Saturday, June 17, 2017

03.04.044 - சிவன் - சிவன் அல்லன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-24

3.4.44 - சிவன் - சிவன் அல்லன் - சிலேடை

-------------------------------------------------------------

தந்தை உடையவன் ஓர்விழியி லாதவன்

சிந்திப்பார்க் கெட்டா னவன்வீடு தேடிவந்து

வந்திப்பார் ஏவல்செய் தேய்மதியன் பாரிக்கு

மைந்தன் இவன்சி வனே.


சொற்பொருள்:

உடையவன் - உரிமை உள்ளவன்; செல்வம் உள்ளவன்;

ஆதவன் - ஆதபன் - சூரியன். (வெம்மையைச் சுட்டி வந்தது).

எட்டானவன் - 1. எட்டான் அவன்; எள் தான் அவன்; / 2. எட்டு ஆனவன்;

எள் - எள் என்ற சிறிய தானியம்; நிந்தை;

வீடு - 1. இல்லம்; மனை; / 2. முக்தி; வினைநீக்கம்;

ஏவல் செய்தல் - 1. பணி செய்தல்; / 2. தொண்டு செய்தல்;

மதி - 1. அறிவு; / 2. சந்திரன்; (** திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.06.46)

பாரி - ஒரு மனிதனின் பெயர்; (உதாரணம் - கடையேழு வள்ளல்களுள் ஒருவர் பெயர்);

பாரித்தல் - காத்தல்; வளர்த்தல்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி 64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

மைந்தன் - 1. மகன்; கணவன்; இளைஞன்; / 2. வீரன்; (அப்பர் தேவாரம் - 6.32.1 -"வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி")

சிவனே - இங்கே, - 1. வினா ஏகாரம்; / 2. தேற்ற ஏகாரம்; ஈற்று அசை;


சிவன் அல்லன்:

தந்தை உடையவன் - இவனுக்குத் தந்தை உள்ளார்;

ஓர் விழி இலாதவன் - குருடன்;

சிந்திப்பார்க்கு எள்-தான் அவன் (/எட்டான் அவன்) - கற்றவர்களால் அற்பமாகக் கருதப்படுபவன்; (- அல்லது - சிந்திப்பவர்களுக்குப் புலப்படாதவன்);

வீடு தேடிவந்து வந்திப்பார் ஏவல் செய் தேய்-மதியன் - தன் இல்லத்தைத் தேடிவந்து புகழ்பவர்களுக்குப் பணிசெய்கின்றவன், அறிவற்றவன்.

பாரிக்கு மைந்தன் - பாரி என்பவனுக்கு மகன்.

இவன் சிவனே? - இவன் சிவனா? (அல்லன்).


சிவன்:

தந்தை - தந்தை;

உடையவன் - எல்லாம் உடையவன்; (-- அல்லது -- எம்மை உடையவன்);

ஓர் விழியில் ஆதவன் - ஒரு கண்ணில் வெம்மை இருக்கும். (ஆதவன் = சூரியன் என்று பொருள்கொண்டால், "சூரியனை ஒரு கண்ணாக உடையவன்);

சிந்திப்பார்க்கு எட்டு ஆனவன் - சிந்திப்பவர்களுக்கு எட்டு (அட்டமூர்த்தி) ஆனவன்;

வீடு தேடி, வந்து வந்திப்பார் ஏவல் செய் தேய்-மதியன் - முக்தியை நாடி வந்து அன்பர்கள் தொண்டுசெய்து வழிபடும் சந்திரசேகரன்;

பாரிக்கு(ம்) மைந்தன் - காத்தருளும் வீரன்;

இவன் சிவனே - இவன் சிவன்தான்;


பிற்குறிப்புகள்:

1) இப்பாடலை எழுதத் தூண்டிய விஷயம்:

சந்தவசந்தக் குழுவில் பாலு என்ற அன்பர் எழுதியது:

கொள்ளை கொள்ளையாகச் சிலேடை எழுதித்தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள்! எல்லாவற்றுக்கும் ஒரே பொது அம்சம் - சிலேடைச்சொற்களைப் போட்டு நிறுவப்படுவது

"ஒரு பொருள் = இன்னொரு பொருள்" (அதாவது A = B.)

Now, கேளுங்கள், சிலேடையைப் பயன்படுத்தி,

A is NOT equal to A

என்ற திசையில் யாரேனும் சென்றதுண்டா? முயன்று பாருங்களேன் - "சிவனும் சிவனும் ஒன்றல்ல, வெவ்வேறு". எப்படி!


2) ** - திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம் - 8.06.46 -

உழைதரு நோக்கியர் கொங்கைப் பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்

விழைதருவேனை, விடுதி கண்டாய், விடின், வேலை நஞ்சு உண்

மழைதரு கண்டன், குணம் இலி, மானிடன், தேய்மதியன்,

பழைதரு மாபரன் என்றென்று அறைவன் பழிப்பினையே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment