Thursday, November 25, 2021

05.21 – புகலூர் (திருப்புகலூர்)

05.21 – புகலூர் (திருப்புகலூர்)


2015-02-01

புகலூர் (திருப்புகலூர்)

------------------

(வஞ்சிவிருத்தம் - "தனனா தனனா தனதானா" என்ற சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்.)

(சம்பந்தர் தேவாரம் - 1.36.1 - "கலையார் மதியோ டுரநீரும்")


இலக்கணக் குறிப்பு: இப்பதிகத்தில் சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று விரித்தல் விகாரம்; படிப்போர்க்கு எளிமை கருதிப் பாடல்களில் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது; (உதாரணம் - மழுவன்னிகரில்லான் - மழுவன் நிகரில்லான்);


1)

தொழிலைந் துடையான் சுடுநீற்றான்

நிழலார் மழுவன் நிகரில்லான்

அழலேந் துமரன் அவனூராம்

பொழில்கள் புடைசூழ் புகலூரே.


தொழில் ஐந்து உடையான் - பஞ்சகிருத்தியம் (சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்ற ஐந்தொழில்கள்) உடையவன்;

சுடுநீற்றான் - திருநீற்றைப் பூசியவன்;

நிழல் ஆர் மழுவன் - ஒளி மிக்க மழுவை ஏந்தியவன்;

நிகர் இல்லான் - ஒப்பற்றவன்;

அழல் ஏந்தும் அரன் அவன் ஊர் ஆம் - தீயை ஏந்தும் ஹரன் உறையும் தலம் ஆவது;

பொழில்கள் புடைசூழ் புகலூரே - சோலைகள் சூழ்ந்த திருப்புகலூர்;


2)

நள்ளார் நகர்மூன் றெரிசெய்தான்

கள்ளார் மலர்கள் கழலிட்டால்

விள்ளா வினைதீர்ப் பவனூராம்

புள்ளார் பொழில்சூழ் புகலூரே.


நள்ளார் நகர் மூன்று எரிசெய்தான் - பகைவர்களது முப்புரங்களை எரித்தவன்;

கள் ஆர் மலர்கள் கழல் இட்டால் - தேன் நிறைந்த பூக்களைத் திருவடியில் தூவி வழிபட்டால்;

விள்ளா வினை தீர்ப்பவன் ஊர் ஆராம் - நீங்காத வினைகளைத் தீர்ப்பவன் உறையும் தலம் ஆவது;

புள் ஆர் பொழில் சூழ் புகலூரே - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த புகலூர்;


3)

புலியின் அதளன் புரிநூலன்

ஒலிதண் புனலும் உரகங்கள்

பலவும் புனைவான் பதியென்பர்

பொலியும் பொழில்சூழ் புகலூரே.


அதள் - தோல்;

புரிநூல் - முப்புரிநூல்;

உரகம் - பாம்பு;

பதி - இடம்;

பொலிதல் - செழித்தல்; விளங்குதல்;


4)

நினைவார் துணையாய் வினைதீர்ப்பான்

கனைமா கடல்நஞ் சணிகண்டன்

சினமா விடையன் சிவனூராம்

புனலார் வயல்சூழ் புகலூரே.


நினைவார் துணையாய் வினைதீர்ப்பான் - தன்னை நினையும் பக்தர்களுக்குத் துணை ஆகி அவர்களது வினையைத் தீர்ப்பவன்;

கனை மா கடல் நஞ்சு அணி கண்டன் - ஒலிக்கின்ற பெரிய கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவன்;

சின மா விடையன் சிவன் ஊர் ஆம் - சினம் மிக்க பெரிய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் அவது;

புனல் ஆர் வயல் சூழ் புகலூரே - நீர் நிறைந்த வயல் சூழ்ந்த திருப்புகலுர்;


5)

சேவார் கொடியான் சிலையேந்தி

மேவார் எயில்கள் விழவெய்தான்

மூவா முதல்வன் இடமென்பர்

பூவார் பொழில்சூழ் புகலூரே.


சே ஆர் கொடியான் - இடபக்கொடியை உடையவன்;

சிலை - வில்; மலை;

மேவார் - பகைவர்;

எயில் - கோட்டை;

மூவா - என்றும் மூத்தல் இல்லாத;


6)

நாதா முடிமேல் நதியேற்றாய்

போதா எனநம் புகலாவான்

காதார் குழையன் பதியென்பர்

போதார் பொழில்சூழ் புகலூரே.


"நாதா; முடிமேல் நதி ஏற்றாய்; போதா" என நம் புகல் ஆவான் - "நாதனே; கங்காதரனே; ஞான வடிவினனே" என்று வாழ்த்தி வணங்கினால் நமக்குப் புகல் ஆகின்றவன்; (சுந்தரர் தேவாரம் - 7.47.9 - "புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா...");

காது ஆர் குழையன் பதி என்பர் - காதில் குழையை அணிந்தவன் ஊர் ஆவது;

போது ஆர் பொழில் சூழ் புகலூரே - பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருப்புகலூர்;


7)

தலைமேற் பிறையாய் தலைவாமூ

இலைவே லினனே எனவாழ்த்தில்

நலமே அருளும் நடனூராம்

புலவோர் புகழும் புகலூரே.


மூவிலைவேலினன் - திரிசூலம் தாங்கியவன்;

"தலைமேல் பிறையாய்; தலைவா; மூஇலைவேலினனே" என வாழ்த்தில் - "பிறைசூடியவனே, தலைவனே, திரிசூலத்தை ஏந்தியவனே" என்று துதித்தால்;

நலமே அருளும் நடன் ஊர் ஆம் - நன்மையே புரியும் கூத்தன் உறையும் தலம் ஆவது; (நடன் - கூத்தன்); (சம்பந்தர் தேவாரம் - 2.52.4 - "...நம்பனே நடனே நலந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர் தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே."

புலவோர் புகழும் புகலூர் - சுந்தரர் தேவாரம் 7.34.1 - "... புகலூர் பாடுமின் புலவீர்காள் ... இம்மையே தருஞ் சோறுங் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் ...");


8)

தகவில் முருடன் தலைபத்தும்

உகவூன் றியவன் உமைபங்கன்

மிகவும் பரிவால் விடமுண்ட

புகழன் பதியாம் புகலூரே.


தகவு இல் முருடன் தலை பத்தும் உக ஊன்றியவன் - நற்குணம் இல்லாத முரடனான இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறுமாறு ஒரு விரலை ஊன்றியவன்; (முருடன் - முரடன்);

மிகவும் பரிவால் விடம் உண்ட புகழன் பதி ஆம் புகலூரே - பெருங்கருணையோடு ஆலகாலத்தை உண்டருளிய புகழ் உடைய சிவபெருமான் உறையும் ஊர் ஆவது திருப்புகலூர்; (பரிவு - அன்பு; இரக்கம்);


9)

அயனும் அரியும் அறிவொண்ணா

உயர்செந் தழலான் உமைகேள்வன்

தயைமிக் கபிரான் தனியேற்றன்

புயமெட் டினனூர் புகலூரே.


அயனும் அரியும் அறிவொண்ணா உயர் செந் தழலான் - பிரமன் திருமால் இவர்களால் அறிய ஒண்ணாத எல்லையற்ற சிவந்த தீப்பிழம்பு ஆயவன்;

உமைகேள்வன் - உமைக்குக் கணவன்;

தயை மிக்க பிரான் - அருள் மிக்க தலைவன்;

தனி ஏற்றன் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்;

புயம் எட்டினன் ஊர் புகலூரே - எண்தோள்கள் உடையவன் உறையும் தலம் திருப்புகலூர்;


10)

தெய்வம் தெளியார் தெருநின்று

பொய்யும் புகல்வார் மொழிகேளேல்

உய்வைத் தருமெம் உமைகோனூர்

பொய்கைக் கயல்பாய் புகலூரே


தெய்வம் தெளியார் - இறைவன் தன்மையை அறியாதவர்கள்;

தெருநின்று பொய்யும் புகல்வார் - தெருவில் நின்று பல பொய்கள் சொல்வார்கள்;

மொழி கேளேல் - அவர்கள் பேசும் பேச்சில் மயங்காதே;

உய்வைத் தரும் எம் உமைகோன் ஊர் - வழிபடும் அன்பர்க்கு உய்தியை அளிக்கும் நம் உமாபதி உறைகின்ற தலம்;

பொய்கைக் கயல் பாய் புகலூரே - பொய்கையில் கயல்மீன்கள் பாயும் புகலூர் ஆகும்;


11)

கடைபாற் கடலின் கடுநஞ்சம்

அடைநன் மிடறன் அருளாளன்

விடைமேல் வருவான் இடமென்பர்

புடைவண் பொழில்சூழ் புகலூரே.


கடை பாற்கடலின் கடு நஞ்சம் - கடைந்த பாற்கடலில் எழுந்த கொடிய விடத்தை; (கடுமை - கொடுமை; வெம்மை; வலிமை);

அடை நன் மிடறன் அருளாளன் - அடைத்த நல்ல மிடற்றை உடையவன், பேரருள் உடையவன்;

விடைமேல் வருவான் இடம் என்பர் - இடபவாகனத்தை உடைய சிவபெருமான் உறைகின்ற தலம்;

புடை வண் பொழில் சூழ் புகலூரே - வளப்பமான சோலையால் சூழப்பெற்ற புகலூர் ஆகும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


No comments:

Post a Comment