06.01 – சிவன் சிலேடைகள்
2012-10-20
06.01.135 - சிவன் - காகம் - சிலேடை
-------------------------------------------------------
உண்டிக் கெனவுழலுங் கண்ட விடமுண்ணுங்
கண்டங் கறுக்குங் கரவாமை - கொண்டு
கரையும் நரர்க்கு நலம்செய்யுங் காக்கை
திரைநதிசேர் சென்னிச் சிவன்.
சொற்பொருள்:
கண்டவிடம் - 1. கண்ட விடம் (காணப்பட்ட நஞ்சு); 2. எவ்விடமும்;
கரவாமை - வஞ்சனை இன்மை;
கொண்டு - 1. கொள்ளுதல் - மேற்கொள்ளுதல் (To adhere to, observe;); 2. மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு;
கரைதல் - 1. மனம் உருகுதல்; 2. ஒலித்தல்;
திரை - அலை;
சென்னி - தலை;
காகம்:
உண்டிக்கு என உழலும் - உணவுக்கு என்று அலையும்;
கண்ட இடம் உண்ணும் - பாகுபாடு இன்றி இரை கண்ட எந்த இடத்திலும் தின்னும்;
கண்டம் கறுக்கும் - கழுத்துக் கறுப்பாக இருக்கும்;
கரவாமை கொண்டு கரையும் - வஞ்சனையின்மையால் கரைந்து தன் இனத்தோடு பகிர்ந்து உண்ணும்; (திருக்குறள் - 527 - "காக்கை கரவா கரைந்துண்ணும்");
நரர்க்கு நலம் செய்யும் காக்கை - (இறந்த பிராணிகளின் ஊனையும் மற்றவற்றையும் உண்டு) மனிதர்க்குப் புறச்சூழல் சுத்தமாக இருக்க உதவும் காகம். ("பிண்டபோஜனம் செய்து மானிடர்களின் பித்ருக்கள் வழிபாட்டுக்கு உதவி செய்யும்" என்றும் பொருள்கொள்ளக்கூடும்);
சிவன்:
உண்டிக்கு என உழலும் - (மண்டையோட்டை ஏந்திப் பிச்சையாக இடும்) உணவுக்குத் திரிபவன்;
கண்ட விடம் உண்ணும் - காணப்பட்ட நஞ்சை உண்பவன்;
கண்டம் கறுக்கும் - மிடறு கருமையாக இருக்கும்; ("கண்டு அங்கு அறுக்கும் - பக்தர்களைக் கடைக்கண்ணால் பார்த்து அவர்கள் குறைகளைத் தீர்ப்பான்" என்றும் பொருள்கொள்ளலாம்);
கரவாமை கொண்டு கரையும் நரர்க்கு நலம் செய்யும் - வஞ்சனையின்றி உள்ளம் உருகும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்; ('வஞ்சனையின்றி' என்பதைச் சிவனுக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம்);
திரைநதிசேர் சென்னிச் சிவன் - அலைக்கும் கங்கையைத் தலைமேல் ஏற்ற சிவபெருமான்.
இலக்கணக்குறிப்பு:
செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.
(எடுத்துக்காட்டு): அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment