06.01 – சிவன் சிலேடைகள்
2012-10-29
06.01.136 - சிவன் - புயல் - சிலேடை
-------------------------------------------------------
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் நிலமஞ்சும்
பேர்தரும் உச்சமழை பெய்யுமால் - ஆரும்
துணையாம் புணையென்று சொல்வர் புயலோர்
கணையால் எயிலெய்தான் காண்.
சொற்பொருள்:
வெளி - 1. பரப்பு (open space); / 2. ஆகாயம்;
வல் - வலிமை; விரைவு;
வளி - காற்று;
அஞ்சும் - 1. பயப்படும்; / 2. ஐந்தும்;
பேர் - பெயர்;
பேர்தல் - போதல் (To depart, go away);
தா/தருதல் - 1. துணைவினை - (An auxiliary added to verbs); / 2. கொடுத்தல்;
உச்சம் - 1. அறுதியளவு (Extreme limit); / 2. உச்சந்தலை;
மழை - 1. மாரி (Rain); / 2. நீர்;
ஆல் - 1. ஓர் அசைச்சொல்; / 2. ஆலகால விடம்;
ஆர் - யார்;
ஆர்தல் - உண்ணுதல்;
புணை =- தெப்பம்; படகு;
சொல்லுதல் - 1. கூறுதல் / 2. புகழ்தல்;
எயில் - கோட்டை;
காண் - பார்; முன்னிலை அசைச்சொல்;
புயல்:
நீர்வெளி வல்வளியாய் நிற்கும் - கடற்பரப்பில் மிக வலிமை உடைய காற்றாகத் தோன்றும்;
நிலம் அஞ்சும் - உலகம் அதனைக் கண்டு அச்சம்கொள்ளும்;
பேர் தரும் - அந்த அச்சத்தால் வேறு இடங்களுக்கு நீங்கிச்செல்வார்கள் (evacuation to safer places ahead of storm's landfall); (தருதல் - துணைவினைச்சொல்). (இக்காலத்தில் புயல்களுக்குப் பேர் வைக்கும் பழக்கத்தை ஒட்டி, "அதற்கு ஒரு பெயரைக் கொடுக்கும்' என்றும் பொருள்கொள்ளலாம்);
உச்ச மழை பெய்யுமால் - மிக அதிக மழை பெய்யும்; (ஆல் - அசைச்சொல்);
ஆரும் "துணை ஆம் புணை" என்று சொல்வர் - (புயலால் வெள்ளமும் ஏற்படுவதால்) எவரும் "ஒரு படகு இருந்தால் உதவும்" என்று சொல்வார்கள்;
புயல் - பேய்காற்றும் பெருமழையும் உடைய புயல் (cyclone / hurricane);
சிவன்:
நீர் வெளி வல்வளியாய் நிற்கும் - நீர், ஆகாயம், வலிய காற்று, என ஐம்பூதங்களாய் நிற்பவன்; (தீ, நிலம் என்ற மற்ற இருபூதங்களும் குறிப்பால் பெறப்பட்டன);
நிலம் அஞ்சும் - உலகோர் (இறைவனுக்குப்) பயப்படுவர்;
பேர் தரும் - (ஒரு பெயரும் இல்லாத அவனுக்குப்) பல பெயர்கள் தருவர்;
("நிலம் அஞ்சும் பேர் தரும்" - தமிழ் இலக்கணம் சொல்வதுபோல், "குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்ற இயற்கையான ஐந்துநிலப்பிரிவுகளில் உள்ளோர் கடவுளுக்கு முருகன், திருமால், முதலிய வெவ்வேறு பேர்கள் தருவர்" என்றும் பொருள்கொள்ளலாம்;)
உச்சம் மழை பெய்யும் - அவன் உச்சந்தலையில் கங்கை பொழியும்; (இலக்கணக் குறிப்பு: "உச்சம் + மழை = உச்சமழை" - என்று ஈற்று மகரம் கெட்டுப் புணரும்);
ஆல் ஆரும் - ஆலகால விடத்தை உண்பான்;
துணை ஆம் புணை என்று சொல்வர் - சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் தெப்பம் என்று புகழ்வார்கள்;
ஓர் கணையால் எயில் எய்தான் - ஒரு கணையால் முப்புரங்களை எய்து அழித்த சிவபெருமான்;
பிற்குறிப்புகள்:
(அப்பர் தேவாரம் - 5.23.9 - "அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ" - அஞ்சியாகிலும் - அச்சம் கொண்டாவது. அன்பு பட்டாகிலும் - அன்பு கொண்டாவது. பயபக்தி இரண்டில் ஒன்றையேனும் கடைப்பிடித்து என்றபடி.);
(சம்பந்தர் தேவாரம் - 1.115.3 - "தழைமயி லேறவன் தாதையோதான் மழைபொழி சடையவன்");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment