Thursday, June 16, 2022

06.02.129 – வயலூர் - அடுதீ வினைகள் - (வண்ணம்)

06.02.129 – வயலூர் - அடுதீ வினைகள் - (வண்ணம்)


2010-10-24

6.2.129) அடுதீ வினைகள் - வயலூர்

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனா தனன தனனா தனன

தனனா தனன .. தனதான)

(இச்சந்தத்திலிருந்து சற்றே மாறுபட்ட சந்தம் உடைய திருப்புகழ் -

தசையா கியகற் றையினால் - திருப்புகழ் - கருவூர்)


அடுதீ வினைகள் இடரே புரிய

.. .. அதனால் மறுகு .. மிடியேனான்

.. அழியா மகிழ்வு தனையே அடைய

.. .. அடியே நினைய .. அருளாயே

சுடுநீ றணியும் அடியார் துணைவ

.. .. துணிமா மதியை .. அணிவோனே

.. துடிமான் மழுவும் உடையாய் வலிய

.. .. சுறவார் கொடியன் .. உடல்காய்வாய்

இடுகா னதனில் அனன்மா நடனம்

.. .. இடுமோர் இறைவ .. இருதாளை

.. இமையோர் பரவ அமுதே அருளும்

.. .. இருளார் மிடற .. மலர்மேலான்

நெடுமால் இவர்கள் இகலால் முயலு

.. .. நிழலார் எரியின் .. வடிவோனே

.. நிறைநீர் உடைய வயலூர் மகிழு

.. .. நிமலா பழைய .. பெருமானே.


பதம் பிரித்து:

அடு-தீவினைகள் இடரே புரிய

அதனால் மறுகும் மிடியேன் நான்

அழியா மகிழ்வு தனையே அடைய,

அடியே நினைய அருளாயே;


சுடுநீறு அணியும் அடியார் துணைவ;

துணி-மா-மதியை அணிவோனே;

துடி, மான், மழுவும் உடையாய்; வலிய

சுறவு ஆர் கொடியன் உடல் காய்வாய்;


இடுகான் அதனில் அனல்-மா நடனம்

இடும் ஓர் இறைவ; இருதாளை

இமையோர் பரவ அமுதே அருளும்

இருள் ஆர் மிடற; மலர்மேலான்


நெடு-மால் இவர்கள் இகலால் முயலும்

நிழல் ஆர் எரியின் வடிவோனே;

நிறை-நீர் உடைய வயலூர் மகிழும்

நிமலா; பழைய பெருமானே.


* ஆதிநாதர் - வயலூரில் ஈசன் திருநாமம்


அடு-தீவினைகள் இடரே புரிய தனால் மறுகும் மிடியேன் நான் - தீவினைகள் என்னை நெருங்கித் துன்பமே செய்ய அதனால் வருந்துகின்றவனும் கதியற்றவனுமான நான்; (அடுத்தல் - சமீபமாதல்); (மறுகுதல் - மனம் கலங்குதல்; வருந்துதல்); (மிடி - துன்பம்; வறுமை);

அழியா மகிழ்வு தனையே அடைய, அடியே நினைய அருளாயே - நீங்காத இன்பமே பெற, உன் திருவடியையே நினைக்க அருள்வாயாக;


சுடுநீறு அணியும் அடியார் துணைவ - வெந்த வெண்பொடி பூசிய அடியவ்ர்களுக்குத் துணைவனே;

துணி-மா-மதியை அணிவோனே - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவனே; (துணி - துண்டம்);

துடி, மான், மழுவும் உடையாய் - கையில் உடுக்கை, மான், மழு இவற்றையெல்லாம் உடையவனே; (துடி - உடுக்கை);

வலிய சுறவு ஆர் கொடியன் உடல் காய்வாய் - வலியவனான சுறவக்கொடியை உடைய மன்மதனது உடலைச் சாம்பலாக்கியவனே; (சுறவு - சுறாமீன்); (அப்பர் தேவாரம் - 6.2.6 - "அன்று வன்மதவேள் தன்னுடலங் காய்ந்தார்");


இடுகான் அதனில் அல்-மா நடனம் டும் ஓர் இறைவ - சுடுகாட்டில் தீயிடைப் பெருங்கூத்து ஆடும் ஒப்பற்ற இறைவனே;

இருதாளை இமையோர் பரவ அமுதே அருளும் இருள் ஆர் மிடற - இரு திருவடிகளைத் தேவர்கள் துதிக்க, இரங்கி அவர்களுக்கு அமுதத்தையே அருளிய நீலகண்டனே; (மிடறன் - மிடற்றன் என்பது சந்தம் கருதி மிடறன் என்று ஆகி, விளியில் மிடற என்று வந்தது); ( சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவா ளுடையாய்");


மலர்மேலான் நெடு-மால் இவர்கள் இகலால் முயலும் நிழல் ஆர் எரியின் வடிவோனே - மலர்மேல் உறையும் பிரமனும் நீண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடிமுடி தேடிய ஒளி மிக்க சோதிவடிவம் உடையவனே; (இகல் - பகை; போட்டி); (நிழல் - ஒளி); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (எரி - நெருப்பு);

நிறை-நீர் உடைய வயலூர் மகிழும் நிமலா - நீர் வளம் மிக்க வயலூரில் விரும்பி எழுந்தருளிய தூயனே;

பழைய பெருமானே - மிகவும் தொன்மையானவனே - ஆதிநாதனே; (* ஆதிநாதர் - வயலூரில் ஈசன் திருநாமம்); (ஆதி - தொடக்கம்; பழைமை; காரணம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


2 comments: