06.05 – பலவகை
2012-07-13
06.05.025 - சிவன் - திருமால் - பிரமன் - சிலேடை
-------------------------------------------------------
பூமிசை அண்ணலும் அங்கலைம கட்கிறையும்
பூமியும் வானும்போய்ப் போற்றிநிற்கும் - சாமியெனும்
பொற்பினனு முந்திமலர் நீர்மையனும் புள்ளேறி
பொற்சடையன் நான்முகன் போல்.
சொற்பொருள்:
பூ - 1) மலர்; 2) மண்;
மிசை - மேல்; ஏழாம் வேற்றுமை உருபு;
மிசைதல் - உண்ணுதல்;
அங்கலைமகட்கு - 1) அம் கலைமகட்கு; 2) அங்கு அலைமகட்கு;
அம் - அழகு;
அங்கு - அசை;
கலைமகள் - சரஸ்வதி;
அலைமகள் - லக்ஷ்மி;
இறை - கணவன்;
பொற்பு - தன்மை; அழகு;
உந்தி - 1) நாபி; கொப்பூழ்; 2) கடல்;
முந்தி - முன்பு; (முந்துதல் - காலம் இடம் முதலியவற்றால் முற்படுதல் - To be prior in time, place, etc.);
மலர் - பூ;
மலர்தல் - தோன்றுதல்; பிறத்தல்; (To appear; to rise to view);
நீர்மை - தன்மை; அழகு;
புள் - பறவை;
போல் - அசை;
பிரமன்:
பூமிசை அண்ணலும் - பூவின்மேல் இருப்பவனும்;
அம் கலைமகட்கு இறையும் - அழகிய சரஸ்வதிக்குக் கணவனும்;
பூமியும் வானும் போய்ப் போற்றிநிற்கும் சாமி எனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்; (மும்மூர்த்திகளில் ஒருவன்);
உந்தி மலர் நீர்மையனும் - (திருமாலின்) நாபியில் உதித்த தன்மையை உடைவனும்;
நான்முகன் - நான்கு முகங்களையுடைய பிரமன்.
திருமால்:
பூ மிசை அண்ணலும் - மண்ணை உண்டவனும்; (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.9 - "எத்தனையோ பிரமர்களும் மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்");
அங்கு அலைமகட்கு இறையும் - திருமகள் கணவனும்;
பூமியும் வானும் போய்ப் போற்றிநிற்கும் சாமியெனும் பொற்பினனும் - மண்ணுலகோரும் வானுலகோரும் வணங்கும் தேவனும்; (மும்மூர்த்திகளில் ஒருவன்);
உந்தி மலர் நீர்மையனும் - நாபியில் மலரை உடையவனும்;
புள் ஏறி - (கருடன் என்ற) பறவையை ஊர்தியாக உடைய திருமால்;
சிவன்:
பூமிசை அண்ணலும் அங்கு அலைமகட்கு இறையும் பூமியும் வானும் போய்ப் போற்றி நிற்கும் சாமி எனும் பொற்பினனும் - பூமேல் இருக்கும் பிரமனும் திருமகள் கேள்வனான திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானிற் பறந்து சென்றும் (அடிமுடி தேடிக் காணாமல்) அவர்களால் வணங்கப்பட்ட தலைவனும்;
முந்தி மலர் நீர்மையனும் - எல்லாவற்றிற்கும் முன்னமே இருந்தவனும்; (அப்பர் தேவாரம் - 4.15.11 - "முந்தித் தானே முளைத்தானை" - ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டுத் தோன்றியவன்);
பொற்சடையன் - பொற்சடையை உடைய சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment