06.02.128 – பொது - புனன்மே லுயரும் - (வண்ணம்)
2010-10-16
6.2.128) புனன்மே லுயரும் - பொது
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனன்னா தனனந் .. தனதான)
(கிட்டிய திருப்புகழ்ப் பாடல்களில் இச்சந்தத்தில் பாடல் இல்லை என்று எண்ணுகின்றேன்)
புனன்மே லுயருங் .. குமிழ்வாழ்வு
.. புகன்மா தொருபங் .. குடையானே
அனன்மா நடனம் .. புரிபாதன்
.. அயன்மா லலையும் .. படியீறில்
கனன்மா வடிவங் .. கொளுமீசன்
.. கவின்மா விடையொன் .. றமர்நாதன்
இனன்மாய் நிலைதந் .. தருள்நேயன்
.. எழின்மா மணியெம் .. பெருமானே.
பதம் பிரித்து:
புனல்மேல் உயரும் குமிழ் வாழ்வு;
.. புகல் மாதொருபங்கு உடையானே;
அனல் மா நடனம் புரி-பாதன்;
.. அயன் மால் அலையும்படி ஈறு இல்
கனல் மா வடிவம் கொளும் ஈசன்;
.. கவின் மா விடையொன்று அமர்-நாதன்;
இனல் மாய் நிலைதந்து அருள்-நேயன்;
.. எழில் மாமணி எம் பெருமானே.
புனல்மேல் உயரும் குமிழ் வாழ்வு - நீர் மேலே எழுகின்ற நீர்க்குமிழி போல் நிலையற்றது இவ்வுலக வாழ்வு; (குமிழ் - நீர்க்குமிழி);
புகல் மாதொருபங்கு உடையானே - நமக்குப் புகல் உமைபங்கன்;
அனல் மா நடனம் புரி பாதன் - தீயிடைப் பெருங்கூத்து ஆடுகின்ற திருவடியினன்;
அயன் மால் அலையும்படி ஈறு இல் கனல் மா வடிவம் கொளும் ஈசன் - பிரமனும் திருமாலும் தேடும்படி எல்லையில்லாத பெருஞ்சோதி வடிவம் கொண்ட ஈசன்;
கவின் மா விடையொன்று அமர் நாதன் - அழகிய பெரிய இடபத்தை ஊர்தியாக விரும்பிய தலைவன்; (கவின் - அழகு); (அமர்தல் - விரும்புதல்);
இனல் மாய் நிலைதந்து அருள் நேயன் - இன்னல் தீர்ந்த நிலையைத் தந்தருளும் அன்பன்; (இனல் - இன்னல் - இடைக்குறையாக வந்தது);
எழில் மாமணி எம் பெருமானே - அழகிய சிறந்த மணி போன்ற எம் பெருமான்;
இலக்கணக் குறிப்பு:
1. வண்ணப் பாடலில் 'தன்னா' என்பது 'குறில் + மெல்லின ஒற்று + மெல்லின உயிர்மெய் நெடில்'
2. புணர்ச்சி விதி: '...ல்+ம... = ...ன்ம...' என்று ஆகும். (ஆறுமுக நாவலர் - இலக்கணச் சுருக்கம் - # 154. லகர ளகரங்களின் முன் மெல்லினம் வரின், இருவழியினும், லகரம் னகரமாகவும், ளகரம் ணகரமாகவுந் திரியும். வரு நகரம் லகரத்தின் முன் னகரமாகவும், ளகரத்தின் முன் ணகரமாகவுந் திரியும்.)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
அற்புதம்.
ReplyDeleteThanks
Delete