Thursday, October 27, 2022

06.04.022 – சுந்தரர் துதி - பொல்லாத வினைக்கடலில்

06.04.022 – சுந்தரர் துதி - பொல்லாத வினைக்கடலில்

2012-07-20

06.04.022) சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2012-Jul-26

-------------------------


1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொல்லாத வினைக்கடலில் புணையாக வருமரனே

வெல்லோலை ஒன்றாலே மீளாத அடிமைகொண்டு

பல்லூரில் தமிழ்பாடிப் பரவென்று பணித்தவர்தம்

சொல்லாரும் தமிழ்பாடில் துன்பங்கள் நில்லாவே.


* அடிமை ஓலை காட்டிச் சுந்தரரைத் தடுத்தாட்கொண்டது.


புணை - தெப்பம்;

வெல் ஓலை - வழக்கில் வெல்கிற அடிமைப்பத்திரம்;

மீளாத அடிமை - நிரந்தர அடிமை;

பரவுதல் - துதித்தல்;

சொல் ஆரும் தமிழ் பாடில் - பல்வகையான இனிய அரிய தமிழ்ச்சொற்களால் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாடினால்;

(பெரியபுராணம் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - #222:

சொல்லார்தமி ழிசைபாடிய தொண்டன்தனை இன்னும்

பல்லாறுல கினில்நம்புகழ் பாடென்றுறு பரிவின்

நல்லார்வெண்ணெய் நல்லூரருட் டுறைமேவிய நம்பன்

எல்லாவுல குய்யப்புரம் எய்தானருள் செய்தான். )


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

விழிகாட்டும் நுதலீசா வேலைவிடம் மிடற்றினிலே

எழில்கூட்டும் ஐயாறா என்றிறைஞ்ச அவனருளால்

சுழிகாட்டும் காவிரிநீர் விலகிநின்று துளக்கமிலா

வழிகாட்டும் வன்றொண்டர் மலர்ப்பாதம் வாழியவே.


* திருவையாற்றில் காவிரிவெள்ளம் விலகிச் சுந்தரர்க்கு வழிவிட்டது.


வேலை - கடல்;

மிடறு - கண்டம்;

துளக்கம் - நடுக்கம்; அச்சம்;

வன்றொண்டர் - வன் தொண்டர் - சுந்தரர்;


திருவையாற்றுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, வழியில் சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரிவெள்ளத்தால் அக்கரையில் தடைப்பட்டு நின்றார் சுந்தரர்.

"நெற்றிக்கண்ணனே; கடல் நஞ்சு கண்டத்தில் அழகாகச் சேரும் ஐயாற்றுப் பெருமானே" என்று துதிக்கவும், சிவனருளால், சுழித்து ஓடிக்கொண்டிருந்த காவிரி வெள்ளம் விலகி நல்லவழியைக் காட்டிய சுந்தரரின் மலர்ப்பாதங்கள் வாழ்க!


3) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொய்யாற்றில் நாமுழன்று புகலின்றி வாடாமே

மெய்யாற்றில் நின்றுபழ வினைதீரத் தமிழ்தந்தார்

மையேற்ற கண்டத்தன் வண்கச்சூர் தனிற்பிச்சை

கையேற்றுண் பித்தருளும் வன்றொண்டர் கழல்போற்றி.


* திருக்கச்சூரில் சிவபெருமான் உணவை இரந்துவந்து சுந்தரர்க்கு அளித்துப் பசீதீர்த்ததைச் சுட்டியது.


ஆறு - வழி; நெறி;

புகல் - அடைக்கலம்;

மை - கறுப்பு;

வண்மை - வளம்;

உண்பித்தல் - உணவளித்தல்;


(பெரிய புராணம் - 29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - #176 & 177:

வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்

மின்தங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி

அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்

சென்றன்பர் முக[ம்]நோக்கி அருள்கூரச் செப்புவார்.


மெய்ப்பசியால் மிகவருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட

இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்

அப்புற[ம்]நீர் அகலாதே சிறிதுபொழு தமருமெனச்

செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிரப்பார்.)


4) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு) ---

தெங்கம்பொழில் திகழும்திருப் புகலூர்தனிற் செங்கல்

அங்கம்பொனின் கல்லாகிட அரனாரருள் பெற்றார்

பங்கங்களை பாமாலைகள் பலபாடுவன் தொண்டர்

பொங்கும்புகழ் உடையாரவர் பொற்றாளிணை போற்றி.


* திருப்புகலூரில் கோயில் முற்றத்தில் செங்கற்களைத் தலையணையாக வைத்துச் சுந்தரர் துயின்றபொழுது சிவன் அருளால் அக்கற்கள் பொன்னாக மாறியதைச் சுட்டியது.


தெங்கம்பொழில் - தென்னை மரச்சோலை;

அங்கு - அசைச்சொல்;

அம்பொன் - சிறந்த பொன்;

பங்கம் களை பாமாலை - குற்றத்தைப் போக்கும் தேவாரப் பதிகங்கள்;

பொற்றாள் இணை - இரண்டு பொன்னடிகள்;


(பெரிய புராணம் - 29 ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம் - #50:

சுற்றும் இருந்த தொண்டர்களும் துயிலும் அளவில் துணைமலர்க்கண்

பற்றும் துயில்நீங் கிடப்பள்ளி உணர்ந்தார் பரவை கேள்வனார்

வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம்

பொன்திண் கல்லா யினகண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி. )


5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

ஏழையொரு கூறுடைய எம்பெருமான் இணையடியை

ஏழிசையார் இன்தமிழால் ஏத்தியவர் அவனுக்குத்

தோழமையும் பெற்றவர்வான் சூழநொடித் தான்மலைக்கு

வேழமிசைச் சென்றடைந்தார் விரைமலர்த்தாள் வாழியவே.


* திருவாரூரில் ஈசன் தன்னைச் சுந்தரர்க்குத் தோழனாகத் தந்தருளினான்;

* வெள்ளை ஆனையின்மேல் ஏறிக் கயிலாயத்தை அடைந்தது;


ஏழை - பெண் - பார்வதி;

ஏழிசை ஆர் இன் தமிழால் - ஏழாகிய இசையினையுடைய, இனிய தமிழால்;

வான் - தேவர்கள்;

நொடித்தான்மலை - கயிலைமலை;

வேழமிசை - யானையின்மேல்;

விரைமலர்த்தாள் - வாசமலர்த்திருவடி;


(சுந்தரர் தேவாரம் - 7.100.4 -

வாழ்வை உகந்தநெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்

டாழ முகந்தவென்னை அது மாற்றி அமரரெல்லாம்

சூழ அருள்புரிந்து தொண்டனேன் பரமல்லதொரு

வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே.)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment