Saturday, June 17, 2017

03.04.038 - சிவன் - ஏழு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-21

3.4.38 - சிவன் - ஏழு - சிலேடை

-------------------------------------------------------------

சுரங்களுமாம் சொல்லும் புவனங் களுமாம்

இரண்டுடன் அஞ்சாகும் ஆறோடொன் றாகும்

முனிவரருள் காணும் முதன்மையார் பாலின்

இனியமொழிப் பார்ப்பதிகோன் ஏழு.


சொற்பொருள்:

சுரங்கள் - இசையின் ஸ்வரங்கள்;

சொல் - மந்திரம்;

சொல்லுதல் - கூறுதல்; புகழ்தல்;

புவனம் - உலகம்;

ஆறோடொன்று - 1. ஆறும் ஒன்றும் (6+1); / 2. ஆறு ஓடு ஒன்று;

முனிவரர் - சிறந்த முனிவர்கள்;

உள் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. உள்ளம்; மனம்;

காணுதல் - தரிசித்தல்; ஆராய்தல்; அனுபவித்தல்;

முதன்மை - தலைமை;

முதன்மையார் - தலைமையுடையவர்;

இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு;

பார்ப்பதி - பார்வதி;

கோன் - தலைவன்;


ஏழு:

சுரங்களும் ஆம் - இசையின் ஸ்வரங்கள் ஏழு ஆகும்;

சொல்லும் புவனங்களும் ஆம் - கூறும் உலகங்கள் ஏழு ஆகும்;

இரண்டுடன் அஞ்சு ஆகும் - இரண்டும் ஐந்தும் சேர்ந்து ஏழு ஆகும்;

ஆறோடு ஒன்று ஆகும் - ஆறும் ஒன்றும் சேர்ந்து ஏழு ஆகும்;

முனிவரருள் காணும் முதன்மையார் - சிறந்த முனிவர்களில் காண்கின்ற முதன்மையுடையவர்கள் ஏழு (சப்தரிஷிகள்).

ஏழு - ஏழு.


சிவன்:

சுரங்களும் ஆம் - ஏழு சுரங்கள் ஆவான். (சம்பந்தர் தேவாரம் - திருமுறை 1.11.4 – "பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும் . . . ஆனான் இடம் வீழிம்மிழலையே");

சொல்லும் புவனங்களும் ஆம் - மந்திரம் ஆவான். (அவனுடைய நாமமே மந்திரம்). உலகங்கள் ஆவான். (அப்பர் தேவாரம் - 6.55.7 - "எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி"); (அப்பர் தேவாரம் - 6.69.9 – "உலகேழும் ஆனானை");

இரண்டுடன் அஞ்சு ஆகும் - சிவம் சக்தி என இரண்டு ஆவான்; ஐம்பூதங்கள் ஆவான்.

று ஓடு ஒன்று ஆகும் - (தலையில்) ஆறு ஓடுகின்ற ஒரு பொருள் ஆவான்.

முனிவரர் உள் காணும் முதன்மை ஆர் - சிறந்த முனிவர்கள் உள்ளம் ஆராய்கின்ற ( / அகக்கண்ணால் காண்கின்ற) தலைமைத்தன்மை உடைய;

பாலின் இனிய மொழிப் பார்ப்பதி கோன் - பாலினும் இனிய மொழி பேசும் பார்வதி மணாளன்; (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 – "பாலின்நேர் மொழியாள் ஒரு பங்கனே");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: