன்பம் அருள்பவன்; (பவம்- பிறவித்தொடர்);

மாது ஆரும் மேனி, மணி ஏறு கண்டம், மதி ஏறு சென்னி உடையான் - அர்த்தநாரீஸ்வரன், நீலகண்டன், சந்திரசேகரன்;

ஆதாரம் ஆகி உலகங்கள் ஆக்கி அவை நீக்கி ஆடல் புரிவான் - ஆதாரம் ஆகி, உலகங்களையெல்லாம் படைத்துப், பின் அவற்றை ஒடுக்கித் திருவிளையாடல் செய்பவன்; (ஆதாரம் - பற்றுக்கோடு);

போது ஆரும் ஏர்கொள் பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே- பூக்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்து விளங்குகின்ற புகலூரில் உறைகின்ற பரமன்; (போது - பூ); (ஏர் - அழகு);


4)

சேவேறு கின்ற சிவனைப்ப ணிந்து திருவாக்கும் நால்வர் தமிழ்தான்

நாவேறு கின்ற அடியார்கள் என்றும் நலவாழ்வு வாழ அருள்வான்

வானாறு கொன்றை மதமத்தம் வன்னி மதிசூடு கின்ற முடியன்

பூநாறு கின்ற பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


சே ஏறுகின்ற - இடபத்தை ஊர்தியாக உடைய;

திரு ஆக்கும் நால்வர் தமிழ்தான் நா ஏறுகின்ற அடியார்கள் - நன்மை தரும் தேவாரம், திருவாசகம் பாடுகின்ற பக்தர்கள்;

என்றும் நலவாழ்வு வாழ அருள்வான் - என்றும் நலம் மிக்க வாழ்வு பெற அருள்பவன்; (நலவாழ்வு - 1. நலம் + வாழ்வு; 2. நல்ல வாழ்வு);

வான் ஆறு, கொன்றை, மதமத்தம், வன்னி, மதி சூடுகின்ற முடியன் - திருமுடிமேல் கங்கை, கொன்றை, ஊமத்தமலர், வன்னி, திங்கள் அணிந்தவன்; (வான் ஆறு - வானதி - கங்கை);

பூ நாறுகின்ற பொழில் - பூக்கள் மணம் வீசுகின்ற சோலை;


5)

கதநாகம் ஆர்த்த அரையாதொ டுத்த கணைகண்டு கண்ணி லெரியால்

மதனாகம் அட்ட மணியேபி றங்கு மதியாயெ னச்சொ லடியார்

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழிலார்ந்த கண்டம் உடையான்

புதுவீயில் வண்டு மதுவுண்டு பாடு புகலூரில் நின்ற பரனே.


கத நாகம் ஆர்த்த அரையா - சீறும் பாம்பைக் கட்டிய அரையை உடைய அரசனே; (கதம் - சினம்); (அரையன் - அரசன்); (அரை - இடுப்பு );

தொடுத்த கணை கண்டு கண்ணில் எரியால் மதன் ஆகம் அட்ட மணியே - மன்மதன் மலர்க்கணையைத் தொடுத்தபொழுது நெற்றிக்கண்ணின் நெருப்பால் அவனது உடலை எரித்தவனே, சிறந்த மணி போன்றவனே;

பிறங்கு மதியாய் எனச் சொல் அடியார் - பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவனே என்று போற்றும் பக்தர்கள்; (பிறங்குதல் - விளங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.89.2 - "தேய்ந்திலங்கும் சிறு வெண்மதியாய்");

எதனாலும் இன்னல் இலராக நல்கும் எழில் ஆர்ந்த கண்டம் உடையான் - எவ்விதத் துன்பமும் அற்றவர்கள் ஆகும்படி அருளும், அழகிய நீலகண்டத்தை உடையவன்;

புது வீயில் வண்டு மது உண்டு பாடு - அன்று பூத்த பூவில் வண்டுகள் தேனை உண்டு ரீங்காரம் செய்கின்ற; (வீ - பூ); (சுந்தரர் தேவாரம் - 7.41.1 - "மதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளா");

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


6)

நாவார வாழ்த்தி அடிபோற்றும் அன்பர் நலமாக வாழ அருள்வான்

மேவார்தம் மூன்று புரம்வேவ மேரு விலையேந்தி நக்க பெருமான்

தேவாதி தேவன் மலைமங்கை கூறு திகழ்கின்ற மேனி உடையான்

பூவாச மல்கு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மேவார் - பகைவர்;

மேரு விலை - மேருமலை என்ற வில்லை; (விலை - வில்லை என்பது இடைக்குறையாக வந்தது);

நக்க - சிரித்த;

பூவாசம் மல்கு பொழில் - பூக்களின் மணம் மிகுந்த சோலை;


7)

அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர்க டைந்த கடலில்

குவிநஞ்சு கண்டு தவிநெஞ்சு கொண்டு குழுமிப்ப ராவு மொழிகள்

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீல கண்டம் உடையான்

புவியோர டைந்து புகழ்பாடு கின்ற புகலூரில் நின்ற பரனே.


அவியாது வாழ அமுதத்தை நாடும் இமையோர் கடைந்த கடலில் - இறவாமல் வாழ அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்கள், கடைந்த பாற்கடலில்; (அவிதல் - சாதல்);

குவி நஞ்சு கண்டு தவி நெஞ்சு கொண்டு குழுமிப் பராவு மொழிகள் - திரண்ட விடத்தைக் கண்டு தவிக்கும் மனம்கொண்டு ஒன்றுகூடித் துதித்த துதிகளை; (குவிநஞ்சு - குவிந்த நஞ்சு);

செவியேற்று நஞ்சை மணிசெய்து காத்த திருநீலகண்டம் உடையான் - கேட்டருளி, ஆலகால விடத்தை நீலமணி (போல) ஆக்கிக் காத்த திருநீலகண்டன்; (அப்பர் தேவாரம் - 5.97.24 - "மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்");

புவியோர் அடைந்து புகழ் பாடுகின்ற புகலூரில் நின்ற பரனே - உலகத்தினர் வந்து ஈசன் புகழைப் பாடி வழிபடுகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


8)

கரமூன்றி நீடு வரைபேர்த்த மூடன் உரமார்பு யங்க ளுடனே

சிரமூன்று மேழும் இறவூன்றி யாழின் இசைகேட்டி ரங்கு வரதன்

சரமூன்றி ரண்டு தனையேவு காமன் உடல்நீறு செய்த தலைவன்

புரமூன்றை எய்த வரைவில்லி எந்தை புகலூரில் நின்ற பரனே.


பதம் பிரித்து:

கரம் ஊன்றி நீடு-வரை பேர்த்த மூடன் உரம் ஆர் புயங்களுடனே

சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி, யாழின் இசை கேட்டு இரங்கு வரதன்;

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி, எந்தை, புகலூரில் நின்ற பரனே.


கரம் ஊன்றி நீடு வரை பேர்த்த மூடன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது; (நீடு வரை - நெடிய மலை - இங்கே கயிலைமலை);

உரம் ஆர் புயங்களுடனே சிரம் மூன்றும் ஏழும் இற ஊன்றி - வலிய புஜங்களும் பத்துத்தலைகளும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி;

யாழின் இசை கேட்டு இரங்கு வரதன் - அவன் இசைத்த யாழ் இசையைக் கேட்டு இரங்கி வரம் அருளியவன்; (வரதன் - வரம் அளிப்பவன்);

சரம் மூன்று இரண்டுதனை ஏவு காமன் உடல் நீறு செய்த தலைவன் - ஐந்து பாணங்களைத் தொடுக்கும் மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய தலைவன்;

புரம் மூன்றை எய்த வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தி ஒரு கணையை எய்து முப்புரங்களை அழித்தவன்; (வரைவில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்);

எந்தை - எம் தந்தை;

புகலூரில் நின்ற பரனே - திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்;


9)

மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன்

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான்

கயல்கெண்டை பாயும் வயல்கண்டு நாரை இரைதேர நிற்க அயலே

புயல்வந்து தீண்டு பொழில்சூழ்ந்தி லங்கு புகலூரில் நின்ற பரனே.


மயல்கொண்டு நேடு மலரானும் மாலும் அறியாத சோதி வடிவன் - ஆணவத்தால் தேடிய பிரமனாலும் திருமாலாலும் அறிய ஒண்ணாத சோதி உருவினன்; (மயல் - அறியாமை); (கொண்டு - ஆல் என்ற வேற்றுமை உருபு); (மலரான் - பிரமன்);

இயல்கொண்டும் ஏழின் இசைகொண்டும் ஏத்தும் அடியாரை நாடி வருவான் - இயற்றமிழ் இசைத்தமிழ் இவற்றால் வழிபடும் பக்தர்களைத் தேடி வருபவன்; (இயல் - இயற்றமிழ்);

கயல் கெண்டை பாயும் வயல் கண்டு நாரை இரைதேர நிற்க அயலே - கயல், கெண்டை முதலிய மீன்கள் பாயும் வயலைக் கண்டு நாரைகள் இரைதேர்வதற்காக நிற்க, அருகே;

புயல் வந்து தீண்டு பொழில் சூழ்ந்து இலங்கு புகலூரில் நின்ற பரனே - மேகம் வந்து தீண்டுகின்ற உயர்ந்த சோலை வீளங்குகின்ற திருப்புகலூரில் எழுந்தருளிய பரமன்; (புயல் - மேகம்);


10)

கள்ளங்க ரந்த கருநெஞ்சி னோர்கள் கழறும்பு ரட்டை ஒழிமின்

உள்ளங்க ரைந்து தொழுவார்க்கு நம்பன் உலவாத இன்பம் அருள்வான்

வெள்ளங்க ரந்த சடைமீது நாகம் வெறியார்ந்த கொன்றை அணிவான்

புள்ளின்கு லங்கள் ஒலிசோலை சூழ்ந்த புகலூரில் நின்ற பரனே.


கள்ளம் கரந்த கருநெஞ்சினோர்கள் - வஞ்சத்தை உள்ளே மறைத்திருக்கும் கொடிய மனம் உடையவர்கள்; (கருமை - கறுப்பு ; கொடுமை);

கழறுதல் - சொல்லுதல்;

புரட்டு - வஞ்சகப்பேச்சு;

ஒழிமின் - ஒழியுங்கள்; விட்டுநீங்குங்கள்; (ஒழிதல் / ஒழித்தல்);

நம்பன் - விரும்பத்தக்கவன்; விரும்பப்படுபவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

உலவாத இன்பம் - அழிவற்ற இன்பம்; (உலத்தல் - குறைதல்; அழிதல்);

வெள்ளம் கரந்த சடைமீது நாகம் வெறி ஆர்ந்த கொன்றை அணிவான் - கங்கையை ஒளித்த சடைமேல் பாம்பு, மணம் மிக்க கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (வெறி - வாசனை);

புள்ளின் குலங்கள் ஒலி சோலை - பறவை இனங்கள் ஒலிக்கின்ற பொழில்;


11)

ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால்வ ணங்கும் அடியார்

மெலியாத வண்ணம் வினைமாசை வீட்டி மிகவேவ ழங்கும் ஒருவன்

நலியாத வண்ணம் நளிர்திங்கள் வாழ நதியோடு சென்னி அணிவான்

பொலிகோபு ரத்தை முகில்தீண்டு கின்ற புகலூரில் நின்ற பரனே.


ஒலிமாலை சூட்டி உளமார வாழ்த்தி உடலால் வணங்கும் அடியார் - மனம், மொழி, மெய் மூன்றாலும் வழிபடும் பக்தர்கள்; (ஒலிமாலை - பாமாலை; (கலிக்கோவை)); (சம்பந்தர் தேவாரம் - 2.12.11 - "கலிக்கோவையால் சந்தமே பாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன்");

மெலிதல் - இளைத்தல்; வருந்துதல்;

வீட்டுதல் - அழித்தல்;

நலிதல் - அழிதல்; இளைத்தல்; வருந்துதல்;

நளிர்தல் - குளிர்தல்;

பொலிதல் - சிறத்தல்; பெருகுதல் (To be enlarged; to appear grand);


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) யாப்புக்குறிப்பு:

  • எழுசீர்ச் சந்தவிருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா" என்ற சந்தம்.

  • சில பாடல்களில் முதற்சீர் 'தானான' என்றும் வரும்;

2) சம்பந்தர் தேவாரம் - 2.88.1 -

துளிமண்டி உண்டு நிறம்வந்த கண்டன் நடமன்னு துன்னு சுடரோன்

ஒளிமண்டி உம்பர் உலகங் கடந்த உமைபங்கன் எங்க ளரனூர்

களிமண்டு சோலை கழனிக் கலந்த கமலங்கள் தங்கு மதுவில்

தெளிமண்டி உண்டு சிறைவண்டு பாடு திருமுல்லை வாயி லிதுவே.

---- --------


P.276 - சாட்டியக்குடி - பண்பயில் தமிழ்கொடு

2015-03-07

P.276 - சாட்டியக்குடி

(திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே");

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்");


1)

பண்பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்ற றுப்பான்

பெண்மயில் போன்றவள் தனையொரு பங்கெனப் பேணும் அன்பன்

கண்பயில் நெற்றியன் கடல்விடம் உண்டருள் கறைமி டற்றன்

தண்வயல் புடையணி சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பண் பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்று அறுப்பான் - பண் பொருந்தும் தமிழ்ப்பாமாலைகளால் போற்றும் அடியார்களது பந்தங்களை வேரறுப்பவன்; (பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்);

பெண்மயில் போன்றவள்தனை ஒரு பங்கு எனப் பேணும் அன்பன் - மயில் போன்ற உமாதேவியை ஒரு பாகமாக விரும்பிய காதலன்;

கண் பயில் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கடல்விடம் உண்டருள் கறைமிடற்றன் - பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டருளிய நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

தண்-வயல் புடை-ணி சாட்டியக்குடி உறை தந்தைதானே - குளிர்ந்த வயல் சூழ்ந்த சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


2)

புதுமலர் கொண்டடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல்

மதுமலர்க் கொன்றையும் மத்தமும் புனைந்தவன் மானை ஏந்தி

பொதுவினில் ஆடிடும் புண்ணியன் வெண்பொடி பூசும் ஈசன்

சதுர்மறை ஓதிய சாட்டியக் குடியுறை தந்தை தானே.


புதுமலர் கொண்டு அடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல் - நாண்மலர் தூவித் திருவடியை வணங்கும் பக்தர்களது வலிய வினையைத் தீர்க்கும் பெருமான்;

மதுமலர்க்-கொன்றையும் மத்தமும் புனைந்தவன் - தேன் நிறைந்த கொன்றைமலரையும் ஊமத்தமலரையும் சூடியவன்;

மானை ஏந்தி - கையில் மானை ஏந்தியவன்;

பொதுவினில் ஆடிடும் புண்ணியன் - அம்பலத்தில் கூத்தாடும் புண்ணியமூர்த்தி; (பொது - அம்பலம்); (சம்பந்தர் தேவாரம் - 3.93.2 - "வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும் ஐயன்")

வெண்பொடி பூசும் ஈசன் - வெண்ணீற்றைப் பூசிய ஈசன்;

சதுர்மறை ஓதிய சாட்டியக்குடி உறை தந்தைதானே - நால்வேதங்களைப் பாடியருளிய (& நால்வேதங்களால் பாடப்பெற்ற), சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


3)

நந்திவட் டம்மலர் கொண்டடி தொழவினை நாசம் ஆக்கும்

அந்திவண் ணத்தரன் அரையினில் அரவினை ஆர்த்த ஐயன்

சுந்தர நீற்றினன் தொன்மறை பாடிய தூய நாவன்

சந்திர சேகரன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


நந்திவட்டம்மலர் கொண்டு அடி தொழ வினை நாசம் ஆக்கும் அந்திவண்ணத்து அரன் - நந்தியாவட்டைப்பூக்களைத் தூவித் திருவடியைத் தொழும் அன்பர்களது வினையை அழிக்கும் மாலைநேரத்துச் செவ்வானம் போன்ற செம்மேனியுடைய ஹரன்; (நந்திவட்டம் - நந்தியாவட்டம் - நந்தியாவட்டை); (நந்திவட்டம்மலர் - மகரஒற்று விரித்தல் விகாரம்);

அரையினில் அரவினை ஆர்த்த ஐயன் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

சுந்தர நீற்றினன் - அழகிய திருநீறு பூசியவன்;

தொன்மறை பாடிய தூய நாவன் - பழமை மிகுந்த வேதங்களைப் பாடிய தூய திருநாவினன்;

சந்திரசேகரன் - சந்திரனைத் திருமுடியில் அணிந்தவன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


4)

அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில்

நிலையென நின்றவன் நெற்றியிற் கண்ணினன் நீல கண்டன்

சிலையினிற் கணையினைச் சேர்த்தெயில் செற்றவன் சென்னி மீது

தலைமலி மாலையன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில் நிலையென நின்றவன் - அலையும் ஐம்புலன்களை அடக்கிய யோகியர் நெஞ்சிலும் பக்தர்கள் நெஞ்சிலும் குடிகொண்டவன்;

நெற்றியில் கண்ணினன் - நெற்றிக்கண்ணன்;

நீலகண்டன் - கரிய கண்டம் உடையவன்;

சிலையினில் கணையினைச் சேர்த்து எயில் செற்றவன் - வில்லில் ஓரம்பைத் தொடுத்து முப்புரங்களை எரித்தவன்; (சிலை - வில்); (எயில் - கோட்டை); (செறுதல் - அழித்தல்);

சென்னி மீது தலைமலி மாலையன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்; (தலை - மண்டையோடு);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


5)

அடைவது சிவனடி எனவறிந் திறைஞ்சிடும் அன்பர் கட்குத்

தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் எம்மிறை தாயின் நல்லன்

கடைதொறும் பலிக்குழல் காரணன் ஆரணன் கங்கை யாளைச்

சடையிடைக் கரந்தவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அடைவது சிவனடி என அறிந்து இறைஞ்சிடும் அன்பர்கட்குத் தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் - அடையவேண்டியது (/அடையத் தக்கது) சிவனது திருவடி என்று அறிந்து வணங்கும் அன்பர்களுக்கு எல்லாத் தடைகளையும் நீக்கி அருளும் சங்கரன்; (அடைதல் - பெறுதல்; சரண்புகுதல்); (அப்பர் தேவாரம் - 5.31.6 - "தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே");

எம் இறை - எங்கள் இறைவன்;

தாயின் நல்லன் - தாயினும் நல்லவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

கடைதொறும் பலிக்கு உழல் காரணன் - வீடுகளின் வாசல்தோறும் பிச்சையேற்கத் திரியும் காரணன்; (கடை - வாயில்); (பலி - பிச்சை); (காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான்);

ஆரணன் - வேதப்பொருளாக உள்ளவன்; (ஆரணம் - வேதம்);

கங்கையாளைச் சடையிடைக் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


6)

பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பந்த(ம்) மாய்ப்பவன்

கோங்கன குவிமுலைக் கொடியிடை மலைமகள் கூறு கந்தான்

யாங்கணும் திரிமதில் அவைபட மலைவிலும் அம்ப தொன்றும்

தாங்கிய கையினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பந்த(ம்) மாய்ப்பவன் - தகுந்தபடி பாதமலரைப் போற்றி வணங்கும் அடியார்களது பந்தங்களைத் தீர்ப்பவன்; (பாங்கு - அழகு; தகுதி); (பதம் - பாதம்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.9 - "பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ");

கோங்கு அன குவி-முலைக் கொடியிடை மலைமகள் கூறு உகந்தான் - கோங்கின் அரும்பு போன்ற குவிந்த முலையும் கொடி போன்ற இடையும் உடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்தவன்; (அன - அன்ன); (சம்பந்தர் தேவாரம் - 2.41.5 - "கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகந்தான்");

யாங்கணும் திரி-மதில் அவை பட மலைவிலும் அம்பது ஒன்றும் தாங்கிய கையினன் - எங்கும் திரிந்த முப்புரங்கள் அழியக் கையில் மேருவில்லையும் ஓர் அம்பையும் தாங்கியவன்; (யாங்கணும் - எங்கும்); (படுதல் - அழிதல்); (விலும் - வில்லும்); (அது - பகுதிப்பொருள்விகுதி);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


7)

மழவிடை ஊர்தியன் குழையொரு காதினன் வாழ்த்து வார்தம்

பழவினை தீர்ப்பவன் பாய்புலித் தோல்மிசைப் பாம்பை ஆர்த்தான்

மழையன மிடறினன் மாசுணம் அசைதரு மார்பில் நூலன்

தழலன மேனியன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மழவிடை ஊர்தியன் - இளைய எருதை வாகனமாக உடையவன்; (மழ - இளைய);

குழை ஒரு காதினன் - ஒரு காதில் குழை அணிந்தவன்;

வாழ்த்துவார்தம் பழவினை தீர்ப்பவன் - வாழ்த்தும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவன்;

பாய்-புலித்தோல்மிசைப் பாம்பை ஆர்த்தான் - பாயும் புலியின் தோலை ஆடையாகக் கட்டி அதன்மேல் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

மழை அன மிடறினன் - மேகம் போன்ற கரிய கண்டன்; (மழை - மேகம்); (மிடறு - கண்டம்);

மாசுணம் அசைதரு மார்பில் நூலன் - பாம்பு அசைகின்ற மார்பில் பூணூல் அணிந்தவன்; (மாசுணம் - பாம்பு); (தருதல் - ஒரு துணைவினை);

தழல் அன மேனியன் - தீப் போன்ற செம்மேனியன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


8)

கையினால் மலையெறி காரரக் கன்றனைக் கதற வைத்த

ஐயனோர் கண்தனை அரியிடந் தடியிட ஆழி ஈந்தான்

பையரா பனிமதி படர்சடை வைத்தவன் பால்வெ ணீற்றன்

தையலோர் பங்கினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


கையினால் மலை எறி கார்-அரக்கன்-தனைக் கதற வைத்த ஐயன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்து வீசிய கரிய அரக்கனான இராவணனைக் கதறி அழவைத்த தலைவன்;

ஓர் கண்தனை அரி இடந்து அடி இட ஆழி ஈந்தான் - ஒரு கண்ணைத் தோண்டிப் பூவாகத் திருவடியில் இட்டு வணங்கிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவன்;

பை-அரா பனி-மதி படர்-சடை வைத்தவன் - படத்தை உடைய பாம்பையும் குளிர்ந்த திங்களையும் படரும் சடையில் சூடியவன்; (பை - பாம்பின் படம்);

பால்வெணீற்றன் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்; (வெணீற்றன் - வெண்ணீற்றன்);

தையல் ஓர் பங்கினன் - உமையொரு பங்கன்; (தையல் - பெண்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


9)

மாலயன் நேடிட மாலெரி ஆயினான் வான வர்க்கா

ஆலமுண் டருளினன் அருமறை விரித்திட ஆல மர்ந்தான்

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காத லர்க்குச்

சாலவும் இனியவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மால் அயன் நேடிட மால் எரி ஆயினான் - திருமால் பிரமன் இருவரும் தேடுமாறு பெரிய ஜோதி ஆனவன்; (மால் எரி - பெரிய ஜோதி); (சம்பந்தர் தேவாரம் - 3.18.9 - "மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி ஆகிய வரதர்");

வானவர்க்கா ஆலம் உண்டருளினன் - தேவர்களுக்காக ஆலகாலத்தை உண்டு அருளியவன்;

அருமறை விரித்திட ஆல் அமர்ந்தான் - அரிய வேதங்களின் பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் இருந்தவன்;

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காதலர்க்குச் சாலவும் இனியவன் - இருபொழுதும் வாசமலர்களைத் தூவும் பக்தர்களுக்கு மிகுந்த இனிமை பயப்பவன்; (கடி - வாசனை);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


10)

வஞ்சனை மிக்கவர் வாயிலில் வந்துபொய் வார்த்தை சொல்வார்

உஞ்சிட அறிகிலர் உரைமதி யேன்மினீர் ஒற்றை ஏற்றன்

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவகன் வேண்டி னார்தம்

சஞ்சலம் தீர்ப்பவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


வஞ்சனை மிக்கவர், வாயிலில் வந்து பொய்-வார்த்தை சொல்வார், உஞ்சிட அறிகிலர் உரை மதியேன்மின் நீர் - மிகுந்த வஞ்சனை உடையவர்கள், உங்கள் வீட்டுவாசலில் வந்து பொய்கள் சொல்பவர்கள், உய்ய அறியாதவர்கள் சொல்லும் பேச்சை நீங்கள் பொருட்படுத்தவேண்டா (/ மதிக்கவேண்டா); (உஞ்சிட - உய்ந்திட என்பது மருவியது / போலி); ( அப்பர் தேவாரம் - 6.31.8 - "நெஞ்சமே உஞ்சு போக வழியாவது இதுகண்டாய்");

ஒற்றை ஏற்றன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (ஒற்றை - ஒப்பற்ற);

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவகன் - கடுங்கோபம் உடைய காலனை உதைத்து அழித்த வீரன்; (விலக்குதல் - தடுத்தல்); (சேவகன் - வீரன்); (சுந்தரர் தேவாரம் - 7.29.8 - "தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும் கடுந்துயர் வாராமே விலக்குவாய்");

வேண்டினார்தம் சஞ்சலம் தீர்ப்பவன் - இறைஞ்சும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;

(அப்பெருமானை வணங்கி உய்யுங்கள் என்பது குறிப்பு);


11)

ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட அஞ்சி வானோர்

போழ்மதி சூடியே புண்ணியா என்றடி போற்ற உண்டு

வாழ்வளித் தருளிய மணிமிட றுடையவன் வஞ்சம் இன்றித்

தாழ்பவர்க் கீபவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட, அஞ்சி வானோர் - ஆழம் மிக்க கடல் உமிழ்ந்த ஆலகாலம் சுட்டெரிக்க, மிக அஞ்சிய தேவர்கள்;

"போழ்-மதி சூடியே; புண்ணியா" என்று அடி போற்ற - "துண்டத்-திங்களைச் சூடியவனே; புண்ணியமூர்த்தியே" என்று போற்றித் திருவடியை வணங்க; (போழ் - துண்டம்);

உண்டு வாழ்வளித்து அருளிய மணிமிடறுடையவன் - அந்த விஷத்தை உண்டு அவர்களுக்கு வாழ்வளித்த நீலமணிகண்டம் உடையவன்;

வஞ்சம் இன்றித் தாழ்பவர்க்கு ஈபவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாத அன்பர்களுக்கு அளிப்பவன்; அன்பர்களுக்குச் சிறிதும் வஞ்சமின்றி வாரி வழங்குபவன்; (தாழ்தல் - வணங்குதல்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

P.275 - மறைக்காடு (வேதாரண்யம்) - (புஜங்கம்) - முளைக்கும் பொருட்கோர்

2015-02-28

P.275 - மறைக்காடு (வேதாரண்யம்) - ("புஜங்கம்")

-------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனானா தனானா தனானா தனானா;

தனாதான தானா தனாதான தானா - என்றும் நோக்கலாம்)

(இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


1)

முளைக்கும் பொருட்கோர் முதல்வன் தொழும்பர்

இளைப்பைத் துடைப்பான் இளந்திங் களைத்தான்

வளர்த்தான் மதில்மூன் றெரிக்கப் பொருப்பை

வளைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


முளைக்கும் பொருட்கு ஓர் முதல்வன் - தோன்றிய எப்பொருளுக்கும் முதல்வன்; (முளைத்தல் - தோன்றுதல்); (பொருட்கு - பொருளுக்கு); (அப்பர் தேவாரம் - 4.71.3 - "விளைபொருள் மூலமான கருத்தனை");

தொழும்பர் இளைப்பைத் துடைப்பான் - அடியார்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (தொழும்பர் - அடியவர்); (இளைப்பு - சோர்வு; கிலேசம்); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

இளந்திங்களைத்தான் வளர்த்தான் - வளரும் பிறையைச் சூடியவன்;

மதில் மூன்று எரிக்கப் பொருப்பை வளைத்தான் இடம் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்த பெருமான் உறையும் தலம்; (பொருப்பு - மலை);

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்; (தென் - அழகிய);


2)

தழைக்கும் தமிழ்ப்பா தனைக்கேட் பதற்கா

வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான்

அழைக்கும் சுரர்க்கார் அருள்செய்து நஞ்சுண்

மழைக்கண்ட னூர்தென் மறைக்காடு தானே.


தழைக்கும் தமிழ்ப்பாதனைக் கேட்பதற்கா வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான் - சிறந்த தமிழ்ப்பாமாலைகளைக் கேட்க விரும்பி, "ஒரு வழக்கு உள்ளது" என்று சொல்லிப் புத்தூரில் நிகழவிருந்த திருமணத்தைத் தடுத்தவன்; (கேட்பதற்கா - கேட்பதற்காக); (* அடிகள் 1-2: சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு - சிவபெருமான் கிழவேதியராக வந்து வழக்கு ஒன்று உள்ளது என்று சொன்னதால் புத்தூரில் நிகழவிருந்த சுந்தரர் திருமணம் தடைப்பட்டது);

அழைக்கும் சுரர்க்கு ஆர்அருள்செய்து நஞ்சுண் மழைக்கண்டன் ஊர் - இறைஞ்சிய தேவர்களுக்குப் பேரருள் புரிந்து விஷத்தை உண்ட மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன் உறையும் தலம்; (சுரர் - தேவர்); (மழை - மேகம்);

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


3)

அடுத்தோர் சரத்தைத் தொடுத்தான் படத்தான்

கடுத்தே நுதற்கண் கனன்றான் கணஞ்சூழ்

நடத்தான் திருக்காப் பகற்றத் தமிழ்ப்பா

மடுத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அடுத்து ஓர் சரத்தைத் தொடுத்தான் படத்தான் கடுத்தே நுதற்கண் கனன்றான் - நெருங்கி வந்து ஒரு கணையை எய்த காமன் அழியும்படி அவனைக் கோபித்து நெற்றிக்கண்ணால் எரித்தவன்; (அடுத்தல் - சமீபமாதல்); (சரம் - அம்பு); (படுதல் - சாதல்; அழிதல்); (கடுத்தல் - சினத்தல்; கோபித்தல்); (நுதற்கண் - நெற்றிக்கண்); (கனல்தல் - சிவத்தல்; சுடுதல்); சமீபமாதல்);

கணம் சூழ் நடத்தான் - கணங்கள் சூழும் கூத்தன்;

திருக்காப்பு அகற்றத் தமிழ்ப்பா மடுத்தான் இடம் - திருமறைக்காட்டில் கோயிற்கதவம் தாழ் நீக்கவேண்டித் திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைச் செவிமடுத்தவன்; (காப்பு - கதவு; கதவின் தாழ்); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணினேர்மொழியாள்"); (பெரிய புராணம் - 12.21.266 - "தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வகற்ற");

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


4)

வலப்பால் தழல்போல் வணத்தான் சிரத்திற்

சலத்தான் சிரிப்பால் தகித்தான் புரங்கள்

நிலத்தார் விசும்பார் நிதம்வாழ்த்தி ஏத்தும்

மலர்ப்பாத னூர்தென் மறைக்காடு தானே.


வலப்பால் தழல்போல் வணத்தான் - வலப்பக்கத்தில் தீப்போல் செவ்வண்ணம் உடையவன்;

சிரத்தில் சலத்தான் - தலைமேல் கங்கையை ஏற்றவன்; (சலம் - ஜலம் - கங்கை);

சிரிப்பால் தகித்தான் புரங்கள் - முப்புரங்களைச் சிரித்தே எரித்தவன்;

நிலத்தார் விசும்பார் நிதம் வாழ்த்தி ஏத்தும் மலர்ப்பாதன் ஊர் - மண்ணோரும் விண்ணோரும் தினமும் வாழ்த்திப் போற்றும் மலர்ப்பாதம் உடைய பெருமான் உறையும் தலம்;

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


5)

நினைத்தார் பிழைக்கச் சினக்கூற் றுதைத்தான்

வனப்போதி னான்றன் சிரத்தூண் மகிழ்ந்தான்

அனைத்தும் படைப்பான் அழிப்பான் துதிப்பார்

மனத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


நினைத்தார் பிழைக்கச் சினக்கூற்று உதைத்தான் - மிகவும் எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கோபம் மிக்க காலனை உதைத்தவன்;

வனப்-போதினான்தன் சிரத்து ஊண் மகிழ்ந்தான் - அழகிய தாமரைமலரின்மேல் உறையும் பிரமனது மண்டையோட்டில் உணவை விரும்பியவன்; (வனம் - அழகு; நீர்); (போது - பூ); (வனருகம் - vana-ruha - தாமரை) (ஊண் - உணவு);

அனைத்தும் படைப்பான் அழிப்பான் - எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்குபவன்;

துதிப்பார் மனத்தான் இடம் - வழிபடுவார் மனத்தில் இருப்பவன் உறையும் தலம்;

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


6)

அணங்கோர் புறத்தான் அராவும் புனைந்தான்

கணங்கள் கரத்தில் விளக்கேந்த ஆடி

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர்

வணங்கும் பிரானூர் மறைக்காடு தானே.


அணங்கு ஓர் புறத்தான் - ஒரு பக்கத்தில் உமையை உடையவன்; (அணங்கு - பெண் - உமை); (புறம் - பக்கம்);

அராவும் புனைந்தான் - பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

கணங்கள் கரத்தில் விளக்கு ஏந்த ஆடி - பூதகணங்கள் கையில் விளக்கை ஏந்தக் கூத்தாடுபவன்; (ஆடி - ஆடுபவன்); (இலக்கணக் குறிப்பு - அடியின் ஈற்றில் உள்ள லகு, பாடலின் வாய்பாடு கருதிக், குரு என்று அலகிடப்படும்);

மணங்கொள் புதுப்-பூ அடிச்-சாத்தி வானோர் வணங்கும் பிரான் ஊர் மறைக்காடுதானே - வாசமிக்க நாண்மலர்களை திருவடியில் இட்டுத் தேவர்கள் வணங்கும் தலைவன் உறையும் தலம் திருமறைக்காடு; (சாத்துதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");


7)

இதத்தைக் கொடுப்பான் இலாடத்து நீற்றன்

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான்

நுதற்கண் திறந்தே சுதன்தந் தவன்மன்

மதற்சுட்ட மானூர் மறைக்காடு தானே.


இதத்தைக் கொடுப்பான் - நன்மை செய்பவன்; (இதம் - ஹிதம் - நன்மை);

இலாடத்து நீற்றன் - நெற்றியில் திருநீறு பூசியவன்; (இலாடம் - லலாடம் - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக இலாடத்து இட்ட திருநீறும்");

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான் - திருவடியை வழிபடும் பக்தர்கள்து பிறவியை அறுப்பவன்; (பதம் - பாதம்); (பவம் - பிறவி); (துடைத்தல் - அழித்தல்);

நுதற்கண் திறந்தே சுதன் தந்தவன் மன் - நெற்றிக்கண்ணைத் திறந்து மகனைத் தந்தவன், தலைவன்; (சுதன் - மகன்); (மன் - தலைவன்);

மதற் சுட்ட மான் - (நெற்றிக்கண்ணைத் திறந்து) மன்மதனைச் சுட்டெரித்த பெரியோன்; (மதன் - காமன்); (மன்மதன் - காமன்); (மான் - பெரியோன்); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.86 - "கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்" - கயிலைமான் = கயிலைப் பெரியோன்);

ர் மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு;

குறிப்புகள்:

1. "மன்மதற்சுட்ட" = 1. "மன் + மதற் சுட்ட"; 2. "மன்மதற் சுட்ட" - என்று இருவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளலாம்.

2. இலக்கணக் குறிப்பு: மதற் சுட்ட = மதன் + சுட்ட = "மதனைச் சுட்ட" என்ற பொருளில்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதல், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதல், முதலியன நிகழும்);


8)

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் மலைத்தோள்

இறத்தான் நெரித்தான் எரிக்கும் விடத்தை

மறைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே - வானில் பறந்து விரைந்து செல்லும் தன் இரதம் பறவாமல் தரையில் இறங்கக் கண்டு சினந்து; (கடுமை - விரைவு); (அப்பர் தேவாரம் - 6.99.10 - "இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய்"); (பதைத்தல் - ஆத்திரப்படுதல்); (அப்பர் தேவாரம் - 5.16.11 - "திருமாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங்கு ஆர்த்து எடுத்தான்");

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் மலைத்-தோள் இறத்தான் நெரித்தான் - தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது மலை போன்ற புஜங்கள் முறியும்படி நசுக்கியவன்; (மறம் - வலிமை; சினம்); (பொருப்பு - மலை - கயிலைமலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்);

எரிக்கும் விடத்தை மறைத்தான் - ஆலகாலத்தை (உண்டு கண்டத்தில்) ஒளித்தவன்;

டம் தென்-மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


9)

அகழ்ந்தும் பறந்தும் மயன்மா லயர்ந்தார்

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்பூம் பதங்கள்

உகந்தார் மனத்தே உறைந்தான் இடம்பெண்

மகிழ்ந்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அகழ்ந்தும் பறந்தும் அயன்மால் அயர்ந்தார் - பிரமனும் திருமாலும் வானிற் பறந்துசென்றும் மண்ணை அகழ்ந்தும் அடிமுடி தேடிக் காணாது தளர்ந்தனர்; (பறந்தும்மயன் - பறந்தும் அயன் - மகரஒற்று விரித்தல் விகாரம்); (அகழ்ந்தும் பறந்தும் அயன் மால் - எதிர்நிரனிறையாக வந்தது); (அயர்தல் - தளர்தல்);

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்-பூம்-பதங்கள் உகந்தார் மனத்தே உறைந்தான் - பொன் போன்ற மலர்த்திருவடியைப் புகழ்ந்தும் விழுந்து வணங்கியும் விரும்பி வழிபடும் அன்பர்களது மனத்தில் உறைந்தவன்; (விழுதல் - விழுந்து வணங்குதல்); (பொலம் - பொன்; அழகு); (பொலம்பூம்பதங்கள் - பொலம்பூவடி); (பட்டினத்து அடிகள் - கோயில் நான்மணிமாலை - 11.26.40 - "போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே"); (உகத்தல் - விரும்புதல்);

இடம் பெண் மகிழ்ந்தான் - இடப்பக்கம் உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

டம் தென்-மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


10)

நிதிக்கா நிரம்பப் புறன்சொல் சழக்கர்

சதிச்சேற் றழுந்தேல் தவிப்பைத் தவிர்ப்பான்

நதிச்சென்னி மேலே நறும்போது நாகம்

மதிக்கண்ணி யானூர் மறைக்காடு தானே.


நிதிக்கா நிம்பப் புறன் சொல் சழக்கர் சதிச்சேற்று அழுந்தேல் - பணத்திற்காகப் பல பழிச்சொற்களைப் பேசும் தீயவர்களது வஞ்சனை என்ற சேற்றில் அழுந்தவேண்டா; (நிரம்ப - நிறைய; மிகுதியாக); (புறன் - பழிமொழி) (சழக்கர் - தீயவர்கள்; சழக்கு - குற்றம்; தீமை); (சதி - வஞ்சனை);

தவிப்பைத் தவிர்ப்பான் - பக்தர்களது வருத்தத்தை தீர்ப்பவன்;

நதிச்-சென்னிமேலே நறும்போது நாகம் மதிக்கண்ணியான் - கங்கையைத் தாங்கிய திருமுடிமேல் வாசமலர்கள் பாம்பு இவற்றோடு கண்ணிமாலைபோல் சந்திரனைச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

ர் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு; (அவனை வழிபாடு செய்து உய்க - என்பது குறிப்பு);


11)

புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான்

கரங்கள் குவித்துக் கழல்போற்று வார்க்கே

வரங்கள் வழங்கும் பரன்மேய ஊராம்

மரங்கள் வளம்சேர் மறைக்காடு தானே.


புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி சிரித்தவன்; (கனல் - நெருப்பு); (வாய் - ஏழாம்வேற்றுமை உருபு);

கரங்கள் குவித்துக் கழல்போற்றுவார்க்கே வரங்கள் வழங்கும் பரன் மேய ஊர் ஆம் - கைகூப்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் கொடுக்கும் பரமன் உறைகின்ற தலம் ஆவது;

மரங்கள் வளம் சேர் மறைக்காடுதானே - விருட்சங்களும் படகுகளும் வளம் சேர்க்கின்ற திருமறைக்காடு; (மரங்கள், மரக்கலங்கள் முதலிய வளங்கள் நிறைந்த வேதாரண்யம்); (மரம் - விருட்சம்; மரக்கலம் (கப்பல், படகு));


வி. சுப்பிரமணியன்

--- ---