Saturday, November 27, 2021

05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

05.24 – மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - (புஜங்கம்)

2015-02-28

மறைக்காடு (திருமறைக்காடு - வேதாரண்யம்) - "புஜங்கம்"

----------------------------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - "புஜங்கம்" - சந்த அமைப்பு; "தனானா தனானா தனானா தனானா"; - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்)


1)

முளைக்கும் பொருட்கோர் முதல்வன் தொழும்பர்

இளைப்பைத் துடைப்பான் இளந்திங் களைத்தான்

வளர்த்தான் மதில்மூன் றெரிக்கப் பொருப்பை

வளைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


முளைத்தல் - தோன்றுதல்;

பொருட்கோர் - பொருள்+கு+ஓர் - பொருளுக்கு ஒரு;

(அப்பர் தேவாரம் - 4.71.3 - "விளைபொருள் மூல மான கருத்தனை" - தோன்றும் பொருளையெல்லாம் படைப்பவனை);

தொழும்பர் - அடியவர்;

இளைப்பு - சோர்வு; கிலேசம் (distress);

துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்;

இளந் திங்களைத்தான் வளர்த்தான் - வளர்கின்ற இளம்பிறை சூடியவன்;

மதில் மூன்று எரிக்கப் பொருப்பை வளைத்தான் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்தவன்; (பொருப்பு - மலை);

தென் - அழகிய;

மறைக்காடு - இக்காலத்தில் இத்தலம் வேதாரண்யம் என்று வழங்கப்பெறுகின்றது;


2)

தழைக்கும் தமிழ்ப்பா தனைக்கேட் பதற்கா

வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான்

அழைக்கும் சுரர்க்கார் அருள்செய்து நஞ்சுண்

மழைக்கண்ட னூர்தென் மறைக்காடு தானே.


* அடிகள் 1-2: சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு - தடுத்தாட்கொண்டபுராணம். சிவபெருமான் கிழவேதியராக வந்து வழக்கு ஒன்று உள்ளது என்று சொன்னதால் புத்தூரில் நிகழவிருந்த சுந்தரர் திருமணம் நின்றது.

கேட்பதற்கா - கேட்பதற்காக - கடைக்குறை விகாரம்;

சுரர்க்கு ஆரருள்செய்து நஞ்சு உண் - தேவர்களுக்குப் பேரருள் புரிந்து விடத்தை உண்ட;

மழைக்கண்டன் - மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்;


3)

அடுத்தோர் சரத்தைத் தொடுத்தான் படத்தான்

கடுத்தே நுதற்கண் கனன்றான் இராவில்

நடத்தான் திருக்காப் பகற்றத் தமிழ்ப்பா

மடுத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அடுத்து - நெருங்கி; அணுகி; (அடுத்தல் - சமீபமாதல்);

சரம் - அம்பு;

படுதல் - சாதல்; அழிதல்;

கடுத்தல் - சினத்தல்; கோபித்தல்;

நுதற்கண் - நெற்றிக்கண்;

கனல்தல் - சிவத்தல்; சுடுதல்;

இராவில் நடத்தான் - இரவில் நடம் செய்பவன்;

திருக்காப்பு அகற்றத் தமிழ்ப்பா மடுத்தான் - திருமறைக்காட்டில் கோயிற்கதவம் தாழ் நீக்கவேண்டித் திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைச் செவிமடுத்தவன்; (காப்பு - கதவு; கதவின் தாழ்); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணினேர்மொழியாள்..."); (பெரிய புராணம் - 12.21.266 - "தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வகற்ற");


4)

வலப்பால் தழல்போல் வணத்தான் சிரத்திற்

சலத்தான் சிரிப்பால் தகித்தான் புரங்கள்

நிலத்தார் விசும்பார் நிதம்வாழ்த்தி ஏத்தும்

மலர்ப்பாத னூர்தென் மறைக்காடு தானே.


வலப்பால் தழல்போல் வணத்தான் - வலப்பக்கத்தில் தீப்போல் செவ்வண்ணம் உடையவன்;

சிரத்திற் சலத்தான் - தலைமேல் கங்கையை ஏற்றவன்,

சிரிப்பால் தகித்தான் புரங்கள் - முப்புரங்களைச் சிரித்தே எரித்தவன்;

நிலத்தார் விசும்பார் நிதம் வாழ்த்தி ஏத்தும் மலர்ப்பாதன் - மண்ணோரும் விண்ணோரும் தினமும் வாழ்த்திப் போற்றும் மலர்ப்பாதம் உடையவன்;

ஊர் தென் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


5)

நினைத்தார் பிழைக்கச் சினக்கூற் றுதைத்தான்

வனப்போதி னான்றன் சிரத்தூண் மகிழ்ந்தான்

அனைத்தும் படைப்பான் அழிப்பான் துதிப்பார்

மனத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


நினைத்தார் பிழைக்கச் சினக்கூற்று உதைத்தான் = மிகவும் எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கோபம் மிக்க காலனை உதைத்தவன்;

வனப் போதினான்தன் சிரத்து ஊண் மகிழ்ந்தான் - அழகிய தாமரை மலரின்மேல் உறையும் பிரமனது மண்டையோட்டில் உணவை விரும்பியவன்; (வனப்போது - நீரில் உள்ள பூ; அழகிய பூ; - தாமரை); (வனம் - அழகு; நீர்); (போது - பூ); (வனருகம் n. < vana-ruha. தாமரை. ) (ஊண் - உணவு);

அனைத்தும் படைப்பான் அழிப்பான் - எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்குபவன்;

துதிப்பார் மனத்தான் இடம் தென் மறைக்காடு தானே - வழிபடுவார் மனத்தில் இருப்பவன் உறியும் தலம் அழகிய திருமறைக்காடு ஆகும்;


6)

அணங்கோர் புறத்தான் அராவும் புனைந்தான்

கணங்கள் கரத்தில் விளக்கேந்த ஆடி

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர்

வணங்கும் பிரானூர் மறைக்காடு தானே.


அணங்கு ஓர் புறத்தான் - ஒரு பக்கத்தில் உமையை உடையவன்; (அணங்கு - பெண் - உமை);

அராவும் புனைந்தான் - பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

கணங்கள் கரத்தில் விளக்கு ஏந்த ஆடி - பூதகணங்கள் கையில் விளக்கை ஏந்தக் கூத்தாடுபவன்; (ஆடி - ஆடுபவன்);

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர் வணங்கும் பிரான் ஊர் மறைக்காடுதானே - வாசமிக்க நாண்மலர்களை திருவடியில் இட்டுத் தேவர்கள் வணங்கும் தலைவன் உறையும் தலம் திருமறைக்காடு; (புதுப்பூ - புதிய மலர் - நாண்மலர்); (சாத்துதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");

இலக்கணக் குறிப்பு : இரண்டாம் அடியின் ஈற்றில் "ஆடி" என்ற சொல்லில் 'டி' லகு ஆயினும் அஃது அடி ஈற்றில் உள்ளதால் இவ்விடத்தில் பாடலின் வாய்பாடு கருதிக் குரு என்று அலகிடப்படும்;


7)

இதத்தைக் கொடுப்பான் இலாடத்து நீற்றன்

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான்

நுதற்கண் திறந்தே சுதன்தந் தவன்மன்

மதற்சுட்ட மானூர் மறைக்காடு தானே.


இதத்தைக் கொடுப்பான் - நன்மை செய்பவன்; (இதம் - ஹிதம் - நன்மை);

இலாடத்து நீற்றன் - நெற்றியில் திருநீறு பூசியவன்; (இலாடம் - lalAta - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி");

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான் - திருவடியை வழிபடும் பக்தர்கள்து பிறவியை அறுப்பவன்; (பவம் - பிறவி;)

நுதற்கண் திறந்தே சுதன் தந்தவன் மன்மதற் சுட்ட மான் - நெற்றிக்கண்ணைத் திறந்து மகனைத் தந்தவன், தலைவன்; மன்மதனைச் சுட்ட பெரியோன்; (சுதன் - மகன்); (மன் - தலைவன்); (மதன் - காமன்); (மன்மதன் - காமன்); (மான் - பெரியோன்); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.86 - "கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்" - கயிலைமான் = கயிலைப் பெரியோன்);

"மன்மதற்சுட்ட" என்பதை "மன் + மதற் சுட்ட" என்றும், "மன்மதற் சுட்ட" என்றும் இருவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளலாம். (மன் = தலைவன், மதன் = காமன்);

இலக்கணக் குறிப்பு:

மதற் சுட்ட = மதன் + சுட்ட = "மதனைச் சுட்ட" என்ற பொருளில்;

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள்மயங்காதிருக்கும் பொருட்டு, முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதல், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதல், முதலியன நிகழும்);


8)

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரந்தோள்

இறத்தான் நெரித்தான் எரிக்கும் விடத்தை

மறைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


கடுமை - விரைவு (speed);

கடுந்தேர் - விரைவுடைய விமானம்; (அப்பர் தேவாரம் - 6.99.10 - "இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய்");

பதைத்தல் - ஆத்திரப்படுதல் (To be anxious); (அப்பர் தேவாரம் - 5.16.11 - "திரு மாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங் கார்த்தெடுத் தான்");

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே - வானிற் பறந்து விரைந்து செல்லும் தன் இரதம் பறவாமல் தரையில் இறங்கக் கண்டு சினந்து;

மறம் - வலிமை; சினம்;

பொருப்பு - மலை - கயிலைமலை;

இற - இறும்படி; (இறுதல் - முறிதல்; கெடுதல்);

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் சிரம் தோள் இறத்தான் நெரித்தான் - தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவனனது முடிகளும் புயங்களும் முறியும்படி நசுக்கியவன்;

எரிக்கும் விடத்தை மறைத்தான் - ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்தவன்;


9)

அகழ்ந்தும் பறந்தும் மயன்மா லயர்ந்தார்

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்பூம் பதங்கள்

உகந்தார் மனத்தே உறைந்தான் இடம்பெண்

மகிழ்ந்தா னிடம்தென் மறைக்காடு தானே.


பிரமனும் திருமாலும் வானிற் பறந்துசென்றும் மண்ணை அகழ்ந்தும் அடிமுடி தேடிக் காணாது தளர்ந்தனர்; பொன் போன்ற மலர்த்திருவடியைப் புகழ்ந்தும் விழுந்து வணங்கியும் விரும்பி வழிபடும் அன்பர்களது மனத்தில் உறைந்தவன்; இடப்பக்கம் உமையை ஒரு கூறாக விரும்பியவன்; அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


பறந்தும்மயன் - பறந்தும் அயன் - மகர ஒற்று விரித்தல் விகாரம்;

அகழ்ந்தும் பறந்தும் அயன் மால் - எதிர்நிரனிறையாக வந்தது;

அயர்தல் - தளர்தல்;

விழுதல் - விழுந்து வணங்குதல் (To lie prostrate, as in reverence);

பொலம் - பொன்; அழகு;

பொலம்பூம்பதங்கள் - பொலம்பூவடி; (பட்டினத்து அடிகள் அருளிய கோயில் நான்மணிமாலை - 11.26.40 - "போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே" - பொலம் பூ அடி - பொற்பூப்போலும் திருவடிகள்);

உகத்தல் - விரும்புதல்;


10)

நிதிக்கா நிதம்பல் புறன்சொல் சழக்கர்

சதிச்சேற் றழுந்தேல் தவிப்பைத் தவிர்ப்பான்

நதிச்சென்னி மேலே நறும்போது நாகம்

மதிக்கண்ணி யானூர் மறைக்காடு தானே.


நிதிக்கா நிதம் பல் புறன் சொல் சழக்கர் சதிச்சேற்று அழுந்தேல் - பணத்திற்காகத் தினமும் பல பழிச்சொற்களைப் பேசும் தீயவர்களது வஞ்சனை என்ற சேற்றில் அழுந்தவேண்டா;

(சதி - வஞ்சனை); (சழக்கர் - தீயவர்கள்; சழக்கு - குற்றம்; தீமை);

தவிப்பைத் தவிர்ப்பான் - பக்தர்களது வருத்தத்தை தீர்ப்பவன்;

நதிச்சென்னி மேலே - கங்கையைத் தாங்கிய திருமுடிமேல்;

நறும் போது நாகம் - வாசமலர்கள் பாம்பு இவற்றோடு;

மதிக்கண்ணியான் - கண்ணிமாலைபோல் பிறைச்சந்திரனைச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

ஊர் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு;


11)

புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான்

கரங்கள் குவித்துக் கழல்போற்று வார்க்கே

வரங்கள் வழங்கும் பரன்மேய ஊராம்

மரங்கள் வளம்சேர் மறைக்காடு தானே.


புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான் - முப்புரங்களும் தீயிற் புகும்படி சிரித்தவன்; (கனல் - நெருப்பு); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);

கரங்கள் குவித்துக் கழல்போற்றுவார்க்கே வரங்கள் வழங்கும் பரன் மேய ஊர் ஆம் - கைகூப்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் கொடுக்கும் பரமன் உறைகின்ற தலம் ஆவது;

மரங்கள் வளம்சேர் மறைக்காடுதானே - விருட்சங்களும் படகுகளும் வளம் சேர்க்கின்ற திருமறைக்காடு (வேதாரண்யம்); (மரங்கள், மரக்கலங்கள் முதலிய வளங்கள் நிறைந்த வேதாரண்யம்); (மரம் - விருட்சம்; மரக்கலம் (கப்பல், படகு));


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:

புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.

புஜங்க அமைப்பின் இலக்கணம்:

4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" ( = லகு-குரு-குரு) இருக்கும்.

"தனானா தனானா தனானா தனானா" - இதனைத் "தனாதான தானா தனாதான தானா" என்றும் நோக்கலாம்

லகு = குறில்.

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்

இப்பாடல்களில், தமிழ் யாப்பை ஒட்டிச், சொல்லின் இடையிலோ இறுதியிலோ வரும் ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன்.


No comments:

Post a Comment