Thursday, November 25, 2021

05.23 – வேட்களம் (திருவேட்களம்) - (கந்த பத்யம் - kanda padyam)

05.23 – வேட்களம் (திருவேட்களம்) - (கந்த பத்யம் - kanda padyam)


2015-02-26

வேட்களம் (திருவேட்களம்) - "கந்த பத்யம்"

-------------------------------------------

(அந்தாதி - "பொன்னடி" என்று முதற்பாடல் தொடங்கிப் "பொன்னடியே" என்று ஈற்றுப் பாடல் முடிந்து மண்டலித்து வருகின்றது)

("கந்த பத்யம்" அமைப்பில் - in "kanda padyam" meter)

(இப்பாடல்களின் யாப்பு இலக்கணத்தைக் கீழே பிற்குறிப்பில் காண்க)


1)

பொன்னடி போற்றிய திங்கள்

மின்னிடு சடையன் பொலிவுறு வேட்கள நகரில்

மன்னிய பெருமான் கழலே

உன்னிய அடியார் உறுபிணி ஒழிவது திடனே.


பொலிவு - அழகு; செழிப்பு;

மன்னுதல் - நிலைத்தல்;

உன்னுதல் - சிந்தித்தல்; எண்ணுதல்;

திடன் - உறுதி; நிச்சயம்;


2)

திடமலி எண்டோள் அண்ணல்

விடமலி கண்டன் பொலிவுறு வேட்கள நகரில்

இடமுமை பங்கென உடையான்

நடமகி ழிறையைத் தொழுதிட நலியும் வினையே.


திடம் மலி எண்டோள் அண்ணல் - வலிய எட்டுப் புஜங்களை உடைய பெருமான்;

விடம் மலி கண்டன் - பாற்கடலில் எழுந்த நஞ்சு நின்று நிறத்தினை மிகக் காட்டிய திருக்கழுத்துடையவன்;

இடம் உமை பங்கு என உடையான் - அர்த்தநாரீஸ்வரன்;

நடம் மகிழ் இறையைத் தொழுதிட நலியும் வினையே - விரும்பிக் கூத்து ஆடும் இறைவனை வணங்கினால் வினை அழியும்; (நடம் - கூத்து); (மகிழ்தல் - விரும்புதல்);

(குறிப்பு - 2-ஆம் அடி ஈற்றில் வரும் "நகரில்" என்ற சொல் 3-ஆம் அடி முதலில் உள்ள "இடமுமை" என்பதோடு "நகரில்லிடமுமை" என்று சந்தம் கருதி லகர ஒற்று விரித்தல் விகாரம் / விட்டிசைத்தல் என்று கொள்க);


3)

வினையற ஒருவழி உளதே

மினலன சடையன் பொலிவுறு வேட்கள நகரில்

வனமுலை மாதொடு மேயான்

சினவிடை உடையான் திருவடி தினமும் தொழலே.


மினல் அன சடையன் - மின்னல் அன்ன சடையன் - மின்னல் போல் ஒளிரும் சடையை உடையவன்;

வனமுலை மாது - அழகிய தனங்களை உடைய பார்வதி; (வனம் - அழகு);

மேயான் - உறைபவன்;


4)

தொழுதரி வேண்டிய ஆழியை

மிழலையி லீந்தான் பொலிவுறு வேட்கள நகரில்

மழுவல னேந்தியை வாழ்த்திச்

செழுமல ரிட்டார் இருவினை தேய்ந்தறு மன்றே.


தொழுது அரி வேண்டிய ஆழியை மிழலையில் ஈந்தான் - திருமால் தொழுது வேண்டிய சக்கராயுதத்தைத் திருவீழிமிழலையில் அருளியவன்; (ஆழி - சக்கராயுதம்);

மழு வலன் ஏந்தி - மழுவாயுதத்தை வலக்கையில் ஏந்தியவன்;


5)

அன்றின ரெயிலெரி வில்லான்

வென்றிவெ ளேற்றன் பொலிவுறு வேட்கள நகரில்

துன்றிய அடியார் பரவிட

நின்றபி ரான்றன தடிதொழ நினைமட நெஞ்சே.


அன்றினர் எயில் எரி வில்லான் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவன்;

வென்றிவெ ளேற்றன் - வென்றி வெள் ஏற்றன் - வெற்றியுடைய வெண்ணிற இடபத்தை ஊர்தியாக உடையவன்; (வெள்ளேற்றன் என்பது சந்தம் கருதி வெளேற்றன் என்று வந்தது);

துன்றுதல் - நெருங்குதல்;

பிரான்தனது அடி தொழ - சிவபெருமானுடைய திருவடியைத் தொழுவதற்கு;


6)

நெஞ்சிற் பத்திமி குந்தே

வெஞ்சொல் விட்டார்க் கருளிறை வேட்கள நகரில்

மஞ்சன் மலையன மதகரி

அஞ்சவு ரித்தான் அடியிணை அடைவார்க் கரணே.


நெஞ்சில் பத்தி மிகுந்தே வெஞ்சொல் விட்டார்க்கு அருள் இறை - நெஞ்சில் மிகுந்த பக்தி உடையவர்களாகிக், கடும் சொற்களை நீங்கிய அன்பர்களுக்கு அருளும் இறைவன்;

மஞ்சன் - (மைந்தன் என்பதன் மரூஉ. போலி எனலும் ஆம்) - வீரன்; இளைஞன்;

மலை அன மதகரி அஞ்ச உரித்தான் - மலை போன்ற மதயானை அஞ்சும்படி அதனை வென்று அதன் தோலை உரித்தவன்;

(அப்பர் தேவாரம் - 6.76.8 - "மிக்கெதிர்ந்த கரிவெருவ உரித்த கோன்காண்");;

அடியிணை அடைவார்க்கு அரணே - அப்பெருமானது இரு திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு அவன் பாதுகாவல் ஆவான்;


7)

அரணெரி வில்லிய ராமதி

விரவிய சடையான் பொலிவுறு வேட்கள நகரில்

திரமென நின்றான் அடியிணை

பரவிடு மனமே பறைவது பழவினை மலையே.


அரண் எரி வில்லி - முப்பரங்களை எரித்த வில்லை ஏந்தியவன்;

அரா மதி விரவிய சடையான் - பாம்பும் பிறைச்சந்திரனும் பொருந்திய சடையை உடையவன்;

திரம் என நின்றான் அடியிணை பரவிடு மனமே - நிலைத்து நிற்கும் ஈசனது இரு திருவடிகளைப் போற்று மனமே; (திரம் - ஸ்திரம் - நிலை); (பரவுதல் - புகழ்தல்);

பறைவது பழவினை மலையே - (அப்படிப் போற்றினால்) மலை போல உள்ள பழைய வினைகள் அழியும்; (பறைதல் - அழிதல்);


8)

மலையசை தசமுக னழவே

மெலவொரு விரலூன் றியவிறை வேட்கள நகரில்

சிலைவல பார்த்தற் கோர்படை

நலமரு ணம்பான் அடிதொழ நலிவது மாலே.


மலை அசை தசமுகன் அழவே மெல ஒரு விரல் ஊன்றிய இறை - கயிலைமலையை ஆட்டிய இராவணன் அழுமாறு மெல்ல ஒரு திருப்பாத விரலை ஊன்றிய இறைவன்;

வேட்கள நகரில் சிலை வல பார்த்தற்கு ஓர் படை நலம் அருள் நம்பான் - வில் வல்ல அருச்சுனனுக்குத் திருவேட்களத்தில் ஒப்பற்ற பாசுபதாஸ்திரம் அருளிய சிவன்; (சிலை - வில்); (நம்பான் = நம்பன்);

அடி தொழ நம் வினை அறுமே - அப்பெருமானது திருவடியை வழிபட்டால் நம் அறியாமை நீங்கும்; (மால் - அறியாமை; மயக்கம்);


9)

மாலய னேடிவ ணங்கிட

மேலெழு தீயன் பொலிவுறு வேட்கள நகரில்

நீலமி டற்றன் மூவிலை

வேலன வன்றாள் தொழுதெழ வினைவிடு மெய்யே.


பதம் பிரித்து:

மால் அயன் நேடி வணங்கிட

மேல் எழு தீயன்; பொலிவு உறு வேட்கள நகரில்

நீலமிடற்றன்; மூவிலை

வேலன் அவன் தாள் தொழுது எழ வினை விடும் மெய்யே.


நேடுதல் - தேடுதல்;

தீயன் - சோதி உருவினன்;

நீல மிடற்றன்- நீலகண்டன்;

மூவிலை வேலன்அவன் தாள் தொழுதெழ - திரிசூலத்தை ஏந்தியவனது திருவடியை வணங்கினால்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);


10)

மெய்யொன் றுரையார்க் கில்லான்

வெய்யன் தணியன் பொலிவுறு வேட்கள நகரில்

செய்யன் சிரமொன் றேந்தும்

கையன் தாள்தொழ அடைவது கவலா வாழ்வே.


மெய்யொன்று உரையார்க்கு இல்லான் - சிறிதும் உண்மையைப் பேசாத ஈனர்களுக்கு அருள் இல்லாதவன்; (மெய்யொன்று - மெய்யொன்றும் - உம்மைத்தொகை);

வெய்யன் தணியன் - வெம்மையானவன் குளிர்ச்சியானவன்; (தணியன் - தண்ணியன்)

(சிவபுராணம் - 'வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா');

(அப்பர் தேவாரம் - 6.57.3 - "செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி ... வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி ...");

பொலிவுறு வேட்கள நகரில் செய்யன் - அழகிய திருவேட்களத்தில் உறைகின்ற செம்மேனியன்; (செய்யன் - சிவந்த நிறம் உடையவன்);

சிரம் ஒன்று ஏந்தும் கையன் - கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தியவன்;

தாள் தொழ அடைவது கவலா வாழ்வே - அப்பெருமானது திருவடியைத் தொழுதால், நாம் கவலையற்ற வாழ்வைப் பெறுவோம்; (கவல்தல் - கவலைப்படுதல்);


11)

வாழவி ரும்பிற் பணிவாய்

வேழமு ரித்தான் பொலிவுறு வேட்கள நகரில்

போழம் புலியான் வானோர்

தாழும் தலைவன் வரைவிலி தன்பொன் னடியே.


பொருள்கோள்: வாழ விரும்பில், "வேழம் உரித்தான், பொலிவுறு வேட்கள நகரில், போழ் அம்புலியான், வானோர் தாழும் தலைவன், வரைவிலி" தன் பொன்னடியே பணிவாய்;

(மனமே என்ற விளி தொக்கு நின்றது).


வாழ விரும்பில் பணிவாய் - உய்ய வேண்டில் வணங்குவாயாக;

வேழம் உரித்தான் - யானையை உரித்தவன்;

பொலிவுறு வேட்கள நகரில் - அழகிய திருவேட்களத்தில் உறைகின்ற;

போழ் அம்புலியான் - போழ் மதியன் - பிறைச்சந்திரனை அணிந்தவன்; (போழ் - துண்டம்; போழ்தல் - பிளத்தல்);

வானோர் தாழும் தலைவன் - தேவர்களெல்லாம் வணங்கும் தலைவன்;

வரைவிலி = வரை+வில்லி / வரைவு+இலி = மேருமலையை வில்லாக ஏந்தியவன் / அளவற்றவன்; (வரை - மலை); (வரைவு - எல்லை; அளவு);

தன் பொன்னடியே - அவனது பொன் போன்ற திருவடியை;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு:

இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:

கந்த பத்யம் - ( “kanda padyam” metre )

---------------------------------

"கந்த பத்யம்" என்ற இவ்வமைப்புத் தெலுங்கு, கன்னட மொழிகளில் மிகவும் பரவலாகக் கையாளப்பட்ட/படுகின்ற பாடல் வகை. (தமிழில் எப்படிப் பல நூல்கள் வெண்பா யாப்பில் பாடப்பெற்றனவோ அதேபோல் தெலுங்கிலும் கன்னடத்திலும் பல நூல்கள் "கந்த பத்யம்" யாப்பில் பாடப்பெற்றன).


இப்பாடல் அமைப்பின் இலக்கணம்:

1) 3-5-3-5 என்ற சீர் அமைப்புக் கொண்ட 4 அடிகள்.

2) எல்லாச் சீர்களும் 4 மாத்திரை கொண்ட ஈரசைச் சீர்கள்.

லகு = குறில் = 1 மாத்திரை = "I"

குரு = குறில்+ஒற்றுகள் / நெடில் / நெடில்+ஒற்றுகள் = 2 மாத்திரை = "U"


3) பாடலின் அடிகளில் சீர்களின் அமைப்புக் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்:

W X W

X W Y W Z

W X W

X W Y W Z


இதில் உள்ள W, X, Y, Z என்ற குறியீடுகள் சுட்டும் சீர் அமைப்பு:


X = 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IIU IUI UII UU

W = "IUI" (லகு-குரு-லகு) தவிர மற்ற 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IIU UII UU

Y = லகுவில் தொடங்கி லகுவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIII IUI

Z = குருவில் முடியும் 4 மாத்திரை அளவுள்ள எந்த ஈரசைச் சீரும் வரலாம் -

IIU UU


4) எதுகை: எல்லா அடிகளிலும் முதற்சீரில் எதுகை அமையவேண்டும்.

5) மோனை: 2-ஆம் அடியிலும், 4-ஆம் அடியிலும்: 1-4 சீர்களிடையே மோனை அமைய வேண்டும்.


மேலதிகக் குறிப்பு : தமிழ் யாப்பை ஒட்டி ''காரக் குறுக்கத்தைக் குறிலாகக் கொண்டுள்ளேன். (தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் '' ஒலி எல்லா இடங்களிலும் நெடிலாக – 'குரு' - என்று கருதப்படும்).

-------------------


No comments:

Post a Comment